Sunday, October 23, 2016

மாண்டூக்ய உபநிஷதம்


சாந்நி மந்திரம்



    எந்த ஓன்றையும் செய்யும்போது அதற்குரிய மனநிலை இருக்கப் பெறுவது இன்றியமையாது.  எந்த காரியத்தைச் செய்கிறோமோ அதற்குரிய மனநிலையை வரவழைத்துக் கொண்டு, அதன்பிறகு அந்தச் செயலில் ஈடுபடுவது சிறப்பான பலனை அளிக்கும், நமது கோயில்களில் பல பிராகாரங்கள் அமைந்திருப் பதன் காரணம்  இதுவே.   ஒவ்வொரு பிரகாரத்தில் சுற்றி வரும்போதும் மற்ற எண்ணங்களை எல்லாம் விட்டு, கடைசியாக கருவறையில் சென்று தெய்வத்தைத் தரிசிக்கும்போது, நம்மால் முழுமனதுடன் தெய்வ சிந்தனையில் ஈடுபடமுடிகிறது. அதுபோல் அனுபூதிக் கருமூலமான  உபநிஷதங்களை படிக்க புகுமுன் நமது சிந்தனையை அவற்றுடன் இயைபு படுத்த சாந்தி மந்திரங்கள் உதவுகின்றன.

    உபநிஷதங்களின் உண்மைப் பொருளை வெறும் புலமையால் உணரமுடியாது. பணிவுடனும் வழிபாட்டு உணர்வுடனும் அணுகும்போது 
மட்டுமே அதனைப் புரிந்து கொள்ளமுடியும். அத்தகைய மனப் பான்மையை மனதில் கொள்வதற்காக இந்த மந்திரங்கள் முதலில் ஓதப்படுகின்றன.

மாண்டூக்ய உபநிஷதத்திற்கான சாந்தி மந்திரம்

1 தேவர்களே! காதுகளால் நாங்கள் நல்ல விஷயங்களைக் கேட்கவேண்டும். பூஜிக்கத் தகுந்தவர்களே, கண்களால் நாங்கள் நல்ல விஷயங்களைக் காணவேண்டும்.  உறுதியான அங்கங்களுடன் கூடிய உடலுடன் ஆயுள் முழுவதும் உங்களைத் துதிக்க வேண்டும். தேவர்களுக்கு நன்மை செய்த வண்ணம் வாழவேண்டும்! பழம்புகழ் பெற்ற இந்திரன் நமக்கு நன்மை செய்யட்டும். எல்லாம் அறிகின்ற சூரியன் நமக்கு மங்கலம் செய்யட்டும். தீமையை அழிக்கின்ற கருடன் நமக்கு நன்மை செய்யட்டும். பிரகஸ்பதி நமக்கு நன்மை தரட்டும்!

    உலகியலில் மூழ்கடிப்பதற்கான விஷயங்கள் உயர் வாழ்கையில் தூண்டுகின்ற விஷயங்கள் ஆகிய இரண்டுமே மனிதனின்முன்னால் வருகின்றன; அறிவாளி இரண்டாம் வகையைத் தேர்தெடுக்கிறான் என்று கட உபநிஷதம் (1.2.2) கூறுகிறது. அவ்வாறு நல்லவற்றையும் உயர்தவற்றையும் தேர்ந்தெடுப்பதற்கு நமது உடம்பிற்க்கும் புலன்களுக்கும் பயிற்சி அளிப்பதற்கும், அந்த முயற்சியில் தேவர்களின் துணையை நாடுவதற்கான மந்திரம் இது.

தேவர்கள் யார்? அவர்களுக்கு நன்மை செய்வது என்பது என்ன?

    சூரியன் உதிப்பது, கடலில் அலைகள் எழுவது, நட்சத்திரமண்டலங்கள் வானவெளியில் வலம்வருவது என்று இயற்கையின் ஒவ்வொரு செயல்பாட்டிலும் சக்தியின் வெளிப்பாட்டைக் காண்கிறோம். இந்தச் சக்திகள் ஒவ்வொன்றையும் ஒரு தேவனாக உருவகப்படுத்தினர் நமதுமுன்னோர்.  இந்திரன்,வருணன், வாயு, என்றெல்லாம் நமது வேதங்கள் கூறுகின்ற தேவர்கள் இத்தகைய இயற்கை ஆற்றலின் உருவங்களே.

     மனித வாழ்வு வளம்பெற வேண்டுமானால் இந்த இயற்கை ஆற்றல்களை வழம்பெறச் செய்ய வேண்டும்.  அதாவது மனிதன் இயற்கையுடன் இயைந்து வாழ வேண்டும்.  உலகில் எத்தனை கோடி உயிரினங்கள் இருந்தாலும் அத்தனைக்கும் உணவும் வாழ வசதியும் வழங்குவதற்கு இயற்கை அன்னை தயாராக இருக்கிறாள்.  ஆனால் அதற்கு அவளுடன் இயைந்து வாழ்வது இன்றியமையாதது.  இயற்கையை அழித்தால் நாமும் அழிவோம்.  மாறாக நாமும் இயற்கையும் பரஸ்பரம் பேணி வாழ்ந்தால் இயற்கையும் வாழும், நாமும் வாழ்வோம்.

இந்தப் பரந்த கருத்துடன் உபநிஷதம் ஆரம்பிக்கிறது.

மாண்டூக்ய உபநிஷதம்

ஒன்றென்றிரு

முப்பொருள் உண்மை

    நாம், நாம் வாழ்கின்ற உலகம், இரண்டிற்கும் அடிப்படையாக விளங்குகின்ற இறைவன்  இந்த மூன்றும் அடிப்படை் உண்மைகள்.   இந்த மூன்றும் உண்மையில் என்ன, இவற்றிற்கு இடையே நிலவுகின்ற தொடர்பு என்ன?   உலகில் சிந்தனையாளர்களை அன்றும் இன்றும் ஒருபோலவே தூண்டி வருகின்ற கேள்விகள் இவை.

    நமதுஉபநிஷத ரிஷிகள் இறையுணர்வ் வாளர்களாக இருந்தார்கள்.  அதாவது, இறையனுபூதி பெற்றவர்களாக, கடவுளுடன் நேரடித் தொடர்பு உடையவர்களாக இருந்தார்கள்.  அதனுடன் மாபெரும் சிந்தனையாளர் களாகவும் இருந்தார்கள்.  அதனால்தான் உபநிஷதங்கள் என்னும் சிந்தனைக் கருவூலத்தை அவர்களால் தரமுடிந்தது.  அவர்கள் எல்லாத் துறைகளிலும் சிந்தனையின் சிகரங்களை எட்டிப்பிடித்தார்கள்.  நாம் மேலே கண்ட அடிப்படை உண்மைகளையும் அவர்கள் சிறப்பாக ஆராய்ந்தார்கள்.


ஒருமையை நோக்கி

    பாரதம் மற்றும் பிறநாடுகளின் கலாச்சாரம், விஞ்ஞானம், சமயம், ஆன்மீகம் என்று எந்தத்துறையையும் ஆழ்ந்து படிப்பவர்கள் ஓர் அற்புதமான உண்மையைக் காண காணமுடியும்.  எதிலும் அறுதி ஒருமையைக் காண விழைந்தது இந்தியமனம்.  பொருட்களின் ஓர் அறுதி ஒருமையைக்  காண்பதே உபநிஷதங்களின் நோக்கம்.  "எதை அறிந்தால் நாம் எல்லாவற்றையும் அறியமுடியும்? "  இந்த ஆராச்சியையே உபநிஷதங்கள் தங்கள் ஒரே கருத்தாகக் கொண்டிருக்கின்றன  என்கிறார் சுவாமி விவேகானந்தர்.

    இதனை விளக்குகிறார் அவர்:  ஒருமைநிலையைக் கண்டுபிடிப்பதுதான் விஞ்ஞானம். முழுமையான ஒருமை நிலை கிட்டியதும் விஞ்ஞானம் மேலே செல்லாமல் நின்றுவிடும்.  ஏனெனில் அது தன்குறிக்கோளை எட்டிவிட்டது. அதுபோலவே, எந்தமூலப்பொருளிலிருந்து எல்லா பொருட்களும் படைக்கப் படுகின்றனவோ,அதைக்கண்டுபிடித்த பின்னர் வேதியல் முன்னேற முடியாது. எந்த மூலசக்தியிலிருந்து எல்லா சக்திகளும்  வெளிப்படு கின்றனவோ,  அதைக் கண்டறிந்ததும் இயற்பியல் நின்றுவிடும். மரணம் நிறைந்த இந்தப் பிரபஞ்சத்தில், மரணத்தை கடந்து நிற்கும் ஒரே உயிரைகண்டுபிடித்ததும், மாறிக்கொணெடேயிருக்கும் உலகில் மாறாத ஒரே அடிப்படையான அவனை கண்டு பிடித்ததும், எந்த ஓர் ஆன்மாவிலிருந்து பிற ஆன்மாக்கள் வெளிப்படுவது போன்று மாயையால் தோன்றுகிறதோ அந்த ஆன்மாவைக் கண்டுபிடித்ததும், மத விஞ்ஞானம் பூரணமாகிவிடும்.

ஒன்றென்றிரரு

    இவ்வாறு ஆன்மீக ஒருமையை அடைந்துவிட்ட நிலையை உபநிஷதங்கள் விவரிக்கக் காண்கிறோம்.  அதாவது. இயற்க்கை அல்லது உலகம், நாம் அல்லது மனிதன் இறைவன் என்றெல்லாம் தனித்தனியாக  எதுவும் இல்லை. இருப்பவை  அனைத்தும் ஒன்றே, இருப்பது ஒன்றே. இந்த ஒன்றே பல்வேறு காட்சிகள் மூலம் உலகமாகவோ, சொற்கம், நரகம், தேவதைகள், பேய்கள், மனிதர்கள், அரக்கர்கள், பிரபஞ்சம் என்று வெவ்வேறாகத் தோன்றுகின்றது.

    ஆனால் எல்லாம் ஒன்றே என்று வாயால் சொல்வதால் அந்த உண்மை உணரப்படுவதில்லை.  அற்புதமான வேறுபாடுகள் நிறைந்த இந்தப்  பிரபஞ்சத்தில் பெயர், உருவம், ஜடம்,  உணர்வு  என்று ஒன்றுக்கொன்று முற்றிலும் வேறுபட்ட சிந்தனைகளும் உருவங்களும் நிறைந்த இந்தப் பிரபஞ்சத்தில் ஓர் ஒருமையைக் காண்பது எவ்வளவு கடினமான வேலை! என்று வியக்கிறார் சுவாமி விவேகானந்தர்.

    மரமும் மலையும் நதியும் கடலும் பறவையும் மிருகமும் மனிதனும் கடவுளும் ஒன்றாக முடியுமா?

    எல்லாம் ஒன்று என்பது இந்தப் பொருளில் சொல்லப் படவில்லை.

    இதனை எப்படி புரிந்து கொள்வது?

     இதை ஓர் உவமை வாயிலாக விளக்கலாம்.  களி மண்ணிலிருந்தோ அல்லது வேறு எதாவது ஒரு மூலப் பொருளிலிருந்தோ எண்ணில் அடங்காத விதமான பொருட்கள் செய்யப்படுகின்றன.  களி மண்ணாகப் பார்கும் போது எல்லாமே ஒன்றுதான். ஆனால்  உருவத்தில் புறத்தோற்றத்தில், அவை பல்வேறாக உள்ளன. அவை ஒவ்வொன்றும் செய்யப்படுவதற்கு முன் தோன்றாநிலையில் மண்ணில் இருக்கவே செய்தன.  மூலப்பொருள் நிலையில் அவை எல்லாம் ஒரேதன்மை உடையவை . ஆனால் வடிவம் பெற்றபின்னர், அந்த வடிவம் நிலைத்து நிற்கும்வரை அவை தனித் தன்மை  கொண்டவை,  வெவ்வேறானவை. களிமண் சுண்டெலி ஒருநாளும் களிமண் யானையாக முடியாது.  காரணம் களிமண்ணோடு களிமண்ணாய் ஒன்றாக இருந்த அவை, உருவம் பெற்ற அளவில், உருவம் காரணமாக வெவ்வேறாகிவிட்டன. உருவம் பெறாத களிமண் நிலையில் அவை எல்லாமே ஒன்றுதான்.

    உலகமும் உயிர்களும் இறைவனிலிருந்து தோன்றியவை.   அந்த நிலையில் அதாவது ஆன்ம நிலையில், உலகமும் உயிர்களும் இறைவனே ; புறத்தில் காண்கின்ற தோற்ற நிலையில்  அவை வெவ்வேறானவை.

ஓம்காரம்

     இருப்பது ஒன்றே என்ற இந்த கருத்தை ஓங்கார மந்திரத்தின் மூலம் இந்த உபநிஷதம் விளக்க முயற்சிக்கிறது. அடிப்படை உண்மைகள்  மூன்று.  அவை  உலகம், மனிதன், இறைவன். இந்த மூன்றும் ஓங்காரமே என்று விளங்குவதன் மூலம் எல்லாம் ஒன்றே  என்பதை இந்த உபநிஷம் சுட்டிக் காட்டுகிறது.

    எந்தவோர்  எண்ணத்திலிருந்தும் பிரபஞ்சம் தோன்றியதோ, அந்த எண்ணத்தை குறிப்பிட்ட இந்த ஓம் என்ற சொல் ஒன்றினால் தான் முடியும் ..... அனைத்தையும் தன்னகத்தே அடக்கியதாக விளங்கக் கூடியது இந்த ஓங்காரம் ஒன்றுதான். இதற்கு நிகராக எந்தச் சொல்லும் இல்லை என்கிறார் சுவாமி விவேகானந்தர்.  மேலும் அவர் விளக்க்கிறார்:

    அகர உகர மகர ஒலிகளின் சேர்கைற்கையாகிய ஓங்காரம், எழக்கூடிய எல்லா வகை ஒலிகளுக்கும் பொதுமைமொழிகளுக்கும் பொதுமைக் குறி யீடாக விளங்குகிறது. அகர ஒலி பிற ஒலிகளிலிருந்து பிரித்து அறிய முடியாததாக, எப்போதும் அவற்றோடு சேர்ந்து இருப்பதால் ஸ்ரீகிருஷ்ண பகவான், "அக்ஷராணாம் அகாரோஸ்மி"  எழுத்துக்களில் நான் அகரரமாய் இருக்கிறேன். என்று கீதையில் கூறினார். மேலும் உச்சரிக்கப்படுகின்ற ஒலிகள் எல்லாமே அடிநாக்கிலிருந்து உதட்டு நுனி வரைலுள்ள இடைப்பட்ட இடத்தில் தான் உரு கொள்கின்றன. முதலில் தொண்டையிலிருந்து உண்டாகின்ற ஒலி அகரம். உதட்டில் முடிகின்ற கடைசி ஒளி மகரம்.  நாக்கின் அடிப் பகுதியில் இருந்து உதடு வரைக்கும் முன் நோக்கி உந்தி வரும் ஒலி உகரம்.  சரியானபடி உச்சரித்தால், ஓங்காரம், ஒலியமைப்பு முறை முழுவதையுமே தன்னுள் அடக்கியதுதாகும். வேறு எந்த ஒலியும் இப்படி இல்லை..... இந்த ஓங்காரம் தான் இறைவனை குறிக்கின்ற குறியீடாகும்.

    ஓங்காரம், பிரணவம் என்றெல்லாம் அழைக்கப்படுகின்ற இந்த ஒலி மிகவும் புனிதமானதாக, மந்திரங்களுக்கு எல்லாம் ஆதி மந்திரமாக போற்றப் படுகிறது. ஓங்காரத்தை உச்சரிக்கும்போது மென்மையாக தொடங்கி, நடுவில் சத்தத்தை அதிகரித்து "ம்" என்று வரும் போது மீண்டும் மென்மையாக உச்சரிக்க வேண்டும்.

    இந்த ஓங்கார மந்திரத்தின் மூலம் உலகம், மனிதன், இறைவன், என்ற மூன்று உண்மைகளையும் விளக்க முற்படுகிறது இந்த உபநிஷதம்.

உலகம் 

    உலகம் என்பது என்ன?  ஏதோ சூனியத்திலிருந்து திடீரென்று படைக்கப்பட்டது அல்ல உலகம். இந்த படைப்பை இந்த வெழிப்பாட்டை சூனியத்திலிருந்து தோற்றுவித்து இருக்க முடியாது. காரணம் இல்லாமல் எந்த காரியமும் தோன்றாது. சூனியத்திலிருந்து எதையுமே படைக்க முடியாது. அதுபோல் இருக்கும் எதையும் இல்லாமல் செய்யவும் முடியாது. அது மிக மிக நுட்பமாக மாறலாம்; மீண்டும் தூலப் பொருளாகவும் மாறலாம்.... விதை மரத்தை உண்டுபண்ணுகிறது. பின்னர் விதையை விட்டுவிட்டு மரம் அழிகிறது. இந்த விதை மீண்டும் மரம் ஆகிறது. மறுபடியும் விதை உண்டாகிறது. இப்படியே இந்த வட்டம் சுழல்கிறது.....விலங்குகளும் இப்படியே .மனிதர்களும் இப்படியே. எல்லாமே சில விதைகள். சில கருக்கள், சில நுட்பமான அணுக்கள் இவற்றில் தொடங்குவது போல் உள்ளன. பின்னர் பருமை பெற்று வளர்கின்றன; மறுபடியும் படிப்படியாக நுண்மை பெற்று பழைய கருவுருவில் ஒடுங்கி விடுகின்றன.  பிரபஞ்சம் முழுவதும் இப்படியே நடைபெறுகிறது. 

    அதாவது படைப்பு அல்லது உலகிற்கு ஆரம்பமோ முடிவோ இல்லை. படைப்பு, தொடக்கமும் முடிவும் இல்லாதது என்று வேதங்கள் போதிக்கின்றன. பிரபஞ்ச சக்தியின் மொத்த அளவு என்றும் ஒரே அளவில் தான் இருக்கிற தென்று விஞ்ஞானம், நிரூபித்திருப்பதாக சொல்லப்படுகிறது.... ஆகையால் படைப்பு இல்லாதிருந்த காலம் ஒரு போதும் இருந்ததில்லை.  ஆனால் படைப்பு அதாவது உலகம் சில நேரங்களில் ஒடுக்க நிலையிலும் சில நேரங்களில் செயல் நிலையிலும் இருக்கிறது.

    எனவே உலகம் என்பது ஒரு நாள் தோன்றிய பிறகு முடிந்துவிடுவது அல்ல; ஒடுக்கத்திலிருந்து தோற்றம், தோற்றத்திலிருந்து ஒடுக்கம் என்று சுழர்ச்சி நிலையில் உள்ளது. எப்படி? அமைதியில் இருந்து நாதம் எழுந்து வலுப்பெற்று மீண்டும் அமைதியில் கரைகிறது. அதுபோல் படைப்பும் ஒடுக்கத்திலிருந்து விரிந்து, செயல் நிலைக்கு வந்து,௴ண்டும் ஒடுங்குகிறது.

மனிதன்

 மனிதன் என்பவன் யார் என்ற கேள்விக்கு நமது உபநிஷதங்களில்  இருந்து இரண்டு முக்கியமான விடைகள் கிடைக்கின்றன. அவற்றுள்  ஒன்றை இந்த உபநிஷதத்தில் காண்கிறோம். நான்கு பரிமாணங்களை உடையவர்கள் நாம் என்கிறது இந்த உபநிஷதம்.

    விழிப்பு நிலை,கனவுநிலை,தூக்க நிலை, என்ற மூன்று நிலைகளிலும்,  நாம் மாறி மாறி சஞ்சரிக்துக் கொண்டிருக்கிறோம். வீட்டிலும் அலுவலகத்திலும், சமுதாயத்திலும், ஒருவ்வொருவரும் வெவ்வேறு அனுபவங்களை பெறுகிறார்கள். வீட்டில் அவர்கள் மனைவி, மகள் சகோதரி, கணவன் மகன் சகோதரன் என்றெல்லாம் அறியப்படுகிறார்கள். அலுவலகத்தில் அவர்கள் ஒரு அதிகாரிகள். இத்தனை பரிமாணங்கள் அவர்களுக்கு இருந்தாலும் அவர்கள் யாரென்றால்  இத்தனை பரிமாணங்களையும் உள்ளடக்கிய ஒரு மனிதன்.

     நாம் விழிப்பு கனவு தூக்கம் என்ற மூன்று நிலைகளிலும், மூன்று பரிமாணங்களில் உலகத்துடன் தொடர்பு கொள்கிறோம். விழிப்பு நிலையில் இந்த உலகத்தை அனுபவிப்தது நமது முதற் பரிமாணமாகிய வைசுவானரன், கனவு நிலையில் அனுபவிப்பது தைஜஸன், தூக்க நிலையில் பிராஜ்ஞன். இந்த மூன்றையும் உள்ளடக்கிய மொத்த பரிமாணமே ஆன்மா.   இந்த நான்காம் பரிமாணம் என்று கூறப்படுகிற இந்த ஆன்மா.   இந்த ஆன்மாவே மனிதர், அதாவது நாம்.

 இதுவும் ஓங்கார மந்திரத்தின் வாயிலாக விளக்கப்படுகிறது.

நான்கு வேதங்களில் இருந்தும் தேர்ந் தெடுக்கப் பட்ட நான்கு சொற்றொடர்கள் "மகாவாக்கியங்கள்" குறிப்பிடப்படுகின்றன.

1. ப்ரஜ்ஞானம் ப்ரஹ்ம (பிரம்மம் பேருணர்வுப் பொருள்)  ரிக் வேதம்
2. அஹம் ப்ரஹ்மாஸ்மி (நான் பிரம்மமாக இருக்கிறேன்) யஜீர்வேதம்
3. தத் த்வம் அஸி (அது நீ யாக இருக்கிறாய்) சாமவேதம்
4. அயமாத்மா ப்ரஹ்ம (இந்த ஆன்மா பிரம்மம்) அதர்ணவேதம்

மிகவும் புனிதமானவையாகக் கருதப் படுகின்ற இவை நமக்கும் இறைவனுக்கும் உள்ள அறிதி நிலைத் தொடர்பை விளக்குபவையாக உள்ளன.


இறைவன்

    இறைவன் என்பதற்கு மிக உயர்ந்த நிலை விளக்கத்தை இந்த உபநிஷதம் தருகிறது.  இறைவன் யார்?  ஆன்மாவே இறைவன் என்ற மகாவாக்கியம் இந்த உபநிஷதத்தில் தான் வருகிறது.  இறைவன் எங்கும் நிறைந்தவர். எனவே அவர் கட்டாயமாக நம்மில் உள்ளார்.  நமது இதயத்தில் ஒளிர்கின்ற நிலையில் அவர் ஆன்மா என்று பெயர் பெறுகிறார்.

இறைவனின் சின்னமாகவும் ஓங்காரத்தை வைக்கிறது இந்த உபநிஷதம்.

எல்லாம் ஒன்றே 

    உலகம் என்பது செயல் நிலைக்கும் ஒடுக்க நிலைக்கும் மாறி மாறி சுழன்று கொண்டிருக்கிறது. அதன் சின்னமாக ஓம் எனும் மந்திரம் கூறப்பட்டது. உலகம் =  ஓம்.

