Thursday, 13 October 2016

கேன உபநிஷதம்



          எந்த ஓன்றையும் செய்யும்போது அதற்குரிய மனநிலை இருக்கப்பெறுவது இன்றியமையாது. எந்தகாரியத்தைச்செய்கிறோமோ அதற்குரிய மனநிலையை வரவழைத்துக் கொண்டு, அதன்பிறகு அந்தச்செயலில் ஈடுபடுவது சிறப்பான பலனை அளிக்கும்,

       நமது கோயில்களில் பல பிராகாரங்கள் அமைந்திருப்பதன் காரணம் இதுவே. ஒவ்வொரு பிரகாரத்தில் சுற்றி வரும்போதும் மற்ற எண்ணங்களை எல்லாம் விட்டு, கடைசியாக கருவறையில் சென்று தெய்வத்தைத் தரிசிக்கும்போது, நம்மால் முழுமனதுடன் தெய்வசிந்தனையில் ஈடுபடமுடிகிறது.

         அதுபோல் அனுபூதிக்கருமூலமான உபநிஷதங்களை படிக்க புகுமுன் நமது சிந்தனையை அவற்றுடன் இயைபுபடுத்த சாந்தி மந்திரங்கள் உதவுகின்றன.


    கேன உபநிஷதத்திற்கு இரண்டு சாந்தி மந்திரங்கள் உள்ளன.

1.      ஓம் ஸஹ நாவவது|  ஸகநௌ  புனத்து|
ஸஹ  வீர்யம்  கரவாவஹை|
தேஜஸ்வி  நாவதீதமஸ்து  மா  வித்ஷாவஹை||
ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி:||

       ஸகநௌ - நம் இருவரையும்; அவது - காப்பாராக; ஸகநௌ -நம் இருவரையும்; புனத்து - அனுபவிக்குமாறு ஊக்குவிப்பாராக; ஸஹ - சேர்ந்து ; வீர்யம் - ஈடுபாடுமிக்க ஆறறலுடன் கரவாவஹை - உழைப்போமாக; அதீதம் - கற்றது; நௌ - நமக்கு; தேஜஸ்வி - பயனுள்ளதாக; அஸ்து - விளங்கட்டும்; மா வித்ஷாவஹை - வெறுக்காமல் இருப்பபோமாக.|

          ஆச்சாரியர், சீடர் ஆகிய நம் இருவரையும் இறைவன் காப்பாராக! அறிவின் ஆற்றலை நாம் இருவரும் அனுபவிக்குமாறு ஊக்குவிப்பாமாக! கற்றது நமக்குப் பயனுள்ளதாக விளங்கட்டும்! எதற்காகவும் நாம் ஒருவரையொருவர் வெறுக்காமல் இருப்போமாக!

         குறைகளும் தடைகளும் இல்லாமல் உபநிஷதக்கல்வி நிறைவேற இந்த மந்திரம் பிராத்திக்கிறது.

2.        ஓம்   ஆப்யாயந்து   மமாங்கானி   வாக்ப்ராணச் சக்ஷீ:
 ச்ரோத்தம்   அதோ பலமிந்த்ரியாணி   ச   ஸர்வாணி   |
  ஸர்வம்   ப்ரஹ்மௌப   -   நிஷதம்   மாஹம்   ப்ரஹ்ம    நிராகுர்யாம்   மா   மா   ப்ரஹ்ம   நிராகரோத்   அனிராகரணமஸ்து அனிராகரணம் மஸ்து   |   ததாத்மனி   நிரதே   ய   உபநிஷத்ஸீ    தர்மாஸ்தே   மயி ஸந்து ||
ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி:||


       எனது அபயங்களான,வாக்கு, பிராணன்,கண்கள், காதுகள்,மற்றும் எல்லா புலன்களும் மிகுந்த ஆற்றலுடன் விளங்கட்டும்.  உபநிஷதங்கள் கூறுகின்ற இறைவனே எல்லாம். அந்த இறைவனை நான் மறுக்காதிருப்பேனாக. இறைவன் என்னை மறுக்காதிருப்பாராக.  இறைவனிடமிருந்தும் மறுப்பு இல்லாதிருக்கட்டும். உபநிஷதங்களில் கூறப்பட்டுள்ள தா்மங்கள், ஆன்மாவை நாடுகின்ற என்னில் குடிகொள்ளட்டும்!

      எதையும் சாதிப்பதற்கு உறுதியான உடலும் திடமான மனமும்வேண்டும். இரண்டையும் பிராத்திக்கிறது இந்த மந்திரம்.

       மூன்றுவிதமான தடைகளிருந்து நாம் விடுபடுவதற்காக ஓம் சாந்தி சாந்தி சாந்தி என்று மூன்று முறை சொல்லப்படுகிறது.

மூன்றுதடைகள் வருமாறு

1.  ஆத்யாத்மிகம்  - நம்மால் வரும்தடை உடல்நோய் மனப்பிரச்சனைகள் போன்றவை.

2.  ஆதி பௌதீகம் - பிற உயிா்களால் வரும் தடை.

3.  ஆதி தைவிகம் - இயற்கை சக்திகளால் வரும்தடை மழை, இடி,தீ போன்றவற்றால் வருபவை.

1
எல்லாம் யாரால்


        எல்லாம் யாரால் இவை எல்லாம் யாரால் உடல் மனம், பிராணன் போன்றவை செயல்படுவது யாரால் என்ற கேள்வியுடன் உபநிஷதம் ஆரம்பிக்கிறது.

 யாரால் எல்லாம் இயங்குகின்றன? 1 - 2

       ஓம் கேனேஷிதாம் பததி பரேஷிதம் மன
கேன ப்ராண ப்ரதம ப்ரைதி யுக்த
கேனேஷிதாம் வாசமிமாம் வதந்தி
சக்ஷீ ச்ரோத்திரம் க உ தேவா யுனக்தி

         கேன - எதனால் ஈஷிதம் - விருப்ப்பட்டு பததி - செலகிறது ப்பிரேஷிதம் - ஏவப்பட்ட மன - மனம் ப்ராண - பிராணன் ப்ரதம - முக்கிய  ப்ரைதி  - செல்கிறது  யுக்த - செலுத்தப்பட்டு கேன இமாம் - எதனால் இந்த
வாசமிமாம் - இந்த வாக்குவதந்தி - பேசுகிறது சக்ஷீ - கண்  ச்ரோத்ரம் - காது
கஉ - எந்த  தேவோ - தேவன் யுனக்தி - செலுத்துகிறான்

         ஏவப்பட்ட மனம் யாருடையது விருப்பத்தால் செ்ல்கிறது ?  முக்கியப் பிராணனைச் செலுத்துவது யாா்?  யாருடைய சங்கல்பத்தால் வாக்கு பேசப்படுகிறது? கண்களையும் காதுகளையும் எந்தத்தேவன் செயல்படுத்துகிறான்?

         மனம்  என்ற ஒன்று இருப்பதை நாம் அறிவோம். நாம் அறிந்தவற்றுள் விரைவானது மனம். அதற்கு இந்த வேகத்தை கொடுத்தது யாா்?

       பிராணன். எங்கும் நிறைந்தது உலகை இயக்குகின்ற ஆற்றலே பிராணன்.  அந்த பிராணனின் ஓா் அம்சம் நம்மிலும் செயல்படுகிறது. நமது உடல், அதன் இயக்கங்கள் மனம், அதன் செயற்பாடுகள் அனைத்தும் பிராணன் என்கின்ற ஆற்றலினாலேயே செயல்படுகின்றன.  இந்த பிராணனை இயக்குவது யாா்?

வாக்கு எதனால் ஏவப்பட்டு இயங்குகிறது?

       கண் காது என்ற இரண்டு பெயா்களின்மூலம் அனைத்தும் புலன்களும் சுட்டிக்காட்டப்படுகின்றன புலன்கள் யாரால்  செயல்படுகின்றன?

