Thursday, 13 October 2016

ஈசாவாஸ்ய உபநிஷதம்

ஓரு வார்தை


உபநிஷதங்கள் ரிஷிகளின் அனுபவ உண்மைகள். வெறும் நூலறிவு கொண்டோ, சமஸ்கிருதப் புலமை கொண்ட அவற்றின் உண்மையான பொருளை அறிந்து கொள்வது சாத்தியம் அல்ல. உண்மையான சாதனை வாழ்வில் ஈடுபட்டு, மனம் தூய்மை பெற்று நாம் இறைவனை நோக்கி முன்னேற முன்னேற இவற்றின் உட்பொருள் மேன்மேலும் ஆழமாக நமக்குப் புரியும்.  மீண்டும் மீண்டும் படித்து, மந்திரங்களின் பொருளை  ஆழமாக சிந்தித்து, ஆன்மீக சாதனைகளிலும் ஈடுபட்டால்தான் உபநிஷதங்களை உண்மையாகப் புரிந்து கொள்ள முடியும்; அவற்றின் அற்புதத்தில் ஆழ்ந்து மனம்மகிழமுடியும். 

காலங்கள் பல கடந்துவிட்டதால் பல மந்திரங்களின் பொருள் சுலபத்தில் அறிந்துகொள்ளத் தக்கதாக இல்லை.  பொருள் புரியவில்லை என்பதற்காகச் சோர்ந்துவிடாமல், புரிந்த மந்திரங்களின் பொருளை ஆழ்ந்து சிந்தித்து சாதனைகளில் உயர்வடைய முயற்சிக்க வேண்டும்.


வித்யைகள்


மனிதன், உலகம், இறைவன் என்பவை மூன்று அடிப்படை உண்மைகள். உபநிஷதங்கள் இந்த மூன்றையும், இவற்றிக்கு இடையே நிலவுகின்ற தொடர்பையும் ஆராய்கின்றன. அறுதி உண்மையாகிய இறைவனை ஒவ்வொரு மனிதனும், ஒவ்வோர் உயிரும் சென்று அடைவதே வாழ்கையின் லட்சியம், அதற்கான களமே உலகம். உலகம் தருகின்ற அனுபவங்களைப் பாடமாகக் கொண்டு, உலகில் வாழ்ந்தபடியே அந்த லட்சியத்தை அடையுமாறு உபநிஷதங்கள் வலியுறுத்துகின்றன.  ஒவ்வோர் உபநிஷதமும் தனக்கென்று  சில குறிப்பிட்ட பாதைகளைக் காட்டுகிறது. இந்தப் பாதை வித்தை எனப்படுகிறது. வித்தைகள் எண்ணற்றவை.

 14 முக்கிய உபநிஷதங்கள்

ரிக் வேதங்கள் :  ஜதரே உபநிஷதம், கௌசீதகி உபநிஷதம்

யஜீர் வேதங்கள்:  ஈச உபநிஷதம், கட உபநிஷதம், தைத்திரீய உபநிஷதம், பிருஹதாரண்யக உபநிஷதம், சுவேதாஸ்வதர உபநிஷதம், மைத்ராயணி உபநிஷதம்  , மஹாநாரயண உபநிஷதம்.

சாம வேதங்கள்: கேன உபநிஷதம்,சாந்தோக்கிய உபநிஷதம் .

அதர்வண வேதங்கள்:  ப்ரச்ன உபநிஷதம், முண்டக உபநிஷதம், மாண்டூக்ய உபநிஷதம்.




ஈசாவாஸ்ய உபநிஷதம்


'ஈசாவாஸ்யம் இதம் ஸர்வம்' என்றமந்திரத்துடன் ஆரம்பிப்பதால் ஈசாவாஸ்ய உபநிஷதம் என்ற பெயர் பெற்று. ஈச உபநிஷதம் என்று அழைக்கப்படுகின்ற 18 மந்திரங்களே உடைய சிறிய உபநிஷதம் ஆகும்.
தத்யங்க அதர்வணர் என்ற முனிவர் தமது மகனுக்கு இதனை உபதேசித்தார்.

உபநிஷதக் கரு

'இருளுக்கு அப்பால் பொன்னிறத்தில் ஒளிர்கின்ற மகிமை வாய்ந்த பரம்பொருளை அறிந்துகொண்டேன்' என்று ஆனந்த மிகுதியில்  ஒருவர் கூறுகிறார். ஒளிக்கு அப்பால் உள்ள ஒன்றை தேடுகின்ற முயற்சியை    (15-16 மந்திரங்கள்) கூறுகின்றது. ஈச வித்யை என்று கூறுகின்ற இத்தக் கருத்தே ஈசாவாஸ்ய  உபநிஷதத்தின் மையக் கருவாக உள்ளது.


ஒளிக்கு அப்பாலுள்ள  ஒன்றைத் தேடும் முயற்சியையும் ஒளிக்கு அப்பால் என்ன உள்ளது என்னபதையும் படிப்படியாக இங்கே நாம் காண்கிறோம்.

எந்த ஓன்றையும் செய்யும்போது அதற்குரிய மனநிலை இருக்கப்பெறுவது இன்றியமையாது. எந்தகாரியத்தைச்செய்கிறோமோ அதற்குரிய மனநிலையை வரவழைத்துக் கொண்டு, அதன்பிறகு அந்தச்செயலில் ஈடுபடுவது சிறப்பான பலனை அளிக்கும், நமது கோயில்களில் பல பிராகாரங்கள் அமைந்திருப்பதன் காரணம் இதுவே. ஒவ்வொரு பிரகாரத்தில் சுற்றி வரும்போதும் மற்ற எண்ணங்களை எல்லாம் விட்டு, கடைசியாக கருவறையில் சென்று தெய்வத்தைத் தரிசிக்கும்போது, நம்மால் முழுமனதுடன் தெய்வசிந்தனையில் ஈடுபடமுடிகிறது. அதுபோல் அனுபூதிக்கருமூலமான உபநிஷதங்களை படிக்க புகுமுன் நமது சிந்தனையை அவற்றுடன் இயைபுபடுத்த சாந்தி மந்திரங்கள் உதவுகின்றன.

 ஈசாவாஸ்ய உபநிஷதத்திற்கான சாந்தி மந்திரம்.


ஓம் பூர்ணமத: பூர்ணமிதம் பூர்ணாத் பூர்ணமுதச்யதே|

பூர்ணஸ்ய பூர்ணமாதாய பூர்ணமேவாவசிஷ்யதே||

ஓம் சாந்தி: ஓம் சாந்தி:  ஓம் சாந்தி:||



அத - இறைவன்

பூர்ணம் - முழுமையானவர்

பூர்ணமத- இறைவன் முழுமையானவர்

இதம் - இந்த உலகம்

பூர்ணமிதம்  -  இந்த உலகம் முழுமையானது.

ஆத் - இறைவனிலிருந்தே

பூர்ணாத் - முழுமையான இறைவனிலிருந்தே

உதச்யதே - தோன்றியுள்ளது

பூர்ணமுதச்யதே - முழுமையான இறைவனிலிருந்து தோன்றியுள்ளது

பூர்ணஸ்ய -முழுமையிலிருந்து

ஆதாய - எடுத்த பின்பும்

பூர்ணமாதாய - முழுமையை எடுத்த பின்பும்

பூர்ணம் ஏவ - முழுமையே

அவசிஷ்யதே - எஞ்சியுள்ளது

பூர்ணமேவாசிஷ்யதே- முழுமையே எஞ்சியுள்ளது




ஈசாவாஸ்ய உபநிஷதத்திற்கான சாந்தி மந்திரம்.

இறைவன் முழுமையானவர், இந்த உலகம் முழுமையானது. முழுமையான உலகம்தோன்றி உள்ளது. முழுமையிலிருந்து முழுமை எடுத்த பின்பும் முழுமையே எஞ்சியுள்ளது!
ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி:

ஒரு புதிரின்மூலம் உலகத்தை விளக்க முற்படுகின்ற மந்திரம் இது. இறைவன் முழுமையானவராக, பூரணமானவராக இருக்கிறார். அவரிலிருந்து முழுமையான உலகம் தோன்றியுள்ளது. இருப்பினும் தனது பூரணத்துவம் குன்றாமல் முழுமையாகவே இருக்கிறார் அவர். இதனை மூன்று வழிகளில் புரிந்துகொள்ளலாம்.


1. ஒரு தீபத்திலிருந்து எண்ணற்ற தீபங்களை ஏற்ற முடியும். இதனால் முதல் தீபத்தின் முழுமை கெடுவதில்லை. அதிலிருந்து ஏற்றப்பட்ட தீபங்களும் முழுமையாக, நிறைந்த ஒளி தருவனவாகவே இருக்கும்.

2. நாம் எத்தனையோ பேரை நேசிக்கிறோம்; முழுமையாக அவர்களிடம் அன்பு வைக்கிறோம். இதனால் நம்முடமுள்ள அன்பு குறைந்ததாகக் கூற முடியாது. நமது அன்பு முழுமையாக இருக்க, நாம் எத்தனையோ பேருக்கு அன்பை முழுமையாகக் கொடுக்க முடியும்.