    அடுத்த நிலையில் ஓம் என்னும் மந்திரம் நமது மூன்று நிலைகளுக்கு ஒப்பு உவமை படுத்தப்பட்டது.  ஓம் = மனிதன் உலகமும் பிரணவ மந்திரத்தின் விரிவாக உள்ளது, நாமும் பிரணவ மந்திரத்தின் விரிவாக உள்ளோம். எனவே உலகமும் நாமும் பிரணவ மந்திரத்தின் பிரிவாக உள்ளோம் எனவே உலகமும் நாமும் ஒரே அமைப்பில் உள்ளவர்கள் என்று ஆகிறது.  எனவே உலகம் = மனிதன். பிண்டமும் (நாம்) அண்டமும்(உலகமும்) ஒரே அமைப்பில் உள்ளன என்கிறார் சுவாமி விவேகானந்தர்.

    இறைவனே நம்மில் ஆன்மாவாக நிலவுவதை உபநிஷத்தின் இரண்டாம் மந்திரம் கூறுகிறது. அதாவது ஆன்ம நிலையில் நாமும் இறைவனும் ஒன்று என்றாகிறது.  மனிதன் = இறைவன். 

    எனவே உலகமும் நாமும் இறைவனும் தனித்தனி ஆனவர்கள் அல்ல. மூன்றும் ஒன்று என்பது இந்த உபநிஷதத்தின் தனிப்பெரும் கருத்தாக உள்ளது.      உலகம் = மனிதன் = இறைவன் இதனைப் படிப்படியாக இந்த உபநிஷதம் விளக்குகிறது.

உலகமும் இறைவனும் ஓம்காரம்


1.     இந்த உலகம் அனைத்தும் ஓங்காரமே. ஓங்காரத்தின் விளக்கத்தைக் காண்போம். சென்றவை, இருப்பவை, வருபவை எல்லாம் ஓங்காரமே.  மூன்று காலங்களையும் கடந்ததாக எது உள்ளதோ அதுவும் ஓங்காரமே.

    சென்றவை, இருப்பவை, வருபவை எல்லாம் படைப்பு என்பதை குறிக்கின்றன. படைப்பாக இருப்பது ஓங்காரம். இது பிரணவ மந்திரம், சப்த பிரம்மம், நாத பிரம்மம் என்றெல்லாம் அழைக்கப்படுகிறது. உலகம் படைக்கப்பட்ட போது முதலில் எழுந்தது இந்த ஓங்கார த்வனியே. அதிலிருந்தே உலகமும் அண்ட சராசரங்களும் தோன்றியதாக நமது சாஸ்திரங்கள் கூறுகின்றன. அதனால்தான் "உலகம் அனைத்தும் ஓங்காரம்" என்று இங்கே கூறப்பட்டது.  கலைமகள் வீணை வாசிக்க அந்த நாதத்தில் இருந்து அண்டசராசரங்கள் பிறப்பதாக ஸ்ரீராமகிருஷ்ணர் தெய்வீகக் காட்சி ஒன்றில் கண்டார். படைப்பின் ஆரம்பம் முதல் இன்றுவரை இந்த ஓங்கார நாதம் எங்கும் கேட்டுக் கொண்டு இருப்பதாகவும் யோகிகள் இதனை கேட்பதாகவும் கூறப்படுகிறது. யாராலும் எழுதப்படாத ஓசை ஆதலால் இது அனாஹத த்வனி எனப்படுகிறது.

    மூன்று காலங்களையும் கொண்டவராக இருப்பவர் இறைவன். அவரும் ஓங்காரம்.

எல்லாம் இறைவனே


     இவை அனைத்தும் இறைவனே. இந்த ஆன்மாவும் இறைவனே. இந்த ஆன்மா நான்கு பரிமாணங்களை உடையது.

    எதிலிருந்து ஒரு பொருள் உண்டாகிறதோ அது அந்த பொருளின் தன்மை இருக்கும். பாலிலிருந்து செய்யப்பட்ட இனிப்புகளில் பாலின் தன்மை இருக்கும். அது போல் இறைவனில் இருந்து தோன்றிய உலகமும்  இறையம்சம் கொண்டதாகவே இருக்கும். அதனால்தான் அனைத்தும் இறைவனே என்று கூறப்பட்டது.

    படைப்பில் காணப்படுகின்ற அனைத்தும் இறைவனே, இறைம்சம் கொண்டவை என்று கூறும் போது நாமும் அதில் அடக்கம். எங்கும் நிறைந்த இறைவன் நம்மை பிரகாசிக்கும் போது ஆன்மா என்று பெயர் பெறுகிறார். அதாவது நம்மில் உள்ள ஆன்மாவும் இறைவனும் ஒன்றே.

    காண்கின்ற உலகம் இறைவனே. ஆன்மாவும் இறைவனே. அப்படி என்றால் உலகமும் ஆன்மாவும் இறைவனே. அதாவது எல்லாம் இறைவனே.

    இந்த மந்திரத்தில் உள்ள "அபயம் ஆத்மா ப்ரஹ்ம" என்ற சொற்றொடர் மகா வாக்கியங்களுள் ஒன்றாகும்.

 மனிதன் 

    ஆன்மா நான்கு பரிமாணங்களை உடையது என்று மந்திரம் கூறியது. 

அந்த நான்கு பரிமாணங்கள் எவை?

முதல் பரிமாணம் - வைசுவானரன் - விழிப்புநிலை

    ஆன்மாவின் முதல் பரிமாணம் வைசுவானரன் எனப்படுகிறது. இதன் உணர்வு புறமுகமாக உள்ளது. ஏழு அங்கங்களும் பத்தொன்பது வாய்களும் கொண்ட வைசுவானரன் விழிப்புநிலையில் புற உலகை அனுபவிக்கிறான்.

     நாம் விழித்திருக்கும் நிலையில் வேலை செய்கிறோம். படிக்கிறோம், விளையாடுகிறோம், சிந்திக்கிறோம். இதையெல்லாம் செய்கின்ற, அதாவது விழிப்பு நிலையில் இந்த உலகை அனுபவிப்பவன் வைசுவானரன். அதாவது உலகை அனுபவிக்கின்ற நிலையில் நாம் வைசுவானரன் என்ற பெயர் பெறுகிறோம்.

    வைசுவானரனுக்கு சில அடையாளங்களை இந்த மந்திரம் கூறுகிறது. அவனுக்கு அங்கங்கள் 7, வாய்கள் 19.

7 அங்கங்கள் எவை?

   1. சொர்க்கம் - தலை,  2.சூரியன் - கண்கள், 3.காற்று - பிராணன்,4.வெழி - நடுப்பகுதி, 5.தண்ணீர் - சிறுநீரகம்,  6.பூமி - கால்கள்.

    கண்ணுக்குத் தெரிகின்ற பூமி, கண்ணுக்குத் தெரியாத நுண்ணுலகமான சொர்க்கம் காற்று, வெளி, தண்ணீர் போன்ற பஞ்ச பூதங்கள் ஆகியவை வைசுவானரனின் அங்கங்களாக கூறப்பட்டுள்ளன. புறப்பிரபஞ்சம் முழுவதையும் உள்ளடக்கிய ஓர் உருவம் இது. விழிப்பு நிலையில் நமது உருவம் இது என்கிறது இந்த மந்திரம். இதன் பொருள் என்ன.

    நாம் புற உலகை அனுபவிப்பது நமக்குத் தெரிந்த, நாம் காண்கின்ற நமது தூல உடம்பினால் ஆகும்.

புறப் பிரபஞ்சமே நமது உடம்பாக கூறப்பட்டதன் மூலம், நமது தூல 7.உடம்பு புற பிரபஞ்சத்தின் ஓர் அங்கம் என்பது சுட்டிக் காட்டப்படுகிறது.
 
19 வாய்கள். வாய் என்பது அனுபவத்திற்கான வாசல்.  19 வாய்கள் என்றால். 19 வாசல்கள் மூலம் நாம் புற உலகை அனுபவிக்கின்றோம் என்பது பொருள்.

19 வாசல்கள் எவை

1.கண் (பார்த்தல்), 2.காது (கேட்டல்), 3.மூக்கு (வாசனைஅறிதல்), 4.நாக்கு (சுவை அறிதல்), 5.தோல் ( உணர்தல்) ஆகியவை அறிவுக் கருவிகள் (ஞானேந்திரியங்கள்) ஐந்து.  6.வாய் (பேச்சு), 7. கை  (செயல்கள்) 8.கால் (நடத்தல்),9.குதம் மற்றும் 10.குறி (கழிவு வெளியேற்றம்) ஆகிய செயற்கருவிகள் (கர்மேந்திரியங்கள்) ஐந்து. முக்கிய பிராணன்கள் ஐந்து 11.பிராணன்(மேல் நோக்கிய இயக்கம்)12. அபானன் (கீழ் நோக்கிய இயக்கம்)13. வியானன் (எல்லாப் பக்க இயக்கம்) 14. உதானன் (மரண வேளையில் உயிர் வெளியேற உதவுதல்) 15.சமானன் (உணவை ஜீரணித்தல், ஜீரணித்த உணவை ரத்தம்மாக மாற்றுதல்)  16.மனம், 17.புத்தி, 18.நான் - உணர்வு , 19. சித்தம், சித்தாந்த 19 கருவிகளின் மூலம் நாம் புற உலகை அனுபவிக்கின்றோம்.

    மனம், புத்தி, நான் - உணர்வு, சித்தம்  ஆகிய நான்கும் மனத்தின் பல்வேறு நிலைகள் ஆகும்.  மனம் என்பது இங்கே உணர்வு மனத்தை  குறிக்கிறது. நாம் கண், காது போன்ற புலன்கள் வழியாக புறவுலகை அனுபவிப்பது இந்த மனதின் மூலமே.

    மனதில் நிச்சயம் செய்கின்ற பகுதி புத்தி எனப்படுகிறது. அங்கே வருவது இவனா அவனா என்று குழப்புவது உணர்வு மனம். இது அவன் தான் என்ற உறுதியை அளிப்பது புத்தி.

    அனுபவங்கள் ஏதுவும் வீணாவதில்லை. புலன்கள் வாயிலாக நாம் பெறுகின்ற அனுபவங்கள் ஒவ்வொன்றும் ஒரு பதிவாக மனதின் ஒரு பகுதியில் சேர்த்து வைக்கப்படுகிறது.  இதுவே சித்தம். இது ஆழ்மனம் என்று அழைக்கப்படுகிறது. உணர்வு மனம் ஒன்றை நிச்சயிக்க முடியாமல் குழப்பும்போது, சித்தத்தில் உள்ள அனுபவங்களை ஒப்பிட்டு புத்தி ஒரு முடிவிற்கு வருகிறது. அவனா இவனா என்ற கேள்வி எழும்போது புத்தி ஆழ் மனதில் தகவல்களை  தேடுகிறது.  அவன் ஏற்கனவே நாம் கண்டவனாக இருந்தால் அந்த பதிவுகள் அங்கே இருக்கும். அதை வைத்து  இது தான்  அவன் என்று புத்தி நிச்சயம் செய்கிறது. 

    நாம் விழித்திருக்கும்போதும், கனவு காணும் போதும், தூங்கும் போதும் எந்த நிலையில் சரி நான் இருக்கிறேன் என்ற உணர்வு நம்மை விட்டு நீங்குவது இல்லை.  அது நமது மனதின் பின்னணியில் எப்போதும் இருக்கும். இதுவே நான்- உணர்வு.  எந்த அனுபவத்திற்கும் அடிப்படையாக இருப்பது இது.  இது இல்லாமல் எந்த அனுபவமும் இல்லை.  இவ்வாறு பத்தொன்பது வாசல் வழியாக நாம் புற உலகை அனுபவிக்கின்றோம்.

    நாம் பிரபஞ்சத்தில் ஒரு அங்கம். விழிப்பு நிலையில், இவ்வாறு தூலப் பிரபஞ்சத்தை அனுபவிக்கின்ற நிலையில் ஆன்மா வைசுவானரன் எனப்படுகிறது. இது நமது முதல் பரிமாணம்.

இரண்டாம் பரிமாணம் - தைஜஸன் - கனவு நிலை

    ஆன்மாவின் இரண்டாம் பரிமாணம் தைஜஸன் எனப்படுகிறது. இதன் உணர்வு  அகமுமாக உள்ளது. ஏழு அங்கங்களும் பத்தொன்பது வாய்களும் கொண்ட தைஜஸன் கனவு நிலையில் மன உலகை அனுபவிக்கிறார்.

    அடுத்ததாக வருவது கனவு நிலை .கனவு நிலையும், விழிப்பு நிலையைப் போன்றதே. ஒரே வித்தியாசம் இங்கே புற உலகம் இல்லை, அனுபவங்கள் அத்தனையும் மன உலகிலேயே நிகழ்கிறது.

    உடம்பும் மனமும் கருவிகள். அவற்றுக்கு ஓய்வு தேவை. உடம்பு ஓய்வெடுப்பது தூக்கம் எனப்படுகிறது. அப்போது மனம் தொடர்ந்து செயல்படுகிறது. ஆனால் நாம் புற உலகை உணர்வதில்லையே. உணர்வதில்லை. ஏனெனில் புறவுலகை உணர்கின்ற உணர்வு மனம் தூக்கத்தில் ஆழ்கிறது. ஆனால் ஆழ்மனம் விழித்திருக்கிறது. அந்த மனம் ஒரு புதிய உலகத்தை உருவாக்குகிறது. அதுவே கனவு.

    அங்கே தேர் இல்லை, இழுக்க மிருகங்கள் இல்லை, சாலைகள் இல்லை, அங்கே இன்பமில்லை, களிப்பு இல்லை, ஆனந்தம் இல்லை, அங்கே குளம் இல்லை, ஏரி இல்லை, நதிகளும் இல்லை அவர் அனைத்தையும் உருவாக்குகிறார். ஏனெனில் அவரே அனைத்தையும் உருவாக்குபவர் என்று கனவு உலகத்தை பற்றி பிருஹாதாரண்யக உபநிஷதம் கூறுகிறது.  உடம்பும் உணர்வு மனமும் ஓய்வெடுக்கும் போது ஆழ்மனம் செயல்படுகின்ற நிலை இது. மனம் இங்கே தனக்கென்று ஒரு உலகை உருவாக்கி இன்ப துன்பங்களை அனுபவிக்கிறது.

    கனவு உலகத்தை அனுபவிக்கின்ற நிலையில் ஆன்மா தைஜஸன் எனப்படுகிறது. இது நமது இரண்டாம் பரிமாணம்.

மூன்றாம் பரிமாணம் - பிராஜ்ஞன் - தூக்க நிலை

    ஆசைகளோ கனவுகளோ எதுவும் இன்றி ஆழ்ந்து தூங்குகின்ற நிலை ஆன்மாவின் மூன்றாம் பரிமாணமாகும். இந்த நிலையை அனுபவிப்பவன் பிராஜ்ஞன். இந்த நிலையில் அனுபவங்கள் எதுவும் இல்லை. உணர்வு திரண்டு ஒரு திரளாக உள்ளது, அதனால் இது விழிப்பு மற்றும் கனவுநிலை உணர்வுகளின் வாசலாக உள்ளது. ஆனந்த வடிவினரான பிராஜ்ஞன் இங்கே ஆனந்தத்தை அனுபவிக்கிறார்.

    மூன்றாவது வருவது ஆழ்ந்த தூக்கம். இங்கே விழிப்பும் இல்லை, கனவும் இல்லை. விழித்திருக்காவிட்டாலும், கனவு காணாவிட்டாலும் அந்த ஆழ்ந்த தூக்க நிலையை நாம் அனுபவிக்கின்றோம். ஏனெனில் தூங்கி எழுந்த பிறகு, நேற்று நன்றாக தூங்கினேன். மிகவும் ஆனந்தமாக இருந்தது என்று கூறுகிறோம். இவ்வாறு தூக்க நிலையை அனுபவிக்கின்ற ஆன்மா பிராஞ்சன் எனப்படுகிறார். 

தூக்க நிலைக்கு இங்கே 4 அடையாளங்கள் கூறப்பட்டுள்ளன.

    இந்த நிலையில் அனுபவங்கள் எதுவும் இல்லை. கண், காது போன்ற நமது புலன்கள், உணர்வு மனம், ஆழ்மனம் அனைத்தும் ஓய்வில் ஆழ்ந்து விடுவதால் இங்கே புறவுலக அனுபவங்களும் இல்லை, மன உலக அனுபவங்களும் அதாவது கனவும் இல்லை.

    புறவுலகம், மனவுலகம் என்று எந்த உலகத்தின் அனுபவங்களும் இல்லாமல் மனம், ஆழ்மனம், புத்தி, சித்தம் ஆகியவை ஒடுங்கி இருக்கின்றன. எங்கே? நான் உணர்வில், அனைத்தும் நான் உணர்வில் ஒடுங்கி விட்டதால் தனியான அனுபவங்கள் எதுவும் இல்லை. அதனால் இது அனைத்தும் திரண்ட நிலையாக கூறப்படுகிறது.

     மனம், ஆழ்மனம் ஆகியவை ஒடுங்கிவிட்டாலும் நான் உணர்வு இங்கு விழித்திருக்கிறது.  இதன் பொருள் என்ன?  நான் இருக்கிறேன். என் பெயர் ராம் என்ற உணர்வு, ஆழ்ந்த தூக்கத்திலும் நம்மை விட்டு விலகுவதில்லை. 10 பேர் தூங்குகின்ற இடத்தில் ராமா என்று கூப்பிடும் போது, ராமன் சட்டென்று விழிப்பது இந்த நான் உணர்வு விழித்திருப்பதன் காரணமாகத்தான்.

    இவ்வாறு நான்உணர்வில் ஒடுங்கியிருக்கின்ற மனம் வெழிப்படும்போது முதல்நிலையில் கனவும், மேலும் புறநிலையில் வரும்போது விழிப்பு நிலையும் அனுபவிக்கப்படுகின்றன. அதனால்தான் இது மற்ற இரண்டு நிலைகளின் வாசல் என்று கூறப்பட்டது.

     ஆழ்ந்த தூக்க நிலையில் உள்ள ஒரே அனுபவம் ஆனந்தம். அதனால் தான் தூங்கி எழுந்ததும் நான் ஆனந்தமாக தூங்கினேன் என்று நம்மால் கூற முடிகிறது.

     இவனே அனைத்திற்கும் தலைவன்  இவனேஅனைத்தும் அறிபவன் இவனே  அனைத்து உயிர்களையும் உள் நின்று இயக்குபவன். அனைத்துக்கும் மூல காரணம் இவனே. உயிர்களின் தோற்றத்திற்கும் ஒடுக்கத்திற்க்கும் இவனே காரணம்.

    தூக்க நிலை இங்கு மேலும் விளக்கப்படுகிறது. புற உலகம், அதிலிருந்து நாம் பெறும் அனுபவங்கள் ஆகியவை சேர்ந்தே நமது வாழ்க்கை. நான் உணர்வு என்று ஒன்று இருந்தால் மட்டுமே இந்த அனுபவங்கள் அனைத்தையும் நாம் பெறமுடியும். உலகங்கள் எல்லாம் இருந்தாலும் நான் உணர்வு இல்லை என்றால் அனுபவங்கள் எதுவும் இல்லை. அந்த நான் உணர்வுக்கு அடிப்படையாக இருப்பது தூக்க நிலையை அனுபவிக்கின்ற நமது பரிமாணமாகிய பிராஜ்ஞன்.

    ஓர் உதாரணத்தைக் காண்போம். காண்பவன் இருக்கலாம். எத்தனையோ அழகிய காட்சிகள் முன்னால் இருக்கலாம், ஆனாலும் ஒளி இல்லை என்றால் எந்த பயனும் இல்லை. எனவே காண்பவர் காட்சி ஆகிய இரண்டிற்கும் அடிப்படையாக இருப்பது ஒளிதான். அதுபோலவே உலகம், உயிர்கள், அறிவு என்று எவ்வளவுதான் இருந்தாலும் நான், என்ற ஒன்று இல்லாமல் அவற்றை அறியவோ அனுபவிக்கவோ முடியாது. அதனால்தான் இங்கே நான் உணர்வின் அடிப்படையான பிராஜ்ஞன் இத்தனை பெருமைகள் உடையதாக போற்றப்படுகிறார்.

    ஒவ்வொரு உயிரிலும் தலைம நிலையில் இருப்பவர் பிராஜ்ஞன். ஏனெனில் பிராஜ்ஞனின் செயல்பாடான நான் உணர்வு இல்லாமல் யாரும் எதையும் உணரவோ அனுபவிக்க முடியாது. இவ்வாறாக அனைத்தையும் இயக்குபவராக இருப்பதால் பிராஜ்ஞன் அனைத்திற்கும் தலைவர், அனைத்து உயிர்களையும் உள் நின்று இயக்குபவர்.

     உலகம் இருக்கலாம் பல்வேறுஅறிவு இருக்கலாம்.  ஆனால் நான் உணர்வு இன்றி எந்த அறிவையும் பெறவோ பயன்படுத்தவோ முடியாது. அதனால் பிராஜ்ஞன் அனைத்தையும் அறிபவர்.

    உலகமும் உயிர்களும் நதியும் கடலும் மலையும் இருந்தாலும் நான் இல்லாமல் இவை எதனாலும் ஒருவருக்கும் பயனில்லை. இந்த உலகம் இருக்கிறது என்றால் அதற்கு என்னை பொறுத்தவரை நானே காரணம். நான் இல்லாவிட்டால் எனக்கு உலகம் இல்லை. அதனால்தான் பிராஜ்ஞன் அனைத்திற்கும் மூல காரணம்.

    விழிப்பு நிலையும் கனவும் எவ்வாறு நான் உணர்வில் ஒடுங்கி அதிலிருந்து மீண்டும் வெளிவருகின்றன என்பது  கூறப்பட்டது. வாழ்க்கையே பிராஜ்ஞனில் ஒடுங்கி, மீண்டும் அவரில் வெழிப்படுவதாக உள்ளது.  அதனால்தான் தோற்றத்திற்க்கும் ஒடுக்கத்திற்கும் இவரே காரணம் என்று கூறப்பட்டது.

நான்காம் பரிமாணம் - ஆன்மா 

    நான்காம் பரிமாணம். அது  அகமுகநிலை அல்ல, புறமுக நிலை அல்ல, இரண்டும் சேர்ந்த நிலை அல்ல. அது உணர்வு திரண்ட நிலை அல்ல, உணர்வு நிலை அல்ல, உணர்வற்ற நிலையும்  அல்ல, அதனை காணமுடியாது. செயல்கள் அற்ற, புரிந்து கொள்ள முடியாத, அடையாளங்கள் இல்லாத, சிந்தனைக்கு அப்பாற்பட்ட, விளக்க முடியாத நிலை அது. அதனை ஆன்ம உணர்வால் மட்டுமே அறிய முடியும். அங்கே பிரபஞ்ச உணர்வு இல்லை. அது அமைதிமயமானது, மங்கலமானது, இரண்டற்றது.  இதுவே நான்காம் பரிமாணம். இது ஆன்மா. இதையே அறியவேண்டும்.

     நான்காம் பரிமாணம் என்று கூறப்பட்டாலும் இது உண்மையில் முதல் மூன்று பரிமாணங்கள் சேர்ந்ததும் அதே வேளையில், அவற்றைக் கடந்ததுமான ஒரு நிலையாகும். நமது உண்மையான இயல்பு இதுவே. விழிப்பு நிலை, கனவு, தூக்கம் ஆகிய மூன்று நிலைகளிலும் ஆன்மா இருக்கிறது. சூரியனின் சன்னதியில் உலகம் இயங்குகிறது. ஆனால் எந்த இயக்கத்திலும் சூரியன் நேரடியாக ஈடுபடுவது இல்லை. அது போலவே நமது அனைத்து செயல்பாடுகளும் ஆன்மா என்ற ஒன்றை அடிப்படையாக வைத்தே நிகழ்கின்றன. 