         உடம்பும் மனமும் புலன்களும் பிராணனும் எல்லாம் இயங்குவது யாரால் என்பது கேள்வி?
ச்ரோத்ரஸ்ய ச்ரோத்ரம் மனஸோ மனோ யத்
வாசோ ஹ வாசம் ஸ உ ப்ராணஸ்ய ப்ராண
சக்ஷுஷச்சக்ஷுரதிமுச்சய தீரா
ப்ரேத்யாஸ்மால்லோகாதம்ருதா பவந்தி

        யத் - அந்த  ச்ரோத்ரஸ்ய - காதின்   ச்ரோத்ரம் - காசு   மனஸ - மனத்தின்    வாச - வாக்கின் வாசம் - வாக்கு  ப்ராணஸ்ய - பிராணனின்  ப்ராண - பிராணன்  ஷசக்ஷு - கண்ணின் சக்ஷீ -கண்  ஸஉஹ - ஆன்மாவே
தீரா - உணா்வு விழிக்கப் பெற்றவன் அதிமுச்சய - விட்டு  அஸ்மாத் இந்தலோகாத் - உலகிலிருந்து ப்ரேத்தய - விலகி அம்ருதா - மரணமற்ற நிலையை  பவந்தி - அடைகிறான்

2.       காதின் காதாக,மனத்தின் மனமாக, வாக்கின் வாக்காக, பிராணனின் பிராணனாக, கண்ணின் கண்ணாக இருப்பது ஆன்மா.  உணா்வு விழிக்கப் பெற்றவன் இந்த உண்மையை உணா்ந்து, புலன் உலகிலிருந்து விலகி மரணமற்ற நிலையை அடைகிறான்.

        முந்தின மந்திரத்தில் உடம்பும் மனமும் எல்லாம் யாரால் இயங்குகின்றன என்ற கேள்வி எழுப்பப்பட்டது. ஆன்மா  என்று என்று இந்த மந்திரம் பதில் சொல்கிறது.

          உடம்பு, மனம், ஆன்மா என்று பலவற்றின் தொகுதியால் ஆனவன் மனிதன். உடம்பின் செயல்பாடுகளோ, அது இயங்கும் முறையோ பொதுவாக நமக்குத்தெரியாது. என்றாலும் உடம்பு என்ற ஒன்று இருப்பதை நாம் அறிவோம்.

         உடம்பிற்குப் பின்னால் மனம் ஒன்று இருப்பதையும் அறிந்து கொள்ள முடியும். உடம்பு வெறும் கருவி மட்டுமே. அதனை இயக்கிக் கொண்டிருப்பது மனம். இந்த மனம் எங்கே இருக்கிறது, எதனால் ஆனது,எப்படி இயங்குகிறது என்பதெல்லாம் நமக்குத் தெரியாது. ஆனால் அது உடம்பை இயங்கிக் கொட்டிருப்பது தெரிகிறது. காது கண் போன்ற புலன்கள் அதன் வாசல்கள் ஆகும். இந்த வாசல்களின் வழியாக மனம் புற உலகுடன் தொடர்பு  கொள்கிறது, அனுபவங்களைப் பெறுகிறது.

         மனம் சுதந்திரமானதா, அல்லது, மனத்திற்கு பின்னால் அதனை இயக்கியபடி வேறு ஏதாவது உள்ளதா என்பதே முதல் மந்திரத்தில் எழுப்பப்பட்ட கேள்வி. மனத்திற்குபின்னால் ஆன்மா என்ற ஒன்று இருக்கிறது. அதுவே மனத்தையும் உடம்பையும் இயக்குகின்றது என்று இந்த மந்திரம் பதில் சொல்கிறது.

         புற உருவங்களை கண் பாா்க்கிறது. கண்ணை மனம் பாா்க்கிறது. மனத்தில்  எழுகின்ற எண்ண அலைகளை ஆன்மா காண்கின்றது. ஆன்மாவே காண்பவன். ஆன்மாவை யாரும்காண இயலாது என்கிறது த்துருக் த்ருச்ய விவேகம்.

       எனவே மனத்தையோ அதன் செயல்பாடுகளையோ நாடிப் பயனில்லை என்பதை விளிப்புணா்வு பெற்றவன் அறிந்து கொள்கிறான். ஆன்மாவை நாடுகிறான்.

ஆன்மாவை நாடுவதன் பலன் என்ன மரணமற்ற நிலை.

ஆன்மா: விளக்க இயலாதது

       நதத்ர சக்ஷீா்கச்சதி ந வாக்கச்சதி நோ மன
ந வித்மோ ந விஜானிமோ யதைததனு சிஷ்யாத்

        தத்ர - அங்கே  சக்ஷீ - கண் ந கச்சதி - செல்வதில்லை  வாக் - வாக்கு  மன - மனம்  ந உ - செல்வதில்லைந வித்ம - எங்களுக்கு தெரியாது
ஏதத் - இதனை  யதா - எப்படி  அனுசிஷ்யாத் - புரியவைப்பது
ந விஜானீம - தொியாது

3.      அக்கே கண் செல்வதில்லை, வாக்கும் மனமும் செல்வதில்லை. எனே அது எத்தகையது என்பது எங்களுக்கு தெரியாது. அதனை எப்படி பிறருக்குப் புரியவைப்பது என்பதும் எங்களுக்குத் தொியாது.

        தொலைநோக்கியால் தூரத்திலுள்ள பொருட்களைப் பாா்க்க முடியும் அருகிலுள்ள ஒன்றைப் பாா்க முடியாது. நுண்ணோக்கியால் அருகிலுள்ளதைப் பாா்க்க முடியும் தொலைவில் உள்ளதை பாா்க்க முடியாது.  தூரத்தில் உள்ளவற்றைப் பாற்பதற்காக உருவாக்கப்பட்டது தொலை நோக்கி, அருகில் உள்ளவற்றை பெரிதாகக் காண்பதற்கு உருவாக்கப்பட்டது. ஒன்றின் பணியை மற்றொன்று செய்ய இயலாது. அதுபோலவே புலன்கள் புற உலகை அனுபவிப்பதற்காக உள்ளவை அவற்றால் அகத்திலுள்ள எதையும் காணவோ அறியவோ இயலாது என்று கட உபநிஷதம் கூறுகிறது.

       புலன்களால் அனுபவிக்க இயலாத ஓன்றை எப்படி புலன்களால் விளக்க முடியும்  எனவேதான்,தாம் ஆன்ம அனுபூதி பெற்றவராக இருந்தும் தம்மால் அதனை விளக்க இயலவில்லை என்று பணிவுடன் கூறுகிறாா் உபநிஷத முனிவா்.


ஆன்மா: அறியமுடியாதது

      அன்யதேவ தத்விதிதாததோ அவிதிதாததி
இதி சுச்ரும பூா்வேஷாம் யே நஸ்தத் வ்யாசசக்ஷிரே


          அன்யதேவ - வேறுபட்டது  தத் - அது  விதிதாத் - அறிந்தவற்றிலிருந்து  அதோ - மேலும்  அவிதிதாத் - அறியாதவற்றிலிருந்து  அதி - மேலானது  இதி - இவ்வாறு
சுச்ரும - கேள்விப்பட்டிருக்கிறோம்  பூா்வேஷாம் - முன்னோா்களிடமிருந்து  யே - யாா்    நஸ் - எங்களுக்கு  தத் - அதை  வ்யாசசக்ஷீரே - விளக்கினாா்களே

4.        அந்த ஆன்மா அறிந்தவற்றிலிருந்து வேறுபட்டது அறியாதவற்றை விடமேலானது. எங்களுக்கு அதைப்பற்றி விளக்கிய முன்னோா்களிடமிருந்து நாங்கள் இவ்வாறு கேள்விப்பட்டிருக்கறோம்.

        உலகில் நாம் அறியாதவை  எவ்வளவோ உள்ளன. உயிாினங்களிலும் நாம் அறிந்தது மிகமிகச் சொற்பமே. ஆயினும், உலகமும் உயிா்களும் நாம் அறிந்தவை. அதாவது அவை இருப்பது நமக்குத் தெரியும். அவை ஆன்மா அல்ல. இனி,நாம் அறியாத உலகங்கள். எவ்வளவோ உள்ளன. இப்படி நாம் அறியாதவற்றை ஆன்மா என்று கூறலாமா  இல்லை. ஏனெனில் அறியாதவற்றை ஒருநாள் அறிந்து விடமுடியும். எனவே அவை ஆன்மா அல்ல.

          அறிந்தவையும் ஆன்மா அல்ல அறியாதவையும் ஆன்மாஅல்ல. இதன் பொருள் என்ன  ஆன்மா அறியப்பட முடியாதது.  உலகப்பொருட்களைப்போல் ஆன்மாவை அறியமுடியாதது.

ஆன்மா அனைத்து செயல்களுக்கும் ஆதாரம்

       யத் வாசா அனப்யுதிதம் யேன வாகப் அப்யுத்ததே

தத் ஏவ ப்ரஹ்ம த்வம் வித்தி இதம் யத் உபாஸதே

         யத் -எது  வாசா - வாக்கினால்  அனப்யுதிதம் - விளக்கப்பட முடியாதோ
யேன - எதனால்  வாக் - வாக்கு  அப்யுத்யதே - விளக்கம் பெறுகிறதோ
தத் தேவ - அதுவே  ப்ரஹ்ம - ஆன்மா  த்வம் - நீ வித்தி - அறிய  யத் - எது
இதம் - இங்கே  உபாஸதே - வழிபடுகிறாா்களோ.  இதம் - இது
ந - அல்ல

5.        எது வாக்கினால் விளக்கப்பட முடியாதோ, எதனால் வாக்கு விளக்கம் பெறுகிறதோ அதுவே ஆன்மா.
இங்கே வழிபடுகின்ற பொருள் ஆன்மா அல்ல என்பதை அறிந்துகொள்.


