எந்த ஓன்றையும் செய்யும்போது அதற்குரிய மனநிலை இருக்கப்பெறுவது இன்றியமையாது. எந்தகாரியத்தைச்செய்கிறோமோ அதற்குரிய மனநிலையை வரவழைத்துக் கொண்டு, அதன்பிறகு அந்தச்செயலில் ஈடுபடுவது சிறப்பான பலனை அளிக்கும், நமது கோயில்களில் பல பிராகாரங்கள் அமைந்திருப்பதன் காரணம் இதுவே. ஒவ்வொரு பிரகாரத்தில் சுற்றி வரும்போதும் மற்ற எண்ணங்களை எல்லாம் விட்டு, கடைசியாக கருவறையில் சென்று தெய்வத்தைத் தரிசிக்கும்போது, நம்மால் முழுமனதுடன் தெய்வசிந்தனையில் ஈடுபடமுடிகிறது. அதுபோல் அனுபூதிக்கருமூலமான உபநிஷதங்களை படிக்க புகுமுன் நமது சிந்தனையை அவற்றுடன் இயைபுபடுத்த சாந்தி மந்திரங்கள் உதவுகின்றன.
உபநிஷதங்களின்உண்மைப்பொருளைவெறும்புலமையால்உணரமுடியாது. பணிவுடனும் வழிபாட்டு உணர்வுடனும் அணுகும்போது மட்டுமே அதனைப் புரிந்துகொள்ளமுடியும்.அத்தகையமனப்பான்மையைமனதில் கொள்வதற்காக இந்த மந்திரங்கள் முதலில் ஓதப்படுகின்றன.
1 தேவர்களே! காதுகளால் நல்ல விஷயங்களைக் கேட்கவேண்டும். பூஜிக்கத் தகுந்தவர்களே, கண்களால் நாங்கள் நல்ல விஷயங்களைக் காணவேண்டும். உறுதியான அங்கங்களுடன் கூடிய உடலுடன் ஆயுள் முழுவதும் உங்களைத் துதிக்க வேண்டும். தேவர்களுக்கு நன்மை செய்த வண்ணம் வாழவேண்டும்! பழம்புகழ் பெற்ற இந்திரன் நமக்கு நன்மை செய்யட்டும். எல்லாம் அறிகின்ற சூரியன் நமக்கு மங்கலம் செய்யட்டும். தீமையை அழிக்கின்ற கருடன் நமக்கு நன்மை செய்யட்டும். பிரகஸ்பதி நமக்கு நன்மை தரட்டும்!
உலகியலில் மூழ்கடிப்பதற்கான விஷயங்கள் ஆகிய இரண்டுமே மனிதனின்முன்னால் வருகின்றன; அறிவாளி இரண்டாம் வகையைத் தேர்தெடுக்கிறான் என்று கட உபநிஷதம் (1.2.2) கூறுகிறது. அவ்வாறு நல்லவற்றையும் உயர்தவற்றையும் தேர்ந்தெடுப்பதற்கு நமது உடம்பிற்க்கும் புலன்களுக்கும் பயிற்சி அளிப்பதற்கும், அந்த முயற்சியில் தேவர்களின் துணையை நாடுவதற்கான மந்திரம் இது.
சூரியன் உதிப்பது, கடலில் அலைகள் எழுவது,நட்சத்திரமண்டலங்கள் வானவெளியில் வலம்வருவது என்று இயற்கையின் ஒவ்வொரு செயல்பாட்டிலும் சக்தியின் வெளிப்பாட்டைக் காண்கிறோம். இந்தச் சக்திகள் ஒவ்வொன்றையும் ஒரு தேவனாக உருவகப்படுத்தினர் நமதுமுன்னோர். இந்திரன்,வருணன், வாயு, என்றெல்லாம் நமது வேதங்கள் கூறுகின்ற தேவர்கள் இத்தகைய இயற்கை ஆற்றலின் உருவங்களே.
மனித வாழ்வு வளம்பெற வேண்டுமானால் இந்த இயற்கை ஆற்றல்களை வழம்பெறச் செய்ய வேண்டும். அதாவது மனிதன் இயற்கையுடன் இயைந்து வாழ வேண்டும். உலகில் எத்தனை கோடி உயிரினங்கள் இருந்தாலும் அத்தனைக்கும் உணவும் வாழ வசதியும் வழங்குவதற்கு இயற்கை அன்னை தயாராக இருக்கிறாள். ஆனால் அதற்கு அவளுடன் இயைந்து வாழ்வது இன்றியமையாதது. இயற்கையை அழித்தால் நாமும் அழிவோம். மாறாக நாமும் இயற்கையும் பரஸ்பரம் பேணி வாழ்ந்தால் இயற்கையும் வாழும், நாமும் வாழ்வோம்.
இந்தப் பரந்த கருத்துடன் உபநிஷதம் ஆரம்பிக்கிறது.
நாம், நாம் வாழ்கின்ற உலகம், இரண்டிற்கும் அடிப்படையாக விளங்குகின்ற இறைவன் இந்த மூன்றும் அடிப்படை்உண்மைகள். இந்த மூன்றும் உண்மையில் என்ன,இவற்றிற்கு இடையே நிலவுகின்ற தொடர்பு என்ன? உலகில் சிந்தனையாளர்களை அன்றும் இன்றும் ஒருபோலவே தூண்டி வருகின்ற கேள்விகள் இவை.
பாரதம் மற்றும் பிறநாடுகளின் கலாச்சாரம், விஞ்ஞானம்,சமயம்,ஆன்மீகம் என்று எந்தத்துறையையும் ஆழ்ந்து படிப்பவர்கள் ஓர் அற்புதமான உண்மையைக் காண காணமுடியும். எதிலும் அறுதி ஒருமையைக் காண விழைந்தது இந்தியமனம். பொருட்களின் ஓர் அறுதி ஒருமையைக் ()காண்பதே உபநிஷதங்களின் நோக்கம். எதை அறிந்தால் நாம் எல்லாவற்றையும் அறியமுடியும்? 1. இந்த ஆராச்சியையே உபநிஷதங்கள் தங்கள் ஒரே கருத்தாகக் கொண்டிருக்கின்றன 2. என்கிறார் சுவாமி விவேகானந்தர்.
இதனை விளக்குகிறார் அவர்; ஒருமைநிலையைக் கண்டுபிடிப்பதுதான் விஞ்ஞானம். முழுமையான ஒருமை நிலை கிட்டியதும் விஞ்ஞானம் மேலே செல்லாமல் நின்றுவிடும். ஏனெனில் அது தன்குறிக்கோளை எட்டிவிட்டது. அதுபோலவே,எந்தமூலப்பொருளிலிருந்துஎல்லாபொருட்களும் படைக்கபடுகின்றனவோ,அதைக்கண்டுபிடித்த பின்னர் வேதியல் முன்னேற முடியாது. எந்த மூலசக்தியிலிருந்து எல்லா சக்திகளும் வெளிப்படுகின்றனவோ, அதைக் கண்டறிந்ததும் இயற்பியல் நின்றுவிடும். மரணம் நிறைந்த இந்தப் பிரபஞ்சத்தில், மரணத்தை கடந்து நிற்கும் ஒரே உயிரைகண்டுபிடித்ததும், மாறிக்கொணெடேயிருக்கும் உலகில் மாறாத ஒரே அடிப்படையான அவனை கண்டு பிடித்ததும், எந்த ஓர் ஆன்மாவிலிருந்து பிற ஆன்மாக்கள் வெளிப்படுவது போன்று மாயையால் தோன்றுகிறதோ அந்த ஆன்மாவைக் கண்டுபிடித்ததும், மத விஞ்ஞானம் பூரணமாகிவிடும்.