3. ஒரு செடியில் எத்தனையோ பூக்கள் மலர்கின்றன. ஒவ்வொரு மலரும் முழுமையாக உள்ளது. முழுமையான மலர்கள் பலவற்றைத் தருவதால் செடியின் முழுமை எந்த விதத்திலும் குறைவதில்லை. ஏனெனில் செடியின் முழுமை வேறு. அதுபோலவே, இறைவனிலிருந்து எத்தனையோ முழுமையான உலகங்களும் அண்ட சராசரங்களும் தோன்றலாம். ஆயினும் அவரது முழுமை ஒருபோதும் குறைவதில்லை.

இறைவனின் முழுமை உலகங்களின் தோற்றத்தாலோ மறைவாலோ பாதிக்கப்படாத ஒன்று; இறைவனிலிருந்து தோன்றியதால் உலகமும் இறையம்சம் பொருந்தியது என்பது இந்த சாந்தி மந்திரத்தின் கருத்து. இந்த உண்மையை உணர்ந்து வாழ்ந்தால் சாதாரண வாழ்கையே நம்மை இறைநெறியில் அழைத்துச் செல்ல வல்லதாகிவிடும். இந்தக் கருத்தையே உபநிஷதத்தின் முதல் மந்திரம் தெரிவிக்கிறது.

வேத மந்திரங்கள் அனைத்தும் இறுதியில் ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி: என்று நிறைவுறுவதைக் காணலாம். சாந்தி: என்றால்அமைதி. மூன்று விதமான தடைகளிலிருந்து நாம் விடுபடுவதற்காக மூன்று முறை சொல்லப்படுகிறது.

1. ஆத்யாத்மிகம்: நம்மால் வரும் தடை; உடல் நோய், மனப் பிரச்சினைகள் போன்றவை.

2. ஆதி பௌதிகம்: பிற உயிர்களால் வரும் தடை.

3. ஆதி தைவிகம்: இயற்கைச் சக்திகளால் வரும் தடை; மழை, இடி, தீ போன்றவற்றால் வருபவை.

மூன்று முறை சொல்வதன்மூலம் இந்த மூவகைத் தடைகளிலிருந்து விடுபட்டு, இந்த உபநிஷதத்தைப் படிப்பதற்கான நமது முயற்சி வெற்றி பெறுவதற்காகப் பிரார்த்திக்கிறோம்.

ஒளிக்கு அப்பால் 


சற்றே சிந்திக்கத் தெரிந்த யாருக்கும் புலனாகின்ற உண்மை ஒன்று உண்டு; நாம் அறியாமையில் இருக்கிறோம் என்பதுதான் அது. விஞ்ஞானம், கலை என்று பல விஷயங்களை நாம் அறிந்திருக்கலாம். ஆனால் இவை சில தகவல்களே தவிர உண்மையறிவு ஆகாது. நம்மைப்பற்றிய அறிவே உண்மையறிவு.

நாம் யார், எங்கிருந்து வந்தோம், எங்கே போய்க் கொண்டிருக்கிறோம், எங்கே போக வேண்டும் என்ற எதுவும் தெரியாத நிலையில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.  அவ்வளவு ஏன், அடுத்த கணம் என்ன நடக்கப்போகிறது என்பதுகூட நமக்குத் தெரியாது.  அதனால்தான் உபநிஷத ரிஷி,  இறைவா!  அறியாமை இருளிலிருந்து என்னை அறிவின் ஒளிக்கு அழைத்துச் செல்வாய் என்று பிராத்தனை செய்கிறார்.

அத்தகைய பிராத்தனைகளின் பலனாக, ஐபம் தவம் போன்ற ஆன்மீக சாதனைகளின் பலனாக இறைவனின் அருட்கிரணம் நம்மில் பட்டு நமது உணர்வின் ஒளியின் காட்சி, ஒளியைத் தூண்டுகிறது.  நமக்கு ஒளியின் காட்சி, ஒளிமயமான இறைவனின் காட்சி கிடைக்கிறது; அறியாமை இருள் விலகுகிறது; எல்லாம் நமக்குப் புரிகிறது.

ஆனால் ஒளியின் காட்சியுடன் நமது பயணம் நின்று விடவில்லை. அறுதி உண்மை என்பது அனைத்தையும் கடந்தது;  இருள் - ஒளி,  துன்பம் - இன்பம், தீமை - நன்மை போன்ற அனைத்து இருமைகளுக்கும் அப்பாற்பட்டது அந்த இடத்தை அடையும்போதுதான் நமது பயணம் லட்சியத்தை அடைகிறது.  எனவே, ஒளிமயமான காட்சியைப் பெற்ற முனிவர் தன்னை ஒளிக்கும் அப்பால் அழைத்துச் செல்வதற்குப் பிராத்திக்கிறார்.

ஒளிக்கு அப்பால் இருப்பது என்ன?

ஒளிக்கு அப்பால் தமமையே காண்பதாக உபநிஷத முனிவர் கூறுகிறார்.  அறுதிநிலை அனுபூதி ( அனு" என்பது அனுபவம். "பூதி" என்பது புத்தி அனுபவ அறிவின் பூரிப்பே அனுபூதி). இதனைப் படிப்படியாக இந்த உபநிஷதத்தில் நாம் காண்கிறோம்.


நூறாண்டுகள் வாழ்க!



அறுதி உண்மையான பரம்பபொருளை அடைய வேண்டுமானால் முதலில் ஒளியை அடைந்தாக வேண்டும்.  அதற்கு வாழ்க்கையையே வழியாக இந்த உபநிஷதம் சொல்கிறது. வாழ்க்கையிலிருந்து விலகி ஓடுவதல்ல; வாழ வேண்டிய முறையில் வாழ்க்கையை வாழ்வது எப்படி என்பதை அறிந்து, அதன்படி வாழ்ந்தால் அதுவே ஓர் ஆன்மீக சாதனையாகி விடுகிறது; ஒளியை அடைவதற்கான, இறை (அறிவின்பூரிப்புக்கான) அனுபூதிக்கான ஒரு வழியாகிவிடுகிறது.  உரிய முறையில் வாழ்வது என்பதை இரண்டு படிகளாக முதல் இரண்டு மந்திரங்கள் கூறுகின்றன.


தியாகத்துடன் அனுபவி

1. மாறுகின்ற இயல்புடைய இந்த உலகில் உள்ள அனைத்தும் இறைவனால் நிறைக்கப்பட வேண்டும். அத்தகைய தியாக சிந்தையுடன் உலகை அனுபவி. பணம் யாருடைது?  அதற்காக ஆசைப்படாதே.

உலகமும், அதன் செல்வங்களும், அது தரும் சுகபோகங்களும் எல்லாம் மாறுபவை. அதாவது நிலையற்றவை. நிலையான இன்பம், அமைதி எதையும் இந்த உலகிலிருந்து நாம் எதிர்பார்க முடியாது. ஆனால் நிலைத்த இன்பத்தையும் அமைதியையும் தான் நாம் ஒவ்வொரு வரும் தேடுகிறோம்.  அதனை பெற என்ன வழி?

அனைத்தையும் இறைவனால் நிறைக்கவேண்டும்.  இதன்பொருள் என்ன? விளக்குகிறார் சுவாமி விவேகானந்தர்:


அனைத்தையும் இறைவனால் நிறைக்கவேண்டும்;  ஒருவகை போலியான இன்ப நோக்கமாகவோ,  இல்லை, துன்பங்களைக் கண்டும் காணாததுபோல் இருக்கும் பாசாங்காகவோ அல்ல.  உண்மையிலேயே எல்லாவற்றிலும் இறைவனைக் காண்பதின்மூலம் இதைச் செய்ய வேண்டும்..... இதன்பொருள் என்ன?   நீ உன் மனைவியோடு வாழலாம்;   அவளைக் கைவிடவேண்டும் என்பதல்ல. ஆனால் அவளிடம் கடவுளைக் காண வேண்டும்....  உங்கள் குழந்தைகளில் இறைவனைக் காணுங்கள்.  எல்லாவற்றிலுமே இறைவன் சமமாக நிறைந்திருக்கிறார்.  கண்களைத் திறவுங்கள்,  அவரைப் பாருங்கள்...


நாம் நமது கற்பனையால், நமது அனுமானத்தால் உருவாக்கிக் கொண்டிருக்கும் உலகத்தைத் துறந்துவிடவேண்டும்.   ஏனென்றால் இந்த அனுமானம் முழுமையற்ற அனுபவத்தை,  ஆழமற்ற அறிவை நமது சொந்த பலவீனத்தை அடிப்படையாகக் கொண்டது.   இதைத் துறந்து விடுங்கள்.  நாம் இதுவரை நினைத்துவந்த, எல்லோரும் உடும்புப்பிடியாகப் பிடித்திருக்கின்ற உலகம் நம்முடைய கற்பனையில் தோன்றிய பொய்யான உலகம்.  அதை விட்டு விடுங்கள்.  நன்றாகக் கண்களைத் திறந்து பாருங்கள். இப்படிபட்ட ஓர் உலகம் எப்போதுமே இருக்கவில்லை என்று உணர்ந்து கொள்ளுங்கள்.  அது ஒரு கனவு, மாயை. இருந்தது கடவுள் மட்டுமே. குழந்தையில், மனைவியில், கணவனில் எல்லாவற்றிலும் இருப்பவர் அவரே,  பாவத்திலும் இருப்பதும் அவரே, பாவியாக இருப்பதும் அவரே. வழ்விலும் அவரே இருக்கிறார். சாவிலும் அவரே இருக்கிறார்.

