Showing posts with label ஐதரேய உபநிஷதம் அத்தியாயம் 1. Show all posts
Showing posts with label ஐதரேய உபநிஷதம் அத்தியாயம் 1. Show all posts

Saturday, October 15, 2016

ஐதரேய உபநிஷதம்




சாந்தி மந்திரம்

    ந்த ஓன்றையும் செய்யும்போது அதற்குரிய மனநிலை இருக்கப்பெறுவது இன்றியமையாது. எந்தகாரியத்தைச்செய்கிறோமோ அதற்குரிய மனநிலையை வரவழைத்துக் கொண்டு, அதன்பிறகு அந்தச்செயலில் ஈடுபடுவது சிறப்பான பலனை அளிக்கும்,

    நமது கோயில்களில் பல பிராகாரங்கள் அமைந்திருப்பதன் காரணம் இதுவே. ஒவ்வொரு பிரகாரத்தில் சுற்றி வரும்போதும் மற்ற எண்ணங்களை எல்லாம் விட்டு, கடைசியாக கருவறையில் சென்று தெய்வத்தைத் தரிசிக்கும்போது, நம்மால் முழுமனதுடன் தெய்வசிந்தனையில் ஈடுபடமுடிகிறது.

     அதுபோல் அனுபூதிக்கருமூலமான உபநிஷதங்களை படிக்க புகுமுன் நமது சிந்தனையை அவற்றுடன் இயைபுபடுத்த சாந்தி மந்திரங்கள் உதவுகின்றன.

    உபநிஷதங்களின் உண்மைப் பொருளை வெறும் புலமையால் உணர முடியாது.  பணிவுடனும் வழிபாட்டு உணர்வுடனும் அணுகும்போது மட்டுமே அதனைப் புரிந்துகொள்ள முடியும். அத்தகைய மனப்பான்மையை மனத்தில் கொள்வதற்காக இந்த மந்திரங்கள் முதலில் ஓதப்படுகின்றன.

    எனது பேச்சு மனதில் நிலை பெறட்டும், மனம் பேச்சில் நிலை பெறட்டும். சுடரொளி பரம்பொருளே, என்னுள் ஒளிர்வாயாக, மனம் பேச்சு ஆகிய இருவரும் வேதங்களின் உண்மையை எனக்கு கொண்டுவருவீர்களாக. என்னால் கேட்கப்பட்டவை என்னை விட்டு விலகாதிருக்கட்டும். கற்றவற்றை இரவும் பகலும் நான் சிந்திப்பேனாக, நான் வியாபகாரிக உண்மையைச் சொல்வேனாக, பரமார்த்திக உண்மையை சொல்வேனாக, அந்த இறைவன் என்னை காக்கட்டும், குருவைக் காக்கட்டும் என்னைக் காக்கட்டும் குருவைக் காக்கட்டும்!
ஓம் சாந்தி சாந்தி சாந்தி

உயர் வாழ்க்கையை நாடுபவர்களுக்கு சிந்தனையும் பேச்சும் ஒன்றாக இருப்பது மிகவும் அவசியம். சாதாரண வாழ்க்கையிலும் உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும், என்று பிரார்த்திக்கிறார் வள்ளலார். உள்ளும் புறமும் ஒன்றாக இருக்கின்ற நிலையை பிரார்த்திக்கிறது இந்த மந்திரம்.

ஐதரேய உபநிஷதம்


மிஞ்சும் அதிசயம்

    படைப்பு பற்றி பொதுவாக எல்லா உபநிஷதங்களும் ஆராய்கின்றன. வெளி, காற்று, நெருப்பு, நீர், பூமி என்ற ஐந்தும் (பஞ்ச பூதங்கள்) படைப்புக்கு அடிப்படை என்ற அளவில் அனைத்து உபநிஷதங்களும் ஒத்திருக்கின்றன. ஆனால் படைப்பு என்ற நிகழ்ச்சியைப் பற்றி ஒவ்வொர் உபநிஷதமும் ஒவ்வொரு கோணத்தில் கூறுகிறது. ஐதரேய உபநிஷத்தின் கருத்தை இங்கே காண்கிறோம்.

ஆரம்பத்தில் கடவுள் ஒருவர் மட்டுமே இருந்தார். இமைக்கின்ற வேறு எதுவும் அப்போது இல்லை. "நான் உலகங்களை படைப்பேன்" என்று அவர் நினைத்தார்.

அம்பலோகம், மரீசிலோகம், மரலோகம், ஆபலோகம், ஆகிய உலகங்களை கடவுள் படைத்தார். அம்பலோகம் சொர்க்க லோகத்துக்கு மேலே உள்ளது. அம்பலோககத்திற்கு சொர்க்கம்  ஆதாரமாக உள்ளது.  மரீசிலோலகம் ஒளியுலகங்கள் நிறைந்த இடைவெளியாகும். மரலோகம் என்பது பூமி, பூமிக்கு கீழே உள்ளது ஆபலோகம்.

 புராணங்களில் 14 உலகங்கள் பற்றிய கருத்துவருகிறது. அதற்கு மூலமாக உள்ளது இந்த உபநிஷதக் கருத்து. 5 உலகங்கள் இங்கே கூறப்படுகின்றன.