இவ்வாறு ஆன்மீக ஒருமையை அடைந்துவிட்ட நிலையை உபநிஷதங்கள் விவரிக்கக் காண்கிறோம். அதாவது. இயற்க்கை அல்லது உலகம், நாம் அல்லது மனிதன் இறைவன் என்றெல்லாம் தனித்தனியாக எதுவும் இல்லை இருப்பவை அனைத்தும் ஒன்றே, இருப்பது ஒன்றே. இந்த ஒன்றே பல்வேறு காட்சிகள் மூலம் உலகமாகவோ, சொற்கம், நரகம், தேவதைகள், பேய்கள், மனிதர்கள், அரக்கர்கள், பிரபஞ்சம் என்று வெவ்வேறாகத் தோன்றுகின்றது.
ஆனால் எல்லாம் ஒன்றே என்று வாயால் சொல்வதால் அந்த உண்மை உணரப்படுவதில்லை. அற்புதமான வேறுபாடுகள் நிறைந்த இந்தப் பிரபஞ்சத்தில் பெயர், உருவம், ஜடம், உணர்வு என்று ஒன்றுக்கொன்று முற்றிலும் வேறுபட்ட சிந்தனைகளும் உருவங்களும் நிறைந்த இந்தப் பிரபஞ்சத்தில் ஓர் ஒருமையைக் காண்பது எவ்வளவு கடினமான வேலை! என்று வியக்கிறார் சுவாமி விவேகானந்தர்.
மரமும் மலையும் நதியும் கடலும் பறவையும் மிருகமும் மனிதனும் கடவுளும் ஒன்றாக முடியுமா?
எல்லாம் ஒன்று என்பது இந்தப்பொருளில் சொல்லப்படவில்லை.
அதாவது படைப்பு அல்லது உலகிற்கு ஆரம்பமோ முடிவோ இல்லை. படைப்பு, தொடக்கமும் முடிவும் இல்லாதது என்று வேதங்கள் போதிக்கின்றன. பிரபஞ்ச சக்தியின் மொத்த அளவு என்றும் ஒரே அளவில் தான் இருக்கிறதென்று விஞ்ஞானம், நிரூபித்திருப்பதாக சொல்லப்படுகிறது. ஆகையால் படைப்பு இல்லாதிருந்த காலம் ஒரு போதும் இருந்ததில்லை. ஆனால் படைப்பு அதாவது உலகம் சில நேரங்களில் ஒடுக்க நிலையிலும் சில நேரங்களில் செயல் நிலையிலும் இருக்கிறது.
எனவே உலகம் என்பது ஒரு நாள் தோன்றிய பிறகு முடிந்துவிடுவது அல்ல. ஒழுக்கத்திலிருந்து தோற்றம், தோற்றத்திலிருந்து ஒடுக்கம் என்று சுழர்ச்சி நிலையில் உள்ளது. எப்படி. அமைதியில் இருந்து நாதம் எழுந்து வலுப்பெற்று மீண்டும் அமைதியில் கரைகிறது. அதுபோல் படைப்பும் ஒடுக்கத்திலிருந்து விரிந்து, செயல் நிலைக்கு வந்து,௴ண்டும் ஒடுங்குகிறது.
மனிதன்
மனிதன் என்பவன் யார் என்ற கேள்விக்கு நமது உபநிஷதங்களில் இருந்து இரண்டு முக்கியமான விடைகள் கிடைக்கின்றன. அவற்றுள் ஒன்றை இந்த உபநிஷதத்தில் காண்கிறோம். நான்கு பரிமாணங்களை உடையவர்கள் நாம் என்கிறது இந்த உபநிஷதம்.
விழிப்பு நிலை,கனவுநிலை,தூக்க நிலை, என்ற மூன்று நிலைகளிலும், நாம் மாறி மாறி சஞ்சரிக்துக் கொண்டிருக்கிறோம். வீட்டிலும் அலுவலகத்திலும், சமுதாயத்திலும், ஒருவ்வொருவரும் வெவ்வேறு அனுபவங்களை பெறுகிறார்கள். வீட்டில் அவர்கள் மனைவி, மகள் சகோதரி, கணவன் மகன் சகோதரன் என்றெல்லாம் அறியப்படுகிறார்கள். அலுவலகத்தில் அவர்கள் ஒரு அதிகாரிகள். இத்தனை பரிமாணங்கள் அவர்களுக்கு இருந்தாலும் அவர்கள் யாரென்றால் இத்தனை பரிமாணங்களையும் உள்ளடக்கி ஒரு மனிதர்.
நாம் விழிப்பு கனவு தூக்கம் என்ற மூன்று நிலைகளிலும், மூன்று பரிமாணங்களில் உலகத்துடன் தொடர்பு கொள்கிறோம். விழிப்பு நிலையில் இந்த உலகத்தை அனுபவிப்தது நமது முதற் பரிமாணமாகிய வைசுவானரன்,கனவு நிலையில் அனுபவிப்பது தைஜஸன், தூக்க நிலையில் பிராஜ்ஞன். இந்த மூன்றையும் உள்ளடக்கிய மொத்த பரிமாணமே ஆன்மா இந்த நான்காம் பரிமாணம் என்று கூறப்படுகிற இந்த ஆன்மா. இது நான்காம் பரிமாணம் என்று கூறப்படுகிறது. இந்த ஆன்மாவே மனிதர், அதாவது நாம்.
இதுவும் ஓங்கார மந்திரத்தின் வாயிலாக விளக்கப்படுகிறது. (8 - 12).
இறைவன் என்பதற்கு மிக உயர்ந்த நிலை விளக்கத்தை இந்த உபநிஷதம் தருகிறது.
இறைவன்
இறைவன் என்பதற்கு மிக உயர்ந்த நிலை விளக்கத்தை இந்த உபநிஷதம் தருகிறது. இறைவன் யார். ஆன்மாவே இறைவன் என்ற மகாவாக்கியம் இந்த உபநிஷதத்தில் தான் வருகிறது. இறைவன் எங்கும் நிறைந்தவர். எனவே அவர் கட்டாயமாக நம்மில் உள்ளார். நமது இதயத்தில் ஒளிர்கின்ற நிலையில் அவர் ஆன்மா என்று பெயர் பெறுகிறார்.
இறைவனின் சின்னமாகவும் ஓங்காரத்தை வைக்கிறது இந்த உபநிஷதம்.
எல்லாம் ஒன்றே
உலகம் என்பது செயல் நிலைக்கும் ஒடுக்க நிலைக்கும் மாறி மாறி சுழன்று கொண்டிருக்கிறது. அதன் சின்னமாக ஓம் எனும் மந்திரம் கூறப்பட்டது. உலகம் = ஓம்.
அடுத்த நிலையில் ஓம் என்னும் மந்திரம் நமது மூன்று நிலைகளுக்கு ஒப்புமைபடுத்தப்பட்டது. ஓம் = மனிதன்(#3-5) உலகமும் பிரணவ மந்திரத்தின் விரிவாக உள்ளது, நாமும் பிரணவ மந்திரத்தின் விரிவாக உள்ளோம். எனவே உலகமும் நாமும் பிரணவ மந்திரத்தின் பிரிவாக உள்ளோம் எனவே உலகமும் நாமும் ஒரே அமைப்பில் உள்ளவர்கள் என்று ஆகிறது. எனவே உலகம் = மனிதன். பிண்டமும் (நாம்) அண்டமும்(உலகமும்) ஒரே அமைப்பில் உள்ளன என்கிறார் சுவாமி விவேகானந்தர்.
இறைவனே நம்மில் ஆன்மாவாக நிலவுவதை உபநிஷத்தின் இரண்டாம் மந்திரம் கூறுகிறது. அதாவது ஆன்ம நிலையில் நாமும் இறைவனும் ஒன்று என்றாகிறது. மனிதன் = இறைவன். (#2)
எனவே உலகமும் நாமும் இறைவனும் தனித்தனி ஆனவர்கள் அல்ல. மூன்றும் ஒன்று என்பது இந்த உபநிஷதத்தின் தனிப்பெரும் கருத்தாக உள்ளது. உலகம் = மனிதன் = இறைவன் இதனைப் படிப்படியாக இந்த உபநிஷதம் விளக்குகிறது.