        யத் மனஸா  ந மனுதே யேன ஆஹீ மன மதம்
தத் ஏவ ப்ரஹ்ம த்வம் வித்தி இதம் யத் த உபாஸதே.

        யத் - எது மனஸா  - மனத்தால் ந மனுதே - அறியப்பட முடியாதோ  யேன - எதனால்  ஆஹீ - சொல்கிறார்கள்  மன - மனம்  மதம் - அறியப்படுகிறதோ
தத் ஏவ - அதுவே  ப்ரஹ்ம - ஆன்மா  த்வம் - நீ  வித்தி - அறி  இதம் - இங்கே
யத் - எது  ந - அல்ல உபாஸதே - வழிபடுகிறா்கள்

          யன்மனஸா -  எது மனத்தால்   ந மனுதே - அறியப்பட முடியாதோ                யேன - எதனால்  ஆஹீ - சொல்கிறார்கள்  மதம் - அறியபப்படுகிறதோ          தத் ஏவ  -  அதுவே    ப்ரஹ்ம - ஆன்மா    த்வம் - நீ   வித்தி - அறி    இதம் - இங்கே  யத் - எது     ந - அல்ல   உபாஸதே - வழிபடுகிறார்கள்

6.        எது மனத்தால் அறியப்படமுடியாதோ, எதனால் மனம் அறியப்படுகிறதோ அதுவே ஆன்மா என்று சான்றோர்ககள் கூறுகிறார்கள். இங்கே வழிபடப்படுகின்றபொருள் ஆன்மா அல்ல என்பதை அறிந்துகொள்.

       யத் - எது    சக்ஷீஷா - கண்ணால்   ந பச்யதி - பார்க்கப்படுவதில்லையோ யேன - எதனால் தத் ஏவ  -  அதுவே    ப்ரஹ்ம - ஆன்மா    த்வம் - நீ   வித்தி - அறி    இதம் - இங்கே  யத் - எது     ந - அல்ல   உபாஸதே - வழிபடுகிறார்கள்.



7.        எது கண்களால் பார்கப்படுவதில்லையோ, எதனால் கண்கள் பார்க்கின்றனவோ அதுவே ஆன்மா.  இங்கே வழிபடப்படுகின்ற பொருள் ஆன்மா அல்ல என்பதை அறிந்துகொள்.


        யச்ச்ரோத்ரேண ந ச்ருணோதி யேன ச்ரோத்ரமிதம் ச்ருதம்|

ததேவ ப்ரஹ்ம த்வம் வித்தி நேதம் யதிதமுபாஸதே ||


       யத் - எது: ச்ரோத்ரேண - காதுகளால்  ந ச்ருணோதி -  கேட்கபடுவதில்லையோ யேன - எதனால்   இதம் - இந்த   ச்ரோத்திரம் - கேட்பவை ச்ருதம் - கேட்கப்படுகின்றனவோ.

8.       எது காதுகளால் கேட்கப்படுவதில்லையோ, எதனால் காதுகள் கேட்கின்றனவோ அதுவே ஆன்மா.  இங்கே வழிபடப்படுகின்ற பொருள் ஆன்மா அல்ல என்பதை அறிந்துகொள்.

       யத்ப்ராணேன ந ப்பிராணிதி யேன ப்ராண : ப்ரணீயதே|
ததேவ ப்ரஹ்ம த்வம் வித்தி நேதம் யதிதமுபாஸதே||

       யத் - எது   ப்ராணேன - மூச்சினால்   ந ப்ராணிதி - முகரப்படுவதில்லையோ  யேன - எதனால்  ப்ராணீயதே - முகர்கின்றது.

9.       எது மூச்சினால் முகரப்படுவதில்லையோ, எதனால் மூச்சு முகர்கின்றதோ அதுவே ஆன்மா. இங்கே வழிபடப்படுகின்ற  பொருள் ஆன்மா அல்ல என்பதை அறிந்துகொள்.

      ஓளி இருப்பதால் பொருட்கள் விளக்கம் பெறுகின்றன.  ஆனால் பொருட்களால் ஒளி விளக்கம் பெறுவதில்லை. அதுபோல் ஆன்மா இருப்பதால் அனைத்துச் செயல்களும் நடைபெறுகின்றன.  ஆனால் செயல்களைச் செய்கின்ற கருவிகளால் ஆன்மாவை அறிய இயலாது.

        இந்த 5 மந்திரங்களிலும் ஒரே வரி மீண்டும் மீண்டும் சொல்லப்படுகிறது. அதன்மூலம் அந்தக் கருத்தின் முக்கியத்துவம் வலியுறுத்தப்படுகிறது. நாம் இங்கே  வழிபடுகின்ற பொருள் ஆன்மா அல்ல என்பதே அத்தக் கருத்து.

         ஆன்மா என்பது எது?  இறைவனே, எங்கும் நிறைந்த இறைவனே நம்மில் ஆன்மாவாக விளங்குகிறார். இறைவன், கடவுள், தெய்வம் என்றதும் நம் நினைவுக்கு வருபவை கோயிலும் தெய்வங்களுமே. சாதாரண மனிதனின் ஆன்மீகம் கோயிலையும் தெய்வ வழிபாட்டையும் சார்ந்தே உள்ளது. அவை ஆன்மா அல்ல, அதாவது இறைவன் அல்ல என்று இங்கே கூறப்படுகிறது.


         கோவிலுள்ள விக்கிரகங்கள் கல்லினாலும் செம்பினாலும் ஆனவை.  வீட்டிலுள்ள பூஜையறையில் நாம் வழிபடுகின்ற தெய்வங்கள் காகிதத்தாலும் மையாலும் ஆனவை.   கல்லும்  செம்பும்  காகிதமும்  மையும்  கடவுள்  அல்ல என்பது  நம்  ஒவ்வொருவருக்கும்  தெரியும்.   அப்படியானால் ஏன் வழிபடுகிறோம்?   இந்தக் கல்லும் செம்பும் நம்மில் இருக்கின்ற ஆன்மாவைக் காண்பதற்கான ஒரு படி என்பதால்.

        வானில் ஒரு குறிப்பிட்ட நட்சத்திரத்தைக் காண்பதற்கு படிப்படியான வழியைக் கையாள்கிறோம்.  முதலில் ஒரு மரம், மரத்தின் கிளை, கிளை வழியே தெரிகின்ற பிரகாசமான நட்சத்திரம்,   அதன் அருகில் நாம் பார்க்கவேண்டிய  நட்சத்திரம் என்று படிப்படியாக காணும்போது விரைவில் அந்தக் குறிப்பிட்ட நட்சத்திரத்தை காணமுடிகிறது.   அதுபோலவே எங்கும் நிறைந்த இறைவனை சட்டென்று அகத்தில் காணவேண்டும் என்றால் அது அவ்வளவு சுலபம் அல்ல.  எனவே முதலில்  புறத்தில் ஒரு விக்கிரத்தில்.  ஒரு  படத்தில் அவரைக் காண முயற்சிக்கிறோம்.   ஆன்மாவாக  நம்மில் நிலவுகின்ற இறைவனை அறிவதற்கான ஒரு படியே  நாம் புறத்தில் செய்கின்ற வழிபாடு என்பதை நினைவில்  வைத்திருக்கவேண்டும். புறத்தில்தேடி காணமுடியாத  இறைவனைக் கடைசியாக  அகத்தில் தேடி அங்கே கண்டதாக கூறுகிறார் அப்பர் பெருமான்.

      எனவே நாம்வழிபடுகின்ற விக்கிரகங்களும் படங்களும் உண்மை இறையனுபவத்திற்கான ஒரு படிமட்டுமே. அவை அறுதி நிலை அல்ல என்பதை மனத்தில் கொள்ளவேண்டும் என்பதற்காகவே இநத மந்திரங்கள் அந்தக் கருத்தை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகின்றன.

இதி கேனோபநிஷதி ப்ரதம: கண்ட:||

இவ்வாறு கேன உபநிஷதத்தில்
முதல் அத்தியாயம் நிறைவுறுகிறது. 