எங்கும் இருப்பவர் அவர். எல்லாம் அவருடையது; வேறு யாருடையதும் அல்ல. எனவே நமக்கென்று வாய்த செல்வத்திலும் ஆசை கொள்ளாமல் அனைத்தும் இறைவனுக்கு உரியவை என்ற தியாக சிந்தையுடன் உலகை அனுபவிக்குமாறு கூறுகிறது உபநிஷதம். இது முதற்படி.


தியாகத்தால் பற்றின்மை

எல்லாம் இறைவனுடையது என்ற தியாக சிந்தையுடன் வாழ்வதால் பற்றின்மை உண்டாகிறது.

2. கடமைகளைச் செய்தபடியே நூறு ஆண்டுகள் வாழ விரும்பு. (உலகை அனுபவித்து வாழ விரும்புகின்ற) உன்னைப் போன்றவா்களுக்கு இதைத்தவிர வேறு வழி இல்லை. (இவ்வாறு வாழ்வதால்) கடமைகள் உன்னைப் பற்றுவதில்லை.

உலகில் வாழ  வேண்டும். அதற்கு வேலை செய்தாக வேண்டும்.  கடமைகளைச் செய்யாமல் யாரும் வாழ முடியாது. எந்த வேலையைச் செய்தாலும் அதற்கு விளைவு ஒன்று இருக்கும். அது நல்லதாக இருக்கலாம், கெட்டதாக இருக்கலாம், இரண்டும் கலந்ததாக இருக்கலாம், ஆனால் விளைவு ஒன்று இருந்தே தீரும்.  விளைவு எதுவானாலும் அது நம்மைப் பிணைக்கிறது; மனத்தில் ஒரு பதிவை உண்டாக்கிறது. அந்தப் பதிவு, நாம் மேலும் அந்தச் செயலைச் செய்யுமாறு தூண்டுகிறது. மீண்டும் நாம் அந்த வேலையைச் செய்கிறோம். இவ்வாறு வேலைகள் தொடர்கின்றன. இது தொடா்ந்த பிறவிக்கு வழியாகிறது.

ஆனால் உலகை இறைவனுக்கு உரியதாகக் கண்டு, அவரது சொத்திற்கும் சுகத்திற்கும் ஒரு பொறுப்பாளனைப்போல் வாழ்தால், அந்த ரீதியில் வேலை செய்தால் அந்த வேலையின் பலன் நம்மைப் பிணைக்காது. பலன் நம்மைப் பிணைக்காததால் அத்தகைய வேலை அக வளர்ச்சிகான ஓர் ஆன்மீக சாதனையாக ஆகிவிடுகிறது.


நாம் யார்?

உலகை இறைவனுக்கு உரியதாகக் கண்டு, அதற்கேற்ப கடமைகளைச் செய்யும்போது அது ஆன்மீக சாதனை ஆகிறது.  உலகில் இறைவனைக் காண்பது எப்படி? அதற்கு முதற்படி நம்மில் இறைவனைக் காண்பதுதான்.
நாம் யார்?

உடம்பு,மனம்,பிராணன், புத்தி, ஆன்மா என்ற ஐந்தின் தொகிதியே நாம். மனம், பிராணன் மற்றும் புத்தியின் தொகுதி ஜீவன் அல்லது உயிர் எனப்படுகிறது. எங்கும் நிறைந்தவரான இறைவன் நம்மில் ஆன்மாவாக உள்ளார்.  நம்மில் உள்ள அந்த இறையம்சமே ஆன்மா. அதுவே நமது உண்மை இயல்பு. அந்த ஆன்மாவை அறியவேண்டும். இறையம்சமாகிய ஆன்மாவே நாம் என்பதை உணர்வதுதான் உலகில் இறைவனைக் காண்பதற்கான முதற்படி.

நமது உண்மை இயல்பை அறிய வேண்டுவதன் அவசியம்

3. அசுரர்களின் உலகங்கள் காரிருளினால் மூடப்பட்டுள்ளன. ஆன்மாவை அழிப்பவர்கள் மரணத்திற்குப் பிறகு அந்த உலகங்களை அடைகிறார்கள்.


ஆசை வசப்பட்டு, உடம்புடனும் மனத்துடனும் நம்மைப் பிணைதத்துக்கொண்டு, உலகின் சுகபோகங்களை நாடி புற வளர்ச்சியில் கவனம் செலுத்துவேமானால் நாம் மேன்மேலும் பிறவிகளுக்கு உள்ளாகிறோம்.  மாறாக, ஆன்மாவுடன் நம்மை ஒன்றுபடுத்திக்கொண்டு அக வளர்ச்சியில் நாட்டம் செலுத்துவேமானால் இறைநிலையை அடைந்து மரணத்தை வெல்கிறோம். அதாவது பிறவியற்றவர்கள் ஆகிறோம்.

இவ்வாறின்றி,ஆன்மாவை நினைக்காமல் உடம்பே எல்லாம் என்று வாழ்பவர்களை இந்த மந்திரம் ஆன்மாவை அழிப்பவர்கள் என்று குறிப்பிடுகிறது.  ஆன்மாவை அழிக்க முடியாது; அழிப்பதற்கு நிகரான குற்றத்தைச்செய்பவர்கள் என்பது பொருள்.  அத்தகையவர்கள் மரணத்திற்குப் பிறகு இருண்ட உலகங்களை அடைகிறார்கள்.  அதாவது தொடர்ந்து பிறவிக்கு உள்ளாகி, துன்பத்தில் உழல்கிறார்கள்.  இந்தத் துன்பத்திலிருந்து விடுபட வேண்டுமானால் அக வளற்சியை நாட வேண்டும், ஆன்மாவைத் தேடவேண்டும்.

ஆன்மாவின் இயல்பு: 4-5

ஆன்மாவுடன் ஒன்றுபடித்திக்கொண்டு வாழும்போது இறைநிலையை அடைகிறோம். அந்த ஆன்மாவின் இயல்பு என்ன?

4.  ஆன்மா அசைவற்றது, ஒன்றேயானது மனத்தை விட விரைவானது. புலன்கள் அதனை அடைய இயலாது.  அது நிலையாக நின்றபடியே அனைத்திற்கும் முன்னால் செல்கிறது;  ஓடுகின்ற அனைத்தையும் முந்துகிறது.  அது நிலையாக இருப்பதால் பிராணன் அனைத்தையும் முந்துகிறது.  அது நிலையாக இருப்பதால் பிராணன் அனைத்தையும் இயக்குகிறது.

ஒரு பொருள் அசையவோ இயங்கவோ வேண்டுமானால் அந்த இயக்கத்திற்கு ஓர் இடம்வேண்டும்.  எங்கும் நிறைந்த ஒன்று எங்கே அசையும்? எனவேதான் ஆன்மா அசைவற்றது.

மனம் புறத்திலுள்ள ஒரு பொருளை நினைக்கும்போது,  அது வெளியில் சென்று அந்தப் பொருளின் வடிவை எடுப்பதாக நமது தத்துவ நூல்கள் கூறுகின்றன.  இதுவரை விஞ்ஞானம் கண்டறிந்துள்ள ஒலியின் வேகத்தைவிட, ஒளியின் வேகத்தைவிட மிகமிக வேகமாக மனம் சென்று அந்தப் பொருளின் வடிவை எடுக்கிறது.  அவ்வளவு வேகமாக மனம் சென்றாலும், மனம் செல்வதற்கு முன்பே அங்கே ஆன்மா அதாவது இறைவன் உள்ளார்.  எனவே தான் மனத்தைவிட விரைவானது, நிலையாக நின்றபடியே அனைத்திற்கும் முன்னால் செல்கிறது, ஓடுகின்ற அனைத்தையும் முந்துகிறது என்றெல்லாம் கூறப்பட்டது.

புலன்களால் ஆன்மாவை அறிய இயலாது. ஒவ்வொரு கருவியும் ஒரு குறிப்பிட்ட பணியைச் செய்ய வல்லது. தொலைநோக்கிக் கருவியால் தூரத்திலுள்ள பொருளை மட்டுமே பார்க்க முடியும்; அருகில் உள்ளவற்றைப் பார்க இயலாது. நுண்ணோக்கியால் மிகச் சிறியனவற்றைக் காண முடியும். அதுபோல் புலன்கள் புற உலகை அனுபவிப்பதற்காகப் படைக்கப்பட்டவை.  அகவுலக உண்மைகளையோ ஆன்மாவையோ காண அவற்றால் இயலாது. இதையே பகவான் ஸ்ரீகிருஷ்ணர் கீதையில், உனது இந்தக் கண்ணினால் பாக்க இயலாது. எனவே உனக்கு தெய்வீகக் கண்ணைத் தருகிறேன் என்று அர்ஜீனனிடம் கூறுகிறார்.

எந்த ஓர் இயக்கமும் நடைபெற வேண்டுமானல் இயங்காத ஒன்று அதற்கு ஆதாரமாக வேண்டும். ரயில் ஓட வேண்டுமானால் அசையாத தண்டவாளம் வேண்டும்.  திரைப்படம் இயங்க வேண்டுமானால் அசைவற்ற திரை ஆதாரமாக வேண்டும் அவ்வாறே, இந்த உலகின் இயக்கங்கள் அனைத்திற்கும் காரணமாக உள்ளது பிராணன். அசைகின்ற பிராணன் இயங்குவதற்கு அசைவற்ற ஆதாரமாக உள்ளது ஆன்மா.

5. அது அசைகிறது, அது அசைவதில்லை. அது தூரத்தில் உள்ளது, மிக அருகில் உள்ளது. அது அனைத்தின் உள்ளே உள்ளது, அனைத்தின் உள்ளே உள்ளது, அனைத்தின் வெளியிலும் உள்ளது. 