உலகமும் இறைவனும் ஓம்காரம்
1. இந்த உலகம் அனைத்தும் ஓங்காரமே. ஓங்காரத்தின் விளக்கத்தைக் காண்போம். சென்றவை, இருப்பவை, வருபவை எல்லாம் ஓங்காரமே. மூன்று காலங்களையும் கடந்ததாக எது உள்ளதோ அதுவும் ஓங்காரமே.
சென்றவை, இருப்பவை, வருபவை எல்லாம் படைப்பு என்பதை குறிக்கின்றன. படைப்பாக இருப்பது ஓங்காரம். இது பிரணவ மந்திரம், சப்த பிரம்மம், நாத பிரம்மம் என்றெல்லாம் அழைக்கப்படுகிறது. உலகம் படைக்கப்பட்ட போது முதலில் எழுந்தது இந்த ஓங்கார த்வனியே. அதிலிருந்தே உலகமும் அண்ட சராசரங்களும் தோன்றியதாக நம் சாஸ்திரங்கள் கூறுகின்றன. அதனால்தான் உலகம் அனைத்தும் ஓங்காரம் என்று இங்கே கூறப்பட்டது. கலைமகள் வீணை வாசிக்க அதிலிருந்து அண்டசராசரங்கள் பிறப்பதாக ஸ்ரீராமகிருஷ்ணர் தெய்வீகக் காட்சி ஒன்றில் கண்டார். படைப்பின் ஆரம்பம் முதல் இன்றுவரை இந்த ஓங்கார நாதம் எங்கும் கேட்டுக் கொண்டு இருப்பதாகவும் யோகிகள் இதனை கேட்பதாகவும் கூறப்படுகிறது. யாராலும் எழுதப்படாத ஓசை ஆதலால் இது அனாஹத த்வனி எனப்படுகிறது.
மூன்று காலங்களையும் கொண்டவராக இருப்பவர் இறைவன். அவரும் ஓங்காரம்.
2. எல்லாம் இறைவனே
2. இவை அனைத்தும் இறைவனே. இந்த ஆன்மாவும் இறைவனே. இந்த ஆன்மா நான்கு பரிமாணங்களை உடையது.
எதிலிருந்து ஒரு பொருள் உண்டாகிறதோ அது அந்த பொருளின் தன்மை இருக்கும். பாலிலிருந்து செய்யப்பட்ட இனிப்புகளில் பாலின் தன்மை இருக்கும். அது போல் இறைவனில் இருந்து தோன்றிய உலகமும் முறை இறையம்சம் கொண்டதாகவே இருக்கும். அதனால்தான் அனைத்தும் இறைவனே என்று கூறப்பட்டது.
படைப்பில் காணப்படுகின்ற அனைத்தும் இறைவனே, இறைம்சம் கொண்டவை என்று கூறும் போது நாமும் அதில் அடக்கம். எங்கும் நிறைந்த இறைவன் நம்மை பிரகாசிக்கும் போது ஆன்மா என்று பெயர் பெறுகிறார். அதாவது நம்மில் உள்ள ஆன்மாவும் இறைவனும் ஒன்றே.
காண்கின்ற உலகம் இறைவனே. ஆன்மாவும் இறைவனே. அப்படி என்றால் உலகமும் ஆன்மாவும் இறைவனே. அதாவது எல்லாம் இறைவனே.
இந்த மந்திரத்தில் உள்ள அபயம் ஆத்மா ப்ரஹ்ம என்ற சொற்றொடர் மகா வாக்கியங்களுள் ஒன்றாகும்.
3. மனிதன் (3-7)
ஆன்மா நான்கு பரிமாணங்களை உடையது என்று இரண்டாம் மந்திரம் கூறியது.
அந்த நான்கு பரிமாணங்கள் எவை?
முதல் பரிமாணம் - வைசுவானரன் - விழிப்புநிலை
3. ஆன்மாவின் முதல் பரிமாணம் வைசுவானரன் எனப்படுகிறது. இதன் உணர்வு புறமுகமாக உள்ளது. ஏழு அங்கங்களும் பத்தொன்பது வாய்களும் கொண்ட வைசுவானரன் விழிப்புநிலையில் புற உலகை அனுபவிக்கிறான்.
நாம் விழித்திருக்கும் நிலையில் வேலை செய்கிறோம். படிக்கிறோம், விளையாடுகிறோம், சிந்திக்கிறோம். இதையெல்லாம் செய்கின்ற, அதாவது விழிப்பு நிலையில் இந்த உலகை அனுபவிப்பவன் வைசுவானரன். அதாவது உலகை அனுபவிக்கின்ற நிலையில் நாம் வைசுவானரன் என்ற பெயர் பெறுகிறோம்.
வைசுவானரனுக்கு சில அடையாளங்களை இந்த மந்திரம் கூறுகிறது. அவனுக்கு அங்கங்கள் 7, வாய்கள் 19.
7 அங்கங்கள் எவை?
சொர்க்கம் - தலை, சூரியன் - கண்கள், காற்று - பிராணன், வெழி - நடுப்பகுதி, தண்ணீர் - சிறுநீரகம், பூமி - கால்கள்.
கண்ணுக்குத் தெரிகின்ற பூமி, கண்ணுக்குத் தெரியாத நுண்ணுலகமான சொர்க்கம் காற்று, வெளி, தண்ணீர் போன்ற பஞ்ச பூதங்கள் ஆகியவை வைசுவானரனின் அங்கங்களாக கூறப்பட்டுள்ளன. புறப்பிரபஞ்சம் முழுவதையும் உள்ளடக்கிய ஓர் உருவம் இது. விழிப்பு நிலையில் நமது உருவம் இது என்கிறது இந்த மந்திரம். இதன் பொருள் என்ன.
நாம் புற உலகை அனுபவிப்பது நமக்குத் தெரிந்த, நாம் காண்கின்ற நமது தூல உடம்பினால் ஆகும்.
புறப் பிரபஞ்சமே நமது உடம்பாக கூறப்பட்டதன் மூலம், நமது தூல உடம்பு புற பிரபஞ்சத்தின் ஓர் அங்கம் என்பது சுட்டிக் காட்டப்படுகிறது.
19 வாய்கள். வாய் என்பது அனுபவத்திற்கான வாசல். 19 வாய்கள் என்றால். 19 வாசல்கள் மூலம் நாம் புற உலகை அனுபவிக்கின்றோம் என்பது பொருள்.
19 வாசல்கள் எவை
கண் (பார்த்தல்), காது (கேட்டல்), மூக்கு (வாசனைஅறிதல்), நாக்கு (சுவை அறிதல்), தோல் ( உணர்தல்) ஆகியவை அறிவுக் கருவிகள் (ஞானேந்திரியங்கள்) ஐந்து. வாய் (பேச்சு), கை (செயல்கள்) கால் (நடத்தல்), குதம் மற்றும் குறி (கழிவு வெளியேற்றம்) ஆகிய செயற்கருவிகள் (கர்மேந்திரியங்கள்) ஐந்து. முக்கிய பிராணன்கள் ஐந்து மனம், புத்தி, நான் - உணர்வு (), சித்தாந்த 19 கருவிகளின் மூலம் நாம் புற உலகை அனுபவிக்கின்றோம்.
மனம், புத்தி, நான் - உணர்வு, சித்தம் ஆகிய நான்கும் மனத்தின் பல்வேறு நிலைகள் ஆகும். மனம் என்பது இங்கே உணர்வு மனத்தை () குறிக்கிறது. நாம் கண், காது போன்ற புலன்கள் வழியாக புறவுலகை அனுபவிப்பது இந்த மனதின் மூலமே.