    நான் உணர்வு என்ற ஒன்று இருக்கின்றது.   தூக்கத்தையே நமது அறிவால் சரியாக புரிந்து கொள்ளவோ விளக்கவோ இயலவில்லை.  இதில் நான் உணர்வும்  அற்ற ஆன்ம நிலையை, அறிவால் அறிவதோ, புரிந்து கொள்வதோ, விளக்குவதோ சாத்தியமே அல்லாத ஒன்று. நமது அறிவின் எல்லைகள் குறுகியவை. ஆன்ம நிலையை உணரலாம். அனுபவிக்கலாம். ஆனால் அதனை நமது அறிவினால் அறியவோ சொற்களால் விளக்கவோ இயலாது. அதனை உணர்த்தவே உபநிஷதம் முரண்பாடுபோல் தோன்றுகின்ற இத்தகைய சொற்களால் அந்த நிலையை சுட்டிக்காட்டுகிறது.

மனிதன் ஓங்காரமே 

    உலகம், இறைவன் இரண்டும் ஓங்காரம் என்று முதல் மந்திரம் கூறியது. மனிதனும்  ஓங்காரமே என்று கூறி இந்த  ஐந்து மந்திரங்கள் விளக்கம் தருகின்றன.

    இந்த ஆன்மாவை ஒரு சொல்லால் குறிப்பிட வேண்டுமானால் அதுவும்  ஓம் என்னும் ஓங்காரம். எழுத்துக்களாக சொல்ல வேண்டுமானால் அதன் பகுதிகளே எழுத்துக்கள். எழுத்துக்களே பகுதிகள். அந்த ஓங்காரம் அ, உ, ம் என்ற மூன்று எழுத்துக்களால் ஆனது.

    ஓங்கார மந்திரத்தை இரண்டு கோணங்களில் காண்கிறது இந்த உபநிஷதம். முதல் மந்திரத்தில் கண்டதுபோல் சென்றவை இருப்பவை வருபவை என்று அனைத்தும் மொத்தமாகவும் காலங்களை கடந்ததாகவும் இருக்கின்ற பொருள்.

    இரண்டாவது அ, உ, ம் என்ற மூன்று எழுத்துக்களின் சேர்க்கையால்  அமைந்த ஒரு சொல். அ + உ + ம் = ஓம். வாயை திறக்கும் போதே அ உச்சரிக்கப்பட்டு விடுகிறது. ம் என்பதுடன் வாய் மூடப்படுகிறது. அதன்பிறகு எந்தவார்த் தையையும் உச்சரிக்கமுடியாது எனவே அனைத்து வார்த்தைகளின் மொத்தமான ஒரு மந்திரமாக அமைந்துள்ளது ஓம்.


    இந்த மந்திரம் எப்படி நம்மில் அதாவது நமது மூன்று பரிமாணங்களுடன் பொருந்துகிறது என்பதை தொடர் மந்திரங்கள் கூறுகின்றன.


 விழிப்புநிலை = வைசுவானரன் = அ


    ஓங்கார மந்திரத்தின் முதற்பகுதி ஆகிய அகாரம் விழிப்பு நிலையை களமாகக் கொண்ட வைசுவானரன். ஏனெனில் நிறையும் தன்மையாலும் ஆரம்ப தன்மையாலும் இரண்டும் சமமாக உள்ளன. இவ்வாறு அறிபவனிரின் எல்லா ஆசைகளும் நிச்சயமாக நிறைவேறுகின்றன. அவர்கள் முதன்மையானவர்கள் ஆகிறார்கள்.


    மந்திரத்தின் முதல் பகுதியாகிய  அ நமது விழிப்பு நிலையை பரிமாணமாகிய வைசுவானரனுக்கு ஒப்பிடப்படுகிறது. அ விற்கும் விழிப்பு நிலைக்கும் இரண்டு பொதுப்பண்புகள் கூறப்படுகின்றன.


     நிறையும் தன்மை: வாயை திறக்காமல் எந்த வார்த்தையையும் உச்சரிக்க முடியாது. வாயை திறக்கும்போதே அ என்ற எழுத்து உச்சரிக்கப் பட்டுவிடுகிறது. எனவே எழுத்தோ சொல்லோ எதுவானாலும் அது அ என்ற எழுத்து கலந்து தாகவே இருக்கும். அதாவது அ என்ற எழுத்துக்கள் சொற்கள் அனைத்திலும் நிறைந்துள்ளது.


    விழிப்புநிலையும் மற்ற நிலைகளில் நிறைந்துள்ளது. ஆழ்மனப்  பதிவுகளே கனவுகளாக வெளிப்படுகின்றன என்று கண்டோம். ஆழ்மனப் பதிவுகள் நமது விழிப்பு நிலை அனுபவங்களின் விளைவுகள். எனவே கனவும் விழிப்பு நிலைய  அனுபவங்களின் தொடர்புடையதே.  அதுபோலவே ஆழ்ந்த தூக்கத்திலும் விழிப்பு நிலையின் அனுபவங்கள் இருக்கவே செய்கின்றன.  தனித்தனியாக இல்லாமல் ஒன்று திரண்டு ஒரு திரளாக உளன. எனவே விழிப்பு நிலை மற்ற நிலைகளில் நிறைந்துள்ளது.


ஆரம்பத் தன்மை: பிரணவ மந்திரத்தின் ஆரம்ப பகுதி அ நமது அனுபவங்களிலும் ஆரம்ப நிலையாக அமைந்துள்ளது விழிப்பு நிலை.


கனவு நிலை = தைஜஸன் = உ


ஓங்கார மந்திரத்தின் இரண்டாம் பகுதியான உகாரம் கனவு நிலையைக் களமாக கொண்ட தைஜஸன். ஏனெனில் உயர் வாலும் இரண்டின் தொடர்பாலும் இரண்டு சமமாக உள்ளன. இவ்வாறு அவன் கட்டாயமாக அறிவை வளர்க்கிறான். சுகதுக்கம்போன்ற  இரட்டைகளில் சமமாக இருக்கிறான். ஞானி அல்லாத யாரும் அவனது குலத்தில் பிறப்பதில்லை.


     ஓங்கார மந்திரத்தில் இரண்டாம்  "உ" நிலைகளுள் இரண்டாவதாக அமைவது கனவு. இரண்டிற்க்கும் பொதுவாக இரண்டு பண்புகள் கூறுப்படுகின்றன.


 உயர்வு ஓங்கார மந்திரத்தின்"உ" என்ற  எழுத்தும் கனவு நிலையும் உயர்வானது என்று மந்திரம் கூறுகிறது. எப்படி?


    ஓங்காரத்தை உச்சரிப்பது பற்றி ஏற்கனவே கண்டோம். அது ஆரம்பத்தில் மென்மையாகவும் நடுவில் உரக்கவும் இறுதியில் மென்மையாகவும் உச்சரிக்கப்படுகிறது.  உ உரக்க உச்சரிக்கப்படுவதால் உயர்வானதாக கூறப்படுகிறது.


    அதுபோலவே, விழிப்புநிலையில் உணர்வு (conscious mind) மனம் மட்டுமே செயல்படுகிறது. உணர்வுப் பகுதி நமது மனதின் மிகச் சிறு பகுதி மட்டுமே, இந்த பகுதியை செயல்படுத்துவது நமது மனதின் மிக பெரும்பகுதியான ஆழ்மனம் (subconscious mind) ஆகும். கனவு நிலையில் உணர்வு மனம் ஓய்வில் ஆழ்ந்துவிடுகிறது. ஆழ்மனம் செயல்படுகிறது. ஆழ்மனத்தின் எல்லைகள் பரந்தது. எனவே கனவு நிலையின் எல்லைகளும் பரந்ததாக உள்ளது. விழிப்பு நிலை உலகத்தின் எந்த நியதிகளும் சட்டதிட்டங்களும் அங்கே செல்லுபடியாவதில்லை. கனவில் பாம்பு பாடமுடியும், பசு வால் பறக்க முடியும். கனவுபற்றி ஆராய்த அறிஞர்கள் நான்கு விதமான கனவுகளை கூறுகிறார்கள்.


    விழிப்புநிலையில் நடைபெற்ற நிகழ்ச்சிகளின் தொடர்ச்சியாக கனவுகள் அமையலாம். எந்த நிகழ்ச்சியும் மனத்தில் ஒரு பதிவை (ஸம்ஸ்காரம்)விட்டு செல்கிறது. அந்த பதிவு ஆழ்மனதில் சேமிக்கப்படுகிறது. சில வேளைகளில் இந்த பதிவுகள் செயல்படத் தொடங்குகிறது. அப்போது விழிப்பு நிலை நிகழ்ச்சிகளின் தொடர்ச்சியாக கனவுகள் அமையும்.


ஆசைகளும் லட்சியங்களும் எண்ணற்றவை. இவற்றில் சிலவற்றை மட்டுமே நம்மால் வெளியிட முடியும். சமுதாயம், பெற்றோர், நண்பர்கள் என்று யாருக்காவது பயந்தோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ அவற்றை நாம் ஆழ்மனத்தில் அமுக்கி வைத்விடுகிறோம். கனவு நிலையில் இவையும் செயல்படுகின்றன. ஆனால் பயம் காரணமாகவே நேரடியாக வராமல் மறைமுகமாக வெழிப்படுகின்றன. கனவில் மங்கல நிகழ்ச்சிகளை கண்டால் உண்மையில் அமங்கல நிகழும் என்றும் கூறுவது உண்டு. அதாவது கனவில் நாம் காண்பவற்றை அப்படியே எடுத்துக் கொள்ளக்கூடாது. பொருள் திரிந்து வருகின்ற கனவுகளும் உண்டு.


    ஆழ்மனம் பரந்தது, ஆற்றல்மிக்கது.  அதனால் எதிர்காலத்தை கூட காண முடியும். சில வேளைகளில் எதிர்காலத்தை காட்டுவதாக சில கனவுகள் அமைவதுண்டு.


 தெய்வீக கனவுகள், மிகச் சிலரின் வாழ்வில் கனவுகள் மூலமாக இறையருள் வெழிப்படுவது உண்டு. தரிசனங்கள் தெய்வீக அனுபவங்கள் போன்றவை கனவில் நிகழ்வது உண்டு.


    இங்கே ஒரு கருத்தை கவனத்தில் கொள்ள வேண்டும். பல நேரங்களில் நாம் காணுகின்ற தெய்வீக கனவுகள் முதல்வகை கனவுகள் மட்டுமே. அதாவது நாம் படித்த பார்த்த சம்பவங்களின் தொடர்ச்சி மட்டுமே. கனவுக்கு பிறகு அது நமது வாழ்க்கையில் ஏற்படுகின்ற விளைவைவைத்தே அந்தக் கனவு தெய்வீக கனவா அல்லது முதல்வகை கனவா என்பதை முடிவு செய்ய முடியும். உண்மையான தெய்வீக கனவு வாழ்க்கையில் மாபெரும்மாற்றத்தை ஏற்படுத்துகிறது. வாழ்க்கை முற்றிலுமாக இறைவாழ்க்கையாக மாற்றி அமைக்கப்படுகிறது. இவ்வாறு இல்லாமல் வாழ்க்கை பழையபடியே சென்று கொண்டிருக்கும் ஆனால் அது முதல்வகை கனவு மட்டுமே.


    இவ்வாறு விழிப்புநிலை விட தூக்கத்தை விட பல முகபரிமாணங்களைக் கொண்டதாக இருப்பதால் கனவுநிலை உயர்வானது என்று சொல்லப்படுகிறது.


    இரண்டின் தொடர்பு. நடுவில் அமைந்துள்ளதால்  "உ" என்ற எழுத்து அ ம் ஆகிய எழுத்துக்கள் உடன் தொடர்புடையதாக உள்ளது அதுபோலவே கனவுநிலை மற்ற இரண்டுடனும் தொடர்பு உடையதாக கூறப்பட்டுள்ளது. 


தூக்க நிலை ப்ராஜ்ஞன் = ம்


     ஓங்கார மந்திரத்தின் மூன்றாம் பகுதியான மகாரம் ஆழ்ந்த தூக்கத்தை களமாக்கி கொண்ட பிரான்ஜன். ஏனெனில் அளவிடும் தன்மையாலும் கிரகிக்கும் தன்மையாலும் இரண்டும் சமமாக உள்ளன.  இவ்வாறு அறிபவன் கட்டாயமாக அனைத்தையும் அளப்பவனாகவும் கிரகிப்பவனாகவும் ஆகிறான். 


    ஓங்கார மந்திரத்தில் மூன்றாம் பகுதி ம் நிலைகளுள் மூன்றாவதாக அமைவது ஆழ்ந்த தூக்கம் . இரண்டுக்கும் பொதுவாக இரண்டு பண்புகள் கூறப்படுகின்றன:


     அளவிடும் தன்மை நெல் முதலிய தானியங்களை அளக்க நாளிகை மரக்கால் முதலியவை பயன்படுகின்றன. இதில் முதலில் தானியத்தை நிரப்பி  அதன் அளவை அறிந்தபின்பு வெளியில் கொட்டி வைப்பார்கள். முதலில் நாழி வெறுமையாக இருக்கும். பிறகு அதில் தானியம் நிறைக்கப்படும்.  பிறகு மீண்டும் வெறுமையாக்கப்படும். 


    அதுபோலவே 'அ' வும், 'உ' வும் 'ம்' மில் ஒடுங்குகின்றன.  மீண்டும் அதிலிருந்து வெளிவருகின்றன இவ்வாறு 'ம்'என்பது ஒரு நாழியைப் போல் செயல்படுவதாக இந்த மந்திரம் கூறுகிறது.

     அவ்வாறே விழிப்பு நிலை மற்றும் கனவு நிலை அனுபவங்கள் அனைத்தும் தூக்க நிலையில் நிரப்பப்படுகின்றன. மீண்டும் விழிப்பு நிலைக்கு வரும்போது அனைத்தும் வெளிவருகின்றன. தூக்க நிலையும், ஒரு நாழியைய்போல் அளவிடுவது ஆக உள்ளது.

    கிரகிக்கும் தன்மை: ஓம் என்னும் மந்திரத்தை உச்சரிக்கும்போது 'அ' வும், 'உ' வும் 'ம்' மில் ஒடுங்குவது போல் உள்ளது. அதாவது 'ம்'  அ' வையும், 'உ' வையும் கிரகித்துக் கொள்கிறது.

    ஆழ்ந்த தூக்க நிலையிலும் விழிப்பு நிலை மற்றும் கனவு நிலை அனுபவங்கள் கிரகிக்க படுகின்றன. ஒரு திரளாக வைக்கப்படுகின்றன.

    ஓம்கார மந்திரத்தை அ, உ, ம் என்ற பகுதிகளாக அறிபவன் குறிப்பிட்ட சில பலன்களை பெறுவதாக  மந்திரங்களில் காண்கிறோம். வெறுமனே படிப்பதால் இந்த பலன்கள் கிடைக்கும் என்று உபநிஷதம் கூறுவதாகக் கொள்ளக்கூடாது. அறிதல் என்றால் சாதனைகள் செய்து, அனுபூதியில் அறிதல் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். 

ஆன்மா 
 ஓம்கார மந்திரத்தின் நான்காம் பகுதி, பகுதி என்று சொல்ல முடியாதது, செயல்கள் அற்றது, பிரபஞ்ச உணர்வு கடந்தது, மங்கலம் ஆனது, இரண்டும் அற்றது. இந்து ஓங்காரமே ஆன்மா. இவ்வாறு அறிபவன் ஆன்மாவை ஆன்மாவால் அடைகிறான்.

    சொற்களால் விளக்க முடியாத பகுதியாக அமைந்துள்ளது நான்காம் பகுதி, மொத்த பரிமாணம். 

    ஓம் என்ற மந்திரத்தை உச்சரிக்கும்போது 'ம்' என்பதில் மந்திரம் முடிந்தபிறகு உச்சரிக்கும் முன் ஓர் இடைவெளி இருக்கும். மிகச் சிறியதானாலும் இடைவெளி இருந்தே தீரும். அதுவே ஓங்கார மந்திரத்தின் நான்காம் பகுதி. இது அர்த்த மாத்திரை என்று கூறப்படுகிறது. 

    அ, உ, ம், அமைதி நிலை - இந்த நான்கும் சேர்ந்தது ஓம்காரம். சேர்ந்தது என்றால் ஒரு கூட்டுப்பொருள் போன்றது என்று பொருள் கொள்ளக்கூடாது. அ, உ, வில் ஒடுங்குகிறது. உ, ம், இல் ஒடுங்குகிறது. ம் அமைதியில் ஒடுங்குகிறது. இறுதியில் அனைத்தும் அமைதியில் நிலைக்கிறது. அவ்வாறு விழிப்பு, கனவு, தூக்கம் ஆகிய அனைத்தும் ஆன்மாவில் ஒடுங்கி, ஆன்மா மட்டுமே எஞ்சுகின்ற ஆன்ம அனுபூதி வாய்க்கிறது.

ஓங்கார தியானம் 

    எல்லாம் ஒன்றே என்ற உண்மையை அறிவதும் அனுபவிப்பதும் வாழ்க்கையின் லட்சியம். ஏன்? ஏனெனில் அதை உணர்ந்தவர்களுக்கு உண்மையான அமைதி உரித்தாகுறது. மனிதர்கள் தேடுவது அமைதியை அல்லவா! யார் இந்த மரண கடலுக்கு இடையில் ஒன்றேயான அதனை காண்கிறார்களோ, மிதந்து செல்லும் இந்த பிரபஞ்சத்தில் நிலையான ஒன்றை காண்கிறார்களோ, என்றும் மாறாத அந்த ஒன்றை அனுபூதியில் அறிகிறார்களோ  அவர்களுக்கு அழிவில்லாத அமைதி கிடைக்கும். வேறு யாருக்கும் இந்த அமைதி கிடைக்காது; கிடைக்கவே கிடைக்காது! இருப்பது ஆகிய இந்த ஒன்றை அறிய வேண்டும்.

    ஆனால் அறிவதும் அனுபவிப்பதும் வெறும் வார்த்தைகளால் நடப்பதில்லை. அதற்கு நாம் பாடுபட வேண்டும். முனிவர்கள் கூறிய வழியை பின்பற்ற வேண்டும். மாண்டூக்கிய உபநிஷதம் காட்டும் வழி என்ன? 

    ஓம்கார தியானம்.

    உலகமும் உயிர்களும் இறைவனும் ஒன்றே என்ற உண்மையை ஓம்கார மந்திரத்தின் வாயிலாக விழக்கப்படுவதை இந்த உபநிஷதத்தில் கண்டோம். எனவே அந்த ஓங்காரத்தை  ஜெபம் செய்வதும், தியானிப்பதும் இந்த உண்மைகளை அனுபவிப்பதற்கான சாதனைகள். 

    ஓங்காரத்தை ஒவ்வொரு பரிமாணமாக அறியவேண்டும். ஏனெனில் ஒவ்வொரு பரிமாணமும் அதன் ஒவ்வொரு எழுத்துகளாக உள்ளன.  இவ்வாறு ஒவ்வொரு பரிமாணமாக அறிந்த பிறகு. வேறு எதையும் சிந்திக்காமல் இருக்க வேண்டும். 

    ஓங்காரத்தில் மனதை ஒருமைப்படுத்த வேண்டும். ஏனெனில் பயம் எதுவும் தீண்டாத பரம்பொருளே அது. ஓங்காரத்தில் நிலை பெற்றவர்களுக்கு பயம் என்பதே கிடையாது.

    உருவநிலையில் தெய்வங்களாகவும் அருவ நிலையில் உயர் பரம் பொருளாகவும் இருப்பது ஓங்காரமே. அது எதிலிருந்தும் தோன்றியதல்ல, அதிலிருந்தும் எதுவும் தோன்றுவதில்லை. அகமும் புறமும் அனைத்து மான அழிவற்ற ஒன்று அது. 

    ஆரம்பமும் நடுவும் இறுதியும் ஓங்காரமே. ஓங்காரத்தை இவ்வாறு அறிபவர்கள் ஒன்றேயான பரம்பொருளுடன் ஒன்று கிறார்கள்.

    எல்லோருடைய இதயத்திலும் இறைவனாக விளங்குவது இந்த ஓங்காரமே. எங்கும் நிறைந்த தான இந்த ஓங்காரத்தை தியானிப்பவர்கள் கவலையற்று இருக்கிறார்கள். 

    இந்த ஓங்காரத்தை அளப்பதற்கு அளவுகோல் கிடையாது. அது  எல்லையற்றது, மங்கலம் ஆனது, அங்கு இருமைகள் கிடையாது. ஓங்காரத்தை அறிபவர்கள்  உண்மையான முனிவர்கள் வேறு யாருமல்ல. 

    ஓங்கார மந்திரத்தை ஈடுபாட்டுடன் தியானிப்பதால் வேதாந்த உண்மைகள் அனுபவ உண்மைகள் ஆகும்.

ஓம்கார ஜபமும் தியானமும் 

ஓங்காரத்தை உச்சரிப்பது எப்படி? 

    மணியோசை போலவும் எண்ணை ஒழுக்கு போல் இடைவிடாமல் ஓங்காரத்தை உச்சரிக்க வேண்டும். 

    மணியோசை அமைதியில் இருந்து எழுந்து உயர்கிறது. பிறகு அமைதியில் கரைகிறது. அதுபோல் ஓங்காரத்தை உச்சரிக்கும்போது மென்மையாக ஆரம்பித்து படிப்படியாக ஒலியை அதிகரித்து மீண்டும் மென்மையாக்கி நிறுத்தவேண்டும். சிறிய இடைவெளிக்குப்  பிறகு மீண்டும்உச்சரிக்க வேண்டும். ஒருமுறை உச்சரிக்கும்போது இடைவெளி வரக்கூடாது என்பதை குறிப்பிடவே எண்ணை ஒழுக்கு உதாரணமாக காட்டப்பட்டுள்ளது.

    ஓம்கார தியானம் செய்வது எப்படி? 

    என்ற மூன்று எழுத்துக்களின் சேர்ற்க்கையான ஓரெழுத்து மந்திரத்தை மேலான ஒளி வடிவாக தியானிக்க வேண்டும். 

    இறை வடிவான  ஓம்காரத்தை இதயத் தாமரையின் நடுவில் பெருவிரல் அளவிலான  அசைவற்றறை தீபம் போல் தியானிக்க வேண்டும். 

ஓங்கார தியானம் எப்படி செயல்படுகிறது? 

    ஓங்காரத்தை ஒளி வடிவமாக தியானிக்க வேண்டும் என்று கண்டோம். உரிய முறையில் இந்த தியானம் செய்யப்படும் போது இதய தாமரை மலர்கிறது. இறைக் காட்சி வாய்க்கிறது.

    இதயத் தாமரை எங்கே இருக்கிறது எப்படி இருக்கிறது? 