 அம்பலோகம்: 'அம்பஸ்' என்றால் தண்ணீர். அம்பலோகம் என்றால் தண்ணீர் உலகம்.   இது சொர்க்கத்துக்கு மேலே உள்ள உலகம். தொலைதூரத்திலிருந்து வானம் நீல கடலை போல் தெரிவதாலோ, அல்லது மழை வானிலிருந்து வருகிற என்ற சாதாரண நம்பிக்கையின் காரணமாகவோ, மிக உயர்ந்ததான அம்பலோகம் தண்ணீர் நிறைந்ததாக கூறப்படுகிறது.


சொர்க்கலோகம்: புராணங்கள் இதனை ஸீவர்லோகம் என்கின்றன. தேவர்கள் வாழும் உலகம் இது. 

மரீசீலோகம்: மரீசீ என்றால் ஒளி. பூமிக்கு மேலுள்ள  இடைவெளி சூரிய கிரணங்களால் ஒளி மயமாக இருப்பதால் இந்த பெயரில் அழைக்கப்பட்டது.

மரலோகம்: மரம் என்றால் மரிப்பவர்கள் அதாவது இறப்பவர்கள் மனிதர்கள். மனிதர்கள் வாழ்கின்ற பூமி.

ஆபலோகம்: 'ஆப' என்றால் தண்ணீர். பூமிக்கு கீழே இருப்பதாகக் கருதப்படுகின்ற பாதாளலோகம். கடல்நீர் கீள் உலகங்கள் வரை பரந்துள்ளது என்றபடியால், தண்ணீர் உலகம் என்று கூறப்பட்டது.

 உலகங்களைப் படைத்துவிட்டேன். இனி உலகின் காவலர்களை படைப்பேன் என்று கடவுள் நினைத்தார். பிறகு தண்ணீரில் இருந்து திரட்டி பிரம்மதேவனை உருவாக்கினார்.

    பிரம்மதேவன் என்பவர் அனைத்து உயிரினங்களின் மொத்த தொகுதி ஆவார். அவரிலிருந்தே படைப்பு ஆரம்பமாயிற்று. 

    தண்ணீர் என்பது ஐந்து அடிப்படை மூலகங்களையும் குறிக்கிறது. நிலம் நீர் போன்ற அடிப்படை மூலங்களிலிருந்து  பிரம்மதேவன் உருவாக்கப்பட்டார். பிரம்மதேவன் உயிரினங்களின் தொகுதி. எனவே மனிதனும் மற்ற உயிரினங்களும் ஐந்து அடிப்படை மூலங்களிலிருந்தே உருவாக்கியவர்கள் என்று இந்த மந்திரம் கூறுகிறது.

கடவுள் பிரம்மதேவனை பற்றி சிந்தித்தார் அப்போது பிரம்மதேவனின் வாய், முட்டை பிளப்பதுபோல், பிளந்தது. வாயிலிருந்து பேச்சு வெளிவந்தது. பேச்சிலிருந்து நெருப்பு வந்தது. 

மூக்கு தோன்றியது. மூக்கு பிளந்தது. மூக்கு துவாரங்களில் இருந்து மூச்சு வந்தது. மூச்சிலிருந்து காற்று தோன்றியது.

கண்கள் தோன்றின. கண்கள் பிளந்தன. அவற்றிலிருந்து பார்வை வந்தது. பார்வையிலிருந்து சூரியன் தோன்றினான்.

காதுகள் தோன்றின. அவை பிளந்த போது கேட்கும் தன்மை உண்டாயிற்று.  அதிலிருந்து திசைகள் தோன்றின.

தோல் உண்டாகியது. தோல் பிளந்து முடிகளும், முடிகளில் இருந்து மூலிகைகளும் செடிகளும் தோன்றின.

இதயம் தோன்றியது. இதயம் பிளந்த போது மனமும் மனத்திலிருந்து சந்திரனும் தோன்றின.

தொப்புள் தோன்றியது. பிளந்த தொப்புளில் இருந்து அபானனும், அபானனிலிருந்து மரணமும் தோன்றியது.

குறி தோன்றியது. பிளந்த குறியிலிருந்து விந்துவும், விந்திலிருந்து தண்ணீரும் உண்டாயிற்று.

    பிரம்மதேவனிலிருந்து உலகமும் உயிரினங்களும் தோன்றியதை இந்த மந்திரம் கூறுகிறது. நெருப்பு, சூரியன், சந்திரன், செடிகொடிகள் ஆகிய உலகின் பல்வேறு அம்சங்கள் உலகம் படைக்கப்பட்டது என்பதை காட்டுகிறது. அதுபோலவே, உடல் மற்றும் மனதின் பல்வேறு அம்சங்கள் உயிரினங்கள், படைக்கப்பட்டன என்பதை காட்டுகிறது.

படைக்கப்பட்ட உயிரினங்கள் இந்த பெரிய கடலில் விழுந்தார்கள். பிரம்மதேவர் அவர்களை பசி தாகத்துக்கு உள்ளாக்கினார்.'நாங்கள் தங்கி, உணவை உண்பதற்கு எங்களுக்கு ஒரு இடத்தை காட்டுங்கள்',என்று பிரம்மதேரிவடம் கேட்டார்கள்.
 
படைப்பு பற்றிய விளக்கம் தொடர்கிறது. படைக்கப் பட்டவர்களிடம் பசி மற்றும் தாக உணர்சியை ஏற்படுத்தினார் பிரம்மதேவர். அவர்கள் கடலில் விழுந்தார்கள். எந்தக் கடலில்?