மனதில் நிச்சயம் செய்கின்ற பகுதி புத்தி எனப்படுகிறது. அங்கே வருவது இவனா அவனா என்று குழப்புவது உணர்வு மனம். இது அவன் தான் என்ற உறுதியை அளிப்பது புத்தி.
அனுபவங்கள் ஏதுவும் வீணாவதில்லை. புலன்கள் வாயிலாக நாம் பெறுகின்ற அனுபவங்கள் ஒவ்வொன்றும் ஒரு பதிவாக மனதின் ஒரு பகுதியில் சேர்த்து வைக்கப்படுகிறது. இதுவே சித்தம். இது ஆழ்மனம் ()என்று அழைக்கப்படுகிறது. உணர்வு மனம் ஒன்றை நிச்சயிக்க முடியாமல் குழப்பும்போது, சித்தத்தில் உள்ள அனுபவங்களை ஒப்பிட்டு புத்தி ஒரு முடிவிற்கு வருகிறது. அவனா இவனா என்ற கேள்வி எழும்போது புத்தி ஆழ் மனதில் தகவல்களை தேடுகிறது. அவன் ஏற்கனவே நாம் கண்டவனாக இருந்தால் அந்த பதிவுகள் அங்கே இருக்கும். அதை வைத்து இது தான் அவன் என்று புத்தி நிச்சயம் செய்கிறது.
நாம் விழித்திருக்கும்போதும், கனவு காணும் போதும், தூங்கும் போதும் எந்த நிலையில் சரி நான் இருக்கிறேன் என்ற உணர்வு நம்மை விட்டு நீங்குவது இல்லை. அது நமது மனதின் பின்னணியில் எப்போதும் இருக்கும். இதுவே நான்- உணர்வு (). எந்த அனுபவத்திற்கும் அடிப்படையாக இருப்பது இது. இது இல்லாமல் எந்த அனுபவமும் இல்லை. இவ்வாறு பத்தொன்பது வாசல் வழியாக நாம் புற உலகை அனுபவிக்கின்றோம்.
நாம் பிரபஞ்சத்தில் ஒரு அங்கம். விழிப்பு நிலையில், இவ்வாறு தூலப்பிரபஞ்சத்தை அனுபவிக்கின்ற நிலையில் ஆன்மா வைசுவானரன் எனப்படுகிறது. இது நமது முதல் பரிமாணம்.
இரண்டாம் பரிமாணம் - தைஜஸன் - கனவு நிலை
4.ஆன்மாவின் இரண்டாம் பரிமாணம் தைஜஸன் எனப்படுகிறது. இதன் உணர்வு அகமுமாக உள்ளது. ஏழு அங்கங்களும் பத்தொன்பது வாய்களும் கொண்ட தைஜஸன் கனவு நிலையில் மன உலகை அனுபவிக்கிறார்.
அடுத்ததாக வருவது கனவு நிலை .கனவு நிலையும், விழிப்பு நிலையைப் போன்றதே. ஒரே வித்தியாசம் இங்கே புற உலகம் இல்லை, அனுபவங்கள் அத்தனையும் மன உலகிலேயே நிகழ்கிறது.
உடம்பும் மனமும் கருவிகள். அவற்றுக்கு ஓய்வு தேவை. உடம்பு ஓய்வெடுப்பது தூக்கம் எனப்படுகிறது. அப்போது மனம் தொடர்ந்து செயல்படுகிறது. ஆனால் நாம் புற உலகை உணர்வதில்லையே. உணர்வதில்லை. ஏனெனில் புறவுலகை உணர்கின்ற உணர்வு மனம் தூக்கத்தில் ஆகிறது. ஆனால் ஆழ்மனம் விழித்திருக்கிறது. அந்த மனம் ஒரு புதிய உலகத்தை உருவாக்குகிறது. அதுவே கனவு.
அங்கே தேர் இல்லை, இழுக்க மிருகங்கள் இல்லை, சாலைகள் இல்லை, அங்கே இன்பமில்லை, களிப்பு இல்லை, ஆனந்தம் இல்லை, அங்கே குளம் இல்லை, ஏரி இல்லை, நதிகளும் இல்லை அவர் அனைத்தையும் உருவாக்குகிறார். ஏனெனில் அவரே அனைத்தையும் உருவாக்குபவர் என்று கனவு உலகத்தை பற்றி பிருஹாதாரண்யக உபநிஷதம் கூறுகிறது. உடம்பும் உணர்வு மனமும் ஓய்வெடுக்கும் போது ஆழ்மனம் செயல்படுகின்ற நிலை இது. மனம் இங்கே தனக்கென்று ஒரு உலகை உருவாக்கி இன்ப துன்பங்களை அனுபவிக்கிறது.
கனவு உலகத்தை அனுபவிக்கின்ற நிலையில் ஆன்மா தைஜஸன் எனப்படுகிறது. இது நமது இரண்டாம் பரிமாணம்.
மூன்றாம் பரிமாணம் - பிராஜ்ஞன் - தூக்க நிலை 5 - 6
ஆசைகளோ கனவுகளோ எதுவும் இன்றி ஆழ்ந்து தூங்குகின்ற நிலை ஆன்மாவின் மூன்றாம் பரிமாணமாகும். இந்த நிலையை அனுபவிப்பவன் பிராஜ்ஞன். இந்த நிலையில் அனுபவங்கள் எதுவும் இல்லை. உணர்வு () திரண்டு ஒரு திரளாக உள்ளது, அதனால் இது விழிப்பு மற்றும் கனவுநிலை உணர்வுகளின் வாசலாக உள்ளது. ஆனந்த வடிவினரான பிராஜ்ஞன் இங்கே ஆனந்தத்தை அனுபவிக்கிறார்.
மூன்றாவது வருவது ஆழ்ந்த தூக்கம். இங்கே விழிப்பும் இல்லை, கனவும் இல்லை. விழித்திருக்காவிட்டாலும், கனவு காணாவிட்டாலும் அந்த ஆழ்ந்த தூக்க நிலையை நாம் அனுபவிக்கின்றோம். ஏனெனில் தூங்கி எழுந்த பிறகு, நேற்று நன்றாக தூங்கினேன். மிகவும் ஆனந்தமாக இருந்தது என்று கூறுகிறோம். இவ்வாறு தூக்க நிலையை அனுபவிக்கின்ற ஆன்மா பிராஞ்சன் எனப்படுகிறார்.
தூக்க நிலைக்கு இங்கே 4 அடையாளங்கள் கூறப்பட்டுள்ளன.
1. இந்த நிலையில் அனுபவங்கள் எதுவும் இல்லை. கண், காது போன்ற நமது புலன்கள், உணர்வு மனம், ஆழ்மனம் அனைத்தும் ஓய்வில் ஆழ்ந்து விடுவதால் இங்கே புறவுலக அனுபவங்களும் இல்லை, மன உலக அனுபவங்களும் அதாவது கனவும் இல்லை.
2. புறவுலகம், மனவுலகம் என்று எந்த உலகத்தின் அனுபவங்களும் இல்லாமல் மனம், ஆழ்மனம், புத்தி, சித்தம் ஆகியவை ஒடுங்கி இருக்கின்றன. எங்கே. நான் உணர்வில். அனைத்தும் நான் உணவில் ஒடுங்கி விட்டதால் தனியான அனுபவங்கள் எதுவும் இல்லை. அதனால் இது அனைத்தும் திரண்ட நிலையாக கூறப்படுகிறது.
3. மனம், ஆழ்மனம் ஆகியவை ஒடுங்கிவிட்டாலும் நான் உணர்வு இங்கு விழித்திருக்கிறது. இதன் பொருள் என்ன. நான் இருக்கிறேன். என் பெயர் ராம் என்ற உணர்வு, ஆழ்ந்த தூக்கத்திலும் நம்மை விட்டு விலகுவதில்லை. 10 பேர் தூங்குகின்ற இடத்தில் ராமா என்று கூப்பிடும் போது, ராமன் சட்டென்று விழிப்பது இந்த நான் உணர்வு விழித்திருப்பதன் காரணமாகத்தான்.