    பூவில் மணம் அவ்வாறு பொருந்தியிருக்கிறதுதோ, பாலில்  எவ்வாறு நெய் பரவியிருக்கிறதோ, எள்ளில் எவ்வாறு எண்ணை இருக்கிறதோ, மூலப் பொருளில் எவ்வாறு பொன் இருக்கிறதோ, அவ்வாறே இதயத்தில் தாமரை உள்ளது. அதன் தண்டு மேலாகவும்  மொட்டு கீழாகவும் உள்ளது.

    சாதாரண நிலையில் இதயத் தாமரை மலராமல் கூம்பிய நிலையில்  தலைகீழாக உள்ளது. உரிய முறையில் ஓங்காரத்தை உச்சரித்து தியானம் செய்யும்போது அது நிமிர்ந்து மலர்கிறது. 

    அகாரத்தை உச்சரிக்கும்போது இதயத்தாமரை அவிழ்கிறது. உகாரத்தை உச்சரிக்கும்போது மலர்கிறது. மகாரத்தை உச்சரிக்கும்போது நாதம் எழுகிறது. அர்த்த மாத்திரை வேளையில் அமைதியில் ஆழ்கிறது. இந்த இதயம் தூய படிகம் போன்றது. பகுதிகள் அற்றது. இதயத் தாமரை மலரும்போது பாவங்கள் அழிகின்றன. யோகத்தில் நிலை பெற்றவன் இதயத் தாமரையில் மேலான இறைவனை பெறுகிறான்.   ஓம்




Saturday, October 15, 2016

ஐதரேய உபநிஷதம்




சாந்தி மந்திரம்

    ந்த ஓன்றையும் செய்யும்போது அதற்குரிய மனநிலை இருக்கப்பெறுவது இன்றியமையாது. எந்தகாரியத்தைச்செய்கிறோமோ அதற்குரிய மனநிலையை வரவழைத்துக் கொண்டு, அதன்பிறகு அந்தச்செயலில் ஈடுபடுவது சிறப்பான பலனை அளிக்கும்,

    நமது கோயில்களில் பல பிராகாரங்கள் அமைந்திருப்பதன் காரணம் இதுவே. ஒவ்வொரு பிரகாரத்தில் சுற்றி வரும்போதும் மற்ற எண்ணங்களை எல்லாம் விட்டு, கடைசியாக கருவறையில் சென்று தெய்வத்தைத் தரிசிக்கும்போது, நம்மால் முழுமனதுடன் தெய்வசிந்தனையில் ஈடுபடமுடிகிறது.

     அதுபோல் அனுபூதிக்கருமூலமான உபநிஷதங்களை படிக்க புகுமுன் நமது சிந்தனையை அவற்றுடன் இயைபுபடுத்த சாந்தி மந்திரங்கள் உதவுகின்றன.

    உபநிஷதங்களின் உண்மைப் பொருளை வெறும் புலமையால் உணர முடியாது.  பணிவுடனும் வழிபாட்டு உணர்வுடனும் அணுகும்போது மட்டுமே அதனைப் புரிந்துகொள்ள முடியும். அத்தகைய மனப்பான்மையை மனத்தில் கொள்வதற்காக இந்த மந்திரங்கள் முதலில் ஓதப்படுகின்றன.

    எனது பேச்சு மனதில் நிலை பெறட்டும், மனம் பேச்சில் நிலை பெறட்டும். சுடரொளி பரம்பொருளே, என்னுள் ஒளிர்வாயாக, மனம் பேச்சு ஆகிய இருவரும் வேதங்களின் உண்மையை எனக்கு கொண்டுவருவீர்களாக. என்னால் கேட்கப்பட்டவை என்னை விட்டு விலகாதிருக்கட்டும். கற்றவற்றை இரவும் பகலும் நான் சிந்திப்பேனாக, நான் வியாபகாரிக உண்மையைச் சொல்வேனாக, பரமார்த்திக உண்மையை சொல்வேனாக, அந்த இறைவன் என்னை காக்கட்டும், குருவைக் காக்கட்டும் என்னைக் காக்கட்டும் குருவைக் காக்கட்டும்!
ஓம் சாந்தி சாந்தி சாந்தி

உயர் வாழ்க்கையை நாடுபவர்களுக்கு சிந்தனையும் பேச்சும் ஒன்றாக இருப்பது மிகவும் அவசியம். சாதாரண வாழ்க்கையிலும் உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும், என்று பிரார்த்திக்கிறார் வள்ளலார். உள்ளும் புறமும் ஒன்றாக இருக்கின்ற நிலையை பிரார்த்திக்கிறது இந்த மந்திரம்.

ஐதரேய உபநிஷதம்


மிஞ்சும் அதிசயம்

    படைப்பு பற்றி பொதுவாக எல்லா உபநிஷதங்களும் ஆராய்கின்றன. வெளி, காற்று, நெருப்பு, நீர், பூமி என்ற ஐந்தும் (பஞ்ச பூதங்கள்) படைப்புக்கு அடிப்படை என்ற அளவில் அனைத்து உபநிஷதங்களும் ஒத்திருக்கின்றன. ஆனால் படைப்பு என்ற நிகழ்ச்சியைப் பற்றி ஒவ்வொர் உபநிஷதமும் ஒவ்வொரு கோணத்தில் கூறுகிறது. ஐதரேய உபநிஷத்தின் கருத்தை இங்கே காண்கிறோம்.

ஆரம்பத்தில் கடவுள் ஒருவர் மட்டுமே இருந்தார். இமைக்கின்ற வேறு எதுவும் அப்போது இல்லை. "நான் உலகங்களை படைப்பேன்" என்று அவர் நினைத்தார்.

அம்பலோகம், மரீசிலோகம், மரலோகம், ஆபலோகம், ஆகிய உலகங்களை கடவுள் படைத்தார். அம்பலோகம் சொர்க்க லோகத்துக்கு மேலே உள்ளது. அம்பலோககத்திற்கு சொர்க்கம்  ஆதாரமாக உள்ளது.  மரீசிலோலகம் ஒளியுலகங்கள் நிறைந்த இடைவெளியாகும். மரலோகம் என்பது பூமி, பூமிக்கு கீழே உள்ளது ஆபலோகம்.

 புராணங்களில் 14 உலகங்கள் பற்றிய கருத்துவருகிறது. அதற்கு மூலமாக உள்ளது இந்த உபநிஷதக் கருத்து. 5 உலகங்கள் இங்கே கூறப்படுகின்றன.

 அம்பலோகம்: 'அம்பஸ்' என்றால் தண்ணீர். அம்பலோகம் என்றால் தண்ணீர் உலகம்.   இது சொர்க்கத்துக்கு மேலே உள்ள உலகம். தொலைதூரத்திலிருந்து வானம் நீல கடலை போல் தெரிவதாலோ, அல்லது மழை வானிலிருந்து வருகிற என்ற சாதாரண நம்பிக்கையின் காரணமாகவோ, மிக உயர்ந்ததான அம்பலோகம் தண்ணீர் நிறைந்ததாக கூறப்படுகிறது.


சொர்க்கலோகம்: புராணங்கள் இதனை ஸீவர்லோகம் என்கின்றன. தேவர்கள் வாழும் உலகம் இது. 

மரீசீலோகம்: மரீசீ என்றால் ஒளி. பூமிக்கு மேலுள்ள  இடைவெளி சூரிய கிரணங்களால் ஒளி மயமாக இருப்பதால் இந்த பெயரில் அழைக்கப்பட்டது.

மரலோகம்: மரம் என்றால் மரிப்பவர்கள் அதாவது இறப்பவர்கள் மனிதர்கள். மனிதர்கள் வாழ்கின்ற பூமி.

ஆபலோகம்: 'ஆப' என்றால் தண்ணீர். பூமிக்கு கீழே இருப்பதாகக் கருதப்படுகின்ற பாதாளலோகம். கடல்நீர் கீள் உலகங்கள் வரை பரந்துள்ளது என்றபடியால், தண்ணீர் உலகம் என்று கூறப்பட்டது.

 உலகங்களைப் படைத்துவிட்டேன். இனி உலகின் காவலர்களை படைப்பேன் என்று கடவுள் நினைத்தார். பிறகு தண்ணீரில் இருந்து திரட்டி பிரம்மதேவனை உருவாக்கினார்.

    பிரம்மதேவன் என்பவர் அனைத்து உயிரினங்களின் மொத்த தொகுதி ஆவார். அவரிலிருந்தே படைப்பு ஆரம்பமாயிற்று. 

    தண்ணீர் என்பது ஐந்து அடிப்படை மூலகங்களையும் குறிக்கிறது. நிலம் நீர் போன்ற அடிப்படை மூலங்களிலிருந்து  பிரம்மதேவன் உருவாக்கப்பட்டார். பிரம்மதேவன் உயிரினங்களின் தொகுதி. எனவே மனிதனும் மற்ற உயிரினங்களும் ஐந்து அடிப்படை மூலங்களிலிருந்தே உருவாக்கியவர்கள் என்று இந்த மந்திரம் கூறுகிறது.

கடவுள் பிரம்மதேவனை பற்றி சிந்தித்தார் அப்போது பிரம்மதேவனின் வாய், முட்டை பிளப்பதுபோல், பிளந்தது. வாயிலிருந்து பேச்சு வெளிவந்தது. பேச்சிலிருந்து நெருப்பு வந்தது. 

மூக்கு தோன்றியது. மூக்கு பிளந்தது. மூக்கு துவாரங்களில் இருந்து மூச்சு வந்தது. மூச்சிலிருந்து காற்று தோன்றியது.

கண்கள் தோன்றின. கண்கள் பிளந்தன. அவற்றிலிருந்து பார்வை வந்தது. பார்வையிலிருந்து சூரியன் தோன்றினான்.

காதுகள் தோன்றின. அவை பிளந்த போது கேட்கும் தன்மை உண்டாயிற்று.  அதிலிருந்து திசைகள் தோன்றின.

தோல் உண்டாகியது. தோல் பிளந்து முடிகளும், முடிகளில் இருந்து மூலிகைகளும் செடிகளும் தோன்றின.

இதயம் தோன்றியது. இதயம் பிளந்த போது மனமும் மனத்திலிருந்து சந்திரனும் தோன்றின.

தொப்புள் தோன்றியது. பிளந்த தொப்புளில் இருந்து அபானனும், அபானனிலிருந்து மரணமும் தோன்றியது.

குறி தோன்றியது. பிளந்த குறியிலிருந்து விந்துவும், விந்திலிருந்து தண்ணீரும் உண்டாயிற்று.

    பிரம்மதேவனிலிருந்து உலகமும் உயிரினங்களும் தோன்றியதை இந்த மந்திரம் கூறுகிறது. நெருப்பு, சூரியன், சந்திரன், செடிகொடிகள் ஆகிய உலகின் பல்வேறு அம்சங்கள் உலகம் படைக்கப்பட்டது என்பதை காட்டுகிறது. அதுபோலவே, உடல் மற்றும் மனதின் பல்வேறு அம்சங்கள் உயிரினங்கள், படைக்கப்பட்டன என்பதை காட்டுகிறது.

படைக்கப்பட்ட உயிரினங்கள் இந்த பெரிய கடலில் விழுந்தார்கள். பிரம்மதேவர் அவர்களை பசி தாகத்துக்கு உள்ளாக்கினார்.'நாங்கள் தங்கி, உணவை உண்பதற்கு எங்களுக்கு ஒரு இடத்தை காட்டுங்கள்',என்று பிரம்மதேரிவடம் கேட்டார்கள்.
 
படைப்பு பற்றிய விளக்கம் தொடர்கிறது. படைக்கப் பட்டவர்களிடம் பசி மற்றும் தாக உணர்சியை ஏற்படுத்தினார் பிரம்மதேவர். அவர்கள் கடலில் விழுந்தார்கள். எந்தக் கடலில்?

வாழ்க்கைக் கடலில்' அது வாழ்கை எனும் பெரிய கடல். அறியாமை, ஆசை, செயல்கள் ஆகியவற்றின் காரணமாக, எழுகின்ற துக்கமே அந்தக் கடலில் உள்ள தண்ணீர். கொடிய நோய், மூப்பு, மரணம், ஆகிய பயங்கர ஜந்துக்கள் அந்த கடலில் உலவுகின்றன.  ஆரம்பமோ முடிவோ எல்லைகளோ இல்லாமல் அந்த கடலில் பரந்து கிடக்கிறது. இளைப்பாறுவதற்கு ஓர் இம்மியளவு இடம் கூட அங்கே இல்லை. உலகத்துடன் தொடர்பு கொண்டு, புலன்கள் கொண்டு வருகின்ற அற்ப சுகங்களே ஏதோ ஆறுதலாக உள்ளன. ஆயிரமாயிரம் தீமைகள் அலைகளாகச் சுழன்று அடிக்கின்றன. உலக இன்பங்களை அனுபவிப்பதற்கான தாகம் அந்த அலைகளின் வேகத்தை மேலும் கூட்டுகிறது. அந்த அலைகளால் அடியுண்டு, உயிரனங்கள் "ஐயோ, ஐயோ", என்று அலறி எழுப்புகின்ற கூக்குரல் எங்கும் நிறைந்துள்ளது. இந்த அவலங்கள் போதாதென்று அவர்கள் சிலவேளைகளில் நரகத்திலும் தள்ளப்படுகிறார்கள்.

    ஆனாலும் இந்த வாழ்க்கைக் கடலை கடப்பதற்கு, ஒரு தோணி உள்ளது. உண்மை, நேர்மை, தானம், கருணை, அஹிம்சை, புலனடக்கம், சுயகட்டுப்பாடு, பொறுமை, ஆகியவை அதன் துடுப்புகளாக உள்ளன. தூயவர்களின் தொடர்பும் தியாகமும் அந்த தோணி செல்லும் பாதையாக உள்ளது. அந்தத் தோணியில்  ஏறிசென்றால் மறுகரை ஆகிய மீண்டும் பிறப்பற்ற நிலையை அடையலாம். 

    படைக்கப்பட்ட உயிரினங்கள் பசி, தாகம் போன்ற தேவைகளும் துன்பங்களும் நிறைந்த வாழ்க்கையை பெற்றார்கள் என்பது கருத்து.


பிரம்ம தேவன் அவர்களுக்கு ஒரு பசுவை கொண்டுவந்தார். 'இது எங்களுக்கு போதாது' என்று அவர்கள் கூறினார்கள். அவர் ஒரு குதிரையைக் கொண்டு வந்தார். அதற்கும் அவர்கள் 'இது எங்களுக்கு போதாது' என்று கூறினார்கள்.

பிறகு பிரம்ம தேவன் அவர்களுக்காக ஒரு மனிதனைக் கொண்டு வந்தார். அவனை கண்டதும் அவர்கள், 'ஆஹா! இவர் மனிதன் நிச்சயமாக சிறப்பாக படைக்கப்பட்டவன்' என்று கூறினார்கள். அவர்களிடம் பிரமதேவன் 'அவர்களுக்கு உரிய இடங்களில் புகுந்து கொள்ளுங்கள்' என்றார்.

நெருப்பு பேச்சாகி வாயில் புகுந்தது. காற்று பிராணனாகி மூக்கில் புகுந்தது. சூரியன் பார்வையாகி கண்களில் புகுந்தது. திசைகள் கேட்க்கும் தன்மையாகி காதுகளில் புகுந்தது. மூலிகைகளும் செடிகொடிகளும் முடிகளாகிய தோலில் புகுந்தன. சந்திரன் மனமாகி இதயத்தில் புகுந்தது. மரணம் அபானனாகிய தொப்புளில் புகுந்தது. தண்ணீர் விந்து வாகி குறியில் புகுந்தது.

பசியும் தாகமும் பிரம்மதேவனை அணுகி 'நாங்கள் இருவரும் தங்குவதற்கு ஒரு இடத்தை தெரிவியுங்கள்' என்று கேட்டுக்கொண்டன. அதற்கு பிரமதேவர், 'இந்த தேவர்களிடமே உங்களுக்கு இருப்பிடம் அளிக்கிறேன். அவர்களின் உணவில் பங்குதாரர்களாகவும் ஆக்குகிறேன்' என்றார். அதனால் எந்த தேவனுக்கு உணவு அளிக்கப்பட்டாலும் பசியும் தாகமும் அதில் பங்கேற்கின்றன.

 இயற்கையின் பல்வேறு அம்சங்கள் தோன்றியதாகக் கண்டோம். இயற்கையின் அதே அம்சங்கள் மனிதனில் புகுவதாக கூறப்பட்டுகிறது. உதாரணமாக பிரம்மதேவனின் வாயிலிருந்து பேச்சு வெளிவந்தது. பேச்சிலிருந்து நெருப்பு வந்ததாகக் கூறப்பட்டுள்ளது. அதாவது இயற்கையின் அம்சமாகிய நெருப்பு பேச்சாகி வாயில் புகுந்தது.

    இறைவனிலிருந்து பிரம்மதேவன்,பிரம்மதேவனிலிருந்து இயற்கை, இயற்கையிலிருந்து மனிதன், உயிரின, படைப்பு நிகழ்ததாக கூறப்படுகிறது.

    படைப்பில் மனிதன் சிறந்தவன் என்ற கருத்தை இங்கே நாம் காண்கிறோம். மனிதன் சிறப்பாக படைக்கப்பட்டவன் என்கிறது.கட்டிடங்களில் தாஜ்மஹால் போல் கோயில்களில் மனிதனே சிறந்தவன்.

    கடவுள் உலகை படைத்து அதனை வழிநடத்த தேவ சக்திகளையும் படைத்து, மனிதனையும் படைத்ததை கவிதை நயத்துடன் இந்த அத்தியாயம் விளங்குகிறது.

உணவை படைத்தல்


 உலகங்களையும் அதன் காவலர்களையும் படைத்து விட்டேன். இனி அவர்களுக்கு உணவை உண்டாக்குவேன் என்று கடவுள் நினைத்தார்.

கடவுளும் படைப்பும்

கடவுள் தன்னைப் பற்றி சிந்தித்தார். தண்ணீரிலிருந்து ஒரு உருவம் தோன்றியது. அது உணவே.

கடவுள் படைத்த உணவு திரும்பி ஓட ஆரம்பித்தது. மனிதன் அதனை வாக்கினால் பிடிக்க முயற்சித்தான். முடியவில்லை. வாக்கினால் பிடிக்க முடிந்திருந்தால் உணவு என்று சொல்வதாலேயே திருப்தி அடைந்திருப்பான்.

ப்ராணோ - முகர்வதால்.

 ஓட முயற்சித்த உணவை முகர்வதன் மூலம் பிடிக்க மனிதன் முயற்சித்தான். முடியவில்லை. முகர்வதால் பிடிக்க முடிந்திருந்தால் உணவை முகர்வதன் மூலம் அவன் திருப்தி அடைந்து இருப்பான் மனிதன். 

சக்ஷீஷா - பார்வையால்.

ஓட முயற்சித்த உணவை  மனிதன் பார்வையால் பிடிக்க முயற்சித்தான். முடியவில்லை. பார்வையால் பிடிக்க முடிந்திருந்தால் உணவை பார்த்தாலே அவன் திருப்தி அடைந்து இருப்பான். 

ச்ரோத்ரேணா - கேட்பதால்

ஓட முயற்சித்த உணவை மனிதன் கேட்பதன் மூலம் பிடிக்க முயற்சித்தான். முடியவில்லை. கேட்பதால் பிடிக்க முடிந்திருந்தால் உணவைப் பற்றிப் பேசுவதை கேட்பதாலேயே அவன் திருப்தி அடைந்திருப்பான்.

த்வசா - தொடு உணர்ச்சியால் ஸ்ப்ருஷ்ட்வா - தொடுதால்

ஓட முயற்சித்த உணவை மனிதன் தொடு உணர்சியால் பிடிக்க முயற்சித்தான். முடியவில்லை. தொடு உணர்சியால் பிடிக்க முடிந்திருந்தால் உணவை தொடுவதாலேயே அவன் திருப்தி அடைந்திருப்பான்.

மனஸா - மனத்தால் த்யாத்வா - நினைப்பதால்

ஓட முயற்சித்த உணவை மனிதன் மனத்தால் பிடிக்க முயற்சித்தான். முடியவில்லை. மனத்தால் பிடிக்க முடிந்திருந்தால் உணவை நினைப்பதாலேயே அவன் திருப்தி அடைந்திருப்பான்.

சிச்சேன - குறியால்  விஸ்ருஜ்ய - வெளிப்படுத்துவதால்

ஓட முயற்சித்த உணவை மனிதன் குறியின் மூலம் பிடிக்க முயற்சித்தான். முடியவில்லை. குறியின் மூலம் பிடிக்க முடிந்திருந்தால் உணவை வெளிப்படுத்துவதாலேயே அவன் திருப்தி அடைந்திருப்பான்.

ஓட முயற்சித்த உணவை மனிதன் அபானனால் பிடிக்க முயற்சித்தான். அப்போது அவனால் பிடிக்க முடிந்தது. அபானனன் தான் உணவை பிடிக்கிறது. எனவே அபானனே உணவின் மூலம் வாழ்க்கையை தாங்குகிறது.
பிராண சக்தியின் ஒரு அம்சமே அபானன். வாய் வழியாக உள்ளே செல்கின்ற சக்தி இது. வாய் வழியாக உள்ளே செல்கின்ற உணவை ஏற்றுக் கொண்டு உரிய அவயங்களுக்கு தேவையான அளவு பகிர்ந்து அளிப்பது அபானன் ஆகும். எனவேதான் அபானனால் உணவை பிடிக்க முடிந்தது. அபானன வாழ்க்கையை தாங்குகிறது என்று கூறப்பட்டுள்ளது.

கடவுள் மனிதனுள் புகுதல்

உலகையும் அதனை வழிநடத்து வதற்காக உணவையும் படைத்த கடவுள் மனிதனில் புக நினைத்தார். எங்கும் நிறைந்தவரான கடவுளே மனிதனில் ஆன்மாவாக உள்ளார் என்பதை, அவர் மனிதனில் புகுந்ததாக கவிதை நயத்துடன் விபரிக்கின்றது இந்த மந்திரங்கள். 

 கடவுள் நினைத்தார்

நான் இல்லாமல் எப்படி இயங்க முடியும். எந்த வழியில் நான் இதனுள் புகுவேன்  வாக்கினால் பேசவும், மூச்சினால் சுவாசிக்கவும், பார்வையால் பார்க்கவும், கேட்கும் தன்மையால் கேட்கவும், தொடு உணர்ச்சியால் தொடவும், மனத்தால் நினைக்கவும், அபானனால் ஜீரணிக்கவும், குறியால் வெளிப்படுத்தவும் முடியும் ஆனால் நான் எதற்கு.

உடம்பு உயிர்த் தொகுதி (மனம் +பிராணன்) இங்கு இது என்று கூறப்பட்டுள்ளது, உடம்பும் மனமும் ஐடப்பொருட்கள். இவற்றால் இயங்க முடியாது. இறைவன் மட்டுமே உணர்வுப் பொருள். அவரது ஆற்றல் இருந்தால் மட்டுமே உடம்பும் மனமும் இயங்க முடியும். மின் விசிறி, பல்பு, மின் அடுப்பு, குளிர்சாதனப்பெட்டி என்று எத்தனையோ பொருட்கள் இருக்கலாம். ஆனால் மின்சாரம் இருந்தால் மட்டுமே இவை அத்தனையும் இயங்க முடியும். அதுபோல் இறைவனின் ஆற்றல் உள்ளே புகுந்தால் மட்டுமே உடம்பும் மனமும் புலன்களும் இயங்க முடியும். வாய் பேசுகிறது, மூக்கு சுவாசிக்கிறது என்றெல்லாம் கூறினாலும் உண்மையில் இவற்றை செய்வது இறைவனின் சக்தியே. 