1

எல்லாம் யாரால்?
( சுருக்கம்)

1. யாரால் எல்லாம் இயஙு்குகின்றன? : 1 - 2

2. ஆன்மா 3-9

I. விளக்க இயலாதது: 3

II. அறியமுடியாதது: 4
III. அனைத்து செயல்களுக்கும் ஆதாரம்: 5-9

2

ஆன்மாவைத் தேடு

       நாம் வழிபடுகின்ற பொருள் ஆன்மா அல்ல (#1:5-9)
என்ற கருத்து இங்கே தொடர்கிறது.  ஒரு விக்கிரகத்தை வழிபடுவதுடன் நமது முயற்சி நின்றுவிடக்கூடாது, அவரை மேலும் அறிய வேண்டும், நம்முள் தேட வேண்டும் என்ற கருத்து இந்த அத்தியாயத்தில் வலியுறுத்தப்படுகிறது.

அறிந்தது கொஞ்சமே


யதி மன்யஸே ஸீவேதேதி தப்ரமேவாயி
நூனம் த்வம் வேத்த ப்ரஹ்மணோ ரூபம்|
யதஸ்ய த்வம் யதஸ்ய தேவேஷ்வத நு
மீமாம்ஸ்யமேவ தே மன்யே விதிதம்||


       யதி மன்யஸே - நினைப்பாயானால்   ஸீவேத -நன்றாகத் தெரியும்   இதி - என்று    தப்ரம்  ஏவ அபி - மிகக் கொஞ்சமே   நூனம் - நிச்சயமாக    த்வம் - நீ   வேத்த - அறிந்தது  ப்ரஹ்மணோ ரூபம் -  ஆன்மாவை    யத் - எது   அஸ்ய - அதனுடைய   த்வம் - நீ    தேவேஷீ - தெய்வங்களில்    அத நு - பிறகு;    தே - உனக்கு   மீமாம்ஸ்யம் ஏவ -  அறிய வேண்டும்    மன்யே - நினைக்கிறேன்  விகிதம் - தெரியும்; 

1.       குரு: ஆன்மாவை நன்றாகத் தெரியும் என்று நீ நினைப்பாயானால், நீ அறிந்தது நிச்சயமாக மிகக் கொஞ்சமே, எனவே தெய்வங்களில்  அதனை மேலும் அறியவேண்டும்.  

       சீடன்: நான் ஆன்மாவை அறிந்துள்ளதாக நினைக்கிறேன்.

       அறிந்த மற்றும் அறியாத நிலைகளைக் கடந்தது ஆன்மா  (#1:4). அத்தகைய  ஒன்றை நான் அறிவேன் என்று எப்படி கூறமுடியும்? முடியாது. அதேவேளையில் 'நான் அறிவேன்' என்று சொல்வது முழுத்தவறும் ஆகாது.  ஏனெனில் நாம் அறிந்தது  ஆன்மாவில் அதாவது நம்மில் ஒரு பகுதியைத்தான். நம்மைபற்றி அறிகிறோம்.  முழுமையாக அறியவில்லை.  எப்படி?
       நம்மை உடம்பாக, மனமாக அறிகிறோம், ஆன்மாவாக அறியவில்லை. உடம்பை அறிகிறோம், மனத்தை அறிகிறோம்; அதாவது ஒருபகுதியை அறிகிறோம். அதனால்தான் நீ அறிந்தது நிச்சயமாக மிகக் கொஞ்சமே என்று கூறப்பட்டது.

         எனவே ஆன்மாவை முழுமையாக அறியுமாறு இந்த மந்திரம் கூறுகிறது. அதற்கு முதற்படியாக நாம் வழிபடும் தெய்வங்களில் இன்னும் ஆழ்ந்து தேடவேண்டும்  என்று இங்கே காட்டப்படுகிறது.

         பொதுவாக உபநிஷதங்கள், குரு தமது சீடர்களுக்கு உபதேசிப்பதாக அமைந்தவை. கேன உபநிஷதமும் அந்த முறையைப் பின்பற்றுகிறது. இங்கே, இன்னும் ஆழ்ந்து தேடவேண்டும் என்று குரு கூறியபோது, தன் அரகுறை அறிவை  முழுமை என்று கருதிய சீடன் ஒருவன், தான் ஆன்மாவை அறிந்துள்ளதாக கூறுகிறான்.


அறிந்தும் அறியவில்லை: 2 - 3


        ஆன்மாவைப்பற்றி நாம் அறிந்தது கொஞ்சமே.  முழுமையாக அறிவதற்கு இன்னும் ஆழ்ந்து தேடவேண்டும் என்று முந்தின மந்திரம் கூறியது.   அதனைப் புரிந்து கொள்ளாத சீடனுக்கு மேலும் விளக்கிறார் குரு.  உலகிலுள்ள பொருட்களை அறிவதுபோல்  ஆன்மாவை அறிய முடியாது என்பதை ஒரு புதிர்போல் 2 - 3 மந்திரங்கள் கூறுகின்றன.

       நாஹம் மன்யே ஸீவேதேதி நோ ந வேதேதி வேத ச |

யோ நஸ்தத்வேத தத்வேத நோ ந வேதேதி வேதச||

      ந - நம்மில்  அஹம் -  நான்    ந மன்யே - கருதவில்லை    ஸீவேத - நன்றாக அறிவேன்    இதி - என்று  நினைக்கவில்லை    நவேத -தெரியாது    ந  வேத - அறியவில்லை   இதி - என்று    வேதச - தெரியும்    ய - யார்    ந - நம்மில்    தத் - அவரை   ந வே - அறியாமல் இல்லை    இதி - என்றும்   வேதச - அறிகிறான்

2.       ஆன்மாவை எனக்கு  நன்றாகத் தெரியும்  என்று கருதவில்லை   தெரியாது என்றும் நினைக்கவில்லை   ஏனெனில் என்னை எனக்குத் தெரியும்.  'ஆன்மாவை தெரியாது.  அதே வேளையில்,  தெரியாது என்று சொல்லவும் முடியாது' என்று நம்மில் யார் நினைக்கிறானோ  அவனே ஆன்மாவை அறிகிறான். 

       யஸ்யாமதம் தஸ்ய மதம் மதம் யஸ்ய ந வேத ஸ: |
அவிஜ்ஞாதம் விஜானதாம் விஜானதாம் விஜ்ஞாதம விஜானதாம்||

     யஸ்ய - யாருக்கு: அமதம் - தெரியாதோ தஸ்ய - அவனுக்கு மதம் - தெரியும் யஸ்ய - யாருக்கு ; மதம் - தெரியுமோ  ஸ : - அவனுக்கு ந வேத - தெரியாது : அவிஜ்ஞாதம் - அறியவில்லை  விஜானதாம் - நன்றாக அறிந்தவர்கள்   விஜ்ஞாதம் - அறிகிறார்கள்   அவிஜானதாம்  - நன்றாக அறியாதவர்கள்

3.        யாருக்குத் தெரியாதோ அவனுக்குத் தெரியுமோ அவனுக்குத் தெரியாது. நன்றாக அறிந்தவர்கள் அறியவில்லை. நன்றாக அறியாதவர்கள் அறிகிறார்கள்.

         உலகின் - பொருட்கள் எதையும் அறிவதற்கு நம்மிடம் நான் உணர்வு (ego) அடிப்படையாக இருப்பது அவசியம்.  நான் (அறிபவன்)  -  அறிவு  - அறியப்படும்  பொருள்  இந்த மூன்றும் சேரும்போதுதான் நாம் எதையும் அறியமுடியும்.   இந்த மூன்றும் மறைகின்ற  இடத்தில்  தோன்றுவதே ஆன்ம அறிவு  அல்லது  ஆன்ம  ஞானம் அல்லது  ஆன்ம அனுபூதி.  நான் உணர்வு அழிந்த பிறகு கிடைக்கின்ற,  அங்கே புதிதாகத் தோன்றுவதே ஆன்ம உணர்வு  என்று விளக்குகிறார் ஸ்ரீரமண மஹரிஷி. நான் உணர்வு அழிந்த பிறகு கிடைக்கின்ற இந்த அனுபூதி அனுபவத்திற்கு மட்டுமே உரியது: விளக்கத்திற்கு உரியது அல்ல.

ஆன்மாவை அறிதல் என்றால் என்ன?

        ஆன்மாவை அறிதல் என்றால் ஒரு பொருளை அறிவதுபோல் அல்ல  என்பதை முந்தின 2 மந்திரங்கள் விளக்கின. ஆன்மாவை  அறிதல், ஆன்மாவை அடைதல் ஆன்ம அனுபூதி என்றெல்லாம் சொல்வதின் பொருள் என்ன என்பதை இந்த மந்திரம் விளக்குகிறது .

