Sunday, 19 July 2020

கட உபநிஷதம் அத்தியாயம் 3

அத்தியாயம் 3

பிரித்து அறிந்து வாழ்

விழித்தெழு!


உடம்பின் மாற்றங்களாலோ, மனத்தின் மாற்றங்களாலோ பாதிக்கப்படாத ஆன்மா என்ற  ஒன்று இதயக்குகையில் உள்ளது.  அதை அறிய வேண்டும். பிரித்து அறிந்து வாழ்தல், பிரணவ தியானம் போன்றவை  அதற்குரிய சாதனைகள் என்பதை சென்ற அத்தியாயத்தில் கண்டோம்.

 ஆனால் இந்த சாதனைகள் சிறந்த பலன் அளிக்க வேண்டும் ஆனால் புத்தி விழிப்புற்றிருக்க வேண்டும் என்பதை இந்த அத்தியாயம் வலியுறுத்துகிறது.


வாழ்க்கையை ஒரு தேர் பயணத்துடன் ஒப்பிட்டு கூறுகின்ற எமதர்மன் தேரோட்டி விழித்திருக்க வேண்டியது எவ்வளவு முக்கியம் என்பதை கூறுவதன் மூலம் புத்தியின்  விழிப்பு எவ்வளவு முக்கியம் என்பதை சுட்டிக் காட்டுகிறார்.

 மனிதன் என்றால் யார் என்பது பற்றிய ஒரு தெளிவான விளக்கத்தையும் இங்கு நாம் காண்கிறோம்.

 1. செயல்களின் பலனை அனுபவிக்கின்ற இருவர் இந்த உடம்பில் உள்ளனர். அவர்கள் நிழலும் வெயிலும் போல் ஒருவருக்கொருவர் மாறுபட்டவர்கள்;  இந்த உடம்புலுள்ள நுண்ணியதான இதயக்குகையில் புகுந்தவர்கள்.  மகான்களும் ஐந்து அக்கினியை உடையவர்களும் மும்முறை நசிகேத யாகம் செய்தவர்களும் இவ்வாறு கூறுகின்றனர்.

 இந்த உடம்பில் இருவர் இருப்பதாக சொல்லப்படுகிறது.  இருவரும் செயல்களின் பலனை அனுபவிப்பதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் நிழலும் வெயிலும்போல் ஒருவருக்கு ஒருவர் மாறுபட்டவர் என்று கூறுவதால், ஒருவர் செயல்களின் பலனை அனுபவிக்கிறார், மற்றவர் எதிலும பங்கெடுக்காமல் சாட்சியாக இருக்கிறார் என்றும் கொள்ள வேண்டும்.

 அனுபவ வார்த்தைகள் இதனை விளக்குகிறது. நமது கையில் அடிபட்டபோது அவர் கூறினார் இதனுள்(உடம்பினுள்) இருவர் இருக்கின்றனர்.   ஒன்று பகவான், மற்றொருவர் பக்தனாக ஆகியுள்ளார். பக்தனுக்குதான் கை உடைந்தது.  இப்போது நோய் வந்திருப்பது அவனுக்குத்தான் புரிகிறதா?


முண்டக உபநிஷதம் ஒரு கதையின் மூலம் இந்தக் கருத்தை விளக்குகிறது ஒரு மரத்தில் இரண்டு பறவைகள் வாழ்கின்றன. ஒன்று அந்த மரத்திலுள்ள இனிப்பும், புளிப்பும், கசப்பும், பல்வேறு பழங்களைத் தின்கிறது. அதன்காரணமாக இன்ப துன்பங்களை மாறிமாறி அனுபவிக்கிறது. மற்றொரு பறவை எதையும் தின்னாமல்  அனைத்தையும் பார்த்த வண்ணம் இருக்கிறது.


செயல்களில் ஈடுபட்டு, சுகதுக்க அனுபவங்களைப் பெற்று  அவற்றின் பலனை அனுபவிப்பது ஜீவன் அல்லது உயிர்.  மனம் பிராணனின் சேர்க்கை இது.  எதிலும் பங்கெடுக்காமல் அனைத்தையும் பார்த்துக் கொண்டு சாட்சியாக நிற்கின்ற ஒன்றே ஆன்மா. ஆன்மாவுடன் நம்மை ஒன்றுபடுத்திக் காணக்காண நாம் இறை நிலையை அடைவோம்.   ஜீவனுடன் நம்மை ஒன்றுபடுத்திக் காணக்காண நாம் உலகில் குழப்பங்களில் அழுந்துவோம்.