ஜடப் பொருளாக இருக்கின்ற உடம்பு உயிர் தொகுதியில் எந்த வழியாக நுழைந்து அதனை இயக்க வைப்பது என்று கடவுள் நினைத்தார்.

உச்சியை பிளந்துகொண்டு, கடவுள் அந்த வாசல் வழியாக உள்ளே புகுந்தார். அந்த வாசலின் பெயர் வித்ருதி. அது ஆனந்தத்தின் உறைவிடம்.  அவருக்கு உறைவிடங்கள் மூன்று.  கனவுகள் மூன்று. இது உறைவிடம் இது உறைவிடம் இது உறைவிடம்.

    உடம்பு உயிர் தொகுதியான ஜடப்பொருளில் இறைவனாகிய உணர்வுப் பொருள் சேரும் போது மட்டுமே வாழ்க்கை நடைபெறும். உடம்பினுள் அவர் உச்சந்தலை வழியாக உள்ளே நுழைந்தார். என்று மந்திரம் கூறுகிறது.

    இந்த உடம்பு 11 வாசல்களை உடைய நகரம் என்கிறது கட உபநிஷதம். 2 கண்கள், 2 காதுகள், 2 நாசித் துவாரங்கள், வாய், தொப்புள், குறி, குதம்  மற்றும் உச்சந்தலையில் உள்ள பிரம்ம ரந்திரம் ஆகியவையே அந்த பதினொரு வாசல்கள். இந்த பிரம்ம ரந்திரத்தை இறைவழி, அதாவது இறைவனை அடைவதற்கான வழி என்று தைத்திரீய உபநிஷதம் கூறுகிறது.

    இதயத்தின் நாடிகள் நூற்றொன்று.  அவற்றில் ஒன்று உச்சந்தலையை பிளந்து செல்கிறது. அதன் வழியாக மேலே செல்வன் மரணமற்ற நிலையை அடைகிறான். மற்ற நாடிகளின் வழியாக வெளியேறுபவர்கள் பல்வேறு கீழ் உலகங்களில் உழல்கிறான் என்கிறது கட உபநிஷதம். 

    இதயத்திலிருந்து நூற்றொரு நாடிகள் புறப்படுகின்றன. இவற்றின் மூலமே கட்டளைகள் இடப்படுகின்றன. அனுபவங்கள் பெறப்படுகின்றன. நாடிகள் சாதாரண கண்களுக்கு புலனாகாதவை. பிரார்த்தனை, தெய்வீக வாழ்க்கை போன்றவை மூலம் தூய்மையும் ஆற்றலும் வாய்ந்த மனதினால் மட்டுமே அறிய தக்கவை.

    உச்சந்தலையில் உள்ள பிரம்ம ரந்திரத்தின் வழியாக ஒரு நாடி செல்கிறது. இதன் வழியாக உயிரை விடுபவன் மரணமற்ற நிலையை அடைகிறான். மற்ற நூறு நாடிகளும் மீதி 10 வாசல்களுள்.  இதில் ஏதாவது ஒன்றில் நிறைவு  பெறுகின்றன. இவற்றின் வழியாக உயிர் வெளியேறினால் மீண்டும் பிறவி வாய்க்கிறது. ஆசைகளை அற்ற யோகிகளால் மட்டுமே பிரம்ம ரந்திரத்தின் வழியாக உயிரை வெளியேற்ற முடியும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.
 வித்ருதி என்றால் விலக்கப்பட்டது என்று பொருள். இதுவே பிரம்மரந்திரம். இந்த பிரம்ம ரந்திரத்தையே இறைவன் புகுந்த வழியாக இந்த மந்திரம் கூறுகிறது. 

    உடம்பு உயிர் தொகுதியான ஜடப்பொருளில் உணர்வு புகுவதையே  இறைவன் புகுவதாவாக இந்த மந்திரம் கூறுகிறது. உடம்பு உயிர் தொகுதியான ஐடப்பொருளில் எப்போது உணர்வு புகுகிறது.  தாயின் கருவில் இருக்கும் போது.

    தந்தையின் உடம்பில் விந்துவாக இருக்கின்ற உயிர் தாயின் உடம்பை அடைகிறது. பிறகு சொந்த உடம்பில் தங்குகிறது. தந்தையின் உடம்பு தாயின் உடம்பு சொந்த உடம்பு ஆகிய மூன்றும் தான் மூன்று உறைவிடங்கள் என்று கூறப்பட்டுள்ளது.

    மூன்று கனவுகள் என்றால் மூன்று நிலைகள். விழிப்பு, கனவு, ஆழ்ந்த தூக்கம், என்று மூன்று நிலைகளில் மனிதன் வாழ்கிறான். இதுவே மூன்று கனவுகள் என்று கூறப்பட்டது. மூன்று நிலைகளையும் கனவு என்று குறிப்பிடுவது கருத்தில் கொள்ளத்தக்கது.


    நிலையாமை என்ற பண்பே கனவை நிர்ணயிக்கிறது. கனவிலிருந்து விழித்தால் கனவில் கண்டதை அனைத்தும் இல்லாமல் போய்விடுகின்றன. ஆழ்ந்த தூக்கத்திலிருந்து விழிக்கும் போது, அந்த நிலையில் பெற்ற இன்பம் மறைந்து விடுகிறது. அதுபோலவே, இன்று நாம் விழிப்பு நிலை என்று கருதுகின்ற நிலையும் இறையனுபூதி பெறும்போது மறந்துவிடுகிறது. எனவே இதுவும் நிலையற்றது.

    உலகமே ஒரு கனவுதான் இதுவும் கூட(விழிப்புநிலை) ஒரு கனவுதான்.

அனுபூதி 

    மனிதன் கனவு மயமான இந்த உலகை நாடாமல், தன் சொந்த இயல்பான ஆன்மாவை நாடி அனுபூதி பெறவேண்டும் என்று இந்த மந்திரம் கூறுகிறது; 
அனுபூதியின் விளைவையும் தெரிவிக்கிறது.

 மனிதனாகப் பிறந்தவன் மற்ற உயிரினங்களைப் பற்றி ஆலோசிக்க தொடங்கினான். ஆலோசிப்பதற்கு வேறு என்ன இருக்கிறது?  உடம்பில் உறைகின்ற ஆன்மாவே எங்கும் நிறைந்து கடவுளாக இருப்பதை அவன் கண்டான்.  இதை நான் கண்டு கொண்டேன் என்று ஆச்சரியத்துடன் கூறினார்.

    கடவுள் உலகை படைத்தார், அதைக் காப்பதற்கு அவர்களைப் படைத்தார், அவர்களை காப்பதற்காக தேவர்களை படைத்தார், அவர்களுக்கான உணவை படைத்தார், பிறகு உடம்பு உயிர் தொகுதியில் தாமே புகுந்து மனிதராக பிறந்தார்.

     அவ்வாறு பிறந்த மனிதன் அறியாமையால் தன் உண்மை இயல்பை மறந்தான். மற்ற உயிரினங்களையும் உலகத்தையும் பற்றி சிந்திப்பதில் நாட்களைச் செலவிட்டான். இதனை இந்த மந்திரத்தின் முதற்பகுதி கூறுகிறது.

    ஆனால் அறியாமை மறைகின்ற, அனுபூதி பெறுகின்ற காலம் வந்தது. அப்போது தன்னுள் உறையும் ஆன்மாவை மனிதன் கண்டான். அந்த ஆன்மாவே எங்கும் நிறைந்த கடவுளாக இருப்பதையும் கண்டான். மகிழ்ச்சியால் நான் உண்மையை கண்டு கொண்டேன் என்று கூறினார். 

    மந்திரத்தின் கடைசி வார்த்தைக்கு அருகில் மூன்று என்ற எண் உள்ளது. தீ என்ற கடைசி எழுத்தை மூன்று மாத்திரை நீட்டிக்க வேண்டும் என்பது இதன் பொருள். அனுபூதி காரணமாக எழுந்த ஆனத்தின் எழுச்சியை குறிப்பிடுகிறது இது.

 எதையும் விட அருகில் இருப்பவர் கடவுள்

கடவுள் இதந்திரன் என்று அழைக்கப்படுகிறார். நிச்சயமாக அவர் இதந்திரன்தான். ஏனெனில் இதோ என்று காணப்படுவாராக இருக்கிறார் அவர். அவரை இந்திரன் என்று மறைமுகமாக அழைக்கின்றனர். ஏனெனில் தேவர்கள் மறைவாக இருப்பதை விரும்புபவர்கள். தேவர்கள் மறைவாக இருப்பதை விரும்புபவர்கள்.

    வேத காலத்தில் இந்திரன் தேவர்களுக்குத் தலைவன் ஆக மட்டுமன்றி, தலைமைத் தெய்வமாக கருதப்பட்டார். இந்திரன் தனது மாய சக்தியால் பல தெய்வங்களாக உருவெடுத்தான். என்பன போன்ற கருத்துக்களை வேதங்களில் காண்கிறோம்.

இந்திரன் அல்ல இதந்திரன் என்பதே உண்மை பெயர் என்று இந்த உபநிஷதம் கூறுகிறது.  இதம் + த்தர என்று பிரிகின்ற இந்த சொல்லிற்க்கு, கடவுள் நம் அருகில், இதோ என்று கூறத்தக்க வண்ணம் அருகில், நம்முள்ளே இருக்கிறார் என்பது பொருள். நம்முள் இருக்கின்ற அவரை விட்டுவிட்டு உலகை நாட வேண்டியதில்லை என்பதையும் இந்த மந்திரம் சுட்டிக்காட்டுகிறது.

    நாம் வாழ்வதற்கான இந்த அழகிய உலகையும் அதைப் பாதுகாக்கவும் நடத்திச் செல்லவும் தேவர்களையும் படைத்த இறைவன் தம்மை எங்கும் வெளிப்படுத்திக் கொள்ளவில்லை.

    கடவுள் என்ற சொல் "கடந்து உள் நிற்பவர்"என்று பொருள்படுகிறது. அனைத்திலும் மறைந்திருக்கிறார் அவர். அவரும் சரி, தேவ சக்திகளும் சரி மறைந்து இருப்பதையே விரும்புகின்றனர். ஏனெனில் தன்னை மறைத்துக்கொண்டு செய்கின்ற செயல்தான் மிக உயர்ந்த பலனை தருகிறது. 

கடவுளும் படைப்பும்


 அதன் சுருக்கம்:

    புற அதிசயங்கள் அனைத்தையும் மிஞ்சும் அதிசயம் ஆகிய உயிர் உருவாதல் பற்றி இந்த அத்தியாயத்தில் காண்கிறோம்.

    உடல்,உயிர்  (மனம் + பிராணன்), ஆன்மா ஆகியவற்றின் தொகுதியே மனிதன். தான் செய்த நல்வினை மற்றும் தீவினை பயன்களுக்கு ஏற்ப உடல்களை மாற்றியபடி செல்கின்ற உயிரின் பயணமே வாழ்க்கை. உயிர் , பழைய உடலை விடுவது மரணம், புதிய உடலை ஏற்றுக்கொள்வது பிறப்பு.

    உடல் தாயிடமிருந்து கிடைக்கிறது.  உயிர் தந்தையின் வழியாக தாயின் கருப்பைக்குள் புகுகிறது.  இந்த உடல் உயிர் சேர்க்கையில் இறைவன் ஆன்மாவாக புகுந்து அதனை இயக்க செய்கிறார்.  உயிரின் இந்த பயணத்தை பற்றிய சில கருத்துக்களை இங்கு காண்கிறோம்.

கருத்தரித்தல் முதற் பிறப்பு

    (கர்ப்பிணிகள் வெளியேறவும்.) மனிதன் ஆரம்பத்தில் ஆணிடம் விந்துவாக இருக்கிறான். விந்து என்பது எல்லா உறுப்புகளின் ஆற்றல் திரண்டு உருவாகியது. ஓர் ஆண் இவ்வாறு தன்னில் தன்னை விந்து வடிவில் தாங்குகிறான். விந்துவை எப்போது  பெண்ணில் விடுகிறானோ, அப்போது தன்னை குழந்தையாக பிறப்பித்துக் கொள்கிறான்.  இது அவனது முதல் பிறப்பு.

    இந்த மந்திரமும், இந்த அத்தியாயத்தில் தொடரும் மந்திரங்களும் உடலுறவு, கருத்தரித்தல் போன்ற கருத்துக்களைக் கூறுகின்றன. இதிலிருந்து சில உண்மைகளை நாம் அறிந்து கொள்கிறோம்.

    கர்ப்பிணிகள் வெளியேறவும், என்று ஆரம்பத்தில் வருகிறது. எனவே அரச சபை பண்டிதர் சபை போன்ற பொது இடங்களில் இந்த கருத்துக்கள் விவாதிக்கப்பட்டன என்பது தெரிகிறது.

    இத்தகைய எல்லா விவாதங்களிலும் கருத்துப் பரிமாற்றங்களிலும், பெண்கள் கலந்து கொண்டார்கள் என்பது தெரிகிறது.

    பண்டைய சமுதாயம் ஒரு சிறந்த ஆரோக்கியமான சமுதாயமாக விளங்கியதற்கான முக்கிய காரணங்கள் ஒன்றை இங்கே காண்கிறோம். உடலுறவு, கருத்தரித்தல் போன்றவை,சபைகளில் விவாதிக்கப்பட்டன. குருகுலத்தில் தகுந்த ஒருவரால் சிறுவயதிலேயே இவை கற்பிக்கப்படுவது பற்றிய தைத்திரேய உபநிஷதம்சம் கூறுகிறது. உயிரை உருவாக்கிற இந்த உறவை கீதை தெய்வீகமாக போற்றுவதும் இங்கு நினைவுகூரத் தக்கது.

    இனவிருத்தி என்பது கடவுளின் மிகப் புனிதமான சின்னம்;  கணவனும் மனைவியும் சேர்ந்து செய்கின்ற ஆழ்ந்த பிரார்த்தனை நல்லதோ, தீயதோ செய்வதற்கான பெரும் சக்தி பெற்ற ஓர் உயிரை உலகிற்கு கொண்டு வரப்போகின்ற பிரார்த்தனை.  இது என்ன வேடிக்கையோ அல்லது வெறுமனே நரம்புகளுக்கு திருப்த்தி அளிக்கின்ற செயலா. மிருகத்தனமான உடல் இன்ப அனுபவமா இல்லை இல்லை என்று ஆயிரம் தடவை சொலுகிறான் இந்து. என்கிறார் சுவாமி விவேகானந்தர்.

    வாழ்க்கையின் அடிப்படை அம்சங்களான இவை பற்றி உரிய வேளையில், உரிய முறைப்படி சிந்திப்பதும் கற்பிப்பதும் செயல்படுவதும், நல்ல சமுதாயம் உருவாக வழிகோலுகின்றன.

உடலுக்கு சொந்தமான ஓர் உறுப்பு போல் விந்து பெண்ணுடன் ஒன்று பட்டு விடுகிறது. அது அவளை துன்புறுத்துவதில்லை. விந்துவாக தன்னில் புகுந்த உயிரை அவள் கருப்பையில் பாதுகாத்துக் கொள்கிறார்.

    குழந்தை பிறப்பு இரண்டாம் பிறப்பு 

கருவை பாதுகாக்கின்ற பெண் பாதுகாக்கப்பட வேண்டியவள். (குழந்தை பிறக்க முன்பு அதனை) கருவாக பாதுகாக்கிறாள். பிறந்தபிறகு, ஆரம்பத்திலும் அதன்பிறகும் தந்தை பாதுகாக்கிறான். அந்தக் குழந்தையைத் தானாகவே எண்ணி பாதுகாக்கிறார் அவர்.  உயிர்களின் சந்ததிச் சங்கிலி தொடர் வதற்காகவே அவர் இவ்வாறு செய்கிறார். (இவ்வுலகம், மறுவுலகம் ஆகிய) உலகங்களின் தொடர்பு இவ்வாறு வளர்கிறது.  (தாயின் வயிற்றிலிருந்து குழந்தையாகப் )  பிறப்பது மனிதனின் இரண்டாம் பிறப்பு.

மரணம் மூன்றாம் பிறப்பு 

    இந்த உலகில் நற்செயல்களை தொடர்வதற்கு மகன் நியமிக்கப்படுகிறார். செய்ய வேண்டியவற்றை செய்த தந்தை வயதாகி இறக்கிறான். இந்த உடம்பிலிருந்து வெளியேறி, மீண்டும் பிறக்கிறார். இது அவரது மூன்றாவது பிறப்பு.

    ஒரு மனிதரின் மூன்று பிறப்புக்களை மந்திரங்கள் கூறுகின்றன. தந்தையிடமிருந்து தாயிடம் புகுந்தது முதல்பிறப்பு. தாயிடமிருந்து உலகில் பிறந்தது இரண்டாம் பிறப்பு. இந்த உடம்பிலிருந்து வெளியேறி (இறந்து)மீண்டும் பிறப்பது, மூன்றாம் பிறப்பு.

     மரணத்திற்குப் பிறகு நல்வினை மற்றும் தீவினை பயன்களை அனுபவிப்பதற்காக மறு உலகிற்கு செல்வதையே மூன்றாம் பிறப்பு  அல்லது மீண்டும் பூமியில் பிறப்பதை மூன்றாம் பிறப்பது.

    தந்தையே மகனாக பிறக்கிறார். மகனை தனது பிரதிநிதியாக உலகில் விட்டுவிட்டு தனது பயணத்தை தொடருகிறார். 

கருப்பையின் உள்ளே 

 அதுபற்றி முனிவரால் சொல்லப்பட்டுள்ளது.  கர்ப்பத்தில் இருக்கும்போதே நான் தேவர்களின் பிறப்புகள் அனைத்தையும் அறிந்து கொண்டேன்.  நூறு இரும்பு கோட்டைகள் என்னை காவல் காத்தன. ஒரு பருந்து போல் விரைவாக நான் வெளியே வந்தேன். கர்ப்பத்தில் படுத்து இருக்கும் போதே வாமதேவர் இவ்வாறு கூறினார்.

    தாயின் கர்ப்பத்தில் இருக்கும்போதே அனுபூதி பெற்றவர் வாமதேவர். அக்கினிதேவன் முதலான தேவர்களுக்கு மறுபிறவிகள் உண்டு என்பதை அவர் அப்போது அறிந்துகொண்டார்.  அதனுடன் தமது முற்பிறவி உண்மைகளையும் அறிந்தார். எத்தனையோ பிறவிகள் எடுத்து அந்த பிறவிகள் ஒவ்வொன்றிலும் பல்வேறு உணர்வுகளைத் தாங்கி வாழ்ந்தார்.  அந்த உடம்புகளை இங்கு இரும்புக்கோட்டை என்று அவர் கூறுகிறார்.  உடம்பு ஒவ்வொன்றும் ஓர் இரும்புக் கோட்டையாக உயிரை சிறைபிடித்து வைப்பதுபோல் வைத்துள்ளனர்.  வலையை கிழித்து வெளியேறுகின்ற பருந்து போல்தான் இந்த கோட்டைகளை கடந்து, இந்த பிறவியைப் பெற்று அனுபூதி அடைந்ததாக அவர் கூறுகிறார். 

    நாம் ஒவ்வொருவரும் தாயின் கருவில் இருக்கும்போதே இந்த அனுபவத்தைப் பெறுகிறோம். ஆனால் பூமியில் பிறந்ததும் அதனை மறந்து விடுகிறோம். ஒன்பதாம் மாதத்தில் எல்லா அங்கங்களும் பூர்த்தியாகிறது. முற்பிறவி நினைவு வருகிறது. புண்ணிய பாவங்களின் உணர்வு வருகிறது. ஆனால் பிறந்ததும் கடவுளின் மாய சக்தியால் அதை மறந்து விடுகிறோம். என்கிறது கர்ப்ப உபநிஷதம்.

     இந்த உண்மைகளை அறிந்து, உடம்பு அழிந்ததும் வெளியேறி சொர்க்கலோத்திற்கு சென்றார். அங்கு எல்லா ஆசைகளையும் நிறைவேறப் பெற்று, மரணமிலா நிலையை அடைந்தார். மரணமிலா நிலையை அடைந்தார். (கர்பிணிகள் உரிய இடத்தில் வந்து அமரலாம்.)


Thursday, October 13, 2016

ஈசாவாஸ்ய உபநிஷதம்

ஓரு வார்தை

    உபநிஷதங்கள் ரிஷிகளின் அனுபவ உண்மைகள்.  வெறும் நூலறிவு கொண்டோ, சமஸ்கிருதப் புலமை கொண்ட அவற்றின் உண்மையான பொருளை அறிந்து கொள்வது சாத்தியம் அல்ல.  உண்மையான சாதனை வாழ்வில் ஈடுபட்டு, மனம் தூய்மை பெற்று நாம் இறைவனை நோக்கி முன்னேற முன்னேற இவற்றின் உட்பொருள் மேன்மேலும் ஆழமாக நமக்குப் புரியும்.  மீண்டும் மீண்டும் படித்து, மந்திரங்களின் பொருளை ஆழமாக சிந்தித்து, ஆன்மீக சாதனைகளிலும் ஈடுபட்டால்தான் உபநிஷதங்களை உண்மையாகப் புரிந்து கொள்ள முடியும்; அவற்றின் அற்புதத்தில் ஆழ்ந்து மனம்மகிழமுடியும். 

    காலங்கள் பல கடந்துவிட்டதால் பல மந்திரங்களின் பொருள் சுலபத்தில் அறிந்துகொள்ளத் தக்கதாக இல்லை.  பொருள் புரியவில்லை என்பதற்காகச் சோர்ந்துவிடாமல், புரிந்த மந்திரங்களின் பொருளை ஆழ்ந்து சிந்தித்து சாதனைகளில் உயர்வடைய முயற்சிக்க வேண்டும்.

வித்யைகள்

மனிதன், உலகம், இறைவன் என்பவை மூன்று அடிப்படை உண்மைகள். உபநிஷதங்கள் இந்த மூன்றையும், இவற்றிக்கு இடையே நிலவுகின்ற தொடர்பையும் ஆராய்கின்றன. அறுதி உண்மையாகிய இறைவனை ஒவ்வொரு மனிதனும், ஒவ்வோர் உயிரும் சென்று அடைவதே வாழ்கையின் லட்சியம், அதற்கான களமே உலகம். உலகம் தருகின்ற அனுபவங்களைப் பாடமாகக் கொண்டு, உலகில் வாழ்ந்தபடியே அந்த லட்சியத்தை அடையுமாறு உபநிஷதங்கள் வலியுறுத்துகின்றன.  ஒவ்வோர் உபநிஷதமும் தனக்கென்று  சில குறிப்பிட்ட பாதைகளைக் காட்டுகிறது. இந்தப் பாதை வித்தை எனப்படுகிறது. வித்தைகள் எண்ணற்றவை.

 14 முக்கிய உபநிஷதங்கள்

ரிக் வேதங்கள் :  ஜதரே உபநிஷதம், கௌசீதகி உபநிஷதம்

யஜீர் வேதங்கள்:  ஈச உபநிஷதம், கட உபநிஷதம், தைத்திரீய உபநிஷதம், பிருஹதாரண்யக உபநிஷதம், சுவேதாஸ்வதர உபநிஷதம், மைத்ராயணி உபநிஷதம்  , மஹாநாரயண உபநிஷதம்.