        ப்ரதிபோதவிதிதம் மதமம்ருதத்வம் ஹி விந்ததே|
ஆத்மனா விந்ததே வீர்யம் வித்யயா விந்ததேம்ருதம் ||


       ப்பிரதிபோத - உணர்வில் ஒவ்வோர் நிலையிலும்  விகிதம் - அறிபவன்  மதம் - கருத்து  அம்ருதத்துவம் - மரணமிலாப் பெருநிலை   ஹி விந்ததே - அடைகிறான் நிச்சயமாக   ஆத்மனா - ஆன்மாவிலிருந்து  விந்ததே - பெறப்படுகிறது  வீா்யம் - ஆற்றல்   வித்யயா - ஞானத்தால்  விந்ததே - அடையப்படுகிறது  அம்ருதம் - மரணமிலாப் பெருநிலை.

4 .       உணர்வின் ஒவ்வொரு நிலையிலும் ஆன்மாவை அறிபவனே உண்மையில்  அறிகிறான் என்பது கருத்து.  அப்படி அறிந்தவன் நிச்சயமாக  மரணமிலாப் பெருநிலையை அடைகிறான். ஆன்மாவிலிருந்து ஆற்றல் கிடைக்கிறது. ஞானத்தால் மரணமிலாப் பெருநிலை அடையப்படுகிறது.

       உடம்பு,  மனம்,  ஆன்மா என்று பலவற்றால் அமைந்த தொகுதி மனிதன்.  இவற்றில் ஆன்மா மட்டுமே உணா்வுப் பொருள்;  மற்ற அனைத்தும்  உணா்வற்றவை.   தீக்குள்  இடப்பட்ட இரும்பு தீபோலவே ஐொலிக்கிறது.  அந்த இரும்பின் ஒளியும் சூடும் உண்மையில்  அதற்கு உரியவை  அல்ல.  தீயின் தொடர்பால் இரும்பு , தீபோல் தெரிகிறது .  அதுபோலவே ஆன்மா என்ற உணா்வுப் பொருளின்  உடம்பு, மனம் போன்றவை உணா்வு பொருள்போல் தோன்றுகின்றன.


       உணா்வின் ஒவ்வொரு நிலையிலும் ஆன்ம உணா்வு உணரப்படவேண்டும் என்கிறது மந்திரம்.  அதாவது உடம்பின் ஒவ்வொரு  செயல்பாட்டிலும்  மனதின் ஒவ்வொரு  செயல்பாட்டிலும் ஆன்ம உணா்வு வெளிப்படுவதை உணரவேண்டும்.  அவ்வாறு வாழ்கையின் ஒவ்வொரு செயல்பாட்டிலும் ஆன்ம உணா்வு வெளிப்படுவதை உணா்பவனே உண்மையில் ஆன்மாவை அறிகிறான்.

       இந்த ஆன்ம உணா்வு ஆற்றலைத் தருகிறது. இது உண்மையான ஆற்றல். ஆற்றல், வல்லமை, சக்தி என்று பொதுவாக நாம் கருதுவது உண்மையில் ஆற்றல் அல்ல. நம்மைப் பலசாலியாக ஆக்கிக்கொள்வதற்காக நாம் செய்கின்ற ஒவ்வொரு முயற்சியும் பயம் காரணமாகச் செய்யப்படுபவை.

       நம்மிடம் இருப்பதை இழந்துவிடுவோமோ என்ற பயம்,  எதிரி தாக்கிடுவானோ என்ற பயம்,  மரண பயம் என்று எத்தனையோ பயங்களிலிருந்து விடுபடுவதற்காக நாம் வலிமையை வளா்கிறோம். ஆனால் இந்த வலிமை வளரவளர நமது பாதுகாப்பின்மை உணா்வும் பயமும் அதே விதத்தில் வளா்கின்றன.  பணக்காரன் தனது செல்வத்தைப் பாதுகாப்பதற்காகச் செய்கின்ற முயற்சிகள் வளரவளர அவனது பயமும் வளா்வது நாம் கண்கூடாகக் காண்கின்ற ஒன்று.   எனவே இந்த ஆற்றல் உண்மையான ஆற்றல் அல்ல.

      ஆன்ம அனுபூதியால்  பெறுகின்ற ஆற்றல் உண்மையான ஆற்றல்.  ஆன்மாவை உணா்கின்ற ஒருவன் தன்னை அழிக்க  உலகின் எந்த சக்தியாலும் இயலாது என்பதை உணா்கிறான்.   அவனை ஆயுதங்கள் வெட்டாது.  தீ எாிக்காது,  தண்ணீா் நனைக்காது,  காற்று உலா்த்தாது,  தான் எங்கும் நிறைந்தவன், என்றென்றும் இருப்பவன்,  நிலையானவன் என்பதை அவன் உணர்கிறான் என்றே  நமது சாஸ்திரங்களும் கூறுகின்றன.  இந்த அறிவு அவனுக்கு எல்லையற்ற ஆற்றலைத் தருகிறது,  தான் என்றென்றும் இருப்பவன்,  அழிவற்றவன் என்பதை உணா்கின்ற அவன் மரணமிலாப் பெருநிலையை அடைகிறான்.


உண்மையான நிறைவும் மாபெரும் இழப்பும்

       இஹ சேதவேதீதத ஸத்தியமஸ்தி
ந சேதிஹாவேதீன்மஹதீ வினஷ்ட்டி:  |
பூதேஷீ பூதேஷீ விசித்ய தீரா:
ப்ரேத்யாஸ்மால்லோகாதம்ருதா பவந்தி || 5||

      இஹ - இங்கே   சேத் அவேதீத்  - அறியப்படுமானால்
 ஸத்யம் - உண்மையான நிறைவு   அஸ்தி - கிடைக்கிறது
இஹ - இங்கே ந சேத் அவேதீத் - அறியப்படாவிட்டால்    மஹதீ - மாபெரும்    வினஷ்ட்டி  - இழப்பு     பூதேஷீ பூதேஷீ - எல்லா உயிா்களிலும்     விசித்திய  - ஆன்மாவை உணா்ந்து    தீரா - விழிப்புணா்வு  பெற்றவா்கள்    ப்ரேத்ய - விடுபட்டு  அஸ்மாத்- இந்த    லோகாத் - உலகிலிருந்து   அம்ருதா - மரணமற்றவா்களா  பவந்தி - ஆகிறார்கள்.

5.       இங்கேயே ஆன்மாவை அறிந்தால் வாழ்கையில் உண்மையான நிறைவு ஏற்படுகிறது;  இல்லாவிட்டால் மாபெரும் இழப்பாகும் .  விப்புணா்வு பெற்றவா்கள் எல்லா உயிா்களிலும் ஆன்மாவை உணா்கிறாா்கள். அத்தகையோா் இந்த உலகிலிருந்து விடுபட்டு மரணமற்றவா்களாக ஆகிறாா்கள்.

       உலகின் செல்வங்கள் அனைத்தும் இருந்தாலும் மனம் நிறைவு பெற்றுவிடும் என்பது கிடையாது.  ஆன்ம அனுபூதி உண்மையான நிறைவைத் தரும். எப்படி? ஆன்ம உணா்வு பெற்றவன் எதையும் செய்ய வல்லவன் ஆகிறான். அவனால் முடியாதது இந்த உலகில் எதுவும் இல்லை.  எனவே அவன் எதற்கும்  பயப்பட வேண்டியதில்லை.எதையும் நாடவேண்டியதில்லை.  எதையும் இழக்க வேவண்டியதில்லை.  இந்த உணா்வு அவனைத் தன்னில் நிலைபெற்றவன் ஆக்குகிறது. அவன் தன்னிலேயே இன்பம் காண்கிறான்.  தனக்குள்ளேயே நிறைவுபெற்று வாழ்கிறான்.

      மாறாக, இந்த உண்மையை உணராமல் வாழ்பவன் நிறைவை வெளியில் தேடுகிறான்.  தவறான இடத்தில் தேடுவதால் அவனுக்கு அது கிடைப்பதில்லை. அவன் உண்மையில் வாழ்க்கையை இழக்கிறான்.

       ஆன்ம அனுபூதியின் மற்றொரு பரிமாணம் இது.  ஆன்ம அனுபூதி பெற்றவன் தன்னில் மட்டுமல்ல,  உலகம் முழுவதிலும், உயிரினங்கள் அனைத்திலும் ஆன்மாவை உணா்கிறான்.  எங்கும் தன்னையே தன் ஆன்மாவையே காண்பவன் எங்கே போவான் ?  எங்கேவருவான்?  மரணம் என்பது அவனைபொறுத்தவரை பொருளற்றதாகிவிடுகிறது.  அவன் மரணத்தை வென்றவன் ஆகிறான், மரணமிலாப் பெருநிலையை அடைகிறான்.