 மேலே கண்ட உண்மையை மகான்களிடம்  இருந்து கேள்விப்பட்டதாக உபநிஷத முனிவர் கூறுகிறார்.  மூன்று வகையான மகான்களைப் பற்றி அவர் கூறுகிறார்.

1.மகான்கள்: இறைவனை உணர்ந்தவர்கள் என்று பொருள் படுகின்ற ப்ரஹ்மவித என்ற வார்த்தை இங்கே பயன்படுத்தப்பட்டுள்ளது.

 2. ஐந்து அக்கினி உடையவர்கள்:  கார்ஹபத்யம், ஆஹவனீயம், தக்ஷிணாக்னி, ஸப்யம்,  ஆவஸத்தியம் என்பவை ஐந்து அக்னிகள். இல்லறத்தான் இந்த ஐந்து அக்கினிகளையும் வீட்டில் நிறுவி வழிபட வேண்டும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

கார்ஹபத்யம் - குல தெய்வத்தின் வடிவமாகக் கருதப்படுவது. இல்லற தர்மத்தைப் பரிபாலிப்பதுவரை இந்த அக்கினி எரிய வேண்டும்.

 ஆகவனீயம் - ஆஹுது அளிப்பதற்கான அக்கினி.
தக்ஷிணாக்கினி தக்ஷிணம் என்றால் மகிழ்ச்சி. மகிழ்ச்சியைத் தருகின்ற அக்கினி.  இது தெற்கு மூலையில் நிறுவப்படுகிறது.

ஸப்யம் - சாட்சி ரூபமாக விளங்குவது. செயல்கள் அனைத்தையும் இறைவன் பார்த்துக் கொண்டு இருக்கிறார். என்பதை உணர்த்துகின்ற அக்கினி.

ஆவஸத்யம் - ஆவஸத்யம் என்றால் வீடு. வீட்டிற்கு மங்கலத்தை தருகின்ற அக்கினி.


3.மூன்று முறை நசிகேத யாகம் செய்தவர்கள்:

 நசிகேத யாகத்தை பற்றி ஏற்கனவே கண்டோம். மீண்டும் கீழே வருமாறு 1-5.

1. எல்லா வேதங்களும் எந்த லட்சியத்தை  உபதேசிக்கின்றனவோ, எதற்காக எல்லா தவங்களும் செய்யப் படுகின்றனவோ, எதை விரும்பி பிரம்மச்சரியத்தை கடைபிடிக்கிறார்களோ, அந்த லட்சியத்தை அடைவதற்கான மந்திரத்தை சுருக்கமாக உனக்கு சொல்கிறேன். அது "ஓம்."

 2. ஓம் என்ற இந்த மந்திரமே இறைவன்.  இந்த மந்திரம் மேலானது. இந்த மந்திரத்தை அறிந்து யார் எதை  விரும்புகிறானோ அவனுக்கு அது கிடைக்கிறது.

3. இந்தப் பாதை சிறந்தது. இந்த பாதை மேலானது இந்த பாதையை அறிந்து அதன்வழி செல்பவன் பிரம்மலோகத்தில் சிறப்புப் பெறுகிறான்.

4.ஆன்மா பிறப்பதில்லை,  இறப்பதும் இல்லை.  இது எதிலிருந்தும் உண்டானது இல்லை,   இது பிறப்பற்றது , என்றென்றும் இருப்பது. நிலையானது, பழமையானது ; உடம்பு அழிக்கப்பட்டாலும் அழியாதது.

5. தான் அடிப்பதாக நினைப்பவன், தான் அடிபட்டதாக நினைப்பவன் இருவருமே உண்மை அறியாதவர்கள். ஆன்மா அடிப்பதும் இல்லை அடிபடுவதும் இல்லை.

ஒரு சுய தூண்டுதல்


பின்பற்றுபவர்களுக்கு எந்த வித்தையை பாலமாக அமைகிறதோ, அந்த நசிகேத யாகத்தைச் செய்ய வல்லவர்கள் ஆவோம். பயமற்ற கரையை அடைய விரும்புபவர்களுக்கு அழிவற்ற  எந்த இறைவன் அடைக்கலமானவரோ, அந்த இறைவனை அறிய வல்லவர்கள் ஆவோம்.