சாம வேதங்கள்: கேன உபநிஷதம்,சாந்தோக்கிய உபநிஷதம் .

அதர்வண வேதங்கள்:  ப்ரச்ன உபநிஷதம், முண்டக உபநிஷதம், மாண்டூக்ய உபநிஷதம்.

ஈசாவாஸ்ய உபநிஷதம்

'ஈசாவாஸ்யம் இதம் ஸர்வம்' என்றமந்திரத்துடன் ஆரம்பிப்பதால் ஈசாவாஸ்ய உபநிஷதம் என்ற பெயர் பெற்று. ஈச உபநிஷதம் என்று அழைக்கப்படுகின்ற 18 மந்திரங்களே உடைய சிறிய உபநிஷதம் ஆகும். தத்யங்க அதர்வணர் என்ற முனிவர் தமது மகனுக்கு இதனை உபதேசித்தார்.

உபநிஷதக் கரு

    இருளுக்கு அப்பால் பொன்னிறத்தில் ஒளிர்கின்ற மகிமை வாய்ந்த பரம்பொருளை அறிந்துகொண்டேன்' என்று ஆனந்த மிகுதியில்  ஒருவர் கூறுகிறார். ஒளிக்கு அப்பால் உள்ள ஒன்றை தேடுகின்ற முயற்சியை     மந்திரங்கள் கூறுகின்றது.  ஈச வித்யை என்று கூறுகின்ற இத்தக் கருத்தே ஈசாவாஸ்ய  உபநிஷதத்தின் மையக் கருவாக உள்ளது.

    ஒளிக்கு அப்பாலுள்ள  ஒன்றைத் தேடும் முயற்சியையும் ஒளிக்கு அப்பால் என்ன உள்ளது என்னபதையும் படிப்படியாக இங்கே நாம் காண்கிறோம்.

    எந்த ஓன்றையும் செய்யும்போது அதற்குரிய மனநிலை இருக்கப்பெறுவது இன்றியமையாது. எந்தகாரியத்தைச் செய்கிறோமோ அதற்குரிய மனநிலையை வரவழைத்துக் கொண்டு, அதன்பிறகு அந்தச்செயலில் ஈடுபடுவது சிறப்பான பலனை அளிக்கும்.   நமது கோயில்களில் பல பிராகாரங்கள் அமைந்திருப்பதன் காரணம் இதுவே. ஒவ்வொரு பிரகாரத்தில் சுற்றி வரும்போதும் மற்ற எண்ணங்களை எல்லாம் விட்டு, கடைசியாக கருவறையில் சென்று தெய்வத்தைத் தரிசிக்கும்போது, நம்மால் முழுமனதுடன் தெய்வசிந்தனையில் ஈடுபடமுடிகிறது. அதுபோல் அனுபூதிக் கருமூலமான உபநிஷதங்களை படிக்க புகுமுன் நமது சிந்தனையை அவற்றுடன் இயைபுபடுத்த சாந்தி மந்திரங்கள் உதவுகின்றன.

 ஈசாவாஸ்ய உபநிஷதத்திற்கான சாந்தி மந்திரம்.


ஓம் பூர்ணமத: பூர்ணமிதம் பூர்ணாத் பூர்ணமுதச்யதே|

பூர்ணஸ்ய பூர்ணமாதாய பூர்ணமேவாவசிஷ்யதே||

ஓம் சாந்தி: ஓம் சாந்தி:  ஓம் சாந்தி:||



அத - இறைவன்

பூர்ணம் - முழுமையானவர்

பூர்ணமத- இறைவன் முழுமையானவர்

இதம் - இந்த உலகம்

பூர்ணமிதம்  -  இந்த உலகம் முழுமையானது.

ஆத் - இறைவனிலிருந்தே

பூர்ணாத் - முழுமையான இறைவனிலிருந்தே

உதச்யதே - தோன்றியுள்ளது

பூர்ணமுதச்யதே - முழுமையான இறைவனிலிருந்து தோன்றியுள்ளது

பூர்ணஸ்ய -முழுமையிலிருந்து

ஆதாய - எடுத்த பின்பும்

பூர்ணமாதாய - முழுமையை எடுத்த பின்பும்

பூர்ணம் ஏவ - முழுமையே

அவசிஷ்யதே - எஞ்சியுள்ளது

பூர்ணமேவாசிஷ்யதே- முழுமையே எஞ்சியுள்ளது




ஈசாவாஸ்ய உபநிஷதத்திற்கான சாந்தி மந்திரம்.

 இறைவன் முழுமையானவர், இந்த உலகம் முழுமையானது. முழுமையான உலகம்தோன்றி உள்ளது. முழுமையிலிருந்து முழுமை எடுத்த பின்பும் முழுமையே எஞ்சியுள்ளது! ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி:

    ஒரு புதிரின்மூலம் உலகத்தை விளக்க முற்படுகின்ற மந்திரம் இது. இறைவன் முழுமையானவராக, பூரணமானவராக இருக்கிறார். அவரிலிருந்து முழுமையான உலகம் தோன்றியுள்ளது. இருப்பினும் தனது பூரணத்துவம் குன்றாமல் முழுமையாகவே இருக்கிறார் அவர். இதனை மூன்று வழிகளில் புரிந்துகொள்ளலாம்.

    ஒரு தீபத்திலிருந்து எண்ணற்ற தீபங்களை ஏற்ற முடியும்.  இதனால் முதல் தீபத்தின் முழுமை கெடுவதில்லை.  அதிலிருந்து ஏற்றப்பட்ட தீபங்களும் முழுமையாக, நிறைந்த ஒளி தருவனவாகவே இருக்கும்.

    நாம் எத்தனையோ பேரை நேசிக்கிறோம்; முழுமையாக அவர்களிடம் அன்பு வைக்கிறோம். இதனால் நம்முடமுள்ள அன்பு குறைந்ததாகக் கூற முடியாது. நமது அன்பு முழுமையாக இருக்க, நாம் எத்தனையோ பேருக்கு அன்பை முழுமையாகக் கொடுக்க முடியும்.

ஒரு செடியில் எத்தனையோ பூக்கள் மலர்கின்றன.  ஒவ்வொரு மலரும் முழுமையாக உள்ளது. முழுமையான மலர்கள் பலவற்றைத் தருவதால் செடியின் முழுமை எந்த விதத்திலும் குறைவதில்லை. ஏனெனில் செடியின் முழுமை வேறு.  அதுபோலவே, இறைவனிலிருந்து எத்தனையோ முழுமையான உலகங்களும் அண்ட சராசரங்களும் தோன்றலாம். ஆயினும் அவரது முழுமை ஒருபோதும் குறைவதில்லை.

    இறைவனின் முழுமை உலகங்களின் தோற்றத்தாலோ மறைவாலோ பாதிக்கப்படாத ஒன்று; இறைவனிலிருந்து தோன்றியதால் உலகமும் இறையம்சம் பொருந்தியது என்பது இந்த சாந்தி மந்திரத்தின் கருத்து. இந்த உண்மையை உணர்ந்து வாழ்ந்தால் சாதாரண வாழ்கையே நம்மை இறைநெறியில் அழைத்துச் செல்ல வல்லதாகிவிடும். இந்தக் கருத்தையே உபநிஷதத்தின் முதல் மந்திரம் தெரிவிக்கிறது.

    வேத மந்திரங்கள் அனைத்தும் இறுதியில் ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி: என்று நிறைவுறுவதைக் காணலாம். சாந்தி: என்றால்அமைதி. மூன்று விதமான தடைகளிலிருந்து நாம் விடுபடுவதற்காக மூன்று முறை சொல்லப்படுகிறது.

1. ஆத்யாத்மிகம்: நம்மால் வரும் தடை; உடல் நோய், மனப் பிரச்சினைகள் போன்றவை.

2. ஆதி பௌதிகம்: பிற உயிர்களால் வரும் தடை.

3. ஆதி தைவிகம்: இயற்கைச் சக்திகளால் வரும் தடை; மழை, இடி, தீ போன்றவற்றால் வருபவை.

மூன்று முறை சொல்வதன்மூலம் இந்த மூவகைத் தடைகளிலிருந்து விடுபட்டு, இந்த உபநிஷதத்தைப் படிப்பதற்கான நமது முயற்சி வெற்றி பெறுவதற்காகப் பிரார்த்திக்கிறோம்.

ஒளிக்கு அப்பால் 


    சற்றே சிந்திக்கத் தெரிந்த யாருக்கும் புலனாகின்ற உண்மை ஒன்று உண்டு; நாம் அறியாமையில் இருக்கிறோம் என்பதுதான் அது. விஞ்ஞானம், கலை என்று பல விஷயங்களை நாம் அறிந்திருக்கலாம். ஆனால் இவை சில தகவல்களே தவிர உண்மையறிவு ஆகாது. நம்மைப்பற்றிய அறிவே உண்மையறிவு.

    நாம் யார், எங்கிருந்து வந்தோம், எங்கே போய்க் கொண்டிருக்கிறோம், எங்கே போக வேண்டும் என்ற எதுவும் தெரியாத நிலையில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.  அவ்வளவு ஏன், அடுத்த கணம் என்ன நடக்கப்போகிறது என்பதுகூட நமக்குத் தெரியாது.  அதனால்தான் உபநிஷத ரிஷி,  இறைவா!  அறியாமை இருளிலிருந்து என்னை அறிவின் ஒளிக்கு அழைத்துச் செல்வாய் என்று பிராத்தனை செய்கிறார்.

    அத்தகைய பிராத்தனைகளின் பலனாக, ஐபம் தவம் போன்ற ஆன்மீக சாதனைகளின் பலனாக இறைவனின் அருட்கிரணம் நம்மில் பட்டு நமது உணர்வின் ஒளியின் காட்சி, ஒளியைத் தூண்டுகிறது.  நமக்கு ஒளியின் காட்சி, ஒளிமயமான இறைவனின் காட்சி கிடைக்கிறது; அறியாமை இருள் விலகுகிறது; எல்லாம் நமக்குப் புரிகிறது.

    ஆனால் ஒளியின் காட்சியுடன் நமது பயணம் நின்று விடவில்லை. அறுதி உண்மை என்பது அனைத்தையும் கடந்தது;  இருள் - ஒளி,  துன்பம் - இன்பம், தீமை - நன்மை போன்ற அனைத்து இருமைகளுக்கும் அப்பாற்பட்டது அந்த இடத்தை அடையும்போதுதான் நமது பயணம் லட்சியத்தை அடைகிறது.  எனவே, ஒளிமயமான காட்சியைப் பெற்ற முனிவர் தன்னை ஒளிக்கும் அப்பால் அழைத்துச் செல்வதற்குப் பிராத்திக்கிறார்.

ஒளிக்கு அப்பால் இருப்பது என்ன?

ஒளிக்கு அப்பால் தமமையே காண்பதாக உபநிஷத முனிவர் கூறுகிறார்.  அறுதிநிலை அனுபூதி ( அனு" என்பது அனுபவம். "பூதி" என்பது புத்தி அனுபவ அறிவின் பூரிப்பே அனுபூதி). இதனைப் படிப்படியாக இந்த உபநிஷதத்தில் நாம் காண்கிறோம்.


நூறாண்டுகள் வாழ்க!



    அறுதி உண்மையான பரம்பபொருளை அடைய வேண்டுமானால் முதலில் ஒளியை அடைந்தாக வேண்டும்.  அதற்கு வாழ்க்கையையே வழியாக இந்த உபநிஷதம் சொல்கிறது. வாழ்க்கையிலிருந்து விலகி ஓடுவதல்ல; வாழ வேண்டிய முறையில் வாழ்க்கையை வாழ்வது எப்படி என்பதை அறிந்து, அதன்படி வாழ்ந்தால் அதுவே ஓர் ஆன்மீக சாதனையாகி விடுகிறது; ஒளியை அடைவதற்கான, இறை அனுபூதிக்கான ஒரு வழியாகிவிடுகிறது.  உரிய முறையில் வாழ்வது என்பதை இரண்டு படிகளாக முதல் இரண்டு மந்திரங்கள் கூறுகின்றன.


தியாகத்துடன் அனுபவி

    மாறுகின்ற இயல்புடைய இந்த உலகில் உள்ள அனைத்தும் இறைவனால் நிறைக்கப்பட வேண்டும். அத்தகைய தியாக சிந்தையுடன் உலகை அனுபவி. பணம் யாருடைது?  அதற்காக ஆசைப்படாதே.

    உலகமும், அதன் செல்வங்களும், அது தரும் சுகபோகங்களும் எல்லாம் மாறுபவை. அதாவது நிலையற்றவை. நிலையான இன்பம், அமைதி எதையும் இந்த உலகிலிருந்து நாம் எதிர்பார்க முடியாது. ஆனால் நிலைத்த இன்பத்தையும் அமைதியையும் தான் நாம் ஒவ்வொரு வரும் தேடுகிறோம்.  அதனை பெற என்ன வழி?

    அனைத்தையும் இறைவனால் நிறைக்கவேண்டும்.  இதன்பொருள் என்ன? விளக்குகிறார் சுவாமி விவேகானந்தர்:


    அனைத்தையும் இறைவனால் நிறைக்கவேண்டும்;  ஒருவகை போலியான இன்ப நோக்கமாகவோ,  இல்லை, துன்பங்களைக் கண்டும் காணாததுபோல் இருக்கும் பாசாங்காகவோ அல்ல.  உண்மையிலேயே எல்லாவற்றிலும் இறைவனைக் காண்பதின்மூலம் இதைச் செய்ய வேண்டும்..... இதன்பொருள் என்ன?   நீ உன் மனைவியோடு வாழலாம்;   அவளைக் கைவிடவேண்டும் என்பதல்ல. ஆனால் அவளிடம் கடவுளைக் காண வேண்டும்....  உங்கள் குழந்தைகளில் இறைவனைக் காணுங்கள்.  எல்லாவற்றிலுமே இறைவன் சமமாக நிறைந்திருக்கிறார்.  கண்களைத் திறவுங்கள்,  அவரைப் பாருங்கள்...


    நாம் நமது கற்பனையால், நமது அனுமானத்தால் உருவாக்கிக் கொண்டிருக்கும் உலகத்தைத் துறந்துவிடவேண்டும்.   ஏனென்றால் இந்த அனுமானம் முழுமையற்ற அனுபவத்தை,  ஆழமற்ற அறிவை நமது சொந்த பலவீனத்தை அடிப்படையாகக் கொண்டது.   இதைத் துறந்து விடுங்கள்.  நாம் இதுவரை நினைத்துவந்த, எல்லோரும் உடும்புப் பிடியாகப் பிடித்திருக்கின்ற உலகம் நம்முடைய கற்பனையில் தோன்றிய பொய்யான உலகம்.  அதை விட்டு விடுங்கள்.  நன்றாகக் கண்களைத் திறந்து பாருங்கள். இப்படிபட்ட ஓர் உலகம் எப்போதுமே இருக்கவில்லை என்று உணர்ந்து கொள்ளுங்கள்.  அது ஒரு கனவு, மாயை. இருந்தது கடவுள் மட்டுமே. குழந்தையில், மனைவியில், கணவனில் எல்லாவற்றிலும் இருப்பவர் அவரே,  பாவத்திலும் இருப்பதும் அவரே, பாவியாக இருப்பதும் அவரே. வழ்விலும் அவரே இருக்கிறார். சாவிலும் அவரே இருக்கிறார்.

    எங்கும் இருப்பவர் அவர். எல்லாம் அவருடையது; வேறு யாருடையதும் அல்ல. எனவே நமக்கென்று வாய்த செல்வத்திலும் ஆசை கொள்ளாமல் அனைத்தும் இறைவனுக்கு உரியவை என்ற தியாக சிந்தையுடன் உலகை அனுபவிக்குமாறு கூறுகிறது உபநிஷதம். இது முதற்படி.


தியாகத்தால் பற்றின்மை

எல்லாம் இறைவனுடையது என்ற தியாக சிந்தையுடன் வாழ்வதால் பற்றின்மை உண்டாகிறது.

கடமைகளைச் செய்தபடியே நூறு ஆண்டுகள் வாழ விரும்பு. (உலகை அனுபவித்து வாழ விரும்புகின்ற) உன்னைப் போன்றவா்களுக்கு இதைத்தவிர வேறு வழி இல்லை. (இவ்வாறு வாழ்வதால்) கடமைகள் உன்னைப் பற்றுவதில்லை.

    உலகில் வாழ  வேண்டும். அதற்கு வேலை செய்தாக வேண்டும்.  கடமைகளைச் செய்யாமல் யாரும் வாழ முடியாது. எந்த வேலையைச் செய்தாலும் அதற்கு விளைவு ஒன்று இருக்கும். அது நல்லதாக இருக்கலாம், கெட்டதாக இருக்கலாம், இரண்டும் கலந்ததாக இருக்கலாம், ஆனால் விளைவு ஒன்று இருந்தே தீரும்.  விளைவு எதுவானாலும் அது நம்மைப் பிணைக்கிறது; மனத்தில் ஒரு பதிவை உண்டாக்கிறது. அந்தப் பதிவு, நாம் மேலும் அந்தச் செயலைச் செய்யுமாறு தூண்டுகிறது. மீண்டும் நாம் அந்த வேலையைச் செய்கிறோம். இவ்வாறு வேலைகள் தொடர்கின்றன. இது தொடா்ந்த பிறவிக்கு வழியாகிறது.

    ஆனால் உலகை இறைவனுக்கு உரியதாகக் கண்டு, அவரது சொத்திற்கும் சுகத்திற்கும் ஒரு பொறுப்பாளனைப்போல் வாழ்தால், அந்த ரீதியில் வேலை செய்தால் அந்த வேலையின் பலன் நம்மைப் பிணைக்காது. பலன் நம்மைப் பிணைக்காததால் அத்தகைய வேலை அக வளர்ச்சிகான ஓர் ஆன்மீக சாதனையாக ஆகிவிடுகிறது.

நாம் யார்?

    உலகை இறைவனுக்கு உரியதாகக் கண்டு, அதற்கேற்ப கடமைகளைச் செய்யும்போது அது ஆன்மீக சாதனை ஆகிறது.  உலகில் இறைவனைக் காண்பது எப்படி? அதற்கு முதற்படி நம்மில் இறைவனைக் காண்பதுதான்.

நாம் யார்?

    உடம்பு, மனம்,பிராணன், புத்தி, ஆன்மா என்ற ஐந்தின் தொகிதியே நாம். மனம், பிராணன் மற்றும் புத்தியின் தொகுதி ஜீவன் அல்லது உயிர் எனப்படுகிறது. எங்கும் நிறைந்தவரான இறைவன் நம்மில் ஆன்மாவாக உள்ளார்.  நம்மில் உள்ள அந்த இறையம்சமே ஆன்மா. அதுவே நமது உண்மை இயல்பு. அந்த ஆன்மாவை அறியவேண்டும். இறையம்சமாகிய ஆன்மாவே நாம் என்பதை உணர்வதுதான் உலகில் இறைவனைக் காண்பதற்கான முதற்படி.

நமது உண்மை இயல்பை அறிய வேண்டுவதன் அவசியம்

     அசுரர்களின் உலகங்கள் காரிருளினால் மூடப்பட்டுள்ளன. ஆன்மாவை அழிப்பவர்கள் மரணத்திற்குப் பிறகு அந்த உலகங்களை அடைகிறார்கள்.


    ஆசை வசப்பட்டு, உடம்புடனும் மனத்துடனும் நம்மைப் பிணைத்துக் கொண்டு, உலகின் சுகபோகங்களை நாடி புற வளர்ச்சியில் கவனம் செலுத்துவேமானால் நாம் மேன்மேலும் பிறவிகளுக்கு உள்ளாகிறோம்.  மாறாக, ஆன்மாவுடன் நம்மை ஒன்றுபடுத்திக்  கொண்டு அக வளர்ச்சியில் நாட்டம் செலுத்துவேமானால் இறைநிலையை அடைந்து மரணத்தை வெல்கிறோம். அதாவது பிறவியற்றவர்கள் ஆகிறோம்.

    இவ்வாறின்றி, ஆன்மாவை நினைக்காமல் உடம்பே எல்லாம் என்று வாழ்பவர்களை இந்த மந்திரம் ஆன்மாவை அழிப்பவர்கள் என்று குறிப்பிடுகிறது.  ஆன்மாவை அழிக்க முடியாது; அழிப்பதற்கு நிகரான குற்றத்தைச்செய்பவர்கள் என்பது பொருள்.  அத்தகையவர்கள் மரணத்திற்குப் பிறகு இருண்ட உலகங்களை அடைகிறார்கள்.  அதாவது தொடர்ந்து பிறவிக்கு உள்ளாகி, துன்பத்தில் உழல்கிறார்கள்.  இந்தத் துன்பத்திலிருந்து விடுபட வேண்டுமானால் அக வளற்சியை நாட வேண்டும், ஆன்மாவைத் தேடவேண்டும்.

ஆன்மாவின் இயல்பு:

     ஆன்மாவுடன் ஒன்றுபடித்திக்கொண்டு வாழும்போது இறைநிலையை அடைகிறோம். அந்த ஆன்மாவின் இயல்பு என்ன?

 ஆன்மா அசைவற்றது, ஒன்றேயானது மனத்தை விட விரைவானது. புலன்கள் அதனை அடைய இயலாது.  அது நிலையாக நின்றபடியே அனைத்திற்கும் முன்னால் செல்கிறது;  ஓடுகின்ற அனைத்தையும் முந்துகிறது.  அது நிலையாக இருப்பதால் பிராணன் அனைத்தையும் முந்துகிறது.  அது நிலையாக இருப்பதால் பிராணன் அனைத்தையும் இயக்குகிறது.

    ஒரு பொருள் அசையவோ இயங்கவோ வேண்டுமானால் அந்த இயக்கத்திற்கு ஓர் இடம்வேண்டும்.  எங்கும் நிறைந்த ஒன்று எங்கே அசையும்? எனவேதான் ஆன்மா அசைவற்றது.

    மனம் புறத்திலுள்ள ஒரு பொருளை நினைக்கும்போது,  அது வெளியில் சென்று அந்தப் பொருளின் வடிவை எடுப்பதாக நமது தத்துவ நூல்கள் கூறுகின்றன.  இதுவரை விஞ்ஞானம் கண்டறிந்துள்ள ஒலியின் வேகத்தைவிட, ஒளியின் வேகத்தைவிட மிகமிக வேகமாக மனம் சென்று அந்தப் பொருளின் வடிவை எடுக்கிறது.  அவ்வளவு வேகமாக மனம் சென்றாலும், மனம் செல்வதற்கு முன்பே அங்கே ஆன்மா அதாவது இறைவன் உள்ளார்.  எனவே தான் மனத்தைவிட விரைவானது, நிலையாக நின்றபடியே அனைத்திற்கும் முன்னால் செல்கிறது, ஓடுகின்ற அனைத்தையும் முந்துகிறது என்றெல்லாம் கூறப்பட்டது.