ஆன்மா, கடவுள் போன்ற உண்மைகள் ஆராச்சிக்கு அப்பாற்பட்டவை. இவற்றை அறிவினால் புரிந்துகொள்ள முடியாது என்றே வேதங்கள், உபநிஷதங்கள் முதலான அனைத்து சாத்திரங்களும் கூறுகின்றன.  அவ்வாறு புலன்களுக்கு எட்டாத ஒன்றைப் புலன்களால் விளக்க முற்படுகின்ற மந்திரம் இது. ஆன்மா எங்கும் நிறைந்ததாக இருப்பதால் இந்த முரண்பட்ட கருத்துக்கள் அனைத்தும் சாத்தியமாகின்றன.

பிரபஞ்சத்தின் இயக்கங்கள் அனைத்திற்கும் ஆதாரமாக இருப்பது ஆன்மா என்ற நிலையில், அதாவது எங்கும் நிறைந்த நிலையில் அதற்கு அசைவில்லை.

நம் ஒவ்வொருவரின் உள்ளேயும் ஆன்மா உள்ளது. எனவே அது மிக அருகில் உள்ளது. ஆனால் நாம் அதை உணராத நிலையில் அது மிகவும் தூரத்தில் உள்ளது.

அதுபோலவே இறைவன் என்ற நிலையில் அது எங்கும் நிறைந்ததாக இருப்பதால் அனைத்தின் உள்ளேயும் உள்ளது, வெளியேயும் உள்ளது.

ஆன்ம அனுபூதியும் அதன் பலனும்: 6-7

ஆன்மாவாகத் தன்னை உணர்தவன்,அதாவது ஆன்ம அனுபூதி பெற்றவன் பெறும் பலன் என்ன? அவன் உலகின் துன்பங்களிலிருந்து விடுபடுகிறான்.

6. யார் எல்லா உயிரினங்களாகளையும் ஆன்மாவிலும்,ஆன்மாவை எல்லா உயிரினங்களிலும் காண்கிறானோ அவன் யாரையும் வெறுப்பதில்லை.
7. ஆன்மாவே எல்லா உயிரினங்களாகவும் ஆகியிருக்கின்ற ஒருமையுணர்வைப் பெறுகின்ற ஒருவனுக்கு என்ன மனமயக்கம்?
என்ன கவலை?

பிடிக்காத ஒன்றை வெறுக்கிறோம்.  ஒன்றை மற்றொன்றாகக் காண்பதால் மனமயக்கம் உண்டாகிறது.  விரும்பிய ஒன்று கிடைக்காதபோது கவலை ஏற்படுகிறது.  ஆன்ம அனுபூதி பெற்றவனுக்கு இந்த மூன்றும் இல்லை என்று 6-7 மந்திரங்கள் கூறுகின்றன.

ஆன்ம அனுபூதி,  இறைக் காட்சி என்றெல்லாம் கூறப்படுவது ஓர் அக  அனுபவம்,  உணர்வில் ஒரு மாற்றம் என்பதை நினைவில்கொள்ள வேண்டும்.  குழந்தையும், வாலிபனும், வயோதிகனும் ஒரே உலகில்தான் வாழ்கிறார்கள். ஆனால் அவர்கள் காண்கின்ற உலகம் ஒன்றல்ல அவர்களின் காட்சி வெவ்வேறாக அமைவதற்குப் புறவுலகம் காரணம் அல்ல; அவர்களது உணர்வின் விரிவே, உணர்வின் மாற்றமே காரணம். வீட்டினரை மட்டுமே நேசிக்கின்ற நாம் நமது உணர்வு விரியவிரிய படிப்படியாக சுற்றத்தினரை, நண்பர்களை, பிறரை, நாட்டை, உலகை நேசிக்கின்றோம். சுற்றியிருப்பவர்களிடம் எந்த மாற்றமும் ஏற்படவில்லை; மாற்றம் நம்மிடமே நிகழ்ந்தது-  நமது உணர்வு விரிந்தது.


ஆன்ம அனுபூதியில் உணர்வு விரிந்து அதன் எல்லைகளைத் தொட்டுவிடுகிறது.  இனி எந்த மாற்றமும் ஏற்பட முடியாத அளவுக்கு விரிந்துவிட்ட நிலை அது.  இனி விரிய முடியாத அளவுக்கு விரிந்துவிட்ட நிலை அது.  பிரபஞ்சமே அவர்களுடையதாகி விடுகிறது;  அவர்கள் எங்கும் தன்னையே, தனது உணர்வையே காண்கிறார்கள். ஆனால் அவர்களிடம் பற்று இல்லாததால் உலகின் இன்ப துன்பங்கள் எதுவும் அவர்களைப் பாதிப்பதில்லை.  "எனது செல்வத்திற்கு எல்லையே இல்லை.  ஆனால் உண்மையில் "எனது" என்று எதுவும் இல்லை.  எனவே, மிதிலை நகரமே பற்றியெரிந்தால்கூட நான் எதையும் இழப்பதில்லை'  என்று  மிதிலை மன்னர் ஜனகர் கூறுவதாக மகாபாரதம் தெரிவிக்கிறது.  ஆன்ம அனுபூதி பெற்றவர்கள், இவ்வாறு சுகம்-துக்கம், வெற்றி-தோல்வி, நன்மை-தீமை போன்ற இருமைகளைக் கடந்துவிடுகிறார்கள்;  வெறுப்போ, மனமயக்கமோ, கவலையோ இல்லாதவர்களாகி விடுகிறார்கள்; வெறுப்போ, மனமயக்கமோ, கவலையோ இல்லாதவர்களாகி விடுகிறார்கள்.

ஒளியின் காட்சி

ஆன்ம அனுபூதி பெற்றவனின் அனுபவத்தை இந்த மந்திரம் கூறுகிறது.

8.(ஆன்ம அனுபூதி பெற்றவன்) அனைத்தின் உட்பொருளையும் காண்கிறான். அவன் மனத்தை வசப்படுத்தியவன்; அனைத்து அறிவையும் உள்ளடக்கியவன்; யாரையும் சாராதவன். அனைத்துப் பொருட்களின் உண்மை இயல்பை அவன் என்றென்றைக்குமாக அறிந்திருக்கிறான். அவன் ஒளிமயமான, உடம்பற்ற, முழுமையான, தசைகள் இல்லாத, தூய, பாவமற்ற இறைவனை அடைகிறான்.

கவி: என்றால் க்ராந்த தர்சி; அப்பால் காண்பவன் என்று பொருள். காணும் தோற்றத்துடன் மற்றவர்கள் நின்றுவிடுகிறார்கள். ஆனால் அனுபூதி பெற்றவன், ஒவ்வொரு தோற்றத்திற்கும் பின்னால் ததும்புகின்ற இறையுணர்வைக் காண்கிறான்.

மனீஷி என்றால்  மனத்தை வசப்படுத்துவதற்கான புத்தியைப் பெற்றவன். மனத்தை மனத்தால் வசப்படுத்த முடியாது,அதைவிட ஆற்றல்மிக்க ஒன்று வேண்டும். அதுவே புத்தி. உள்ளுணர்வு () என்றும் இது அழைக்கப்படுகிறது. இது எல்லோரிலும் செயல்படத் தொடங்கவில்லை. பிராத்தனை, காயத்ரீ மந்திர ஜபம் போன்றவற்றால் இது விழித்தெழுந்து செயல்படத் தொடங்குகிறது.

மனீஷி என்றால் மனத்தை வசப்படுத்துவதற்கான புத்தியைப் பெற்றவன். மனத்தை மனத்தால் வசப்படுத்த முடியாது, அதைவிட ஆற்றல்மிக்க ஒன்று வேண்டும். அதுவே புத்தி. உள்ளுணர்வு (intuition) என்றும் இது அழைக்கப்படுகிறது. இது எல்லோரிலும் செயல்படத் தொடங்கவில்லை. பிராத்தனை, காயத்ரீ மந்திர ஜபம் போன்றவற்றால் இது விழித்தெழுந்து செயல்படத் தொடங்குகிறது.

பரிபூ: என்றால் அனைத்து அறிவையும் உள்ளடக்கியவன். உலகில் எத்தனையோ வகை அறிவுகள் உள்ளன. 'கற்றது கைம்மண்ணளவு கல்லாதது உலகளவு' என்பார்கள். நாம் எவ்வளவுஅறிந்தாலும் இன்னும் அறிய வேண்டியது எவ்வளவோ இருக்கும்: அவற்றை அறிவதற்கான ஆவலும் இருந்துகொண்டே இருக்கும். ஆனால் ஆன்மாவை அறிந்தவன் தன்னில் திருப்தியுற்று நின்றுவிடுகிறான். அதனால் ஆன்ம அனுபூதி மற்ற அறிவுகளின் நிறைவாக, அனைத்தையும் உள்ளடக்கியதாக, மற்ற அறிவுகளைவிட உயர்ந்ததாகக்1 கூறப்படுகிறது.

ஆன்ம அனுபூதி பெற்றவன் தன்னிலும் உலகிலும் இறையுணர்வை உணர்ந்துவிட்டதால் அவன் அதைச்சார்ந்திருக்கிறானே தவிர பொருட்களையும் மனிதர்களையும் சார்ந்து வாழ்வதில்லை. அதனால் அவன் எதனையும் சாராதவன்2 எனப்படுகிறான்.