 ஒரு லட்சியத்தை எடுத்துக் கொண்டு முன்னேறும்போது, சிலவேலைகளில் இலட்சியத்தை மறந்து விடுவதும் உண்டு ; அது போலவே சில வேளைகளில் லட்சியம் நாட்டம் நீர்த்துப் போவதும் உண்டு.  எனவே தினமும் அதனை நினைவூட்டிக் கொள்வது நல்லது.  இது சுயத்தூண்டுதல் (auto suggestion) எனப்படுகிறது.  இத்தகைய மந்திரங்கள் நமது வேதங்களிலும் உபநிஷதங்களிலும் ஏராளம் உள்ளன.  உபநிஷதங்களை படிக்கும் போது மட்டும் இல்லாமல் இவற்றை பொருளுணர்ந்து அவ்வப்போது  ஓதுவது நாம் நமது லட்சியத்தில் உறுதியாக இருக்க உதவும்.  அத்தகைய ஒரு மந்திரம் இது.

வாழ்க்கையும் தேர் பயணமும்

நமது வாழ்க்கையின் ஓர் அற்புதமான சித்திரம் இந்த ஏழு மந்திரங்களில் கூறப்படுகிறது.


3. ஆன்மா பயணம் செய்பவர், உடம்பு தேர், புத்தி தேரோட்டி, மனம் கடிவாளம்.

4.புலன்கள் குதிரைகள்;  உலகப் பொருள்கள் அந்த குதிரைகள் செல்வதற்கான பாதைகள்;  உடம்பு, புலன்கள், மனம் ஆகியவற்றுடன் கூடிய ஜீவன் வாழ்க்கை அனுபவிப்பவர்கள் என்று மகான்கள் சொல்கின்றனர்.

5. யார் விழுப்புறாதவர்களோ, பிளவுபட்ட மனத்தை உடையவர்களோ, அவர்களுடைய புலன்கள் தேரோட்டிக்கு அடங்காத குதிரைகள் போல் வசப்படாமல் போகின்றன.

6. யார் விழிப்புற்றவர்களோ பொருந்திய மனத்தை உடையவர்களோ, அவரகளுடைய புலன்கள் தேரோட்டிக்கு அடங்கிய குதிரைகள் போல் வசப்படுகின்றன.

7.யார் விளிப்புறாதவராகளாக, அடங்காத மனத்தை உடையவர்களாக, தூய்மை இல்லாதவர்களாக இருக்கிறார்களோ அவர்கள் இறை நிலையை அடைய மாட்டார்கள்;  உலகியலில் ஆழ்கிறார்கள்.

8. யார் விழிப்புற்றவர்களாக, அடங்கிய மனத்தை உடையவர்களாக, எப்போதும் தூயவர்களாக இருக்கிறார்களோ அவர்கள்,  எங்கே சென்றால் மீண்டும் பிறப்பு இல்லையோ அந்த இறைநிலையை அடைகிறார்கள்.

9. யார் விழிப்புற்ற தேரோட்டியுடனும், கடிவாளம் ஆகிய மனத்தை கைப்பற்றியவர்களாகவும்  இருக்கிறார்களோ, அவர்கள் பாதையின் முடிவை அடைகிறார்கள். அதுவே இறைவனின் மேலான இருப்பிடம்.

வாழ்க்கைப் பயணம் ஒரு கண்ணோட்டம்

3 முதல் 9 வரையுள்ள மந்திரங்களில் நமது வாழ்க்கை பயணம் ஒரு தேர் பயணத்திற்கு ஒப்பிடப்படுகிறது. முதலில் உவமையை காண்போம், பிறகு அது தரும் செய்தியை பார்ப்போம்.

தேர் பயணமும் வாழ்க்கையும்

தேரில்  ஒருவன் பயணம் செய்கிறான். தேரோட்டி ஒருவன் உள்ளான். அவன் கடிவாளத்தைப் பிடித்து இருக்கிறான்.  ஐந்து குதிரைகள் தேரை இழுகின்றன. தேர் செல்லும் பாதை ஒன்று உள்ளது. இது தேர்பயணம்.

நமது வாழ்க்கைக்கு உதாரணமாக இது கூறப்பட்டுள்ளது.