இவ்வாறு நான்உணர்வில் ஒடுங்கியிருக்கின்ற மனம் வெழிப்படும்போது முதல்நிலையில் கனவும், மேலும் புறநிலையில் வரும்போது விழிப்பு நிலையும் அனுபவிக்கப்படுகின்றன. அதனால்தான் இது மற்ற இரண்டு நிலைகளின் வாசல் என்று கூறப்பட்டது.
4. ஆழ்ந்த தூக்க நிலையில் உள்ள ஒரே அனுபவம் ஆனந்தம். அதனால் தான் தூங்கி எழுந்ததும் நான் ஆனந்தமாக தூங்கினேன் என்று நம்மால் கூறமுடிகிறது.
6. இவை அனைத்திற்கும் தலைவர் இவை அனைத்தும் அறிபவர் இவரே அனைத்து உயிர்களையும் உள் நின்று இயக்குபவர். அனைத்துக்கும் மூல காரணம் இவரே. உயிர்களின் தோற்றத்திற்கும் ஒடுக்கத்திற்க்கும் இவரே காரணம்.
தூக்க நிலை இங்கு மேலும் விளக்கப்படுகிறது. புற உலகம், அதிலிருந்து நாம் பெறும் அனுபவங்கள் ஆகியவை சேர்ந்தே நமது வாழ்க்கை. நான் உணர்வு என்று ஒன்று இருந்தால் மட்டுமே இந்த அனுபவங்கள் அனைத்தையும் நாம் பெறமுடியும். உலகங்கள் எல்லாம் இருந்தாலும் நான் உணர்வு இல்லையென்றால் அனுபவங்கள் எதுவும் இல்லை. அந்த நான் உணர்வுக்கு அடிப்படையாக இருப்பது தூக்க நிலையை அனுபவிக்கின்ற நமது பரிமாணமாகிய பிராஜ்ஞன்.
ஓர் உதாரணத்தைக் காண்போம். காண்பவன் இருக்கலாம். எத்தனையோ அழகிய காட்சிகள் முன்னால் இருக்கலாம், ஆனாலும் ஒளி இல்லை என்றால் எந்த பயனும் இல்லை. எனவே காண்பவர் காட்சி ஆகிய இரண்டிற்கும் அடிப்படையாக இருப்பது ஒளிதான். அதுபோலவே உலகம், உயிர்கள், அறிவு என்று எவ்வளவுதான் இருந்தாலும் நான், என்ற ஒன்று இல்லாமல் அவற்றை அறியவோ அனுபவிக்கவோ முடியாது. அதனால்தான் இங்கே நான் உணர்வின் அடிப்படையான பிராஜ்ஞன் இத்தனை பெருமைகள் உடையதாக போற்றப்படுகிறார்.
ஒவ்வொரு உயிரிலும் தலைம நிலையில் இருப்பவர் பிராஜ்ஞன். ஏனெனில் பிராஜ்ஞனின் செயல்பாடான நான் உணர்வு இல்லாமல் யாரும் எதையும் உணரவோ அனுபவிக்க முடியாது. இவ்வாறாக அனைத்தையும் இயக்குபவராக இருப்பதால் பிராஜ்ஞன் அனைத்திற்கும் தலைவர், அனைத்து உயிர்களையும் உள் நின்று இயக்குபவர்.
உலகம் இருக்கலாம் பல்வேறுஅறிவு இருக்கலாம் ஆனால் நான் உணர்வு இன்றி எந்த அறிவையும் பெறவோ பயன்படுத்தவோ முடியாது. அதனால் பிராஜ்ஞன் அனைத்தையும் அறிபவர்.
உலகமும் உயிர்களும் நதியும் கடலும் மலையும் இருந்தாலும் நான் இல்லாமல் இவை எதனாலும் ஒருவருக்கும் பயனில்லை. இந்த உலகம் இருக்கிறது என்றால் அதற்கு என்னை பொறுத்தவரை நானே காரணம். நான் இல்லாவிட்டால் எனக்கு உலகம் இல்லை. அதனால்தான் பிராஜ்ஞன் அனைத்திற்கும் மூல காரணம்.
விழிப்பு நிலையும் கனவும் எவ்வாறு நான் உணர்வில் ஒடுங்கி அதிலிருந்து மீண்டும் வெளிவருகின்றன என்பது 5 - ஆம் மந்திர விளக்கத்தில் 2 - 3 பகுதியில் கூறப்பட்டது. வாழ்க்கையே பிராஜ்ஞனில் ஒடுங்கி, மீண்டும் அவரில் வெழிப்படுவதாக உள்ளது. அதனால்தான் தோற்றத்திற்க்கும் ஒடுக்கத்திற்கும் இவரே காரணம் என்று கூறப்பட்டது.
நான்காம் பரிமாணம் - ஆன்மா
7.நான்காம் பரிமாணம். அது அகமுகநிலை அல்ல, புறமுக நிலை அல்ல, இரண்டும் சேர்ந்த நிலை அல்ல. அது உணர்வு திரண்ட நிலை அல்ல, உணர்வு நிலை அல்ல, உணர்வற்ற நிலையும் அல்ல, அதனை காணமுடியாது. செயல்கள் அற்ற, புரிந்து கொள்ள முடியாத, அடையாளங்கள் இல்லாத, சிந்தனைக்கு அப்பாற்பட்ட, விளக்க முடியாத நிலை அது. அதனை ஆன்ம உணர்வால் மட்டுமே அறிய முடியும். அங்கே பிரபஞ்ச உணர்வு இல்லை. அது அமைதிமயமானது, மங்கலமானது, இரண்டற்றது. இதுவே நான்காம் பரிமாணம். இது ஆன்மா. இதையே அறியவேண்டும்.
நான்காம் பரிமாணம் என்று கூறப்பட்டாலும் இது உண்மையில் முதல் மூன்று பரிமாணங்கள் சேர்ந்ததும் அதே வேளையில் அதேவேளையில், அவற்றைக் கடந்ததுமான ஒரு நிலையாகும். நமது உண்மையான இயல்பு இதுவே. விழிப்பு நிலை, கனவு, தூக்கம் ஆகிய மூன்று நிலைகளிலும் ஆன்மா இருக்கிறது. சூரியனின் சன்னதியில் உலகம் இயங்குகிறது. ஆனால் எந்த இயக்கத்திலும் சூரியன் நேரடியாக ஈடுபடுவது இல்லை. அது போலவே நமது அனைத்து செயல்பாடுகளும் ஆன்மா என்ற ஒன்றை அடிப்படையாக வைத்தே நிகழ்கின்றன.
நான் உணர்வு என்ற ஒன்று இருக்கின்றது தூக்கத்தையே நமது அறிவால் சரியாக புரிந்து கொள்ளவோ விளக்கவோ இயலவில்லை. இதில் நான் உணர்வும் அற்ற ஆன்ம நிலையை, அறிவால் அறிவதோ, புரிந்து கொள்வதோ, விளக்குவதோ சாத்தியமே அல்லாத ஒன்று. நமது அறிவின் எல்லைகள் குறுகியவை. ஆன்ம நிலையை உணரலாம். அனுபவிக்கலாம். ஆனால் அதனை நமது அறிவினால் அறியவோ சொற்களால் விளக்கவோ இயலாது. அதனை உணர்த்தவே உபநிஷதம் முரண்பாடுபோல் தோன்றுகின்ற இத்தகைய சொற்களால் அந்த நிலையை சுட்டிக்காட்டுகிறது.