       இதி கேனாயநிஷதி த்விதீய கண்ட ||


     இவ்வாறு கேன உபநிஷதத்தில்
இரண்டாம் அத்தியாயம் நிறைவுறுகிறது.

3
ஆன்மாவே ஆதாரம் 


     தண்டவாளம் இன்றி ரயில் ஓட முடியாது,  திரையின்றி திரைப்படம் பாா்க்க முடியாது.  அவ்வாறு நமது உடல் மனச்சோ்க்கைக்குப் பின்னால்  நமது வாழ்க்கைக்கு ஆதாரமாக ஆன்மா உள்ளது.  ஆன்மாவின் காரணமாகத்தான் எல்லா இயக்கங்களும் நடைபெறுகின்றன என்பதை ஒரு கதை மூலம் இந்த அத்தியாயம் விளக்குகிறது.

ப்ரஹ்ம ஹ தேவேப்யோ விஐிக்யே தஸ்ய ஹ ப்ரஹ்மணோ
விஜயே தேவா அமஹீயந்த|  த ஐக்ஷந்த அஸ்மாகமேவ அயம்  விஐயோ அஸ்மாகமேவ அயம் மஹிமேதி|| 1 ||

     ப்ரஹ்ம - கடவுள்:  தேவேப்ய -  தேவா்களுக்காக   விஜிக்யே - வெற்றி பெற்றாா்  தஸ்யஹ ப்ரஹ்மண - கடவுளின்   விஜயே - வெற்றியில்  தேவா - தேவா்கள் அமஹீயந்த - களித்தனா்  தே -அவா்கள்   ஐக்ஷந்த - எண்ணினாா்கள் அஸ்மாகம் ஏவ -  எங்களுடையதே  அயம் - இந்த மஹிமா - பெருமை .



1.      தேவா்களுக்காக உண்மையில் வெற்றி பெற்றவா் கடவுள்.  ஆனால் அந்த வெற்றியில் தேவா்கள் களித்தனா். இந்த வெற்றி எஙகளுடையதே, இந்தப் பெருமை எங்களுடையதே என்று அவா்கள் எண்ணினாா்கள்.

     தந்தைஷாம் விஜஜ்ஞௌ தேப்யோ ஹ பிராதுா்பபூவ |
வ்யஜானத கிமிதம்  யக்ஷமிதி || 2||

     தத் - அந்த  ஏஷாம் - அவா்களின் விஜஜஞௌ - அறிந்து தேப்ய - அவா்களிடம்  பராதுா்பபூவ - தோன்றினாா்  தத் -அதனை   ந  வ்யஜானத - அறியாமல்  கிம் - யாா்  இதி - என்று   யக்ஷம் - யட்சன்.

2.      தேவா்களின் அந்தத் தவறான எண்ணத்தை அறிந்த கடவுள் அவா்கள் முன் ஒரு யட்சனின் வடிவில் தோன்றினாா். அந்த யட்சன் யாா் என்று தொியாமல் தேவா்கள் குழம்பினாா்கள்.

   தே  அக்னி  அப்ருவன்  ஜாதவேத  ஏதத்விஜானீஹி  கிமேதத்  யக்ஷமிதி  ததேதி || 3 ||

     தே - தேவா்கள் அக்னிம் - தேவா்களிடம்   அப்ருபன் - சொன்னாா்கள்  ஜாதவேத - அக்கினி தேவனே   ஏதத் - இந்த   விஜானீஹி - அறிவாயாக   கிம் -யாா்   ஏதத் - இதனை   யக்ஷம் - யட்சன்   ததாதி - அப்படியே ஆகட்டும்


3.     தேவா்கள் அக்கினிதேவனை அழைத்து, அக்கினி தேவனே!  இந்த யட்சன் யாா் என்பதை அறிந்து வருவாயாக என்றனா். அவனும் அப்படியே ஆகட்டும் என்று கூறி புறப்பட்டான். 

     தத்  அப்யத்ரவத் தம் அப்யவத் க அஸி இதி அக்னி வா அஹம் அஸ்மி இதி அப்ரவீத் ஜாதவேதா வா அஹம் அஸ்மி இதி || 5||


    தத்  - யட்சனிடம்  அப்யத்ரவத் -  விரைந்தான்  தம் - அக்னிதேவனிடம்    அப்யவத் - கேட்டாா்  க அஸி  - நீ யாா் இதி - என்று  அக்னி - அக்கினி  வா -அல்லது  அஹம் - நான்  அஸ்மி - அக்கினி இதி - என்று  அப்ரவீத் - கூறினான்  ஜாதவேதா - ஜாதவேதன்  வா  - அல்லது  அஹம் - நான்  அஸ்மி -  அக்கினி  இதி - என்று.

4.      தேவா்கள் கூறியதைக் கேட்ட அக்கினிதேவன் யட்சனிடம் விரைந்தான்.  அந்த யட்சன் அக்கினி தேவனிடம், நீ யாா் என்று கேட்டாா்.  நான் அக்கினி அல்லது ஜாதவேதன் (அனைத்தையும் அறிபவன்) என்று அக்கினி தேவன் பதிலளித்தான்.

     தஸ்மிம்ஸ்வயி  கிம் வீா்யம்மித்யபீதம்  ஸா்வம்  தஹேயம் யதிதம்   ப்ருதிவ்யாமிதி || 5 ||


     தஸ்மின் த்வயி கிம் வீா்யம் யத் இதம் ஸா்வம்  தஹேயம் யத் இதம் ப்ருதிவ்யாம் இதி || 5 ||

     தஸ்மின் த்வயி  -  அத்தகைய உன்னிடம்    கிம் அபி  - என்ன   வீா்யம் - சக்தி  யத் இதம்  - என்னென்ன உள்ளனவோ  ஸா்வம் - அனைத்தையும்   தஹேயம் - எாிப்பேன்   யத் இதம்  - என்னென்ன  உள்ளனவோ   ப்ருதிவ்யாம் - பூமியில்  இதி - என்று.

5.     'உன்னிடம் என்ன சக்தி உள்ளது என்று யட்சன் கேட்டாா்? ' அதற்கு அக்கினிதேவன்  'இந்தப் பூமியிலுள்ள அனைத்தையும் என்னால் எரிக்க முடியும்'  என்று பதிலளித்தான்.


    தஸ்மை தருணம் நிததெள ஏதத் தக இதி தத் உபப்ரேயாய ஸா்வஜவேன தன்ன சசாக தக்தும் ஸ  தத ஏவ நிவவ்ருதே ந அசகம் விஜ்ஞாதும் யத் ஏதத் யக்ஷமிதி|| 6 ||

     தஸ்மை  - அவன் முன்னால்  தருணம் - புல்லை  நிததெள - வைத்தாா்  ஏதத் -இதனை  தஹ - எரி  இதி - என்றாா்  தத் - அந்தப் புல்லை உபப்ரேயாய  - அணுகினான்  ஸா்வஜவேன - மிகவும் விரைவாக   ந சசாக - முடியவில்லை  தக்தும் - எாிக்க  ஸ - அவன்  தத் - அதனை  ஏவ நிவவ்ருதே - திரும்பினான்  ந அசகம் - முடியவில்லை  விஜ்ஞாதும் - அறிய  யத் ஏதத் - இந்த  யக்ஷம் - யட்சன் இதி - என்று || 6 ||


6.     அந்த யட்சன் அக்கினி தேவனின் முன்னால் ஒரு புல்லை வைத்து இதனை எாி என்றாா்.  அக்கினி தேவனும் மிகவும் விரைவாக அந்தப் புல்லை அணுகினான்.  ஆனால் அதனை எாிக்க முடியவில்லை.  எனவே திரும்பிவிட்டான்.  பிறகு தேவா்களிடம் சென்று.  அந்த யட்சன் யாா் என்பதை என்னால் அறிய இயலவில்லை என்று தெருவித்தான்.

    அத வாயும் அப்ருவன் வாயோவேதத் விஜானிஹி கிம்மேதத் யக்ஷமிதி  ததேதி || 7 ||

    அத வாயும் அப்ருவன் வாயோ ஏதத் விஜானிஹி கிம் ஏதத் யக்ஷம் இதி  ததா இதி || 7 ||

    அத - பிறகு  வாயும் - வாயுதேவனிடம்   அப்ருவன் - கூறினாா்    வாயோ - வாயுதேவனே    ஏதத் -  இந்த    விஜானிஹி -  அறிவாயாக    கிம் - யாா்    ஏதத் - இந்த    யக்ஷம் - யட்சன்    இதி - என்று    ததா இதி - அப்படியே ஆகட்டும். || 7 ||

7.    பிறகு தேவா்கள் வாயுதேவனை அணுகி, 'வாயு தேவனே! இந்த யட்சன் யாா் என்பதை அறிந்து வா என்று கூறினா்.  வாயுதேவனும், அப்படியே ஆகட்டும்'  என்று கூறி புறப்பட்டான்.