ஆன்மா    -   பயணம் செய்பவன்
புத்தி         -   தேரோட்டி
மனம்        -  கடிவாளம்
புலன்கள் -   குதிரைகள் 
உலகப் பொருட்கள் -  பாதை

தேர் பயணம் தரும் செய்தி

1.பயணம் உலகப் பொருட்களாகிய சாலை வழியாகத்தான் சென்றாக வேண்டும். அதாவது உலகப் பொருட்களிலிருந்து, உலகிலிருந்து விலக முடியாது. நாம் எதைச் செய்ய வேண்டுமானாலும் உலகப் பொருட்களுடன் வாழ்ந்தபடியேதான் சாதிக்கவேண்டும்.

2.பயணத்தின் வேகமும்  வெற்றியும் குதிரைகளைப் பொறுத்து அமைகிறது. குதிரையின் வேகம் கடிவாளத்தால் கட்டப்படுகிறது. கடிவாளத்தின் இயக்கம் தேரோட்டியை பொறுத்தது. எனவே பயணத்தின் வெற்றியோ தோல்வியோ தேரோட்டியால் நிர்ணயிக்கப்படுகிறது. குதிரைகளுடன் போராடுவதாலோ கடிவாளத்தில் மாற்றங்களை செய்வதாலோ எந்த பயனும் இல்லை.

தேரோட்டி திறமைசாலியாக இருந்தால் பயணம் எவ்விதத் தடங்கலுமின்றி நடைபெறும். தேரோட்டி தூங்கிக்கொண்டிருந்தால் பயணம் என்னவாகும்?இதுவே சாதாரணமாக நாம் வாழ்க்கையில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. புலன்கள் தங்கள் போக்கில் போகின்றன. மனம் கட்டவிழ்ந்து பல திசைகளில் பரந்து கிடக்கிறது. ஏனெனில் புத்தி விழிப்புறவில்லை. இந்த நேரத்தில் தேரோட்டியாகிய புத்தியை  எழுப்புவதே நாம் செய்யவேண்டியது. அதை விட்டுவிட்டு மனத்துடனோ புலன்களுடனோ போராடுவது பெரிதாக பலனளிப்பதில்லை.

3.புத்தியை எழுப்புதல், அல்லது புத்தி விழிப்படைதல் என்றால் என்ன
சாதாரணமாக அறிவு மூன்று நிலைகளில் செயல்படுகிறது.
1 இயல்புணர்ச்சி (instinct) 2.அறிவு (intellect) 3.உள்ளுணர்வு (intuition)

1.இயல்புணர்ச்சி: ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் இயல்பாக எழுகின்றன உணர்ச்சி. வாத்துக்குஞ்சு நீந்துவதும் குருவிகள் கூடுகட்டுவதும் யாரும் கற்றுக் கொடுத்ததல்ல. பிறவியிலிருந்தே இவை அவற்றிடம் இயல்பாக உள்ளன. அதுபோல் ஒவ்வொரு மனிதனிடமும் இயல்பாக காணப்படுகின்ற இயற்கையான மனபோக்குகளே இயல்புணர்ச்சி. இது ஆழ்மனத்திலிருந்து (subconscious mind) வருவதால் பொதுவாக தவறுவதில்லை. பொதுவாக இதற்கேற்ப ஒருவன் வாழ்க்கை சூழ்நிலைகளை எதிர் கொள்கிறான். எனினும் இது நமது ஆதிக்கத்தின் கீழ் இல்லாததால் நாம் விரும்பிய விதத்தில் இதனை பயன்படுத்த முடிவதில்லை.

 2.அறிவு:  புற உலகிலிருந்தும் வாழ்க்கை அனுபவங்களிலிருந்தும்  பெறுகின்ற அறிவு. புற உலகைச் சார்ந்திருப்பதால் இந்த அறிவு தவறாக இருக்கவும் வாய்ப்பு உண்டு. எனவே இதனை முழுமையாக நம்பி நாம் செயல்பட முடியாது.


3. உள்ளுணர்வு: கற்றறிவு, கேட்டறிவு போன்ற எந்த புற உபகரணங்களின் துணையும் இன்றி உணர்வின் ஆழங்களிலிருந்து எழுகின்ற அறிவு இது. இது ஒருபோதும் பொய்ப்பதில்லை. இந்த உள்ளுணர்வு விழிக்கப்பெற்றவர்களே படைப்பாளிகளாக இருந்தார்கள்.

 இது எல்லோரிலும் செயல்பட தொடங்கவில்லை. கல்வி, ஞானம், விஞ்ஞானம், கலை, மதம், என்று எந்தத் துறையை எடுத்தாலும் அவற்றின் உன்னத சிகரங்களுக்கான வாசலாக திகழ்கிறது உள்ளுணர்வு. இது விழிப்பதே புத்தி விழிப்பு. இதைப் புத்தியோகம் என்று கீதை கூறுகிறது.