4 மனிதன் ஓங்காரமே (8 -12 )
உலகம், இறைவன் இரண்டும் ஓங்காரம் என்று முதல் மந்திரம் கூறியது. மனிதனும் ஓங்காரமே என்று கூறி இந்த ஐந்து மந்திரங்கள் விளக்கம் தருகின்றன.
8.இந்த ஆன்மாவை ஒரு சொல்லால் குறிப்பிட வேண்டுமானால் அதுவும் ஓம் என்னும் ஓங்காரம். எழுத்துக்களாக சொல்ல வேண்டுமானால் அதன் பகுதிகளே எழுத்துக்கள். எழுத்துக்களே பகுதிகள். அந்த ஓங்காரம் அ, உ, ம் என்ற மூன்று எழுத்துக்களால் ஆனது.
ஓங்கார மந்திரத்தை இரண்டு கோணங்களில் காண்கிறது இந்த உபநிஷதம். ஒன்று முதல் மந்திரத்தில் கண்டதுபோல் சென்றவை இருப்பவை வருபவை என்று அனைத்தும் மொத்தமாகவும் காலங்களை கடந்ததாகவும் இருக்கின்ற பொருள்.
இரண்டாவது அ உ ம் என்ற மூன்று எழுத்துக்களின் சேர்க்கையால் அமைந்த ஒரு சொல். அ + உ + ம் = ஓம். வாயை திறக்கும் போதே அ உச்சரிக்கப்பட்டு விடுகிறது. ம் என்பதுடன் வாய் மூடப்படுகிறது. அதன்பிறகு எந்தவார்த்தையையும் உச்சரிக்கமுடியாது எனவே அனைத்து வார்த்தைகளின் மொத்தமான ஒரு மந்திரமாக அமைந்துள்ளது ஓம்.
இந்த மந்திரம் எப்படி நம்மில் அதாவது நமது மூன்று பரிமாணங்களுடன் பொருந்துகிறது என்பதை தொடர் மந்திரங்கள் கூறுகின்றன.
விழிப்புநிலை = வைசுவானரன் = அ
9. ஓங்கார மந்திரத்தின் முதற்பகுதி ஆகிய அகாரம் விழிப்பு நிலையை களமாகக் கொண்ட வைசுவானரன். ஏனெனில் நிறையும் தன்மையாலும் ஆரம்ப தன்மையாலும் இரண்டும் சமமாக உள்ளன. இவ்வாறு அறிபவனிரின் எல்லா ஆசைகளும் நிச்சயமாக நிறைவேறுகின்றன. அவர்கள் முதன்மையானவர்கள் ஆகிறார்கள்.
மந்திரத்தின் முதல் பகுதியாகிய அ நமது விழிப்பு நிலையை பரிமாணமாகிய வைசுவானரனுக்கு ஒப்பிடப்படுகிறது. அ விற்கும் விழிப்பு நிலைக்கும் இரண்டு பொதுப்பண்புகள் கூறப்படுகின்றன.
1. நிறையும் தன்மை: வாயை திறக்காமல் எந்த வார்த்தையையும் உச்சரிக்க முடியாது. வாயை திறக்கும்போதே அ என்ற எழுத்து உச்சரிக்கப்பட்டுவிடுகிறது. எனவே எழுத்தோ சொல்லோ எதுவானாலும் அது அ என்ற எழுத்து கலந்து தாகவே இருக்கும். அதாவது அ என்ற எழுத்துக்கள் சொற்கள் அனைத்திலும் நிறைந்துள்ளது.
விழிப்புநிலையும் மற்ற நிலைகளில் நிறைந்துள்ளது. ஆழ்மனப் பதிவுகளே கனவுகளாக வெளிப்படுகின்றன என்று கண்டோம். ஆழ்மனப் பதிவுகள் நமது விழிப்பு நிலை அனுபவங்களின் விளைவுகள். எனவே கனவும் விழிப்பு நிலைய அனுபவங்களின் தொடர்புடையதே. அதுபோலவே ஆழ்ந்த தூக்கத்திலும் விழிப்பு நிலையின் அனுபவங்கள் இருக்கவே செய்கின்றன. தனித்தனியாக இல்லாமல் ஒன்று திரண்டு ஒரு திரளாக உள்ளன. எனவே விழிப்பு நிலை மற்ற நிலைகளில் நிறைந்துள்ளது.
2.ஆரம்பத் தன்மை: பிரணவ மந்திரத்தின் ஆரம்ப பகுதி அ நமது அனுபவங்களிலும் ஆரம்ப நிலையாக அமைந்துள்ளது விழிப்பு நிலை.
கனவு நிலை = தைஜஸன் = உ
10. ஓங்கார மந்திரத்தின் இரண்டாம் பகுதியான உகாரம்
கனவு நிலையைக் களமாக கொண்ட தைஜஸன். ஏனெனில் உயர் வாலும் இரண்டின் தொடர்பாலும் இரண்டு சமமாக உள்ளன. இவ்வாறு அவன் கட்டாயமாக அறிவை வளர்க்கிறான். சுகதுக்கம்போன்ற இரட்டைகளில் சமமாக இருக்கிறான். ஞானி அல்லாத யாரும் அவனது குலத்தில் பிறப்பதில்லை.
ஓங்கார மந்திரத்தில் இரண்டாம் உ நிலைகளுள இரண்டாவதாக அமைவது கனவு. இரண்டிற்க்கும் பொதுவாக இரண்டு பண்புகள் கூறுப்படுகின்றன.
1.உயர்வு ஓங்கார மந்திரத்தின் உ என்ற எழுத்தும் கனவு நிலையும் உயர்வானது என்று மந்திரம் கூறுகிறது. எப்படி
ஓங்காரத்தை உச்சரிப்பது பற்றி ஏற்கனவே கண்டோம். அது ஆரம்பத்தில் மென்மையாகவும் நடுவில் உரக்கவும் இறுதியில் மென்மையாகவும் உச்சரிக்கப்படுகிறது. உ உரக்க உச்சரிக்கப்படுவதால் உயர்வானதாக கூறப்படுகிறது.
அதுபோலவே, விழிப்புநிலையில் உணர்வு (conscious mind) மனம் மட்டுமே செயல்படுகிறது. உணர்வுப் பகுதி நமது மனதின் மிகச் சிறு பகுதி மட்டுமே, இந்த பகுதியை செயல்படுத்துவது நமது மனதின் மிக பெரும்பகுதியான ஆழ்மனம் (subconscious mind) ஆகும். கனவு நிலையில் உணர்வு மனம் ஓய்வில் ஆழ்ந்துவிடுகிறது. ஆழ்மனம் செயல்படுகிறது. ஆழ்மனத்தின் எல்லைகள் பரந்தது. எனவே கனவு நிலையின் எல்லைகளும் பரந்ததாக உள்ளது. விழிப்பு நிலை உலகத்தின் எந்த நியதிகளும் சட்டதிட்டங்களும் அங்கே செல்லுபடியாவதில்லை. கனவில் பாம்பு பாடமுடியும், பசு வால் பறக்க முடியும். கனவுபற்றி ஆராய்த அறிஞர்கள் நான்கு விதமான கனவுகளை கூறுகிறார்கள்.
1.விழிப்புநிலையில் நடைபெற்ற நிகழ்ச்சிகளின் தொடர்ச்சியாக கனவுகள் அமையலாம். எந்த நிகழ்ச்சியும் மனத்தில் ஒரு பதிவை (ஸம்ஸ்காரம்)விட்டு செல்கிறது. அந்த பதிவு ஆழ்மனதில் சேமிக்கப்படுகிறது. சில வேளைகளில் இந்த பதிவுகள் செயல்படத் தொடங்குகிறது. அப்போது விழிப்பு நிலை நிகழ்ச்சிகளின் தொடர்ச்சியாக கனவுகள் அமையும்.