    புலன்களால் ஆன்மாவை அறிய இயலாது. ஒவ்வொரு கருவியும் ஒரு குறிப்பிட்ட பணியைச் செய்ய வல்லது. தொலைநோக்கிக் கருவியால் தூரத்திலுள்ள பொருளை மட்டுமே பார்க்க முடியும்; அருகில் உள்ளவற்றைப் பார்க இயலாது.  நுண்ணோக்கியால் மிகச் சிறியனவற்றைக் காண முடியும். அதுபோல் புலன்கள் புற உலகை அனுபவிப்பதற்காகப் படைக்கப்பட்டவை.  அகவுலக உண்மைகளையோ ஆன்மாவையோ காண அவற்றால் இயலாது. இதையே பகவான் ஸ்ரீகிருஷ்ணர் கீதையில், உனது இந்தக் கண்ணினால் பாக்க இயலாது. எனவே உனக்கு தெய்வீகக் கண்ணைத் தருகிறேன் என்று அர்ஜீனனிடம் கூறுகிறார்.

    எந்த ஓர் இயக்கமும் நடைபெற வேண்டுமானல் இயங்காத ஒன்று அதற்கு ஆதாரமாக வேண்டும். ரயில் ஓட வேண்டுமானால் அசையாத தண்டவாளம் வேண்டும்.  திரைப்படம் இயங்க வேண்டுமானால் அசைவற்ற திரை ஆதாரமாக வேண்டும் அவ்வாறே, இந்த உலகின் இயக்கங்கள் அனைத்திற்கும் காரணமாக உள்ளது பிராணன். அசைகின்ற பிராணன் இயங்குவதற்கு அசைவற்ற ஆதாரமாக உள்ளது ஆன்மா.

அது அசைகிறது, அது அசைவதில்லை. அது தூரத்தில் உள்ளது, மிக அருகில் உள்ளது. அது அனைத்தின் உள்ளே உள்ளது, அனைத்தின் வெளியிலும் உள்ளது. 

    ஆன்மா, கடவுள் போன்ற உண்மைகள் ஆராச்சிக்கு அப்பாற்பட்டவை. இவற்றை அறிவினால் புரிந்துகொள்ள முடியாது என்றே வேதங்கள், உபநிஷதங்கள் முதலான அனைத்து சாத்திரங்களும் கூறுகின்றன.  அவ்வாறு புலன்களுக்கு எட்டாத ஒன்றைப் புலன்களால் விளக்க முற்படுகின்ற மந்திரம் இது. ஆன்மா எங்கும் நிறைந்ததாக இருப்பதால் இந்த முரண்பட்ட கருத்துக்கள் அனைத்தும் சாத்தியமாகின்றன.

    பிரபஞ்சத்தின் இயக்கங்கள் அனைத்திற்கும் ஆதாரமாக இருப்பது ஆன்மா என்ற நிலையில், அதாவது எங்கும் நிறைந்த நிலையில் அதற்கு அசைவில்லை.

    நம் ஒவ்வொருவரின் உள்ளேயும் ஆன்மா உள்ளது. எனவே அது மிக அருகில் உள்ளது. ஆனால் நாம் அதை உணராத நிலையில் அது மிகவும் தூரத்தில் உள்ளது.

    அதுபோலவே இறைவன் என்ற நிலையில் அது எங்கும் நிறைந்ததாக இருப்பதால் அனைத்தின் உள்ளேயும் உள்ளது, வெளியேயும் உள்ளது.

ஆன்ம அனுபூதியும் அதன் பலனும்:

    ஆன்மாவாகத் தன்னை உணர்தவன்,அதாவது ஆன்ம அனுபூதி பெற்றவன் பெறும் பலன் என்ன? அவன் உலகின் துன்பங்களிலிருந்து விடுபடுகிறான்.

    யார் எல்லா உயிரினங்களாகளையும் ஆன்மாவிலும், ஆன்மாவை எல்லா உயிரினங்களிலும் காண்கிறானோ அவன் யாரையும் வெறுப்பதில்லை.
 ஆன்மாவே எல்லா உயிரினங்களாகவும் ஆகியிருக்கின்ற ஒருமையுணர்வைப் பெறுகின்ற ஒருவனுக்கு என்ன மனமயக்கம்? என்ன கவலை?


    பிடிக்காத ஒன்றை வெறுக்கிறோம்.  ஒன்றை மற்றொன்றாகக் காண்பதால் மனமயக்கம் உண்டாகிறது.  விரும்பிய ஒன்று கிடைக்காதபோது கவலை ஏற்படுகிறது.  ஆன்ம அனுபூதி பெற்றவனுக்கு இந்த மூன்றும் இல்லை என்று  மந்திரங்கள் கூறுகின்றன.

    ஆன்ம அனுபூதி,  இறைக் காட்சி என்றெல்லாம் கூறப்படுவது ஓர் அக  அனுபவம்,  உணர்வில் ஒரு மாற்றம் என்பதை நினைவில்கொள்ள வேண்டும்.  குழந்தையும், வாலிபனும், வயோதிகனும் ஒரே உலகில்தான் வாழ்கிறார்கள். ஆனால் அவர்கள் காண்கின்ற உலகம் ஒன்றல்ல அவர்களின் காட்சி வெவ்வேறாக அமைவதற்குப் புறவுலகம் காரணம் அல்ல; அவர்களது உணர்வின் விரிவே, உணர்வின் மாற்றமே காரணம். வீட்டினரை மட்டுமே நேசிக்கின்ற நாம் நமது உணர்வு விரியவிரிய படிப்படியாக சுற்றத்தினரை, நண்பர்களை, பிறரை, நாட்டை, உலகை நேசிக்கின்றோம். சுற்றியிருப் பவர்களிடம் எந்த மாற்றமும் ஏற்படவில்லை; மாற்றம் நம்மிடமே நிகழ்ந்தது-  நமது உணர்வு விரிந்தது.

    ஆன்ம அனுபூதியில் உணர்வு விரிந்து அதன் எல்லைகளைத் தொட்டு விடுகிறது.  இனி எந்த மாற்றமும் ஏற்பட முடியாத அளவுக்கு விரிந்துவிட்ட நிலை அது.  இனி விரிய முடியாத அளவுக்கு விரிந்துவிட்ட நிலை அது.  பிரபஞ்சமே அவர்களுடையதாகி விடுகிறது;  அவர்கள் எங்கும் தன்னையே, தனது உணர்வையே காண்கிறார்கள். ஆனால் அவர்களிடம் பற்று இல்லாததால் உலகின் இன்ப துன்பங்கள் எதுவும் அவர்களைப் பாதிப்பதில்லை.  எனது செல்வத்திற்கு எல்லையே இல்லை.  ஆனால் உண்மையில் "எனது" என்று எதுவும் இல்லை.  எனவே, மிதிலை நகரமே பற்றியெரிந்தால் கூட நான் எதையும் இழப்பதில்லை என்று  மிதிலை மன்னர் ஜனகர் கூறுவதாக மகாபாரதம் தெரிவிக்கிறது.  ஆன்ம அனுபூதி பெற்றவர்கள், இவ்வாறு சுகம்-துக்கம், வெற்றி-தோல்வி, நன்மை-தீமை போன்ற இருமை களைக் கடந்து விடுகிறார்கள்;  வெறுப்போ, மனமயக்கமோ, கவலையோ இல்லாதவர்களாகி விடுகிறார்கள்.

ஒளியின் காட்சி

ஆன்ம அனுபூதி பெற்றவனின் அனுபவத்தை இந்த மந்திரம் கூறுகிறது.

    ஆன்ம அனுபூதி பெற்றவன் அனைத்தின் உட்பொருளையும் காண்கிறான். அவன் மனத்தை வசப்படுத்தியவன்; அனைத்து அறிவையும் உள்ளடக்கியவன்; யாரையும் சாராதவன். அனைத்துப் பொருட்களின் உண்மை இயல்பை அவன் என்றென்றைக்குமாக அறிந்திருக்கிறான். அவன் ஒளிமயமான, உடம்பற்ற, முழுமையான, தசைகள் இல்லாத, தூய, பாவமற்ற இறைவனை அடைகிறான்.

    கவி: என்றால் க்ராந்த தர்சி; அப்பால் காண்பவன் என்று பொருள். காணும் தோற்றத்துடன் மற்றவர்கள் நின்றுவிடுகிறார்கள். ஆனால் அனுபூதி பெற்றவன், ஒவ்வொரு தோற்றத்திற்கும் பின்னால் ததும்புகின்ற இறையுணர்வைக் காண்கிறான்.

    மனீஷி என்றால்  மனத்தை வசப்படுத்துவதற்கான புத்தியைப் பெற்றவன். மனத்தை மனத்தால் வசப்படுத்த முடியாது, அதைவிட ஆற்றல்மிக்க ஒன்று வேண்டும். அதுவே புத்தி. உள்ளுணர்வு என்றும் இது அழைக்கப்படுகிறது. இது எல்லோரிலும் செயல்படத் தொடங்கவில்லை. பிராத்தனை, காயத்ரீ மந்திர ஜபம் போன்றவற்றால் இது விழித்தெழுந்து செயல்படத் தொடங்குகிறது.


    பரிபூ: என்றால் அனைத்து அறிவையும் உள்ளடக்கியவன். உலகில் எத்தனையோ வகை அறிவுகள் உள்ளன. 'கற்றது கைம்மண்ணளவு கல்லாதது உலகளவு' என்பார்கள். நாம் எவ்வளவுஅறிந்தாலும் இன்னும் அறிய வேண்டியது எவ்வளவோ இருக்கும்: அவற்றை அறிவதற்கான ஆவலும் இருந்துகொண்டே இருக்கும். ஆனால் ஆன்மாவை அறிந்தவன் தன்னில் திருப்தியுற்று நின்றுவிடுகிறான். அதனால் ஆன்ம அனுபூதி மற்ற அறிவுகளின் நிறைவாக, அனைத்தையும் உள்ளடக்கியதாக, மற்ற அறிவுகளைவிட உயர்ந்ததாகக் கூறப்படுகிறது.

    ஆன்ம அனுபூதி பெற்றவன் தன்னிலும் உலகிலும் இறையுணர்வை உணர்ந்துவிட்டதால் அவன் அதைச்சார்ந்திருக்கிறானே தவிர பொருட்களையும் மனிதர்களையும் சார்ந்து வாழ்வதில்லை. அதனால் அவன் எதனையும் சாராதவன் எனப்படுகிறான்.

    அனைத்திற்கும் மேலாக, அவன் பொருட்களின் உண்மை இயல்பை அறிந்திருக்கிறான். எவை இறை நெறிக்குத் துணை செய்யும், எவை இறை நெறிக்குத் தடையாக இருப்பவை என்பதை அவன் உணர்ந்திருக்கிறான். இறைநெறியில் செல்பவனுக்கு இந்த மனத்தெளிவு மிகவும் அவசியமானது. வேண்டாதவற்றை விலக்கி அவனால் விரைந்து முன்னேற முடிகிறது.

    ஆன்ம அனுபூதி பெற்ற இத்தகையவன் இறைவனை அடைகிறான்.  அந்த இறைவனைப்பற்றி இந்த மந்திரம் மூன்று விசயங்களைக் கூறுகிறது.


1.இறைவன் ஒளிமயமானவர். அவரது ஒளியாலேயே அனைத்தும் ஒளிபெறுகின்றன.

2. இவர் என்று இறைவனை அடையாளம் காட்ட முடியாது. உடம்பற்றவர், முழுமையானவர், தசைகள் இல்லாதவர் என்றெல்லாம் கூறுவது இதைத் தெரிவிக்கிறது.

3.இறைவன் தூயவர்.எந்தப்பாவமும் அவரை அணுக முடியாது.  உலகனைதையும் ஒளியால் விளங்கச் செய்வதன்மூலம் உலகின் கண்ணாக இருப்பவன் சூரியன். ஆனால் யாருடைய பார்வை கோளாறோ, பொருட்களின் குறைகளோ அவனைப் பாதிப்பதில்லை. அதுபோல் எல்லோரிலும் விளங்குகின்ற ஆன்மா சுகதுக்கங்களால் பாதிக்கப் படுவதில்லை என்கிறது கட உபநிஷதம்.

ஆன்ம அனுபூதி பெற்றன் இவ்வாறு ஓளிமயமான இறைவனை அடைகிறான்.

இணைத்து வாழ்க!


    ங்கும் இறைவன் இருப்பதாகக் கண்டு கடமைகளை செய்பவன் பற்றின்றி வேலை செய்கின்றான். அதனால் ஒளிமயான இறைவனை அடைகிறான்.
எங்கும் இறைவன் இருப்பதை உணர்வது எப்படி?  அதற்கான இரண்டு முக்கிய சாதனை முறைகளைத் தொடரும்  6 மந்திரங்ள் தெரிவிக்கின்றன.


செயல்களும் தியானமும்: 

செயல்களின்றி வாழ்கை இல்லை.  அன்றாடக் கடமைகள்,ஜபதவங்கள், சேவை போன்ற எவ்வளவோ செயல்களுடன் நமது வாழ்கை பிணைந்துள்ளது. உயர்நோக்கங்களுடன் இணைக்காமல் அவற்றை வெறுமனே செய்துகொண்டே போவதால் இறை நெறியில் முன்னேறமுடியாது.  அதேவேளையில், இறையுணர்வைப் பெறமுடியாது. அதேவேளையில், இறையுணர்வைப் பெற வேண்டும் என்பதற்காக, தகுதி வருமுன்னரே செயல்களை விட்டுவிட்டு தியானத்தில் ஈடுபடுவது ஒரு தவறான, போலி்த்தனமான முயர்சியாக இருக்கும்.  எனவே இரண்டும் வாழ்கையில் இணைந்து செல்ல வேண்டும்.  அந்த இணைப்புபற்றி இந்த மந்திரங்கள் கூறுகின்றன.

    யார் உயர்நோக்கமின்றிச் செயல்களில் ஈடுபடுகிறார்களோ அவர்கள் காரிருளில் மூழ்கின்றனர். யார் தகுதி பெறுமுன்னர் தியானத்தில் ஈடுபடுகிறார்களோ அவர்கள் அதைவிடக் கொடிய இருளில் உழல்வதைபோல் துன்புறுகின்றனர்.

    தியானத்தால் கிடைப்பது ஒருபலன், செயல்களால் கிடைப்பது வேறு பலன் என்கிறார்கள்' எங்களுக்கு அதனை விளக்கிய  மகான்கள்  இவ்வாறு கூறினார்கள்.

 தியானம்,செயல்ககள் இரண்டையும் சேர்த்து யார் அறிகிறானோ அவன் செயல்களால் மரணத்தைக் கடந்து தியானத்ததால் இறவாநிலையை அடைகிறான்.

யார் அருவக்கடவுளை வழிபடுகிறார்களோ அவர்கள் காரிருளில் மூழ்குகின்றனர். யார் உருவக்கடவுளில் ஈடுபடுகிறார்களோ அவர்கள் அதைவிடக் கொடிய இருளில் உளர்வதைப்போல் துன்புறுகின்றனர்.

உருவ வழிபாட்டால் கிடைப்பது ஒரு பலன், அருவ வழிபாட்டால் கிடைப்பது வேறுபலன் என்கிறார்கள்' எங்களுக்கு அதனை விளக்கிய மகான்கள் இவ்வாறு கூறினார்கள்.

அருவ வழிபாடு, உருவ வழிபாடு இரண்டையும் சேர்த்து யார் அறிகிறானோ அவன் உருவ வழிபாட்டால் மரணத்தை கடந்நு அருவ வழிபாட்டால் இறவா நிலையை அடைகிறான்.

மந்திரங்கள் செயல்கள் மற்றும் தியானத்தின் இணைப்பை வலியுறுத்தியதுபோல்  இந்த  மந்திரங்கள் இரண்டுவித வழிபாடுககளளின்  இணைப்பைக்  கூறுகின்றன.

    'ஸம்பூதி' என்றால்  தோற்றத்திற்கு  வந்த நிலை; இறைவன் பல்வேறு  வடிவங்களில்  தோன்றுகின்ற உருவநிலை.  'அஸம்பூதி' என்றால் தோற்றத்திற்கு வராத  நிலை; எந்த  உருவமோ குணமோ அற்ற அறுதி நிலை.

    மந்திரத்தில் 'ஸம்பூதி' என்று காணப்பட்டாலும் அந்ந இடத்தில் 'அஸம்பூதி' என்று வந்தால்தான் பொருள் சரியாக இருக்கும்.  எனவே அதில் 'அ' சேர்துக்கொள்ள வேண்டும். என்கிறார் ஸ்ரீசங்கரர்.

    இந்த இரண்டு நிலைகளிலும் நாம் வழிபடலாம். ஒன்று,உருவ வழிபாடு.  உருவ வழிபாடு, உருவம் குணம்போன்ற பல்வேறு தன்மைகள் உடைய ஒரு நபராக அவரைக் காண்பது.  நமது மனத்தால் அறியத்தக்கவராக , வெளிப்பட்ட நிலையில் இறைவனை நாம் இங்கே வழிபடுகிறோம்.  சிவன், விஷ்ணு, தேவி என்று உருவ நிலையில் இறைவனை வழிபடுவது உருவ வழிபாடு.

    இரண்டாவதாக, அருவ வழிபாடு. உருவம் குணம், போன்ற அனைத்துப் பண்புகளையும் கடந்த அறுதி நிலையில் இறைவனை அணுகுவது.  உருவமோ குணமோ இல்லாத ஒன்றை மனித மனத்தால் நினைப்பது எல்லோராலையும் சாத்தியமல்ல.  எனவே அருவ வழிபாடு மிகவும் உயர்ந்த நிலையில் இருப்பவர்களுக்கு உரியது என்பது விளங்கும்.  தகுதியின்றி அருவ வளி பாட்டில் ஈடுபடுவர்கள் தங்களை தாங்களே ஏமாற்றி கொள்கிறார்கள்.  அதனால் தான் அவர்கள் காரிருளில் மூழ்குவதா சொல்லப் பட்டுள்ளது.தோற்றங்களே என்ற உணர்வு எபபோதும் இருக்கவேண்டும்.


    உருவ வழிபாட்டில் ஈடுபடுபவர்கள் சிவன், விஷ்ணு என்று பல்வேறு வடிவங்களும் ஒரே உண்மைப் பொருளின் பல்வேறு தோற்றங்களே என்ற உண்மையை உணர்ந்திருக்கவேண்டும். மாறாக,' என் தெய்வம் உயர்ந்தவர், உன் தெய்வம் தாழ்தவர்' என்று கொள்கை வெறிபிடித்து சண்டையிடக்கூடாது. அறியாமை காரணமாக செய்கின்ற இத்தகைய வழிபாட்டினால் எந்நப்பலனும் கிடைப்பதில்லை. எனவே மன இயல்பிற்கு ஏற்ற ஓரு தெய்வத்தை வழிபடுவதில் ஆரம்பிக்கவேண்டும். எத்தனை மதங்களில் எத்தனை தெய்வங்களைக் கும்பிட்டாலும் அவர்கள் அத்தனைபேரும் ஒரே தெய்வத்தின் பல்வேறு தோற்றங்களே என்ற உணர்வு எபபோதும் இருக்கவேண்டும். அதுமட்டுமின்றி,உருவநிலையில் மட்டுமல்ல, கடவுளை அருவநிலையிலும் வழிபடலாம் என்பதை ஏற்றுக் கொள்ளவேண்டும். இத்தகைய மனநிலையில் தெய்வத்தை வழிபடும்போது நாம் ஆன்மீகத்தில் முன்னேறுகிறோம்; இறையனுபூதி பெறுகிறோம்; மரணத்துக்குக் காரணமான வினைப் பயன்களிலிருந்து விடுபடுகிறோம்.  இந்த இறையனுபூதியின் விளைவு என்ன? அழகாக விளக்குகிறார் துளசிதாசர்: இறவைவனை நேருக்கு நேராகக் காண்பதன் ஈடிணையற்ற ஒரேபலன் என்ன தெரியுமா? மனிதன் தனது சொந்த ஆனந்தமயமான ஆன்ம நிலையில் நிலைபெறுகிறான். இதன்பிறகே இறைவனை உருவமற்ற நிலையில் வழிபடுவதற்கான தகுதியை அவரது அருளால் பெறுகிறோம். இந்தத் தகுதியுடன் அந்த உயர்நிலை வழிபாட்டில் ஈடுபட்டு இறவாநிலையை அடைகிறோம்

ஒளிக்கு அப்பால்.

ஒளிமயமான இறைவனை அடைவது பற்றி 8 - ஆம் மந்திரம் கூறியது. அந்த ஒளிக்கு அப்பால் என்ன உள்ளது என்பது பற்றி தொடரும் இரண்டு மந்திரங்கள்  கூறுகின்றன. இவை வேதங்களில் காணப்படுகின்ற அற்புதமான பிராத்தனைகளுக்கு உதாரணமாகும். இவை உயர்நிலை பிராத்தனைகள். ஒளிக்கு அப்பால் செல்வதற்கான இந்த முயர்சியே ஈச வித்யை. பிராத்திப்பவனின் தகுதி, பிராத்தனைக்கான விஷயம், பிராத்திக்கும் விதம் அனைத்தையும் தெளிவாக இந்த மந்திரங்களில் காண்கிறோம்.  மந்திரம் இந்தப் பிராத்தனையின் பலனைக் கூறுகிறது. அதாவது, ஒளிக்கு அப்பால் தாம் கண்டதை விவரிக்கிறார் உபநிஷத முனிவர்.

ஒளிக்கு அப்பால் உள்ளது என்ன?

ஹிரண்மயேன பாத்ரேண ஸத்யஸ்ய அபிஹிதம் முகம்|
தத் த்வம் பூஷன்ன பாவ்ருணு ஸத்தியதர்மாய த்ருஷ்ட்டயே||
ஹிரண்மயேன- பொன்மயமான
பாத்ரேண - திரையால்
ஸத்யஸ்ய - உண்மையின்
அபிகஹிதம் - மறைக்கப்பட்டுள்ளது
பூஷன் - சூரிய தேவ
ஸத்யதர்மாய - சத்திய நிஷ்டைஉடைய எனக்கு
த்ருஷ்ட்டயே - காண்பதற்காக
தத் - அதை
த்வம் - நீ
அப்பாவ்ருணு - விலக்குவாய்!

உண்மையின் முகம் பொன்மயமான திரையால் மறைக்கப்பட்டுள்ளது. சூரியதேவா! சத்திய நிஷ்டை உடைய நான் அந்த உண்மையைக் காண்பதற்காக மறைப்பை விலக்குவாய்!.
'
    இருளிலிருந்து என்னை ஓளிக்கு அழைத்துச் செல்வாயாக' என்பது போன்ற பிராத்தனைகளை நாம் அறிவோம். இது இறைவனை நாடிச் செல்பவரின் ஆரம்ப பிராத்தனை.  அவர்களின் அறியாமை இருளில் இருக்கிறார்கள். எனவே அந்த இருளிலிருந்து ஒளிக்கு அழைத்துச் செல்லுமாறு அவர்கள் பிராத்திக்கிறார்கள். பிராத்தனை, ஜபம், தியானம் போன்ற பல்வேறு சாதனைகளின் மூலம் அந்த ஒளியைக் காண்கிறார்கள். அந்த ஒளியின் மென்மையையும் வசீகரத்தையும் உணர்த்தவே பொன்மயமான திரை என்று இந்த மந்திரம் குறிப்பிடுகிறது. அந்த மென்மையிலும் வசீகரத்திலும் அவர்கள் தங்களையே இழந்து நிற்கிறார்கள்.