 இதயத் தூய்மையாலும் பிரார்த்தனையாலும், காயத்ரி போன்ற மந்திர ஜபங்களாலும் புத்தி விழிப்படைகிறது.

 பயண லட்சியம் 10 - 11

 இந்த பயணத்தின் லட்சியம் இறைவன். அனைத்திலும் வலிமை வாய்ந்தவர் அவர், எனவே பயணத்தின் வெற்றிக்கு அவரை நாடுவதே வழி என்பதை படிப்படியாக இரண்டு மந்திரங்கள் விளக்குகின்றன.

10. புலன்களை விட உலகப் பொருட்கள் வலிமை வாய்ந்தவை. பொருட்களைவிட மனம் வலிமை வாய்ந்தது. மனத்தை விட புத்தி வலிமை வாய்ந்தது. மகிமை வாய்ந்ததான ஆன்மா புத்தியை விட வலிமை வாய்ந்தது.

11. மகிமை வாய்ந்ததான ஆன்மாவைவிட அவ்யக்தம் வலிமை வாய்ந்தது. அவ்யக்தத்தைவிட இறைவன் வலிமை வாய்ந்தவர். இறைவனை விட வலிமை வாய்ந்தது எதுவும் இல்லை.  அவரே அறுதிப்பொருள். அவரே கடைசி புகலிடம்.

எந்த ஒன்றையும் வசப்படுத்த வேண்டுமானால் அதைவிட உயர்ந்த ஒன்றை நாடவேண்டும். மேற்கிலிருந்து 'விலகவேண்டுமானால், விலகவேண்டும்'. விலக வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் செய்வதாலோ, அங்கே நின்று போராடுவதாலோ பயனில்லை. செய்ய வேண்டியதெல்லாம் கிழக்கு  நோக்கி நடப்பதே.  கிழக்குநோக்கி நடந்தால் தானாகவே மேற்கிலிருந்து விலகிவிடுவோம். அதுபோலவே மனதை வசப்படுத்த, புலன்களை ஒரு கட்டுக்குள் கொண்டுவர அவற்றுடன் போராடுவதோ, அவற்றை அந்த நிலையிலேயே அடக்க முயற்சிப்பதோ பயனற்றது.  இதையே கீதை 'அடக்குவதால் என்ன பயன்? என்று கேட்கிறது. எனவே கீழானதை வசப்படுத்த மேலானதை கைப்பற்றிக் கொள்ள வேண்டும்.

 புலன்களாகிய கண், காது, மூக்கு, வாய், உடம்பு இவற்றின் மூலமே நாம் செயல்படுகிறோம். இவை தன்னிச்சையாக செயல்படுவது இல்லை. பார்க்குமாறு தூண்டப்படும்போது கண்கள் பார்க்கின்றன, கேட்குமாறு தூண்டப்படும்போது காதுகள் கேட்கின்றன. இவ்வாறு ஒவ்வொரு புலனும் செயல்படுகிறது.

புலன்களை தூண்டுபவை உலகப் பொருட்கள் அவற்றின் மீதுள்ள கவர்ச்சியாலே நாம் உலகை அனுபவிக்கிறோம். அதனால்தான் புலன்களைவிட உலகப் பொருட்கள் வலிமை வாய்ந்தவை என்று கூறப்படுகிறது.

புலன்களின் கவனத்தைக் கவரக் கூடிய பொருட்கள் வெளியில் இருந்தாலும் மனம் புலன்களுடன் ஒத்துழைக்கவில்லை  என்றால் அந்த பொருட்கள் புலன்களை தூண்ட முடியாது. உதாரணமாக அழகிய தாமரை மலர்    ஒன்றை நாம் இருக்கின்ற வழியாக ஒருவன் கொண்டு செல்கிறான்.   அந்த வேளையில் நாம் எதையாவது தீவிரமாக சிந்தித்துக் கொண்டிருந்தால் அந்த மலரை நாம் கண்டிருக்க மாட்டோம். பிறகு கேட்டால் 'நான் பார்க்கவில்லையே' என்போம். சாதரணவேளையில்  நம் கண்களைக் கவர்ந்திழுக்கக்கூடிய மலர் இப்போதும் இருந்தது.  ஆனால் மனம் ஈடுபடாததால் நம் கண்களை கவர  அந்த மலரால் முடியவில்லை. எனவே  புறப்பொருட்களைவிட மனம் வலிமை வாய்ந்தது.