2.ஆசைகளும் லட்சியங்களும் எண்ணற்றவை. இவற்றில் சிலவற்றை மட்டுமே நம்மால் வெளியிட முடியும். சமுதாயம், பெற்றோர், நண்பர்கள் என்று யாருக்காவது பயந்தோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ அவற்றை நாம் ஆழ்மனத்தில் அமுக்கி வைத்விடுகிறோம். கனவு நிலையில் இவையும் செயல்படுகின்றன. ஆனால் பயம் காரணமாகவே நேரடியாக வராமல் மறைமுகமாக வெழிப்படுகின்றன. கனவில் மங்கல நிகழ்ச்சிகளை கண்டால் உண்மையில் அமங்கல நிகழும் என்றும் கூறுவது உண்டு. அதாவது கனவில் நாம் காண்பவற்றை அப்படியே எடுத்துக் கொள்ளக்கூடாது. பொருள் திரிந்து வருகின்ற கனவுகளும் உண்டு.
3.ஆழ்மனம் பரந்தது, ஆற்றல்மிக்கது. அதனால் எதிர்காலத்தை கூட காண முடியும். சில வேளைகளில் எதிர்காலத்தை காட்டுவதாக சில கனவுகள் அமைவதுண்டு.
5. தெய்வீக கனவுகள், மிகச் சிலரின் வாழ்வில் கனவுகள் மூலமாக இறையருள் வெழிப்படுவது உண்டு. தரிசனங்கள் தெய்வீக அனுபவங்கள் போன்றவை கனவில் நிகழ்வது உண்டு.
இங்கே ஒரு கருத்தை கவனத்தில் கொள்ள வேண்டும். பல நேரங்களில் நாம் காணுகின்ற தெய்வீக கனவுகள் முதல்வகை கனவுகள் மட்டுமே. அதாவது நாம் படித்த பார்த்த சம்பவங்களின் தொடர்ச்சி மட்டுமே. கனவுக்கு பிறகு அது நமது வாழ்க்கையில் ஏற்படுகின்ற விளைவைவைத்தே அந்தக் கனவு தெய்வீக கனவா அல்லது முதல்வகை கனவா என்பதை முடிவு செய்ய முடியும். உண்மையான தெய்வீக கனவு வாழ்க்கையில் மாபெரும்மாற்றத்தை ஏற்படுத்துகிறது. வாழ்க்கை முற்றிலுமாக இறைவாழ்க்கையாக மாற்றி அமைக்கப்படுகிறது. இவ்வாறு இல்லாமல் வாழ்க்கை பழையபடியே சென்று கொண்டிருக்கும் ஆனால் அது முதல்வகை கனவு மட்டுமே.
இவ்வாறு விழிப்புநிலை விட தூக்கத்தை விட பல முகபரிமாணங்களைக் கொண்டதாக இருப்பதால் கனவுநிலை உயர்வானது என்று சொல்லப்படுகிறது.
2.இரண்டின் தொடர்பு. நடுவில் அமைந்துள்ளதால் உ என்ற எழுத்து அ ம் ஆகிய எழுத்துக்கள் உடன் தொடர்புடையதாக உள்ளது அதுபோலவே கனவுநிலை மற்ற இரண்டுடனும் தொடர்பு உடையதாக கூறப்பட்டுள்ளது.
தூக்க நிலை ப்ராஜ்ஞன் = ம்
11. ஓங்கார மந்திரத்தின் மூன்றாம் பகுதியான மகாரம் ஆழ்ந்த தூக்கத்தை களமாக்கி கொண்ட பிரான்ஜன். ஏனெனில் அளவிடும் தன்மையாலும் கிரகிக்கும் தன்மையாலும் இரண்டும் சமமாக உள்ளன. இவ்வாறு அறிபவன் கட்டாயமாக அனைத்தையும் அளப்பவனாகவும் கிரகிப்பவனாகவும் ஆகிறான்.
ஓங்கார மந்திரத்தில் மூன்றாம் பகுதி ம் நிலைகளுள் மூன்றாவதாக அமைவது ஆழ்ந்த தூக்கம் . இரண்டுக்கும் பொதுவாக இரண்டு பண்புகள் கூறப்படுகின்றன.
1. அளவிடும் தன்மை நெல் முதலிய தானியங்களை அளக்க நாளிகை மரக்கால் முதலியவை பயன்படுகின்றன. இதில் முதலில் தானியத்தை நிரப்பி அதன் அளவை அறிந்தபின்பு வெளியில் கொட்டி வைப்பார்கள். முதலில் நாழி வெறுமையாக இருக்கும். பிறகு அதில் தானியம் நிறைக்கப்படும். பிறகு மீண்டும் வெறுமையாக்கப்படும்.
அதுபோலவே 'அ' வும், 'உ' வும் 'ம்' மில் ஒடுங்குகின்றன. மீண்டும் அதிலிருந்து வெளிவருகின்றன இவ்வாறு 'ம்'என்பது ஒரு நாழியைப் போல் செயல்படுவதாக இந்த மந்திரம் கூறுகிறது.
அவ்வாறே விழிப்பு நிலை மற்றும் கனவு நிலை அனுபவங்கள் அனைத்தும் தூக்க நிலையில் நிரப்பப்படுகின்றன. மீண்டும் விழிப்பு நிலைக்கு வரும்போது அனைத்தும் வெளிவருகின்றன. தூக்க நிலையும், ஒரு நாழியைய்போல் அளவிடுவது ஆக உள்ளது.
2.கிரகிக்கும் தன்மை: ஓம் என்னும் மந்திரத்தை உச்சரிக்கும்போது 'அ' வும், 'உ' வும் 'ம்' மில் ஒடுங்குவது போல் உள்ளது. அதாவது 'ம்' அ' வையும், 'உ' வையும் கிரகித்துக் கொள்கிறது.
ஆழ்ந்த தூக்க நிலையிலும் விழிப்பு நிலை மற்றும் கனவு நிலை அனுபவங்கள் கிரகிக்க படுகின்றன. ஒரு திரளாக வைக்கப்படுகின்றன.
ஓம்கார மந்திரத்தை அ, உ, ம் என்ற பகுதிகளாக அறிபவன் குறிப்பிட்ட சில பலன்களை பெறுவதாக 9-11 வரையுள்ள மந்திரங்களில் காண்கிறோம். வெறுமனே படிப்பதால் இந்த பலன்கள் கிடைக்கும் என்று உபநிஷதம் கூறுவதாகக் கொள்ளக்கூடாது. அறிதல் என்றால் சாதனைகள் செய்து, அனுபூதியில் அறிதல் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.
ஆன்மா
12. ஓம்கார மந்திரத்தின் நான்காம் பகுதி, பகுதி என்று சொல்ல முடியாதது, செயல்கள் அற்றது, பிரபஞ்ச உணர்வு கடந்தது, மங்கலம் ஆனது, இரண்டும் அற்றது. இந்து ஓங்காரமே ஆன்மா. இவ்வாறு அறிபவன் ஆன்மாவை ஆன்மாவால் அடைகிறான்.
சொற்களால் விளக்க முடியாத பகுதியாக அமைந்துள்ளது நான்காம் பகுதி, மொத்த பரிமாணம்.
ஓம் என்ற மந்திரத்தை உச்சரிக்கும்போது 'ம்' என்பதில் மந்திரம் முடிந்தபிறகு உச்சரிக்கும் முன் ஓர் இடைவெளி இருக்கும். மிகச் சிறியதானாலும் இடைவெளி இருந்தே தீரும். அதுவே ஓங்கார மந்திரத்தின் நான்காம் பகுதி. இது அர்த்த மாத்திரை என்று கூறப்படுகிறது.