வாழ்க்கைக் கடலில்' அது வாழ்கை எனும் பெரிய கடல். அறியாமை, ஆசை, செயல்கள் ஆகியவற்றின் காரணமாக, எழுகின்ற துக்கமே அந்தக் கடலில் உள்ள தண்ணீர். கொடிய நோய், மூப்பு, மரணம், ஆகிய பயங்கர ஜந்துக்கள் அந்த கடலில் உலவுகின்றன.  ஆரம்பமோ முடிவோ எல்லைகளோ இல்லாமல் அந்த கடலில் பரந்து கிடக்கிறது. இளைப்பாறுவதற்கு ஓர் இம்மியளவு இடம் கூட அங்கே இல்லை. உலகத்துடன் தொடர்பு கொண்டு, புலன்கள் கொண்டு வருகின்ற அற்ப சுகங்களே ஏதோ ஆறுதலாக உள்ளன. ஆயிரமாயிரம் தீமைகள் அலைகளாகச் சுழன்று அடிக்கின்றன. உலக இன்பங்களை அனுபவிப்பதற்கான தாகம் அந்த அலைகளின் வேகத்தை மேலும் கூட்டுகிறது. அந்த அலைகளால் அடியுண்டு, உயிரனங்கள் "ஐயோ, ஐயோ", என்று அலறி எழுப்புகின்ற கூக்குரல் எங்கும் நிறைந்துள்ளது. இந்த அவலங்கள் போதாதென்று அவர்கள் சிலவேளைகளில் நரகத்திலும் தள்ளப்படுகிறார்கள்.

    ஆனாலும் இந்த வாழ்க்கைக் கடலை கடப்பதற்கு, ஒரு தோணி உள்ளது. உண்மை, நேர்மை, தானம், கருணை, அஹிம்சை, புலனடக்கம், சுயகட்டுப்பாடு, பொறுமை, ஆகியவை அதன் துடுப்புகளாக உள்ளன. தூயவர்களின் தொடர்பும் தியாகமும் அந்த தோணி செல்லும் பாதையாக உள்ளது. அந்தத் தோணியில்  ஏறிசென்றால் மறுகரை ஆகிய மீண்டும் பிறப்பற்ற நிலையை அடையலாம். 

    படைக்கப்பட்ட உயிரினங்கள் பசி, தாகம் போன்ற தேவைகளும் துன்பங்களும் நிறைந்த வாழ்க்கையை பெற்றார்கள் என்பது கருத்து.


பிரம்ம தேவன் அவர்களுக்கு ஒரு பசுவை கொண்டுவந்தார். 'இது எங்களுக்கு போதாது' என்று அவர்கள் கூறினார்கள். அவர் ஒரு குதிரையைக் கொண்டு வந்தார். அதற்கும் அவர்கள் 'இது எங்களுக்கு போதாது' என்று கூறினார்கள்.

பிறகு பிரம்ம தேவன் அவர்களுக்காக ஒரு மனிதனைக் கொண்டு வந்தார். அவனை கண்டதும் அவர்கள், 'ஆஹா! இவர் மனிதன் நிச்சயமாக சிறப்பாக படைக்கப்பட்டவன்' என்று கூறினார்கள். அவர்களிடம் பிரமதேவன் 'அவர்களுக்கு உரிய இடங்களில் புகுந்து கொள்ளுங்கள்' என்றார்.

நெருப்பு பேச்சாகி வாயில் புகுந்தது. காற்று பிராணனாகி மூக்கில் புகுந்தது. சூரியன் பார்வையாகி கண்களில் புகுந்தது. திசைகள் கேட்க்கும் தன்மையாகி காதுகளில் புகுந்தது. மூலிகைகளும் செடிகொடிகளும் முடிகளாகிய தோலில் புகுந்தன. சந்திரன் மனமாகி இதயத்தில் புகுந்தது. மரணம் அபானனாகிய தொப்புளில் புகுந்தது. தண்ணீர் விந்து வாகி குறியில் புகுந்தது.

பசியும் தாகமும் பிரம்மதேவனை அணுகி 'நாங்கள் இருவரும் தங்குவதற்கு ஒரு இடத்தை தெரிவியுங்கள்' என்று கேட்டுக்கொண்டன. அதற்கு பிரமதேவர், 'இந்த தேவர்களிடமே உங்களுக்கு இருப்பிடம் அளிக்கிறேன். அவர்களின் உணவில் பங்குதாரர்களாகவும் ஆக்குகிறேன்' என்றார். அதனால் எந்த தேவனுக்கு உணவு அளிக்கப்பட்டாலும் பசியும் தாகமும் அதில் பங்கேற்கின்றன.

 இயற்கையின் பல்வேறு அம்சங்கள் தோன்றியதாகக் கண்டோம். இயற்கையின் அதே அம்சங்கள் மனிதனில் புகுவதாக கூறப்பட்டுகிறது. உதாரணமாக பிரம்மதேவனின் வாயிலிருந்து பேச்சு வெளிவந்தது. பேச்சிலிருந்து நெருப்பு வந்ததாகக் கூறப்பட்டுள்ளது. அதாவது இயற்கையின் அம்சமாகிய நெருப்பு பேச்சாகி வாயில் புகுந்தது.

    இறைவனிலிருந்து பிரம்மதேவன்,பிரம்மதேவனிலிருந்து இயற்கை, இயற்கையிலிருந்து மனிதன், உயிரின, படைப்பு நிகழ்ததாக கூறப்படுகிறது.

    படைப்பில் மனிதன் சிறந்தவன் என்ற கருத்தை இங்கே நாம் காண்கிறோம். மனிதன் சிறப்பாக படைக்கப்பட்டவன் என்கிறது.கட்டிடங்களில் தாஜ்மஹால் போல் கோயில்களில் மனிதனே சிறந்தவன்.