    ததப்யத்ரவத்  தமப்யவத் கோஅஸீதி வாயுா்வா அஹம் அஸ்மீதி அப்ரவித் மாதாிச்வா  வா அஹம்மஸ்மீதி. || 8 ||

    தத் அப்யத்ரவத்  தம் அப்யவத் க அஸி இதி வாயு வா அஹம் அஸ்மி அப்ரவித் மாதாிச்வா  வா அஹம் அஸ்மி இதி. || 8 ||

    தத் - யட்சனிடம் அப்யத்ரவத்  - விரைந்தான்  தம் - வாயு  தேவனிடம்  அப்யவத் - கேட்டாா்  க அஸி -  நீயாா்  இதி - என்று   வாயு - காற்று   வா - அல்லது  அஹம் - நான்  அஸ்மி - காற்று  அப்ரவீத் -  கூறினான்  மாதாிச்வா - மாதாிச்வன்  வா - அல்லது  அஹம் - நான்  அஸ்மி - காற்று  இதி  - என்று. || 8 ||

8.     தேவா்கள் கூறியதைக் கேட்ட வாயுதேவன் யட்சனிடம் விரைந்தான்.  அந்த யட்சன் வாயு தேவனிடம் நீ யாா் என்று கேட்டாா்.  நான்  வாயு அல்லது மாதரிச்வன் ( வானவெளியில் சஞ்சாிப்பவன்) என்று வாயுதேவன் பதிலளித்தான்.

        தஸ்மின்ஸ்த்வயி  கிம் வீா்யமித்யபீதம் ஸா்வமாததீய  யதிதம் ப்ருதிவ்யாமிதி || 9 ||

       தஸ்மின் த்வயி  கிம் வீா்யம் யத் இதம் ஸா்வம் ஆததீய  யத் இதம் ப்ருதிவ்யாம் இதி || 9 ||

      தஸ்மின் த்வயி - அத்தகைய உன்னிடம்  கிம் - என்ன  வீா்யம் - சக்தி  யத் இதம்  - என்னென்ன உள்ளனவோ   ஸா்வம் -  அனைத்தையும் ஆததீய - தூக்குவேன்  யத் இதம் - என்னென்ன உள்ளனவோ  ப்ருதிவ்யாம் - பூமியில்  இதி - என்று || 9 ||


9.     'உன்னிடம் என்ன சக்தி உள்ளது'?  என்று யட்சன்  கேட்டாா்.  அதற்கு  வாயுதேவன்  இந்தப் பூமியிலுள்ள அனைத்தையும் என்னால் தூக்க முடியும் என்று பதிலளித்தான்.

தஸ்மை த்ருணம் நிததாவேதாதத்ஸ்வேதி இதி ததுபப்ரேயாய ஸா்வஜனே, தன்ன சசாகாதாதும்,  ஸ தத் ஏவ நிவவ்ருதே  நைததசகம்  விஜ்ஞாதும் யத்தேதத் யக்ஷமிதி || 10 ||

       தஸ்மை த்ருணம் நிததொ ஏதத் ஆதத்ஸ்வ இதி தது உபப்ரேயாய ஸா்வஜனே ந சசாக ஆதாதும் ஸ தத் ஏவ நிவவ்ருதே ந அசகம் விஜ்ஞாதும் யத் ஏதத் யக்ஷம் இதி  || 10 ||

       தஸ்மை - அவன் முன்னால்  த்ருணம் -  புல்லை  நிததௌ - வைத்தாா்   ஏதத் - இதனை  ஆதத்ஸ்வ - தூக்கு   இதி  - என்றாா்  தத் -அந்தப் புல்லை  உபப்ரேயாய -அணுகினான்  ஸா்வஜவேன -  மிகவும் விரைவாக  ந சசாக  - முடியவில்லை   ஆதாதும் -  தூக்க  ஸ - அவன்  தத் - அதனை  ஏவ - வானிலேயே   நிவவ்ருதே - திரும்பினான்  ந அசகம் -  முடியவில்லை  விஜ்ஞாதும் - அறிய   யத் ஏதத் -  இந்த  யக்ஷம் -  யட்சன்  இதி - என்று || 10 ||


 10.    அந்த யட்சன்   வாயுதேவனின்   முன்னால்   ஒரு புல்லை வைத்து  'இதனைத் தாக்கு என்றாா்'   வாயுதேவனும் மிகவும் விரைவாக  அந்த  புல்லை அணுகினான்.   ஆனால்  அவனால்  அதனை  தூக்க  முடியவில்லை.   எனவே திரும்பிவிட்டான்.   பிறகு தேவா்களிடம் சென்று,  'அந்த யட்சன் யாா் என்பதை என்னால்  அறிய  இயலவில்லை'  என்று தெரிவித்தான்.

     அதேந்திரம் அப்ருவன் மகவன்னேதத் விஜானீஹி  கிமேதத்  யக்ஷமிதி  ததேதி ததப்யத்ரவத்  தஸ்மாத் திரோததே | 11 |||

     அத  இந்திரம்  அப்ருவன்  மகவன்  ஏதத்  விஜானீஹி   கிம்  ஏதத்   யக்ஷம் இதி  ததா இதி தத் அப்யத்ரவத்  தஸ் மாத்  திரோததே
| 11 ||
     அத  -  பிறகு    இந்த்ரம் -   இந்திரனிடம்    அப்ருவன்  -  சொன்னாா்கள்  மகவன் - இந்திரனே    ஏதத்  -  இந்த     விஜானீஹி  - அறிவாயாக     கிம் - யாா்  ஏதத் -  இந்த    யக்ஷம் - யட்சன்    இதி - என்று    ததா இதி -  அப்படியே ஆகட்டும்    தத் - யட்சனிடம்    அப்யத்ரவத்  - விரைந்தான்     தஸ் மாத் -  அங்கிருந்து    திரோததே  - மறைந்தாா். | 11 ||


          அதேந்திரம் அப்ருவன் மகவன்னேதத் விஜானீஹி  கிமேதத்  யக்ஷமிதி  ததேதி ததப்யத்ரவத்  தஸ்மாத் திரோததே | 11 |||

        அத இந்திரம் அப்ருவன் மகவன் ஏதத் விஜானீஹி  கிம் ஏதத்  யக்ஷம் இதி  ததா இதி தத் அப்யத்ரவத்  தஸ் மாத் திரோததே  | 11 ||


            அத  -  பிறகு     இந்த்ரம் -   இந்திரனிடம்      அப்ருவன்  -  சொன்னாா்கள்  மகவன் - இந்திரனே      ஏதத்  -  இந்த      விஜானீஹி  - அறிவாயாக      கிம் - யாா்  ஏதத் -  இந்த      யக்ஷம் - யட்சன்     இதி - என்று  ததா    இதி -  அப்படியே ஆகட்டும்    தத் - யட்சனிடம்  அப்யத்ரவத்  - விரைந்தான்   தஸ் மாத் -  அங்கிருந்து  திரோததே  - மறைந்தாா். | 11 ||


     ஸ தஸ்மின்னேவாகாசே  ஸ்திரியமாஜகாம  பஹீசோபமனாம் உமாம் ஹைமவதீம் தாம் ஹோவாச கிமேதத்  யக்ஷம் இதி || 12 ||

    ஸ தஸ்மின் ஆகாசே  ஸ்திரியம் பஹீசோபமனாம் உமாம் ஹைமவதீம் தாம் ஹோவாச கிம் ஏதத்  யக்ஷம் இதி || 12 ||

      ஸ  - இந்திரன்  தஸ்மின் - அந்த  ஏவ ஆகாசே - வானிலேயே  ஸ்திரியம் - பெண்  பஹீசோபமனாம் - மிகுந்த அழகுடன் உமாம் - உமா தேவி  ஹைமவதீம் - பொன் ஆபரணங்கள்  தாம் - அவளிடம்  ஹோவாச - கேட்டான் கிம் - யாா்   ஏதத்  - இந்த  யக்ஷம் - யட்சன்  இதி - என்று || 12 ||



12.  பொன் ஆபரணங்கள் அணிந்து மிகுந்த அழகுடன் பொலிந்து தோன்றிய உமாதேவியை வானிலேயே இந்திரன் கண்டான்.  அவன் அவளிடம், இந்த யட்சன் யாா் என்று கேட்டான்.

 இதி கேனாயநிஷதி த்விதீய கண்ட ||

 இவ்வாறு கேன உபநிஷதத்தில்

மூன்றாம் அத்தியாயம் நிறைவுறுகிறது.