அ, உ, ம், அமைதி நிலை - இந்த நான்கும் சேர்ந்தது ஓம்காரம். சேர்ந்தது என்றால் ஒரு கூட்டுப்பொருள் போன்றது என்று பொருள் கொள்ளக்கூடாது. அ, உ, வில் ஒடுங்குகிறது. உ, ம், இல் ஒடுங்குகிறது. ம் அமைதியில் ஒடுங்குகிறது. இறுதியில் அனைத்தும் அமைதியில் நிலைக்கிறது. அவ்வாறு விழிப்பு, கனவு, தூக்கம் ஆகிய அனைத்தும் ஆன்மாவில் ஒடுங்கி, ஆன்மா மட்டுமே எஞ்சுகின்ற ஆன்ம அனுபூதி வாய்க்கிறது.
ஓங்கார தியானம்
எல்லாம் ஒன்றே என்ற உண்மையை அறிவதும் அனுபவிப்பதும் வாழ்க்கையின் லட்சியம். ஏன்? ஏனெனில் அதை உணர்ந்தவர்களுக்கு உண்மையான அமைதி உரித்தாகுறது. மனிதர்கள் தேடுவது அமைதியை அல்லவா! யார் இந்த மரண கடலுக்கு இடையில் ஒன்றேயான அதனை காண்கிறார்களோ, மிதந்து செல்லும் இந்த பிரபஞ்சத்தில் நிலையான ஒன்றை காண்கிறார்களோ, என்றும் மாறாத அந்த ஒன்றை அனுபூதியில் அறிகிறார்களோ அவர்களுக்கு அழிவில்லாத அமைதி கிடைக்கும். வேறு யாருக்கும் இந்த அமைதி கிடைக்காது; கிடைக்கவே கிடைக்காது! இருப்பது ஆகிய இந்த ஒன்றை அறிய வேண்டும்.
ஆனால் அறிவதும் அனுபவிப்பதும் வெறும் வார்த்தைகளால் நடப்பதில்லை. அதற்கு நாம் பாடுபட வேண்டும். முனிவர்கள் கூறிய வழியை பின்பற்ற வேண்டும். மாண்டூக்கிய உபநிஷதம் காட்டும் வழி என்ன?
ஓம்கார தியானம்.
உலகமும் உயிர்களும் இறைவனும் ஒன்றே என்ற உண்மையை ஓம்கார மந்திரத்தின் வாயிலாக விழக்கப்படுவதை இந்த உபநிஷதத்தில் கண்டோம். எனவே அந்த ஓங்காரத்தை ஜெபம் செய்வதும், தியானிப்பதும் இந்த உண்மைகளை அனுபவிப்பதற்கான சாதனைகள்.
ஓங்காரத்தை ஒவ்வொரு பரிமாணமாக அறியவேண்டும். ஏனெனில் ஒவ்வொரு பரிமாணமும் அதன் ஒவ்வொரு எழுத்துகளாக உள்ளன. இவ்வாறு ஒவ்வொரு பரிமாணமாக அறிந்த பிறகு. வேறு எதையும் சிந்திக்காமல் இருக்க வேண்டும்.
ஓங்காரத்தில் மனதை ஒருமைப்படுத்த வேண்டும். ஏனெனில் பயம் எதுவும் தீண்டாத பரம்பொருளே அது. ஓங்காரத்தில் நிலை பெற்றவர்களுக்கு பயம் என்பதே கிடையாது.
உருவநிலையில் தெய்வங்களாகவும் அருவ நிலையில் உயர் பரம் பொருளாகவும் இருப்பது ஓங்காரமே. அது எதிலிருந்தும் தோன்றியதல்ல, அதிலிருந்தும் எதுவும் தோன்றுவதில்லை. அகமும் புறமும் அனைத்து மான அழிவற்ற ஒன்று அது.
ஆரம்பமும் நடுவும் இறுதியும் ஓங்காரமே. ஓங்காரத்தை இவ்வாறு அறிபவர்கள் ஒன்றேயான பரம்பொருளுடன் ஒன்று கிறார்கள்.
எல்லோருடைய இதயத்திலும் இறைவனாக விளங்குவது இந்த ஓங்காரமே. எங்கும் நிறைந்த தான இந்த ஓங்காரத்தை தியானிப்பவர்கள் கவலையற்று இருக்கிறார்கள்.
இந்த ஓங்காரத்தை அளப்பதற்கு அளவுகோல் கிடையாது. அது எல்லையற்றது, மங்கலம் ஆனது, அங்கு இருமைகள் கிடையாது. ஓங்காரத்தை அறிபவர்கள் உண்மையான முனிவர்கள் வேறு யாருமல்ல.
ஓங்கார மந்திரத்தை ஈடுபாட்டுடன் தியானிப்பதால் வேதாந்த உண்மைகள் அனுபவ உண்மைகள் ஆகும்.
ஓம்கார ஜபமும் தியானமும்
ஓங்காரத்தை உச்சரிப்பது எப்படி?
மணியோசை போலவும் எண்ணை ஒழுக்கு போல் இடைவிடாமல் ஓங்காரத்தை உச்சரிக்க வேண்டும்.
மணியோசை அமைதியில் இருந்து எழுந்து உயர்கிறது. பிறகு அமைதியில் கரைகிறது. அதுபோல் ஓங்காரத்தை உச்சரிக்கும்போது மென்மையாக ஆரம்பித்து படிப்படியாக ஒலியை அதிகரித்து மீண்டும் மென்மையாக்கி நிறுத்தவேண்டும். சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும்உச்சரிக்க வேண்டும். ஒருமுறை உச்சரிக்கும்போது இடைவெளி வரக்கூடாது என்பதை குறிப்பிடவே எண்ணை ஒழுக்கு உதாரணமாக காட்டப்பட்டுள்ளது.
ஓம்கார தியானம் செய்வது எப்படி?
என்ற மூன்று எழுத்துக்களின் சேர்ற்க்கையான ஓரெழுத்து மந்திரத்தை மேலான ஒளி வடிவாக தியானிக்க வேண்டும்.
இறை வடிவான ஓம்காரத்தை இதயத் தாமரையின் நடுவில் பெருவிரல் அளவிலான அசைவற்றறை தீபம் போல் தியானிக்க வேண்டும்.
ஓங்கார தியானம் எப்படி செயல்படுகிறது?
ஓங்காரத்தை ஒளி வடிவமாக தியானிக்க வேண்டும் என்று கண்டோம். உரிய முறையில் இந்த தியானம் செய்யப்படும் போது இதய தாமரை மலர்கிறது. இறைக் காட்சி வாய்க்கிறது.
இதயத் தாமரை எங்கே இருக்கிறது எப்படி இருக்கிறது?
பூவில் மணம் அவ்வாறு பொருந்தியிருக்கிறதுதோ, பாலில் எவ்வாறு நெய் பரவியிருக்கிறதோ, எள்ளில் எவ்வாறு எண்ணை இருக்கிறதோ, மூலப்பொருள் எவ்வாறு பொன் இருக்கிறதோ, அவ்வாறே இதயத்தில் தாமரை உள்ளது. அதன் தண்டு மேலாகவும் மொட்டு கீழாகவும் உள்ளது.
சாதாரண நிலையில் இதயத் தாமரை மலராமல் கூம்பிய நிலையில் தலைகீழாக உள்ளது. உரிய முறையில் ஓங்காரத்தை உச்சரித்து தியானம் செய்யும்போது அது நிமிர்ந்து மலர்கிறது.
அகாரத்தை உச்சரிக்கும்போது இதயத்தாமரை அவிழ்கிறது. உகாரத்தை உச்சரிக்கும்போது மலர்கிறது. மகாரத்தை உச்சரிக்கும்போது நாதம் எழுகிறது. அர்த்த மாத்திரை வேளையில் அமைதியில் ஆழ்கிறது. இந்த இதயம் தூய படிகம் போன்றது. பகுதிகள் அற்றது. இதயத் தாமரை மலரும்போது பாவங்கள் அழிகின்றன. யோகத்தில் நிலை பெற்றவன் இதயத் தாமரையில் மேலான இறைவனை பெறுகிறான். ஓம்
No comments:
Post a Comment