    கடவுள் உலகை படைத்து அதனை வழிநடத்த தேவ சக்திகளையும் படைத்து, மனிதனையும் படைத்ததை கவிதை நயத்துடன் இந்த அத்தியாயம் விளங்குகிறது.

உணவை படைத்தல்


 உலகங்களையும் அதன் காவலர்களையும் படைத்து விட்டேன். இனி அவர்களுக்கு உணவை உண்டாக்குவேன் என்று கடவுள் நினைத்தார்.

கடவுளும் படைப்பும்

கடவுள் தன்னைப் பற்றி சிந்தித்தார். தண்ணீரிலிருந்து ஒரு உருவம் தோன்றியது. அது உணவே.

கடவுள் படைத்த உணவு திரும்பி ஓட ஆரம்பித்தது. மனிதன் அதனை வாக்கினால் பிடிக்க முயற்சித்தான். முடியவில்லை. வாக்கினால் பிடிக்க முடிந்திருந்தால் உணவு என்று சொல்வதாலேயே திருப்தி அடைந்திருப்பான்.

ப்ராணோ - முகர்வதால்.

 ஓட முயற்சித்த உணவை முகர்வதன் மூலம் பிடிக்க மனிதன் முயற்சித்தான். முடியவில்லை. முகர்வதால் பிடிக்க முடிந்திருந்தால் உணவை முகர்வதன் மூலம் அவன் திருப்தி அடைந்து இருப்பான் மனிதன். 

சக்ஷீஷா - பார்வையால்.

ஓட முயற்சித்த உணவை  மனிதன் பார்வையால் பிடிக்க முயற்சித்தான். முடியவில்லை. பார்வையால் பிடிக்க முடிந்திருந்தால் உணவை பார்த்தாலே அவன் திருப்தி அடைந்து இருப்பான். 

ச்ரோத்ரேணா - கேட்பதால்

ஓட முயற்சித்த உணவை மனிதன் கேட்பதன் மூலம் பிடிக்க முயற்சித்தான். முடியவில்லை. கேட்பதால் பிடிக்க முடிந்திருந்தால் உணவைப் பற்றிப் பேசுவதை கேட்பதாலேயே அவன் திருப்தி அடைந்திருப்பான்.

த்வசா - தொடு உணர்ச்சியால் ஸ்ப்ருஷ்ட்வா - தொடுதால்

ஓட முயற்சித்த உணவை மனிதன் தொடு உணர்சியால் பிடிக்க முயற்சித்தான். முடியவில்லை. தொடு உணர்சியால் பிடிக்க முடிந்திருந்தால் உணவை தொடுவதாலேயே அவன் திருப்தி அடைந்திருப்பான்.

மனஸா - மனத்தால் த்யாத்வா - நினைப்பதால்

ஓட முயற்சித்த உணவை மனிதன் மனத்தால் பிடிக்க முயற்சித்தான். முடியவில்லை. மனத்தால் பிடிக்க முடிந்திருந்தால் உணவை நினைப்பதாலேயே அவன் திருப்தி அடைந்திருப்பான்.

சிச்சேன - குறியால்  விஸ்ருஜ்ய - வெளிப்படுத்துவதால்

ஓட முயற்சித்த உணவை மனிதன் குறியின் மூலம் பிடிக்க முயற்சித்தான். முடியவில்லை. குறியின் மூலம் பிடிக்க முடிந்திருந்தால் உணவை வெளிப்படுத்துவதாலேயே அவன் திருப்தி அடைந்திருப்பான்.

ஓட முயற்சித்த உணவை மனிதன் அபானனால் பிடிக்க முயற்சித்தான். அப்போது அவனால் பிடிக்க முடிந்தது. அபானனன் தான் உணவை பிடிக்கிறது. எனவே அபானனே உணவின் மூலம் வாழ்க்கையை தாங்குகிறது.
பிராண சக்தியின் ஒரு அம்சமே அபானன். வாய் வழியாக உள்ளே செல்கின்ற சக்தி இது. வாய் வழியாக உள்ளே செல்கின்ற உணவை ஏற்றுக் கொண்டு உரிய அவயங்களுக்கு தேவையான அளவு பகிர்ந்து அளிப்பது அபானன் ஆகும். எனவேதான் அபானனால் உணவை பிடிக்க முடிந்தது. அபானன வாழ்க்கையை தாங்குகிறது என்று கூறப்பட்டுள்ளது.

கடவுள் மனிதனுள் புகுதல்

உலகையும் அதனை வழிநடத்து வதற்காக உணவையும் படைத்த கடவுள் மனிதனில் புக நினைத்தார். எங்கும் நிறைந்தவரான கடவுளே மனிதனில் ஆன்மாவாக உள்ளார் என்பதை, அவர் மனிதனில் புகுந்ததாக கவிதை நயத்துடன் விபரிக்கின்றது இந்த மந்திரங்கள். 

 கடவுள் நினைத்தார்

நான் இல்லாமல் எப்படி இயங்க முடியும். எந்த வழியில் நான் இதனுள் புகுவேன்  வாக்கினால் பேசவும், மூச்சினால் சுவாசிக்கவும், பார்வையால் பார்க்கவும், கேட்கும் தன்மையால் கேட்கவும், தொடு உணர்ச்சியால் தொடவும், மனத்தால் நினைக்கவும், அபானனால் ஜீரணிக்கவும், குறியால் வெளிப்படுத்தவும் முடியும் ஆனால் நான் எதற்கு.