அனைத்திற்கும் மேலாக, அவன் பொருட்களின் உண்மை இயல்பை அறிந்திருக்கிறான். எவை இறை நெறிக்குத் துணை செய்யும், எவை இறை நெறிக்குத் தடையாக இருப்பவை என்பதை அவன் உணர்ந்திருக்கிறான்.3 இறைநெறியில் செல்பவனுக்கு இந்த மனத்தெளிவு மிகவும் அவசியமானது. வேண்டாதவற்றை விலக்கி அவனால் விரைந்து முன்னேற முடிகிறது.



ஆன்ம அனுபூதி பெற்ற இத்தகையவன் இறைவனை அடைகிறான்.  அந்த இறைவனைப்பற்றி இந்த மந்திரம் மூன்று விசயங்களைக் கூறுகிறது.


1.இறைவன் ஒளிமயமானவர். அவரது ஒளியாலேயே அனைத்தும் ஒளிபெறுகின்றன.

2. இவர் என்று இறைவனை அடையாளம் காட்ட முடியாது. உடம்பற்றவர், முழுமையானவர், தசைகள் இல்லாதவர் என்றெல்லாம் கூறுவது இதைத் தெரிவிக்கிறது.

3.இறைவன் தூயவர்.எந்தப்பாவமும் அவரை அணுக முடியாது.  உலகனைதையும் ஒளியால் விளங்கச் செய்வதன்மூலம் உலகின் கண்ணாக இருப்பவன் சூரியன். ஆனால் யாருடைய பார்வை கோளாறோ, பொருட்களின் குறைகளோ அவனைப்பாதிப்பதில்லை. அதுபோல் எல்லோரிலும் விளங்குகின்ற ஆன்மா சுகதுக்கங்களால் பாதிக்கப்படுவதில்லை என்கிறது கட உபநிஷதம்.

ஆன்ம அனுபூதி பெற்றன் இவ்வாறு ஓளிமயமான இறைவனை அடைகிறான்.

4

இணைத்து வாழ்க!


எங்கும் இறைவன் இருப்பதாகக் கண்டு கடமைகளை செய்பவன் பற்றின்றி வேலை செய்கின்றான். அதனால் ஒளிமயான இறைவனை அடைகிறான்.
எங்கும் இறைவன் இருப்பதை உணர்வது எப்படி?  அதற்கான இரண்டு முக்கிய சாதனை முறைகளைத் தொடரும்  6 மந்திரங்ள்
(9-14)தெரிவிக்கின்றன.


செயல்களும் தியானமும்: 9-11

செயல்களின்றி வாழ்கை இல்லை.  அன்றாடக் கடமைகள்,ஜபதவங்கள், சேவை போன்ற எவ்வளவோ செயல்களுடன் நமது வாழ்கை பிணைந்துள்ளது. உயர்நோக்கங்களுடன் இணைக்காமல் அவற்றை வெறுமனே செய்துகொண்டே போவதால் இறை நெறியில் முன்னேறமுடியாது.  அதேவேளையில், இறையுணர்வைப் பெறமுடியாது. அதேவேளையில், இறையுணர்வைப் பெற வேண்டும் என்பதற்காக, தகுதி வருமுன்னரே செயல்களை விட்டுவிட்டு தியானத்தில் ஈடுபடுவது ஒரு தவறான, போலி்த்தனமான முயர்சியாக இருக்கும்.  எனவே இரண்டும் வாழ்கையில் இணைந்து செல்ல வேண்டும்.  அந்த இணைப்புபற்றி இந்த மந்திரங்கள் கூறுகின்றன.

9. யார் உயர்நோக்கமின்றிச் செயல்களில் ஈடுபடுகிறார்களோ அவர்கள் காரிருளில் மூழ்கின்றனர். யார் தகுதி பெறுமுன்னர் தியானத்தில் ஈடுபடுகிறார்களோ அவர்கள் அதைவிடக் கொடிய இருளில் உழல்வதைபோல் துன்புறுகின்றனர்.

10 . 'தியானத்தால் கிடைப்பது ஒருபலன், செயல்களால் கிடைப்பது வேறு பலன் என்கிறார்கள்' எங்களுக்கு அதனை விளக்கிய  மகான்கள்  இவ்வாறு கூறினார்கள்.


11.  தியானம்,செயல்ககள் இரண்டையும் சேர்த்து யார் அறிகிறானோ அவன் செயல்களால் மரணத்தைக் கடந்து தியானத்ததால் இறவாநிலையை அடைகிறான்.

12. யார் அருவக்கடவுளை வழிபடுகிறார்களோ அவர்கள் காரிருளில் மூழ்குகின்றனர். யார் உருவக்கடவுளில் ஈடுபடுகிறார்களோ அவர்கள் அதைவிடக் கொடிய இருளில் உளர்வதைப்போல் துன்புறுகின்றனர்.

13. 'உருவ வழிபாட்டால் கிடைப்பது ஒரு பலன், அருவ வழிபாட்டால் கிடைப்பது வேறுபலன் என்கிறார்கள்' எங்களுக்கு அதனை விளக்கிய மகான்கள் இவ்வாறு கூறினார்கள்.

14. அருவ வழிபாடு, உருவ வழிபாடு இரண்டையும் சேர்த்து யார் அறிகிறானோ அவன் உருவ வழிபாட்டால் மரணத்தை கடந்நு அருவ வழிபாட்டால் இறவா நிலையை அடைகிறான்.

9-11 மந்திரங்கள் செயல்கள் மற்றும் தியானத்தின் இணைப்பை வலியுறுத்தியதுபோல்  இந்த  மந்திரங்கள்  (12-14) இரண்டுவித வழிபாடுககளளின்  இணைப்பைக்  கூறுகின்றன.



'ஸம்பூதி' என்றால்  தோற்றத்திற்கு  வந்த நிலை ;இறைவன் பல்வேறு  வடிவங்களில்  தோன்றுகின்ற உருவநிலை.  'அஸம்பூதி' என்றால் தோற்றத்திற்கு வராத  நிலை; எந்த  உருவமோ குணமோ அற்ற அறுதி நிலை.

1. மந்திரத்தில் 'ஸம்பூதி' என்று காணப்பட்டாலும் அந்ந இடத்தில் 'அஸம்பூதி' என்று வந்தால்தான் பொருள் சரியாக இருக்கும்.  எனவே அதில் 'அ' சேர்துக்கொள்ள வேண்டும்.(என்கிறார் ஸ்ரீசங்கரர்.

இந்த இரண்டு நிலைகளிலும் நாம் வழிபடலாம். ஒன்று,உருவ வழிபாடு.  உருவ வழிபாடு, உருவம் குணம்போன்ற பல்வேறு தன்மைகள் உடைய ஒரு நபராக அவரைக் காண்பது.  நமது மனத்தால் அறியத்தக்கவராக , வெளிப்பட்ட நிலையில் இறைவனை நாம் இங்கே வழிபடுகிறோம்.  சிவன், விஷ்ணு, தேவி என்று உருவ நிலையில் இறைவனை வழிபடுவது உருவ வழிபாடு.

இரண்டாவதாக, அருவ வழிபாடு. உருவம் குணம், போன்ற அனைத்துப் பண்புகளையும் கடந்த அறுதி நிலையில் இறைவனை அணுகுவது. உருவமோ குணமோ இல்லாத ஒன்றை மனித மனத்தால் நினைப்பது எல்லோராலையும் சாத்தியமல்ல. எனவே அருவ வழிபாடு மிகவும் உயர்ந்த நிலையில் இருப்பவர்களுக்கு உரியது என்பது விளங்கும்.   தகுதியின்றி அருவ வளிபாட்டில் ஈடுபடுவர்கள் தங்களை தாங்களே ஏமாற்றி கொள்கிறார்கள்.  அதனால்தான் அவர்கள் காரிருளில் மூழ்குவதாக சொல்லப்பட்டுள்ளது.தோற்றங்களே என்ற உணர்வு எபபோதும் இருக்கவேண்டும்.


உருவ வழிபாட்டில் ஈடுபடுபவர்கள் சிவன், விஷ்ணு என்று பல்வேறு வடிவங்களும் ஒரே உண்மைப் பொருளின் பல்வேறு தோற்றங்களே என்ற உண்மையை உணர்ந்திருக்கவேண்டும். மாறாக,' என் தெய்வம் உயர்ந்தவர், உன் தெய்வம் தாழ்தவர்' என்று கொள்கை வெறிபிடித்து சண்டையிடக்கூடாது. அறியாமை காரணமாக செய்கின்ற இத்தகைய வழிபாட்டினால் எந்நப்பலனும் கிடைப்பதில்லை. எனவே மன இயல்பிற்கு ஏற்ற ஓரு தெய்வத்தை வழிபடுவதில் ஆரம்பிக்கவேண்டும். எத்தனை மதங்களில் எத்தனை தெய்வங்களைக் கும்பிட்டாலும் அவர்கள் அத்தனைபேரும் ஒரே தெய்வத்தின் பல்வேறு தோற்றங்களே என்ற உணர்வு எபபோதும் இருக்கவேண்டும். அதுமட்டுமின்றி,உருவநிலையில் மட்டுமல்ல, கடவுளை அருவநிலையிலும் வழிபடலாம் என்பதை ஏற்றுக்கொள்ளவேண்டும். இத்தகைய மனநிலையில் தெய்வத்தை வழிபடும்போது நாம் ஆன்மீகத்தில் முன்னேறுகிறோம்; இறையனுபூதி பெறுகிறோம்; மரணத்துக்குக்காரணமான வினை ப்பயன்களிலிருந்து விடுபடுகிறோம். இந்த இறையனுபூதியின் விளைவு என்ன? அழகாக விளக்குகிறார் துளசிதாசர்: இறவைவனை நேருக்கு நேராகக்காண்பதன் ஈடிணையற்ற ஒரேபலன் என்ன தெரியுமா? மனிதன் தனது சொந்த ஆனந்தமயமான ஆன்மநிலையில் நிலையில் நிலைபெறுகிறான். இதன்பிறகே இறைவனை உருவமற்ற நிலையில் வழிபடுவதற்கான தகுதியை அவரது அருளால் பெறுகிறோம். இந்தத் தகுதியுடன் அந்த உயர்நிலை வழிபாட்டில் ஈடுபட்டு இறவாநிலையை அடைகிறோம்.