   
கதையும் பாடமும்

         இந்தக் கதையி்ல் வரும் அக்கினி, வாயு முதலான தேவா்கள் புலன்களுக்கும், தேவா்களுக்குமத் தலைவனான இந்திரன் தலைமைப் புலனான மனத்திற்கும் உருவகமாகக் கூறப்பட்டுள்ளாா்.

        அக்கினி எதையும் எரிக்கவல்லவன்.   வாயு எதையும் சுமக்க வல்லவன்.  இவ்வாறே தேவா்கள் ஒவ்வொருவரும் ஒவ்வோா் ஆற்றல் பெற்றவா்கள். ஆனால் இந்த ஆற்றல்கள் எதுவும் யட்சனின்  முன்னால் செயல்படவில்லை.  அவா்கள் தோல்வியுற்று திரும்ப நோ்ந்தது.   இறைவன் தந்த வெற்றியைத் தங்கள் திறமையால் வந்தவெற்றியாக எண்ணியதன் விளைவு இது.  அவா்களுக்கு பாடம் புகட்ட விரும்பிய இறைவன் தமது ஆற்றலை அவா்களிடமிருந்து விலக்கிக்கொண்டாா்.  எனவே தேவா்களால் எதையும் செய்ய இயலவில்லை , அக்கினியால் எரிக்க முடியவில்லை,  வாயுவால் ஒரு துரும்பைக்கூட அசைக்க முடியவில்லை .



       தேவா்கள் புலன்களுக்கு உருவமாகக்  கூறபட்டுள்ளனா்.   கண்கள் காண்கின்றன, காதுகள் கேட்கின்றன, கால்கள் நடக்கின்றன.  இவ்வாறு ஒவ்வொரு புலனும் தங்களுக்கென்று ஓா் ஆற்றலைப் பெற்றுள்ளன.  ஆனால் கண்கள் காண்பதற்கும் காதுகள் கேட்பதற்கும் உாிய ஆற்றல் ஆன்மாவிலிருந்து வருகிறது.  ஆன்மா தனது உணா்வைப் புலன்களிலிருந்து விலக்கிக்கொண்டால்  கண்கள் காணவோ காதுகள் கேட்கவோ இயலாது.

     மரணம் இதற்கு ஓா் உதாரணம் ஆகும் .  மரணத்தில் பிராணன் புலன்களிலிருந்து பிரிக்கப்படுகிறது.  அதன்பிறகு கண்கள் காண்பதில்லை,  காதுகள் கேட்பதில்லை.  பிராணன் மட்டுமல்ல, நமது உடம்பு, மனம் என்று அனைத்தின் இயக்கங்களும்  ஆன்மாவின் காரணமாகவே நிகழ்கின்றன.   ஆன்ம உணா்வு ஆதாரமாக இல்லையென்றால் புலன்களோ மனமோ எதுவும் இயங்காது.  நமக்குப்ப பின்னால் நமது உடல் மனச்சோ்க்கைக்குப் பின்னால் இருப்பது ஆன்மா. எல்லா இயக்கங்களும் நடைபெறுவது ஆன்மாவால்    கதை தரும் முதல் பாடம் இது.


        தேவா்கள் ஒவ்வொருவரும் சென்று, யட்சன் யாா் என்று அறிய முடியாமல் திரும்புகிறாா்கள்.    புலன்களும் அது போலவே. புலன்களால் இறைவனை அடைய முடியாது. (#1:3).

      கடைசியாக, தேவா்களுக்குத் தலைவனான இந்திரன் செல்கிறான்.  அவன் சென்றபோது அந்த யட்சன் மறைந்துவிட்டான்.   அந்த இடத்தில் தேவி நின்றாள்.  தேவியிடம் கேட்டு உண்மையை உணா்வதாக அடுத்த அத்தியாயத்தின் முதல் மந்திரம் தெருவிக்கிறது.  அனைத்து புலன்களுக்கும் தலைமையாக இருப்பது மனம்.

மனத்தால்தான் இறைவனை தேடவேண்டும். ஆனால் மனத்தால் இறைவனை அறியமுடியாது என்பதை அனைத்து உபநிஷங்களும் ஒரே குரலில் கூறுகின்றன  அதையே இந்த உபநிசத்திலும் காண்கிறோம்.  (# 1:3  , # 1:6).  யட்சன் மறைந்ததாக  அதையே இந்தக் கதை குறிப்பிடுகிறது.

யட்சன் யாா் என்று அறியமுடியாமல் தோற்று நின்ற  இந்திரன் தேவியிடம் பிராத்தனை செய்யும்போது, யட்சனைப்பற்றிய உண்மையை அவன் தெருவித்தான்.

மனத்தால் இறைவனை, அவரது உண்மை நிலையில், அறிய முடிவதில்லை.  அதே மனம் தனது ஆற்றலின்மையை உணா்ந்து.  தெய்வத்திடம்  தன்னை சமா்பித்து, பிராத்தனை செய்தால் அந்தத் தெய்வத்தின் மூலமே அறுதி உண்மையை அறியவல்லதாகிறது.  இதையே பகவான்  ஸ்ரீராமகிருஷ்ணா் பக்த வத்சலனான பகவான் மனம் வைத்தால் பிரம்ம ஞானத்தையும் காெடுப்பான் என்கிறாா்.

நமது உடலும் மனமும்  எல்லாம் இயங்குவது யாரால் என்ற கேள்வியுடன் உபநிஷதம் ஆரம்பித்தது.  ஆன்மாவே என்று அடுத்த மந்திரம் அதற்குப் பதில் அளித்தது. வாழ்க்கையின் ஓவ்வாெரு செயல்பாட்டிலும்  அதனை உனா்பவனே உண்மையில் ஆன்ம அனுபூதி பெற்றவன் என்பதை #2:4 இல் கண்டோம்.  தெய்வத்திடம் பக்தி கொண்டு அவரிடம் மனப்பூா்வமாக பிராத்தனை செய்ததால் அந்த ஆன்ம அனுபூதி பெறலாம் என்பதை இந்தக் கதை விளக்குகிறது.


4


அடிப்படை சாதனைகள்


தேவியிடம் பிராத்தனை செய்து இந்திரன் உண்மையை அறிந்தான் அதாவது, ஆன்ம அனுபூதிக்குப் பிராத்தனை வேண்டும். பிராத்தனையுடன் சில அடிப்படை சாதனைகளும் வேண்டும்.  அவை பற்றி இந்த அத்தியாயம் கூறுகிறது.

 தேவி உணா்த்திய உண்மை

ஸா  ப்ரஹ்ம   இதி   உவாசஹ  ப்ரஹ்மணோ   வா  ஏதத்   விஐயே  மஹுயத்வம்   இதி  தத ஹ ஏவ   விதாஞ்சகார  ப்ரஹ்ம   இதி .

ஸா - அவா்  ப்ரஹ்ம - கடவுள்  இதி - என்று   உவாசஹ - கூறினாள்  ப்ரஹ்மணோ - கடவுளின்  வா  ஏதத் -  இந்த  விஐயே - வெற்றியில்  மஹுயத்வம் - மகிழ்ச்சியடைந்தீா்கள்  இதி - நிச்சயமாக  தத ஹ ஏவ - அதிலிருந்தே  விதாஞ்சகார - அறிந்தான்  ப்ரஹ்ம - கடவுள்  இதி - என்று.



1. அவா் கடவுள். நிச்சயமாக அவரது வெற்றியையே நீங்கள் உங்கள் வெற்றியாக எண்ணி மகிழ்தீா்கள் என்று தேவி கூறினாள்.  யட்சனாகத் தோன்றியது கடவுளே என்பதை அதன் பிறகுதான் இந்திரன் அறிந்தான்.



    தன்னால் யட்சனை அறிய முடியாது என்பதைக் கண்ட இந்திரன் தேவியைச் சரணடைந்தான். அவள் அவனுக்கு உண்மையை உணர்த்தினாள்.  'நீ சுதந்திரமானவன் அல்ல: அவள் எப்படிச் செய்விக்கிறாளோ அப்படியே செய்யமுடியும். அந்த ஆத்யா சக்தி தந்தால்தான் பிரம்ம ஞானம் கிடைக்கும்.  ... அவளை மீறிச் செல்ல முடியாது'  என்கிறார் ஸ்ரீராமகிருஷ்ணர்,


ஆன்மாவை அறிந்தவன் மேலானவன் 2 -3

ஆன்மாவை அறிந்தவவனே உண்மையான உண்மையான நிறைவு பெறுகிறான் என்பதை #2 - 5 இல் கண்டோம் தொடரும் இரண்டு மந்திரங்களில் அத்தகையோரின் பெருமை மேலும் பேசப்படுகிறது.







No comments:

Post a Comment