உடம்பு உயிர்த் தொகுதி (மனம் +பிராணன்) இங்கு இது என்று கூறப்பட்டுள்ளது, உடம்பும் மனமும் ஐடப்பொருட்கள். இவற்றால் இயங்க முடியாது. இறைவன் மட்டுமே உணர்வுப் பொருள். அவரது ஆற்றல் இருந்தால் மட்டுமே உடம்பும் மனமும் இயங்க முடியும். மின் விசிறி, பல்பு, மின் அடுப்பு, குளிர்சாதனப்பெட்டி என்று எத்தனையோ பொருட்கள் இருக்கலாம். ஆனால் மின்சாரம் இருந்தால் மட்டுமே இவை அத்தனையும் இயங்க முடியும். அதுபோல் இறைவனின் ஆற்றல் உள்ளே புகுந்தால் மட்டுமே உடம்பும் மனமும் புலன்களும் இயங்க முடியும். வாய் பேசுகிறது, மூக்கு சுவாசிக்கிறது என்றெல்லாம் கூறினாலும் உண்மையில் இவற்றை செய்வது இறைவனின் சக்தியே. 

ஜடப் பொருளாக இருக்கின்ற உடம்பு உயிர் தொகுதியில் எந்த வழியாக நுழைந்து அதனை இயக்க வைப்பது என்று கடவுள் நினைத்தார்.

உச்சியை பிளந்துகொண்டு, கடவுள் அந்த வாசல் வழியாக உள்ளே புகுந்தார். அந்த வாசலின் பெயர் வித்ருதி. அது ஆனந்தத்தின் உறைவிடம்.  அவருக்கு உறைவிடங்கள் மூன்று.  கனவுகள் மூன்று. இது உறைவிடம் இது உறைவிடம் இது உறைவிடம்.

    உடம்பு உயிர் தொகுதியான ஜடப்பொருளில் இறைவனாகிய உணர்வுப் பொருள் சேரும் போது மட்டுமே வாழ்க்கை நடைபெறும். உடம்பினுள் அவர் உச்சந்தலை வழியாக உள்ளே நுழைந்தார். என்று மந்திரம் கூறுகிறது.

    இந்த உடம்பு 11 வாசல்களை உடைய நகரம் என்கிறது கட உபநிஷதம். 2 கண்கள், 2 காதுகள், 2 நாசித் துவாரங்கள், வாய், தொப்புள், குறி, குதம்  மற்றும் உச்சந்தலையில் உள்ள பிரம்ம ரந்திரம் ஆகியவையே அந்த பதினொரு வாசல்கள். இந்த பிரம்ம ரந்திரத்தை இறைவழி, அதாவது இறைவனை அடைவதற்கான வழி என்று தைத்திரீய உபநிஷதம் கூறுகிறது.

    இதயத்தின் நாடிகள் நூற்றொன்று.  அவற்றில் ஒன்று உச்சந்தலையை பிளந்து செல்கிறது. அதன் வழியாக மேலே செல்வன் மரணமற்ற நிலையை அடைகிறான். மற்ற நாடிகளின் வழியாக வெளியேறுபவர்கள் பல்வேறு கீழ் உலகங்களில் உழல்கிறான் என்கிறது கட உபநிஷதம். 

    இதயத்திலிருந்து நூற்றொரு நாடிகள் புறப்படுகின்றன. இவற்றின் மூலமே கட்டளைகள் இடப்படுகின்றன. அனுபவங்கள் பெறப்படுகின்றன. நாடிகள் சாதாரண கண்களுக்கு புலனாகாதவை. பிரார்த்தனை, தெய்வீக வாழ்க்கை போன்றவை மூலம் தூய்மையும் ஆற்றலும் வாய்ந்த மனதினால் மட்டுமே அறிய தக்கவை.

    உச்சந்தலையில் உள்ள பிரம்ம ரந்திரத்தின் வழியாக ஒரு நாடி செல்கிறது. இதன் வழியாக உயிரை விடுபவன் மரணமற்ற நிலையை அடைகிறான். மற்ற நூறு நாடிகளும் மீதி 10 வாசல்களுள்.  இதில் ஏதாவது ஒன்றில் நிறைவு  பெறுகின்றன. இவற்றின் வழியாக உயிர் வெளியேறினால் மீண்டும் பிறவி வாய்க்கிறது. ஆசைகளை அற்ற யோகிகளால் மட்டுமே பிரம்ம ரந்திரத்தின் வழியாக உயிரை வெளியேற்ற முடியும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.
 வித்ருதி என்றால் விலக்கப்பட்டது என்று பொருள். இதுவே பிரம்மரந்திரம். இந்த பிரம்ம ரந்திரத்தையே இறைவன் புகுந்த வழியாக இந்த மந்திரம் கூறுகிறது. 

    உடம்பு உயிர் தொகுதியான ஜடப்பொருளில் உணர்வு புகுவதையே  இறைவன் புகுவதாவாக இந்த மந்திரம் கூறுகிறது. உடம்பு உயிர் தொகுதியான ஐடப்பொருளில் எப்போது உணர்வு புகுகிறது.  தாயின் கருவில் இருக்கும் போது.

    தந்தையின் உடம்பில் விந்துவாக இருக்கின்ற உயிர் தாயின் உடம்பை அடைகிறது. பிறகு சொந்த உடம்பில் தங்குகிறது. தந்தையின் உடம்பு தாயின் உடம்பு சொந்த உடம்பு ஆகிய மூன்றும் தான் மூன்று உறைவிடங்கள் என்று கூறப்பட்டுள்ளது.