    ஆனால் உண்மை என்பது இருள் - ஒளி,  துன்பம் - இன்பம் போன்ற அனைத்து இருமைகளையும் கடந்தது.  எனவே உண்மையை, உண்மைப்பொருளை, உள்ளது உள்ளபடி அறிய வேண்டுமானால் நாம் ஒளியை கடந்து சென்றாக வேண்டும். அந்த ஒளி எவ்வளவுதான் இன்பம் தருவதாக இருந்தாலும் நாம் அதைக் கடந்து சென்றேயாக வேண்டும். அதற்காக இறைவனைப் பிராத்திக்கின்ற மந்திரம் இது.

    அறியாமை இருளில் உழல்கின்ற ஒருவர் ஜபம், தவம் வழிபாடு போன்ற சாதனைகளின் மூலம் ஒளிமயமான, தங்கமயமான இறைக் காட்சியைப் பெறமுடியும். ஆனால் அதைக் கடந்து செல்வதற்கு நமது முயற்சிகள் எதனாலும் இயலாது. அங்கே இறை அருள் ஒன்றே செயல்பட முடியும்.  எனவேதான் நாம் இறைவனை நோக்கி பிராத்திக்கிறோம்.

    பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் சாதனைக்கால நிகழ்ச்சி ஒன்று இதனை மிகத் தெளிவாக விளக்குகிறது. தோதாபுரி என்பவரின் துணையுடன் வேதாந்த சாதனைகளைச் செய்தார் ஸ்ரீராமகிருஷ்ணர்.  அவருக்குப் பல்வேறு உபதேசங்களை அளித்த தோதாபுரி, இறுதியாக, இருமைகள் அனைத்தையும் கடந்து நிலையில் உண்மைப்பொருள் அனுபவத்தைப் பெறுமாறு கூறினார். ஸ்ரீராமகிருஷ்ணர் எவ்வளவு முயன்றும் அது முடியவில்லை. ஏனெனில் மனம் அகமுகமானதும் தேவியின் ஒளிமயமான காட்சி அவர்முன் எழுந்தது. அந்த பேரொளியை கடந்து அவரால் செல்ல முடியவில்லை. கடைசியில் நம்பிக்கையையே இழந்த நிலையில் அவர் தமது இயலாமையைத் தோதாபுரியிடம் தெரிவித்தார். அவ்வளவு வசீகரமான காட்சி அது. இறுதியில் தோதாபுரியின் அருளால் அவர் அந்த ஒளியைக் கடந்து சென்று, உண்மைப் பொருளுடன் ஐக்கியமாகின்ற நிலையை அடைந்தார்.உயர்நிலை பிராத்தனையைச் செய்வதற்கான தகுதியையும் இந்த மந்திரத்தில் நாம் காண்கிறோம்.  சத்திய நிஷ்டை உடைய நான் என்று தனது தகுதியை இங்கே அந்த ரிஷி குறிப்பிடுகிறார். உண்மையில், உண்மைப்பொருளாகிய இறைவனில் நிலை நிற்கின்ற, இறைவனைச் சரணடைந்த வாழ்க்கை இங்கே குறிப்பிடப்படுகிறது. உலகப்பொருட்கள் எதையும் கருதாமல் , கடவுள் ஒருவரையே நம்பி வாழ்கின்ற, அவரை ஒளிமயமாக ஏற்கனவே கண்ட ஓருவர் செய்கின்ற பிராத்தனை இது,

ஒளிக்கு அப்பால் இருப்பது நானே

    எங்கும் இறைவன் இருக்கிறார் என்ற கருத்துடன் கடைமைகளைச் சிறப்பாகச் செய்வது சிறந்த வாழ்க்கைக்கான வழி, வாழ்கை எதுவாக இருந்தாலும் அக வாழ்க்கையை நாடுவதும் ஆன்மாவைத் தேடுவதும் மிக முக்கியமானவை  ஒளியின் காட்சி , உயர்நிலை சாதனை , ஒளிக்கு அப்பால் செல்ல பிரார்த்தனை என்று படிப்படியாகக் கூறிவந்த உபநிஷதம் இங்கே அந்தப் பிராத்தனையின் பலனைக் கூறுகிறது.


பூஷன் ஏகர்ஷே யம ஸீர்ய ப்ராஜாபத்ய வ்யூஹ ரச்மீன் ஸமூக
தேஜோ யத் தே ரூபம் கல்யாணதமம் தத் தே பச்யாமி

ய அஸௌ புருஷ ஸ அகம் அஸ்மி 16
பூஷன் - பேணிக் காப்பவன்
ஏகர்ஷே - தனியாக பயணிப்பனே
 யம - ஆள்பவனே
ஸூர்ய -  சூாிய தேவா
ப்ராஜாபத்ய - பிரஜாபதியின் மகனே
 வ்யூஹ - கிரணங்களை
 ரச்மீன் - விலக்கு
ஸமூக  - சுரிக்கொள்
தேஜ - ஓளியை
 யத் - எது
 தே - உனது
ரூபம் - வடிவம்
 கல்யாணதமம் - மிகவும் மகிமை வாய்ந்த
 தத் - அதை
 பச்யாமி - பார்க்கிறேன
ய - யார்
அஸௌ - அந்த
 புருஷ - நபர்
ஸ - அவர்
அஹம் அஸ்மி - நானே

     அனைத்து உயிர்களையும் பேணிக்காப்பனே தனியாகப் பயணிப்பவனே, அனைத்தையும் ஆள்பனே,சூரியதேவா,பிரஜாபதியின் மகனே! உனது பேரொளியைச் சுருக்கிக்கொள்.  மகிமை வாய்ந்த உனது வடிவத்தை உனதருளால் நான் காணவேண்டும். அந்தச் சூரியனில் இருப்பது நானே.

    இறையருள் மட்டுமே வேண்டியது,அதற்காகவே ஓருவன் பிராத்திக்க வேண்டும். எல்லா உயிா்களும் முன்வினையின் படியே செயல்படுகின்றன, துன்புறுகின்றன. ஆனால் இறைவன் நினைத்தால், வினைப்பயனை அனுபவிக்கவேவண்டிய காலத்தைக்க குறைத்து ஓருவனுக்கு விரைவில் அனுபூதியை அளிக்க முடியும்.

ஔிக்கு அப்பால் இருப்பது என்ன?

ஓளிக்கு அப்பால் தம்மையே கண்டதாக  உபநிஷத முனிவர் கூறுகிறார். எவ்வளவோ முயற்சிகளுக்குப் பிறகு,  ஆன்மீக சாதனைகளுக்கு பிறகு, இறைக் காட்சிக்குப் பிறகு அறுதி நிலை அனுபூதீயாக இந்த முனிவர் தம்மையே காண்கிறார். இதன் பொருள் என்ன ?

ஔிக்கு அப்பால் தம்மையே கண்டதாக உபநிஷத முனிவர் கூறுகிறார். எவ்வளவோ முயற்சிகளுக்குப் பிறகு, ஆன்மீக சாதனைகளுக்குப் பிறகு, இறைக்காட்சிக்குப் பிறகு, அறுதி நிலை.  அறுதி நிலை அனுபூதியாக இந்த முனிவா் தம்மையே காண்கிறார். இதன் பொருள்  என்ன?  ஓளிக்கு அப்பால் என்ன உள்ளது என்பதைக் காண்பதற்கு உபநிஷத முனிவரும் இறையருளை வேண்டிப் பிராத்திப்பதை இங்கே காண்கின்றோம் .

    'சூரியனில் இருப்பது நானே'  என்று, உபநிஷதம் கூறுவதில் "நான் "என்பதை நாம் சாதரணமாகப் புரிந்து கொள்கின்ற 'நான்' என்ற பொருளில் புரிந்து கொள்ளக் கூடாது.  பொதுவாக உடல் மனச்சோ்கையே 'நான்' என்று கூறுகிறோம்.  இந்த 'நான்' ஔிக்கு அப்பால் இருக்க முடியாது. எனவே முனிவர்  கூறுகின்ற 'நான்' உயா்நிலை 'நான்' ஆகும். சாந்தோக்கிய உபநிஷதக் கதை ஒன்றின் மூலம் இதனை விவேகானந்தர் விளக்குகிறார்.

    'ஒரு தேவனும் ஓர் அசுரனும் ஆன்மாவைப்பற்றி அறிவதற்காக முனிவர் ஒருவரிடம் சென்றனர். பல வருடங்கள் கல்வி கற்றனர்.இறுதியில் ஒருநாள் அந்த முனிவர் அவா்களிடம்' " நீங்கள் தேடும் பொருள் நீங்களே" என்றுகூறினார். இருவரும் தங்கள் உடம்பே ஆன்மா என்று நினைத்துக் கொண்டனர்.  மிகுந்த திருப்தியுடன் திரும்பிச் சென்று தங்கள் சுற்றத்தாாிடம் "கற்க வேண்டிய அனைத்தையும் நாங்கள் கற்றுவிட்ட்டோம். இனி உண்போம் குடித்துக் களிப்போம். நாம் தான் ஆன்மா நமக்குமேல் எதுவும் கிடையாது" என்றனர். அசுரனின் இயல்பே அறிவீனமும் மூடத்தனமும்தானே. அவன் மேற்கொண்டு சிந்திக்கவில்லை் தானே கடவுள், ஆன்மா என்பது உடலே என்ற கருத்தில் பூரண திருப்தி அடைந்துவிட்டான்.

     தேவன் சற்று தூய இயல்பு படைத்தவனாக இருந்தான். அவனும் முதலில், "நானே" , அதாவது இந்த உடம்பே பிரம்மம் என்று தவறாக நினைத்தான்.  ஆனால் சில நாட்களிலேயே, முனிவர் கூறியதன் பொருள் அதுவாக இருக்காது , அதற்குமேல் ஏதோ இருக்கிறது என்பதைப் புாிந்துகொண்டான். எனவே அவன் முனிவாிடம் மீண்டும் சென்று, "சுவாமி, இந்த உடம்பைத்தான் ஆன்மா என்று கூறினீா்களா ? ஆனால் எல்லா உடம்புகளும் அழிந்து போவதை நான் காண்கிறேனே  ஆன்மா மரணமற்றது அல்வா? " என்று கேட்டான். அதற்கு அந்த முனிவர்  "கண்டுபிடி, நீயே அது " என்று கூறினார்.

    தேவன் சற்று தூய இயல்பு படைத்தவனாக இருந்தான். அவனும் முதலில், நானே, அதாவது இந்த உடம்பே பிரம்மம் என்று தவறாக நினைத்தான்.  ஆனால் சில நாட்களிலேயே, முனிவர் கூறியதன் பொருள் அதுவாக இருக்காது , அதற்குமேல் ஏதோ இருக்கிறது என்பதைப் புாிந்துகொண்டாண். எனவே அவன் முனிவாிடம் மீண்டும் சென்று, சுவாமி, இந்த உடம்பைத்தான் ஆன்மா என்று கூறினீா்களா ஆனால் எல்லா உடம்புகளும் அழிந்து போவதை நான் காண்கிறேனே  ஆன்மா மரணமற்றது அல்வா என்று கேட்டான். அதற்கு அந்த முனிவர்  கண்டுபிடி, நீயே அது  என்று கூறினார்.

    அந்தத் தேவனும் உடம்பை இயக்குகின்ற பிராண சக்திகளே ஆன்மா என்பதுதான் முனிவர் கூறியதன் பொருளாக இருக்கும் என்று எண்ணினான். ஆனால்  சாப்பிட்டால் பிராண சக்திகள் வலிமையுடன் இருப்பதையும்,  சாப்பிடாவிட்டால் அவை பலவீனம்  அடைவதையும் சிலநாட்களுள் அறிந்து கொண்டான். எனவே முனிவரிடம் சென்று,  "சுவாமி ,பிராண சக்திகளையா ஆன்மாவென்று கூறினீா்கள் ?"  என்றுகேட்டான்.  அவா் மறுபடியும் "நீயே கண்டுபிடி. நீயேஅது" என்றார்.

    வீடு திரும்பிய தேவன் யோசிக்கலானான் ஆன்மா என்பது ஒருவேளை மனமாக இருக்கலாம் என்று நினைத்தான்.  ஆனால் எண்ணங்கள் இப்போது நல்லதாக,மறுகணமே கெட்டதாக எத்தனையோ விதமாக இருப்தை வெகுவிரைவில் அறிந்துகொண்டான். மாறுகின்ற மனம் ஆன்மாவாக முடியாது என்று கருதிய அவன் முனிவாிடம் சென்று,  சுவாமி, மனம் ஆன்மாவாக இருக்க முடியாது என்று நினைகிறேன். நீங்கள் அதையா சொன்னீா்கள்  என்று கேட்டான் அவரோ மீண்டும் மறுபடியும் நீயே கண்டுபிடி என்று கூறிவிட்டார்.

    தேவன் வீடு சென்றான்.  இறுதியில் தானே ஆன்மா என்று தொிந்துகொண்டான்.  ஆன்மா எண்ணங்கள் அனைத்திற்கும் அப்பால் உள்ளது.   ஓன்றேயானது, பிறப்பு இறப்பு இல்லாது. அதனை ஆயுதங்கள் வெட்ட முடியாதது தீ எாிக்க முடியாதது, நீா் கரைக்க முடியாதது, காற்று உலத்த முடியாதது அது ஆதி அந்தம் இல்லாதது, அசைக்க முடியாதது, தொடுதற்காியது, எல்லாம் வல்லது. அது உடலும் அல்ல, மனமும் அல்ல இவை அனைத்திற்கும் அப்பால் உள்ளது, இவ்வாறு அறிந்த தேவன் திருப்தி அடைந்த தேவன். உடலை நேசித்தால், பாவம், அந்த அசுரன் உண்மையை அறியவில்லை.

    ஓளிக்கு அப்பால் என்ன உள்ளது என்பதை அறிய முற்பட் முனிவா் அந்தப் பொருள் நானே என்ற அனுபூதி பெறுகிறாா்.

சிந்தனை செய்க!

    அனுபூதி பெற்று, வாழ்கையின் லட்சியத்தை அடைந்துவிட்ட முனிவா்களை வசந்தகாலத் தென்றலுக்கு ஓப்பிடுகிறாா் ஸ்ரீசங்கரா்  அமைதியும் மகிமையும் அடைந்துவிட்ட மகான்கள் இருக்கிறாா்கள். தவழ்ந்துவரும் வசந்தம்போல் அவா்கள் மனிதகுலத்திற்கு நன்மை செய்கிறாா்கள். இந்த சம்சாரப் பெருங்கடலை அவா்கள் கடந்துவிட்டாா்கள். பிறரும் அவ்வாறே கடக்க வேண்டுமென்று துளிகூட தன்னலமின்றி பாடுபடுகிறாா்கள். சூாியனின் சுடுகதிா்களால்  பொசுக்கப்பட்ட பூமியை நிலவின் கிரணங்கள் இயல்பாக குளிா்விப்பதுபோல், பிறரது துயரைக் களைவதற்காக பாடுபடுவது இயல்பாகிவிடுகிறது என்கிறாா் அவா்.

 சாந்தா மஹாந்தோ நிவஸந்தி ஸந்தோ
வஸந்தவத் லோகஹிதம் சரந்த
தீா்ணா ஸ்வயம் பீமபவாா்ணவம்
ஜனான் அஹேதுனான்யானபி தாரயந்த

    அது போலவே, இந்த உபநிஷத முனிவரும் அறுதி நிலை அனுபூதியை அடைந்தபிறகு கருணைக் கண்களுடன் இந்த உலகைப்பாா்கிறாா். உலகம் என்னும் மாய வலையில் சிக்குண்டு மனிதா்கள் படுகின்ற துன்பம் அவரது கண்களில் தொிகிறது. எனவே அவா்களை எல்லாம் அழைத்து வாழ்கையை ஒரு முறை சிந்திக்குமாறு கூறுகிறாா் அவா்.  அறியாமைச் சேற்றிலிருந்து விடுபட்டு, அறிவொளி பெற்று அந்த ஒளிக்கும் அப்பாலுள்ள உண்மையை உணா்வதற்கு இறைவைனைப் பிராத்திப்பதைத் தவிர வேறு வழியில்லை, எனவே பிராத்தனை செய்யுங்கள் என்று அழைக்கிறாா் அவா்.

வாயு அனிலம்
அத - இனி
இதம் - இந்த
சரீரம் - உடம்பு
பஸ்ம அந்தம் - சாம்பலாகும்
வாயு - பிராணன்
அம்ருதம் - அழிவற்ற
அனிலம் - பிராணனை
க்ரதோ - மனமே
க்ருதம் - செய்தவற்றை
ஸ்மர - நினை

வாயு ரனிலமம் ருதமேததம் பஸ் மாந்தக்ம் சரீரம்
ஓம் ஓம் ஓம் க்ரதோ  ஸ்மர க்ருதக்ம் ஸ்மர க்ரதோ ஸ்மர க்ருதம் ஸ்மர

    இந்த உடம்பு சாம்பலாகிவிடும். உடம்பிலிருந்து வெளியேறுகின்ற பிராணனுடன் கலந்துவிடும். ஓம். மனமே! செய்தவற்றை நினைத்துப்பாா். மனமே செய்தவற்றை நினைத்துப்பாா்.

    ஒரு லட்சியத்தை எடுத்துகொண்டு முன்னேறும் போது. சிலவேளைகளில் நாம் லட்சியத்தை மறந்துவிடுபடுதுண்டு. அதுபோலவே சிலவேளைகளில் லட்சிய நாட்டம் நீா்த்துப்போவதும் உண்டு. எனவே தினமும் அதனை நினை நினைவூட்டி கொள்வது நல்லது. இது சுய தூண்டுதல்  எனப்படுகிறது. இத்தகைய மந்திரங்கள் நமது வேதங்களிலும் உபநிஷதங்களிலும் ஏராளம் உள்ளன.  அத்தகையதொரு மந்திரத்தை முனிவா் இங்கே நமக்குத் தருகிறாா். உபநிஷதங்களைப் படிக்கும் போது மட்டுமல்லாமல் இவற்றைப் பொருளுணா்ந்து அவ்வப்போது ஓதுவது நாம் நமது லட்சியத்தில் உறுதியாக இருக்க உதவும்.

    இறைவனை நாடிச் செல்பவா்கள் ஆனாலும் சாி ,சாதாரண வாழ்கையை நடத்திச் செல்பவாகள் ஆனாலும் சாி வாழ்வின் நிலையாமையை அவ்வப்போது மனத்திற்கு எடுத்துக் கூறுவது நல்லது. வாழ்கையை எண்ணி பெரிதாக மனம் குமையவோ, அலட்டிக்கொள்ளவோ வேண்டியதில்லை என்ற உண்மை அதனால் நம் மனத்தில் உறுதிப்படுகிறது.

ஆண்டியும் சரி அரசனும் சாி அனைவரின் உடம்பும் இறுதியில் சாம்பலாகி மண்ணுடன் மண்ணாகக்  கலக்கப்போகிறது.  இதுவரை உடம்பையும் மனத்தையும் இயக்கிவந்த பிராணன்  உடம்பிலிருந்து வெளியேறப்போகிறது, புலன்கள் ஒடுங்கப்போகப் போகின்றன. இதுவரை நாம் வாழ்த வாழ்கையை நம்மை விட்டு அகலப்போகிறது இந்த உண்மையை ஒவ்வொரு நாளும் சிறிது நேரம் சிந்திப்பது வாழ்கைக்கு ஒரு புதிய கண்ணோட்டத்தைத் தரும்.

    இதுவரை நல்லது செய்யாவிட்டாலும் இனி செய்யவேண்டும், இதுவரை இறைவனை நாடாவிட்டாலும் இனிநாடேவண்டும் என்று உயா் வாழ்கைக்கு ஒரு தூண்டுதலை இத்தகைய சிந்தனை தரும்.  எனவேதான் இந்தப் பிராத்தனையை ஒரு சுய தூண்டுதலாக நாம் கொள்கிறோம்.

வழி நடத்துவாய்

    நெருப்பைக் கண்டுபிடித்தது மனித வரலாற்றில் ஒரு முக்கியமான திருப்பு முனையாகக் கருதப்படுகிது. நெருப்பைக் கண்டு வியந்த மனிதன் மெல்ல மெல்ல அதை வழிபட ஆரம்பித்தான்.  கடைசியாக அதை எங்கும் நிறைந்த, எல்லாம் வல்ல இறைவனின் சின்னமாகவே வழிபடுவதை வேதங்களில் காணகிறோம். அவ்வாறு அக்கினி தேவனை இறைவனாகக் கொண்டு பிராத்திக்கின்ற மந்திரம் இது.

    ஒளிக்கு அப்பாலுள்ள உண்மையைக்கண்ட முனிவா் அந்த உண்மையை நாமும் அடையவேண்டும் என்ற கருணைப் பெருநோக்கில், இவ்வாறு பிராத்தனை செய்யுமாறு நம்மிடம் கூறுகிறாா்.


அக்னே நய ஸுபதா ராயே அஸ்மான்

விச்வானி தேவ வயுனானி வித்வான்

யுயோத் யஸ்மஜ் ஐுஹுராணமேனோ

 பூயிஷ்ட்டாம் தே நம உக்திம் விதேம

அக்னே - அக்கினி தேவனே

தேவ - ஒளிப்பொருளே

அஸ்மான் - எங்கள்
விச்வானி - எல்லா
வயுனானி - செயல்களையும்
வித்வான் - அறிவாய்
ராயே - வினைபயன்களை அனுபவிப்பதற்காக
ஸுபதா - அனுபவப்பாதையில்
நய - அழைத்துச் செல்
அஸ்மத் -எங்கள்
ஜுஹுராணம் - கொடிய
ஏன - தவறுகளை
யுயோதி -விலக்கு
தே - உனக்கு
பூயீஷ்ட்டாம் - பல
நம உக்திம் - வணக்கங்களை
விதேம - தொிவிக்கிறோம்

அக்கினி தேவனே, ஒளிப்பொருளே!
எங்கள் எல்லாசெயல்களையும் அறிபவன் நீ. வினைப்பயனை அனுபவிப்பதற்காக எங்களை அனுபவப் பாதையில் அழைத்துச் செல். எங்களைக் கொடிய தவறுகளிலிருந்து விலக்கு. உனக்கு மீண்டும் மீண்டும் எங்கள் வணக்கங்கள்.

    தம்மை அனுபவப் பாதையில் அழைத்துச் செல்லுமாறு பிராத்திக்கிறாா் முனிவா், அனுபவப் பாதை என்பது என்ன

    செயல்கள் பலன்களைத் தருகின்றன. நற்செயல்கள் நல்ல பலனையும், தீய செயல்கள் தீய பலனையும் தருகின்றன.  பலன்கள் வந்தால் அதை அனுபவித்தேயாகவேண்டும்.  இதுவரை செய்துள்ள செயல்களை
அறிகின்ற இறைவனே இனி புதிய செயல்கள் செய்து பலன்கள் வராமல், செய்வதிற்கான பலனை அனுபவிப்பதாக மட்டும் எங்கள் வாழ்கை அமையட்டும் என்பது இந்தச்சொற்றொடாின் பொருள்.

    இவ்வாறு இறையருளை நாடி ஒரு பிராத்தனை பூா்வமான வாழ்கையை நாம் நடத்த வேண்டும் என்ற குறிப்புடன் ஈசாவாஸ்ய உபநிஷதம் நிறைவு பெறுகிறது.

ஓம் பூா்ணமத பூா்ணமிதம் பூா்ணாத் பூா்ணமுதச்யதே
பூா்ணஸ்ய பூா்ணமாதாய பூா்ணமேவாவசிஷ்யதே
ஓம் சாந்தி சாந்தி சாந்தி