 
5

ஒளிக்கு அப்பால்.

ஒளிமயமான இறைவனை அடைவது பற்றி 8 - ஆம் மந்திரம் கூறியது. அந்த ஒளிக்கு அப்பால் என்ன உள்ளது என்பது பற்றி தொடரும் இரண்டு மந்திரங்கள் (15-16) கூறுகின்றன. இவை வேதங்களில் காணப்படுகின்ற அற்புதமான பிராத்தனைகளுக்கு உதாரணமாகும். இவை உயர்நிலை பிராத்தனைகள். ஒளிக்கு அப்பால் செல்வதற்கான இந்த முயர்சியே ஈச வித்யை. பிராத்திப்பவனின் தகுதி, பிராத்தனைக்கான விஷயம், பிராத்திக்கும் விதம் அனைத்தையும் தெளிவாக இந்த மந்திரங்களில் காண்கிறோம். 16 - ஆம் மந்திரம் இந்தப் பிராத்தனையின் பலனைக் கூறுகிறது. அதாவது, ஒளிக்கு அப்பால் தாம் கண்டதை விவரிக்கிறார் உபநிஷத முனிவர்.
ஒளிக்கு அப்பால் உள்ளது என்ன?
ஹிரண்மயேன பாத்ரேண ஸத்யஸ்ய அபிஹிதம் முகம்|
தத் த்வம் பூஷன்ன பாவ்ருணு ஸத்தியதர்மாய த்ருஷ்ட்டயே||
ஹிரண்மயேன- பொன்மயமான
பாத்ரேண - திரையால்
ஸத்யஸ்ய - உண்மையின்
அபிகஹிதம் - மறைக்கப்பட்டுள்ளது
பூஷன் - சூரிய தேவ
ஸத்யதர்மாய - சத்திய நிஷ்டைஉடைய எனக்கு
த்ருஷ்ட்டயே - காண்பதற்காக
தத் - அதை
த்வம் - நீ
அப்பாவ்ருணு - விலக்குவாய்!

15. உண்மையின் முகம் பொன்மயமான திரையால் மறைக்கப்பட்டுள்ளது. சூரியதேவா! சத்திய நிஷ்டை உடைய நான் அந்த உண்மையைக் காண்பதற்காக மறைப்பை விலக்குவாய்!.
'
இருளிலிருந்து என்னை ஓளிக்கு அழைத்துச் செல்வாயாக' என்பது போன்ற பிராத்தனைகளை நாம் அறிவோம். இது இறைவனை நாடிச் செல்பவரின் ஆரம்ப பிராத்தனை.  அவர்களின் அறியாமை இருளில் இருக்கிறார்கள். எனவே அந்த இருளிலிருந்து ஒளிக்கு அழைத்துச் செல்லுமாறு அவர்கள் பிராத்திக்கிறார்கள். பிராத்தனை, ஜபம், தியானம் போன்ற பல்வேறு சாதனைகளின் மூலம் அந்த ஒளியைக் காண்கிறார்கள். அந்த ஒளியின் மென்மையையும் வசீகரத்தையும் உணர்த்தவே பொன்மயமான திரை என்று இந்த மந்திரம் குறிப்பிடுகிறது. அந்த மென்மையிலும் வசீகரத்திலும் அவர்கள் தங்களையே இழந்து நிற்கிறார்கள்.

ஆனால் உண்மை என்பது இருள் - ஒளி,  துன்பம் - இன்பம் போன்ற அனைத்து இருமைகளையும் கடந்தது.  எனவே உண்மையை, உண்மைப்பொருளை, உள்ளது உள்ளபடி அறிய வேண்டுமானால் நாம் ஒளியை கடந்து சென்றாக வேண்டும். அந்த ஒளி எவ்வளவுதான் இன்பம் தருவதாக இருந்தாலும் நாம் அதைக் கடந்து சென்றேயாக வேண்டும். அதற்காக இறைவனைப் பிராத்திக்கின்ற மந்திரம் இது.

அறியாமை இருளில் உழல்கின்ற ஒருவர் ஜபம், தவம் வழிபாடு போன்ற சாதனைகளின் மூலம் ஒளிமயமான, தங்கமயமான இறைக் காட்சியைப் பெறமுடியும். ஆனால் அதைக் கடந்து செல்வதற்கு நமது முயற்சிகள் எதனாலும் இயலாது. அங்கே இறை அருள் ஒன்றே செயல்பட முடியும்.  எனவேதான் நாம் இறைவனை நோக்கி பிராத்திக்கிறோம்.

பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் சாதனைக்கால நிகழ்ச்சி ஒன்று இதனை மிகத் தெளிவாக விளக்குகிறது. தோதாபுரி என்பவரின் துணையுடன் வேதாந்த சாதனைகளைச் செய்தார் ஸ்ரீராமகிருஷ்ணர்.  அவருக்குப் பல்வேறு உபதேசங்களை அளித்த தோதாபுரி, இறுதியாக, இருமைகள் அனைத்தையும் கடந்து நிலையில் உண்மைப்பொருள் அனுபவத்தைப் பெறுமாறு கூறினார். ஸ்ரீராமகிருஷ்ணர் எவ்வளவு முயன்றும் அது முடியவில்லை. ஏனெனில் மனம் அகமுகமானதும் தேவியின் ஒளிமயமான காட்சி அவர்முன் எழுந்தது. அந்த பேரொளியை கடந்து அவரால் செல்ல முடியவில்லை. கடைசியில் நம்பிக்கையையே இழந்த நிலையில் அவர் தமது இயலாமையைத் தோதாபுரியிடம் தெரிவித்தார். அவ்வளவு வசீகரமான காட்சி அது. இறுதியில் தோதாபுரியின் அருளால் அவர் அந்த ஒளியைக் கடந்து சென்று, உண்மைப் பொருளுடன் ஐக்கியமாகின்ற நிலையை அடைந்தார்.உயர்நிலை பிராத்தனையைச் செய்வதற்கான தகுதியையும் இந்த மந்திரத்தில் நாம் காண்கிறோம்.  சத்திய நிஷ்டை உடைய நான் என்று தனது தகுதியை இங்கே அந்த ரிஷி குறிப்பிடுகிறார். உண்மையில், உண்மைப்பொருளாகிய இறைவனில் நிலை நிற்கின்ற, இறைவனைச் சரணடைந்த வாழ்க்கை இங்கே குறிப்பிடப்படுகிறது. உலகப்பொருட்கள் எதையும் கருதாமல் , கடவுள் ஒருவரையே நம்பி வாழ்கின்ற, அவரை ஒளிமயமாக ஏற்கனவே கண்ட ஓருவர் செய்கின்ற பிராத்தனை இது,

ஒளிக்கு அப்பால் இருப்பது நானே

எங்கும் இறைவன் இருக்கிறார் என்ற கருத்துடன் கடைமைகளைச் சிறப்பாகச் செய்வது சிறந்த வாழ்க்கைக்கான வழி (1,2), வாழ்கை எதுவாக இருந்தாலும் அக வாழ்க்கையை நாடுவதும் ஆன்மாவைத் தேடுவதும் மிக முக்கியமானவை(3), ஒளியின் காட்சி (8), உயர்நிலை சாதனை (9-14), ஒளிக்கு அப்பால் செல்ல பிரார்த்தனை(15) என்று படிப்படியாகக் கூறிவந்த உபநிஷதம் இங்கே அந்தப் பிராத்தனையின் பலனைக் கூறுகிறது.


பூஷன் ஏகர்ஷே யம ஸீர்ய ப்ராஜாபத்ய வ்யூஹ ரச்மீன் ஸமூக

தேஜோ யத் தே ரூபம் கல்யாணதமம் தத் தே பச்யாமி


ய அஸௌ புருஷ ஸ அகம் அஸ்மி 16


பூஷன் - பேணிக் காப்பவன்
ஏகர்ஷே - தனியாக பயணிப்பனே
 யம - ஆள்பவனே
ஸூர்ய -  சூாிய தேவா
ப்ராஜாபத்ய - பிரஜாபதியின் மகனே
 வ்யூஹ - கிரணங்களை
 ரச்மீன் - விலக்கு
ஸமூக  - சுரிக்கொள்

தேஜ - ஓளியை
 யத் - எது
 தே - உனது
ரூபம் - வடிவம்
 கல்யாணதமம் - மிகவும் மகிமை வாய்ந்த
 தத் - அதை
 பச்யாமி - பார்க்கிறேன்


ய - யார்
அஸௌ - அந்த
 புருஷ - நபர்
ஸ - அவர்
அஹம் அஸ்மி - நானே

16. அனைத்து உயிர்களையும் பேணிக்காப்பனே தனியாகப் பயணிப்பவனே, அனைத்தையும் ஆள்பனே,சூரியதேவா,பிரஜாபதியின் மகனே! உனது பேரொளியைச் சுருக்கிக்கொள்.  மகிமை வாய்ந்த உனது வடிவத்தை உனதருளால் நான் காணவேண்டும். அந்தச் சூரியனில் இருப்பது நானே.