    மூன்று கனவுகள் என்றால் மூன்று நிலைகள். விழிப்பு, கனவு, ஆழ்ந்த தூக்கம், என்று மூன்று நிலைகளில் மனிதன் வாழ்கிறான். இதுவே மூன்று கனவுகள் என்று கூறப்பட்டது. மூன்று நிலைகளையும் கனவு என்று குறிப்பிடுவது கருத்தில் கொள்ளத்தக்கது.


    நிலையாமை என்ற பண்பே கனவை நிர்ணயிக்கிறது. கனவிலிருந்து விழித்தால் கனவில் கண்டதை அனைத்தும் இல்லாமல் போய்விடுகின்றன. ஆழ்ந்த தூக்கத்திலிருந்து விழிக்கும் போது, அந்த நிலையில் பெற்ற இன்பம் மறைந்து விடுகிறது. அதுபோலவே, இன்று நாம் விழிப்பு நிலை என்று கருதுகின்ற நிலையும் இறையனுபூதி பெறும்போது மறந்துவிடுகிறது. எனவே இதுவும் நிலையற்றது.

    உலகமே ஒரு கனவுதான் இதுவும் கூட(விழிப்புநிலை) ஒரு கனவுதான்.

அனுபூதி 

    மனிதன் கனவு மயமான இந்த உலகை நாடாமல், தன் சொந்த இயல்பான ஆன்மாவை நாடி அனுபூதி பெறவேண்டும் என்று இந்த மந்திரம் கூறுகிறது; 
அனுபூதியின் விளைவையும் தெரிவிக்கிறது.

 மனிதனாகப் பிறந்தவன் மற்ற உயிரினங்களைப் பற்றி ஆலோசிக்க தொடங்கினான். ஆலோசிப்பதற்கு வேறு என்ன இருக்கிறது?  உடம்பில் உறைகின்ற ஆன்மாவே எங்கும் நிறைந்து கடவுளாக இருப்பதை அவன் கண்டான்.  இதை நான் கண்டு கொண்டேன் என்று ஆச்சரியத்துடன் கூறினார்.

    கடவுள் உலகை படைத்தார், அதைக் காப்பதற்கு அவர்களைப் படைத்தார், அவர்களை காப்பதற்காக தேவர்களை படைத்தார், அவர்களுக்கான உணவை படைத்தார், பிறகு உடம்பு உயிர் தொகுதியில் தாமே புகுந்து மனிதராக பிறந்தார்.

     அவ்வாறு பிறந்த மனிதன் அறியாமையால் தன் உண்மை இயல்பை மறந்தான். மற்ற உயிரினங்களையும் உலகத்தையும் பற்றி சிந்திப்பதில் நாட்களைச் செலவிட்டான். இதனை இந்த மந்திரத்தின் முதற்பகுதி கூறுகிறது.

    ஆனால் அறியாமை மறைகின்ற, அனுபூதி பெறுகின்ற காலம் வந்தது. அப்போது தன்னுள் உறையும் ஆன்மாவை மனிதன் கண்டான். அந்த ஆன்மாவே எங்கும் நிறைந்த கடவுளாக இருப்பதையும் கண்டான். மகிழ்ச்சியால் நான் உண்மையை கண்டு கொண்டேன் என்று கூறினார். 

    மந்திரத்தின் கடைசி வார்த்தைக்கு அருகில் மூன்று என்ற எண் உள்ளது. தீ என்ற கடைசி எழுத்தை மூன்று மாத்திரை நீட்டிக்க வேண்டும் என்பது இதன் பொருள். அனுபூதி காரணமாக எழுந்த ஆனத்தின் எழுச்சியை குறிப்பிடுகிறது இது.

 எதையும் விட அருகில் இருப்பவர் கடவுள்

கடவுள் இதந்திரன் என்று அழைக்கப்படுகிறார். நிச்சயமாக அவர் இதந்திரன்தான். ஏனெனில் இதோ என்று காணப்படுவாராக இருக்கிறார் அவர். அவரை இந்திரன் என்று மறைமுகமாக அழைக்கின்றனர். ஏனெனில் தேவர்கள் மறைவாக இருப்பதை விரும்புபவர்கள். தேவர்கள் மறைவாக இருப்பதை விரும்புபவர்கள்.

    வேத காலத்தில் இந்திரன் தேவர்களுக்குத் தலைவன் ஆக மட்டுமன்றி, தலைமைத் தெய்வமாக கருதப்பட்டார். இந்திரன் தனது மாய சக்தியால் பல தெய்வங்களாக உருவெடுத்தான். என்பன போன்ற கருத்துக்களை வேதங்களில் காண்கிறோம்.

இந்திரன் அல்ல இதந்திரன் என்பதே உண்மை பெயர் என்று இந்த உபநிஷதம் கூறுகிறது.  இதம் + த்தர என்று பிரிகின்ற இந்த சொல்லிற்க்கு, கடவுள் நம் அருகில், இதோ என்று கூறத்தக்க வண்ணம் அருகில், நம்முள்ளே இருக்கிறார் என்பது பொருள். நம்முள் இருக்கின்ற அவரை விட்டுவிட்டு உலகை நாட வேண்டியதில்லை என்பதையும் இந்த மந்திரம் சுட்டிக்காட்டுகிறது.