இறையருள் மட்டுமே வேண்டியது,அதற்காகவே ஓருவன் பிராத்திக்க வேண்டும். எல்லா உயிா்களும் முன்வினையின் படியே செயல்படுகின்றன, துன்புறுகின்றன. ஆனால் இறைவன் நினைத்தால், வினைப்பயனை அனுபவிக்கவேவண்டிய காலத்தைக்க குறைத்து ஓருவனுக்கு விரைவில் அனுபூதியை அளிக்க முடியும்.

ஔிக்கு அப்பால் இருப்பது என்ன?

ஓளிக்கு அப்பால் தம்மையே கண்டதாக  உபநிஷத முனிவர் கூறுகிறார். எவ்வளவோ முயற்சிகளுக்குப் பிறகு,  ஆன்மீக சாதனைகளுக்கு பிறகு, இறைக் காட்சிக்குப் பிறகு அறுதி நிலை அனுபூதீயாக இந்த முனிவர் தம்மையே காண்கிறார். இதன் பொருள் என்ன ?

ஔிக்கு அப்பால் தம்மையே கண்டதாக உபநிஷத முனிவர் கூறுகிறார். எவ்வளவோ முயற்சிகளுக்குப் பிறகு, ஆன்மீக சாதனைகளுக்குப் பிறகு, இறைக்காட்சிக்குப் பிறகு, அறுதி நிலை.  அறுதி நிலை அனுபூதியாக இந்த முனிவா் தம்மையே காண்கிறார். இதன் பொருள்  என்னஓளிக்கு அப்பால் என்ன உள்ளது என்பதைக் காண்பதற்கு உபநிஷத முனிவரும் இறையருளை வேண்டிப் பிராத்திப்பதை இங்கே காண்கின்றோம் .

'சூரியனில் இருப்பது நானே'  என்று, உபநிஷதம் கூறுவதில் "நான் "என்பதை நாம் சாதரணமாகப் புரிந்து கொள்கின்ற 'நான்' என்ற பொருளில் புரிந்து கொள்ளக் கூடாது.  பொதுவாக உடல் மனச்சோ்கையே 'நான்' என்று கூறுகிறோம்.  இந்த 'நான்' ஔிக்கு அப்பால் இருக்க முடியாது. எனவே முனிவர்  கூறுகின்ற 'நான்' உயா்நிலை 'நான்' ஆகும். சாந்தோக்கிய உபநிஷதக் கதை ஒன்றின் மூலம் இதனை விவேகானந்தர் விளக்குகிறார்.

'ஒரு தேவனும் ஓர் அசுரனும் ஆன்மாவைப்பற்றி அறிவதற்காக முனிவர் ஒருவரிடம் சென்றனர். பல வருடங்கள் கல்வி கற்றனர்.
இறுதியில் ஒருநாள் அந்த முனிவர் அவா்களிடம்' " நீங்கள் தேடும் பொருள் நீங்களே " என்றுகூறினார். இருவரும் தங்கள் உடம்பே ஆன்மா என்று நினைத்துக்கொண்டனர்.  மிகுந்த திருப்தியுடன் திரும்பிச் சென்று தங்கள் சுற்றத்தாாிடம் "கற்க வேண்டிய அனைத்தையும் நாங்கள் கற்றுவிட்ட்டோம். இனி உண்போம் குடித்துக் களிப்போம். நாம் தான் ஆன்மா நமக்குமேல் எதுவும் கிடையாது" என்றனர். அசுரனின் இயல்பே அறிவீனமும் மூடத்தனமும்தானே. அவன் மேற்கொண்டு சிந்திக்கவில்லை் தானே கடவுள், ஆன்மா என்பது உடலே என்ற கருத்தில் பூரண திருப்தி அடைந்துவிட்டான்.

தேவன் சற்று தூய இயல்பு படைத்தவனாக இருந்தான். அவனும் முதலில், "நானே" , அதாவது இந்த உடம்பே பிரம்மம் என்று தவறாக நினைத்தான்.  ஆனால் சில நாட்களிலேயே, முனிவர் கூறியதன் பொருள் அதுவாக இருக்காது , அதற்குமேல் ஏதோ இருக்கிறது என்பதைப் புாிந்துகொண்டான். எனவே அவன் முனிவாிடம் மீண்டும் சென்று, "சுவாமி, இந்த உடம்பைத்தான் ஆன்மா என்று கூறினீா்களா ? ஆனால் எல்லா உடம்புகளும் அழிந்து போவதை நான் காண்கிறேனே  ஆன்மா மரணமற்றது அல்வா? " என்று கேட்டான். அதற்கு அந்த முனிவர்  "கண்டுபிடி, நீயே அது " என்று கூறினார்.

தேவன் சற்று தூய இயல்பு படைத்தவனாக இருந்தான். அவனும் முதலில், நானே, அதாவது இந்த உடம்பே பிரம்மம் என்று தவறாக நினைத்தான்.  ஆனால் சில நாட்களிலேயே, முனிவர் கூறியதன் பொருள் அதுவாக இருக்காது , அதற்குமேல் ஏதோ இருக்கிறது என்பதைப் புாிந்துகொண்டாண். எனவே அவன் முனிவாிடம் மீண்டும் சென்று, சுவாமி, இந்த உடம்பைத்தான் ஆன்மா என்று கூறினீா்களா ஆனால் எல்லா உடம்புகளும் அழிந்து போவதை நான் காண்கிறேனே  ஆன்மா மரணமற்றது அல்வா என்று கேட்டான். அதற்கு அந்த முனிவர்  கண்டுபிடி, நீயே அது  என்று கூறினார்.


அந்தத் தேவனும் உடம்பை இயக்குகின்ற பிராண சக்திகளே ஆன்மா என்பதுதான் முனிவர் கூறியதன் பொருளாக இருக்கும் என்று எண்ணினான். ஆனால்  சாப்பிட்டால் பிராண சக்திகள் வலிமையுடன் இருப்பதையும்,  சாப்பிடாவிட்டால் அவை பலவீனம்  அடைவதையும் சிலநாட்களுள் அறிந்து கொண்டான். எனவே முனிவரிடம் சென்று,  "சுவாமி ,பிராண சக்திகளையா ஆன்மாவென்று கூறினீா்கள் ?"  என்றுகேட்டான்.  அவா் மறுபடியும் "நீயே கண்டுபிடி. நீயேஅது" என்றார்.
வீடு திரும்பிய தேவன் யோசிக்கலானான் ஆன்மா என்பது ஒருவேளை மனமாக இருக்கலாம் என்று நினைத்தான்.  ஆனால் எண்ணங்கள் இப்போது நல்லதாக,மறுகணமே கெட்டதாக எத்தனையோ விதமாக இருப்தை வெகுவிரைவில் அறிந்துகொண்டான். மாறுகின்ற மனம் ஆன்மாவாக முடியாது என்று கருதிய அவன் முனிவாிடம் சென்று,  சுவாமி, மனம் ஆன்மாவாக இருக்க முடியாது என்று நினைகிறேன். நீங்கள் அதையா சொன்னீா்கள்  என்று கேட்டான் அவரோ மீண்டும் மறுபடியும் நீயே கண்டுபிடி என்று கூறிவிட்டார்.

தேவன் வீடு சென்றான்.  இறுதியில் தானே ஆன்மா என்று தொிந்துகொண்டான்.  ஆன்மா எண்ணங்கள் அனைத்திற்கும் அப்பால் உள்ளது.   ஓன்றேயானது, பிறப்பு இறப்பு இல்லாது. அதனை ஆயுதங்கள் வெட்ட முடியாதது தீ எாிக்க முடியாதது, நீா் கரைக்க முடியாதது, காற்று உலத்த முடியாதது அது ஆதி அந்தம் இல்லாதது, அசைக்க முடியாதது, தொடுதற்காியது, எல்லாம் வல்லது. அது உடலும் அல்ல, மனமும் அல்ல இவை அனைத்திற்கும் அப்பால் உள்ளது, இவ்வாறு அறிந்த தேவன் திருப்தி அடைந்த தேவன். உடலை நேசித்தால், பாவம், அந்த அசுரன் உண்மையை அறியவில்லை.

ஓளிக்கு அப்பால் என்ன உள்ளது என்பதை அறிய முற்பட் முனிவா் அந்தப் பொருள் நானே என்ற அனுபூதி பெறுகிறாா்.
சிந்தனை செய்க!

அனுபூதி பெற்று, வாழ்கையின் லட்சியத்தை அடைந்துவிட்ட முனிவா்களை வசந்தகாலத் தென்றலுக்கு ஓப்பிடுகிறாா் ஸ்ரீசங்கரா்  அமைதியும் மகிமையும் அடைந்துவிட்ட மகான்கள் இருக்கிறாா்கள். தவழ்ந்துவரும் வசந்தம்போல் அவா்கள் மனிதகுலத்திற்கு நன்மை செய்கிறாா்கள். இந்த சம்சாரப் பெருங்கடலை அவா்கள் கடந்துவிட்டாா்கள். பிறரும் அவ்வாறே கடக்க வேண்டுமென்று துளிகூட தன்னலமின்றி பாடுபடுகிறாா்கள்.