    நாம் வாழ்வதற்கான இந்த அழகிய உலகையும் அதைப் பாதுகாக்கவும் நடத்திச் செல்லவும் தேவர்களையும் படைத்த இறைவன் தம்மை எங்கும் வெளிப்படுத்திக் கொள்ளவில்லை.

    கடவுள் என்ற சொல் "கடந்து உள் நிற்பவர்"என்று பொருள்படுகிறது. அனைத்திலும் மறைந்திருக்கிறார் அவர். அவரும் சரி, தேவ சக்திகளும் சரி மறைந்து இருப்பதையே விரும்புகின்றனர். ஏனெனில் தன்னை மறைத்துக்கொண்டு செய்கின்ற செயல்தான் மிக உயர்ந்த பலனை தருகிறது. 

கடவுளும் படைப்பும்


 அதன் சுருக்கம்:

    புற அதிசயங்கள் அனைத்தையும் மிஞ்சும் அதிசயம் ஆகிய உயிர் உருவாதல் பற்றி இந்த அத்தியாயத்தில் காண்கிறோம்.

    உடல்,உயிர்  (மனம் + பிராணன்), ஆன்மா ஆகியவற்றின் தொகுதியே மனிதன். தான் செய்த நல்வினை மற்றும் தீவினை பயன்களுக்கு ஏற்ப உடல்களை மாற்றியபடி செல்கின்ற உயிரின் பயணமே வாழ்க்கை. உயிர் , பழைய உடலை விடுவது மரணம், புதிய உடலை ஏற்றுக்கொள்வது பிறப்பு.

    உடல் தாயிடமிருந்து கிடைக்கிறது.  உயிர் தந்தையின் வழியாக தாயின் கருப்பைக்குள் புகுகிறது.  இந்த உடல் உயிர் சேர்க்கையில் இறைவன் ஆன்மாவாக புகுந்து அதனை இயக்க செய்கிறார்.  உயிரின் இந்த பயணத்தை பற்றிய சில கருத்துக்களை இங்கு காண்கிறோம்.

கருத்தரித்தல் முதற் பிறப்பு

    (கர்ப்பிணிகள் வெளியேறவும்.) மனிதன் ஆரம்பத்தில் ஆணிடம் விந்துவாக இருக்கிறான். விந்து என்பது எல்லா உறுப்புகளின் ஆற்றல் திரண்டு உருவாகியது. ஓர் ஆண் இவ்வாறு தன்னில் தன்னை விந்து வடிவில் தாங்குகிறான். விந்துவை எப்போது  பெண்ணில் விடுகிறானோ, அப்போது தன்னை குழந்தையாக பிறப்பித்துக் கொள்கிறான்.  இது அவனது முதல் பிறப்பு.

    இந்த மந்திரமும், இந்த அத்தியாயத்தில் தொடரும் மந்திரங்களும் உடலுறவு, கருத்தரித்தல் போன்ற கருத்துக்களைக் கூறுகின்றன. இதிலிருந்து சில உண்மைகளை நாம் அறிந்து கொள்கிறோம்.

    கர்ப்பிணிகள் வெளியேறவும், என்று ஆரம்பத்தில் வருகிறது. எனவே அரச சபை பண்டிதர் சபை போன்ற பொது இடங்களில் இந்த கருத்துக்கள் விவாதிக்கப்பட்டன என்பது தெரிகிறது.

    இத்தகைய எல்லா விவாதங்களிலும் கருத்துப் பரிமாற்றங்களிலும், பெண்கள் கலந்து கொண்டார்கள் என்பது தெரிகிறது.

    பண்டைய சமுதாயம் ஒரு சிறந்த ஆரோக்கியமான சமுதாயமாக விளங்கியதற்கான முக்கிய காரணங்கள் ஒன்றை இங்கே காண்கிறோம். உடலுறவு, கருத்தரித்தல் போன்றவை,சபைகளில் விவாதிக்கப்பட்டன. குருகுலத்தில் தகுந்த ஒருவரால் சிறுவயதிலேயே இவை கற்பிக்கப்படுவது பற்றிய தைத்திரேய உபநிஷதம்சம் கூறுகிறது. உயிரை உருவாக்கிற இந்த உறவை கீதை தெய்வீகமாக போற்றுவதும் இங்கு நினைவுகூரத் தக்கது.

    இனவிருத்தி என்பது கடவுளின் மிகப் புனிதமான சின்னம்;  கணவனும் மனைவியும் சேர்ந்து செய்கின்ற ஆழ்ந்த பிரார்த்தனை நல்லதோ, தீயதோ செய்வதற்கான பெரும் சக்தி பெற்ற ஓர் உயிரை உலகிற்கு கொண்டு வரப்போகின்ற பிரார்த்தனை.  இது என்ன வேடிக்கையோ அல்லது வெறுமனே நரம்புகளுக்கு திருப்த்தி அளிக்கின்ற செயலா. மிருகத்தனமான உடல் இன்ப அனுபவமா இல்லை இல்லை என்று ஆயிரம் தடவை சொலுகிறான் இந்து. என்கிறார் சுவாமி விவேகானந்தர்.

    வாழ்க்கையின் அடிப்படை அம்சங்களான இவை பற்றி உரிய வேளையில், உரிய முறைப்படி சிந்திப்பதும் கற்பிப்பதும் செயல்படுவதும், நல்ல சமுதாயம் உருவாக வழிகோலுகின்றன.

உடலுக்கு சொந்தமான ஓர் உறுப்பு போல் விந்து பெண்ணுடன் ஒன்று பட்டு விடுகிறது. அது அவளை துன்புறுத்துவதில்லை. விந்துவாக தன்னில் புகுந்த உயிரை அவள் கருப்பையில் பாதுகாத்துக் கொள்கிறார்.

    குழந்தை பிறப்பு இரண்டாம் பிறப்பு 

கருவை பாதுகாக்கின்ற பெண் பாதுகாக்கப்பட வேண்டியவள். (குழந்தை பிறக்க முன்பு அதனை) கருவாக பாதுகாக்கிறாள். பிறந்தபிறகு, ஆரம்பத்திலும் அதன்பிறகும் தந்தை பாதுகாக்கிறான். அந்தக் குழந்தையைத் தானாகவே எண்ணி பாதுகாக்கிறார் அவர்.  உயிர்களின் சந்ததிச் சங்கிலி தொடர் வதற்காகவே அவர் இவ்வாறு செய்கிறார். (இவ்வுலகம், மறுவுலகம் ஆகிய) உலகங்களின் தொடர்பு இவ்வாறு வளர்கிறது.  (தாயின் வயிற்றிலிருந்து குழந்தையாகப் )  பிறப்பது மனிதனின் இரண்டாம் பிறப்பு.

மரணம் மூன்றாம் பிறப்பு 

    இந்த உலகில் நற்செயல்களை தொடர்வதற்கு மகன் நியமிக்கப்படுகிறார். செய்ய வேண்டியவற்றை செய்த தந்தை வயதாகி இறக்கிறான். இந்த உடம்பிலிருந்து வெளியேறி, மீண்டும் பிறக்கிறார். இது அவரது மூன்றாவது பிறப்பு.

    ஒரு மனிதரின் மூன்று பிறப்புக்களை மந்திரங்கள் கூறுகின்றன. தந்தையிடமிருந்து தாயிடம் புகுந்தது முதல்பிறப்பு. தாயிடமிருந்து உலகில் பிறந்தது இரண்டாம் பிறப்பு. இந்த உடம்பிலிருந்து வெளியேறி (இறந்து)மீண்டும் பிறப்பது, மூன்றாம் பிறப்பு.

     மரணத்திற்குப் பிறகு நல்வினை மற்றும் தீவினை பயன்களை அனுபவிப்பதற்காக மறு உலகிற்கு செல்வதையே மூன்றாம் பிறப்பு  அல்லது மீண்டும் பூமியில் பிறப்பதை மூன்றாம் பிறப்பது.

    தந்தையே மகனாக பிறக்கிறார். மகனை தனது பிரதிநிதியாக உலகில் விட்டுவிட்டு தனது பயணத்தை தொடருகிறார். 

கருப்பையின் உள்ளே 

 அதுபற்றி முனிவரால் சொல்லப்பட்டுள்ளது.  கர்ப்பத்தில் இருக்கும்போதே நான் தேவர்களின் பிறப்புகள் அனைத்தையும் அறிந்து கொண்டேன்.  நூறு இரும்பு கோட்டைகள் என்னை காவல் காத்தன. ஒரு பருந்து போல் விரைவாக நான் வெளியே வந்தேன். கர்ப்பத்தில் படுத்து இருக்கும் போதே வாமதேவர் இவ்வாறு கூறினார்.

    தாயின் கர்ப்பத்தில் இருக்கும்போதே அனுபூதி பெற்றவர் வாமதேவர். அக்கினிதேவன் முதலான தேவர்களுக்கு மறுபிறவிகள் உண்டு என்பதை அவர் அப்போது அறிந்துகொண்டார்.  அதனுடன் தமது முற்பிறவி உண்மைகளையும் அறிந்தார். எத்தனையோ பிறவிகள் எடுத்து அந்த பிறவிகள் ஒவ்வொன்றிலும் பல்வேறு உணர்வுகளைத் தாங்கி வாழ்ந்தார்.  அந்த உடம்புகளை இங்கு இரும்புக்கோட்டை என்று அவர் கூறுகிறார்.  உடம்பு ஒவ்வொன்றும் ஓர் இரும்புக் கோட்டையாக உயிரை சிறைபிடித்து வைப்பதுபோல் வைத்துள்ளனர்.  வலையை கிழித்து வெளியேறுகின்ற பருந்து போல்தான் இந்த கோட்டைகளை கடந்து, இந்த பிறவியைப் பெற்று அனுபூதி அடைந்ததாக அவர் கூறுகிறார். 

    நாம் ஒவ்வொருவரும் தாயின் கருவில் இருக்கும்போதே இந்த அனுபவத்தைப் பெறுகிறோம். ஆனால் பூமியில் பிறந்ததும் அதனை மறந்து விடுகிறோம். ஒன்பதாம் மாதத்தில் எல்லா அங்கங்களும் பூர்த்தியாகிறது. முற்பிறவி நினைவு வருகிறது. புண்ணிய பாவங்களின் உணர்வு வருகிறது. ஆனால் பிறந்ததும் கடவுளின் மாய சக்தியால் அதை மறந்து விடுகிறோம். என்கிறது கர்ப்ப உபநிஷதம்.

     இந்த உண்மைகளை அறிந்து, உடம்பு அழிந்ததும் வெளியேறி சொர்க்கலோத்திற்கு சென்றார். அங்கு எல்லா ஆசைகளையும் நிறைவேறப் பெற்று, மரணமிலா நிலையை அடைந்தார். மரணமிலா நிலையை அடைந்தார். (கர்பிணிகள் உரிய இடத்தில் வந்து அமரலாம்.)