சூாியனின் சுடுகதிா்களால்  பொசுக்கப்பட்ட பூமியை நிலவின் கிரணங்கள் இயல்பாக குளிா்விப்பதுபோல், பிறரது துயரைக் களைவதற்காக பாடுபடுவது இயல்பாகிவிடுகிறது என்கிறாா் அவா்.

1. சாந்தா மஹாந்தோ நிவஸந்தி ஸந்தோ
வஸந்தவத் லோகஹிதம் சரந்த
தீா்ணா ஸ்வயம் பீமபவாா்ணவம்
ஜனான் அஹேதுனான்யானபி தாரயந்த

1.அது போலவே, இந்த உபநிஷத முனிவரும் அறுதி நிலை அனுபூதியை அடைந்தபிறகு கருணைக் கண்களுடன் இந்த உலகைப்பாா்கிறாா். உலகம் என்னும் மாய வலையில் சிக்குண்டு மனிதா்கள் படுகின்ற துன்பம் அவரது கண்களில் தொிகிறது. எனவே அவா்களை எல்லாம் அழைத்து வாழ்கையை ஒரு முறை சிந்திக்குமாறு கூறுகிறாா் அவா். 17. அறியாமைச் சேற்றிலிருந்து விடுபட்டு, அறிவொளி பெற்று அந்த ஒளிக்கும் அப்பாலுள்ள உண்மையை உணா்வதற்கு இறைவைனைப் பிராத்திப்பதைத் தவிர வேறு வழியில்லை, எனவே பிராத்தனை செய்யுங்கள் என்று அழைக்கிறாா் அவா்.

வாயு அனிலம்
அத - இனி
இதம் - இந்த
சரீரம் - உடம்பு
பஸ்ம அந்தம் - சாம்பலாகும்
வாயு - பிராணன்
அம்ருதம் - அழிவற்ற
அனிலம் - பிராணனை
க்ரதோ - மனமே
க்ருதம் - செய்தவற்றை
ஸ்மர - நினை

வாயு ரனிலமம் ருதமேததம் பஸ் மாந்தக்ம் சரீரம்
ஓம் ஓம் ஓம் க்ரதோ  ஸ்மர க்ருதக்ம் ஸ்மர க்ரதோ ஸ்மர க்ருதம் ஸ்மர

17.இந்த உடம்பு சாம்பலாகிவிடும். உடம்பிலிருந்து வெளியேறுகின்ற பிராணனுடன் கலந்துவிடும். ஓம். மனமே! செய்தவற்றை நினைத்துப்பாா். மனமே செய்தவற்றை நினைத்துப்பாா்.

ஒரு லட்சியத்தை எடுத்துகொண்டு முன்னேறும் போது. சிலவேளைகளில் நாம் லட்சியத்தை மறந்துவிடுபடுதுண்டு. அதுபோலவே சிலவேளைகளில் லட்சிய நாட்டம் நீா்த்துப்போவதும் உண்டு. எனவே தினமும் அதனை நினை நினைவூட்டி கொள்வது நல்லது. இது சுய தூண்டுதல்  எனப்படுகிறது. இத்தகைய மந்திரங்கள் நமது வேதங்களிலும் உபநிஷதங்களிலும் ஏராளம் உள்ளன.  அத்தகையதொரு மந்திரத்தை முனிவா் இங்கே நமக்குத் தருகிறாா். உபநிஷதங்களைப் படிக்கும் போது மட்டுமல்லாமல் இவற்றைப் பொருளுணா்ந்து அவ்வப்போது ஓதுவது நாம் நமது லட்சியத்தில் உறுதியாக இருக்க உதவும்.

இறைவனை நாடிச் செல்பவா்கள் ஆனாலும் சாி ,சாதாரண வாழ்கையை நடத்திச் செல்பவாகள் ஆனாலும் சாி வாழ்வின் நிலையாமையை அவ்வப்போது மனத்திற்கு எடுத்துக் கூறுவது நல்லது. வாழ்கையை எண்ணி பெரிதாக மனம் குமையவோ, அலட்டிக்கொள்ளவோ வேண்டியதில்லை என்ற உண்மை அதனால் நம் மனத்தில் உறுதிப்படுகிறது.

ஆண்டியும் சரி அரசனும் சாி அனைவரின் உடம்பும் இறுதியில் சாம்பலாகி மண்ணுடன் மண்ணாகக்  கலக்கப்போகிறது.  இதுவரை உடம்பையும் மனத்தையும் இயக்கிவந்த பிராணன்  உடம்பிலிருந்து வெளியேறப்போகிறது, புலன்கள் ஒடுங்கப்போகப் போகின்றன. இதுவரை நாம் வாழ்த வாழ்கையை நம்மை விட்டு அகலப்போகிறது இந்த உண்மையை ஒவ்வொரு நாளும் சிறிது நேரம் சிந்திப்பது வாழ்கைக்கு ஒரு புதிய கண்ணோட்டத்தைத் தரும்.

இதுவரை நல்லது செய்யாவிட்டாலும் இனி செய்யவேண்டும், இதுவரை இறைவனை நாடாவிட்டாலும் இனிநாடேவண்டும் என்று உயா் வாழ்கைக்கு ஒரு தூண்டுதலை இத்தகைய சிந்தனை தரும் எனவேதான் இந்தப் பிராத்தனையை ஒரு சுய தூண்டுதலாக நாம் கொள்கிறோம்.

வழி நடத்துவாய்

நெருப்பைக் கண்டுபிடித்தது மனித வரலாற்றில் ஒரு முக்கியமான திருப்புமுனையாகக் கருதப்படுகிது. நெருப்பைக் கண்டு வியந்த மனிதன் மெல்ல மெல்ல அதை வழிபட ஆரம்பித்தான்.  கடைசியாக அதை எங்கும் நிறைந்த, எல்லாம் வல்ல இறைவனின் சின்னமாகவே வழிபடுவதை வேதங்களில் காணகிறோம். அவ்வாறு அக்கினி தேவனை இறைவனாகக் கொண்டு பிராத்திக்கின்ற மந்திரம் இது.

ஒளிக்கு அப்பாலுள்ள உண்மையைக்கண்ட முனிவா் அந்த உண்மையை நாமும் அடையவேண்டும் என்ற கருணைப் பெருநோக்கில், இவ்வாறு பிராத்தனை செய்யுமாறு நம்மிடம் கூறுகிறாா்.


அக்னே நய ஸுபதா ராயே அஸ்மான்

விச்வானி தேவ வயுனானி வித்வான்

யுயோத் யஸ்மஜ் ஐுஹுராணமேனோ

 பூயிஷ்ட்டாம் தே நம உக்திம் விதேம

அக்னே - அக்கினி தேவனே

தேவ - ஒளிப்பொருளே

அஸ்மான் - எங்கள்
விச்வானி - எல்லா
வயுனானி - செயல்களையும்
வித்வான் - அறிவாய்
ராயே - வினைபயன்களை அனுபவிப்பதற்காக
ஸுபதா - அனுபவப்பாதையில்
நய - அழைத்துச் செல்
அஸ்மத் -எங்கள்
ஜுஹுராணம் - கொடிய
ஏன - தவறுகளை
யுயோதி -விலக்கு
தே - உனக்கு
பூயீஷ்ட்டாம் - பல
நம உக்திம் - வணக்கங்களை
விதேம - தொிவிக்கிறோம்

18. அக்கினி தேவனே, ஒளிப்பொருளே!
எங்கள் எல்லாசெயல்களையும் அறிபவன் நீ. வினைப்பயனை அனுபவிப்பதற்காக எங்களை அனுபவப் பாதையில் அழைத்துச் செல். எங்களைக் கொடிய தவறுகளிலிருந்து விலக்கு. உனக்கு மீண்டும் மீண்டும் எங்கள் வணக்கங்கள்.

தம்மை அனுபவப் பாதையில் அழைத்துச் செல்லுமாறு பிராத்திக்கிறாா் முனிவா், அனுபவப் பாதை என்பது என்ன

செயல்கள் பலன்களைத் தருகின்றன. நற்செயல்கள் நல்ல பலனையும், தீய செயல்கள் தீய பலனையும் தருகின்றன.  பலன்கள் வந்தால் அதை அனுபவித்தேயாகவேண்டும்.  இதுவரை செய்துள்ள செயல்களை
அறிகின்ற இறைவனே இனி புதிய செயல்கள் செய்து பலன்கள் வராமல், செய்வதிற்கான பலனை அனுபவிப்பதாக மட்டும் எங்கள் வாழ்கை அமையட்டும் என்பது இந்தச்சொற்றொடாின் பொருள்.

இவ்வாறு இறையருளை நாடி ஒரு பிராத்தனை பூா்வமான வாழ்கையை நாம் நடத்த வேண்டும் என்ற குறிப்புடன் ஈசாவாஸ்ய உபநிஷதம் நிறைவு பெறுகிறது.

ஓம் பூா்ணமத பூா்ணமிதம் பூா்ணாத் பூா்ணமுதச்யதே
பூா்ணஸ்ய பூா்ணமாதாய பூா்ணமேவாவசிஷ்யதே
ஓம் சாந்தி சாந்தி சாந்தி


No comments:

Post a Comment