நமது வாழ்க்கைப் பயணத்தின் இந்த மூன்று பகுதிகளையும் நாம் அறிவோம். புற உலகம்  நமக்கு தெரியும். புலன்களை நாம் அறிவோம், மனத்தை நாம் உணர்கிறோம். இதற்குமேல் உள்ளவை சாதரணமாக நம்மால் உணரப்படாதவை. இவற்றுள் முதலில் வருவது புத்தி. இது விழிப்புறாத நிலையில் உள்ளது.  புத்தியைவிட வலிமை வாய்ந்தது ஆன்மா.

 ஆன்மாவைவிட வலிமையானது அவ்யக்தம்.  அவ்யக்தம் என்றால் இறைவனின் ஆற்றல். எந்த ஆற்றலால்  இந்த பயணம் நடைபெறுகிறதோ, ஒரு தனிநபரின் பயணம் மட்டுமல்ல இந்த பிரபஞ்சமே வெளிபட்டு இயங்கிக் கொண்டிருக்கிறதோ அந்த ஆற்றல்.  ஆனால் அந்த ஆற்றலும் இறைவனாகிய தளம் இல்லாமல் இயங்க முடியாது. எனவே அவ்யக்தைவிட வலிமை வாய்ந்தவர் இறைவன். அவரே கடைசி புகலிடம்.
புத்தி  விளிப்புற வேண்டும்

 இந்த ஆன்மா எல்லா உயிர்களிலும் மறைவாக உள்ளது. வெளிப்பட்டு தெரிவதில்லை. ஆனால் ஒருமைப்படுத்தப்பட்ட, நுண்ணிய புத்தியால் மகான்கள் இந்த ஆன்மாவை காண்கின்றனர்.

 எப்போதும் சஞ்சலப்படுவது மனம், ஒன்றை நிச்சயமாக முடிவு செய்வது புத்தி. ஆனால் இந்த புத்தியால் பிற விஷயங்களை மட்டுமே முடிவு செய்ய இயலும். அக உண்மைகளைக் காணும் ஆற்றல்  இதற்கு இல்லை. ஏனெனில் இது விழிப்புறா நிலையில் உள்ளது  புத்தி. அது விழிப்புறும்போது மட்டுமே நுண்மை பெறுகிறது. அந்த நுண்ணிய புத்தியால் தான் ஆன்மாவை உணர முடியும்.

 புத்தி விளிப்புற என்ன செய்யவேண்டும்?


அக நாட்டம் உடையவன் பேச்சை மனதில் ஒடுக்கவேண்டும். மனத்தை விழிப்புற்ற புத்தியில் ஒடுக்கவேண்டும். புத்தியை மகிமை வாய்ந்த ஆன்மாவில் ஒடுக்க வேண்டும். ஆன்மாவை அமைதியின் இருப்பிடமான இறைவனில் ஒடுக்கவேண்டும்.

 சாதனை முறை இங்கே கூறப்படுகிறது. சாதாரண படியிலிருந்து ஆரம்பிக்கிறது இந்த சாதனை. பேச்சை மனதில் ஒடுக்க வேண்டும். இது முதல் படி. உயர் வாழ்க்கைக்கு முதற்படி பேச்சு கட்டுப்பாடு. தேவையற்ற பேச்சு உயர் வாழ்க்கைக்கு என்றல்ல சாதாரண வாழ்க்கைக்கும் பெரிய தடையாகும். நமது ஆற்றலில் முக்கிய பகுதி பேச்சில் செலவழிகிறது. அதனை செலவிடாமல் சேமித்தால் அக வாழ்க்கை போன்ற உயர் தேவைகளுக்காக அதனை பயன்படுத்த முடியும்.

 பேச்சு இரண்டு வகை - புற பேச்சு, அகப் பேச்சு,  அதாவது வாய் பேசுவது மற்றும் எண்ணங்களின் கிளர்ச்சி. வாய் பேசாமல் இருந்தாலும்,எண்ணங்கள் ஆர்பரிந்து எழும். இரண்டும் அடங்க வேண்டும். தேவையற்ற பேச்சை பயிற்சியின் மூலம் குறைக்கவோ தவிர்க்கவோ முடியும். ஆனால் எண்ணங்கள் எழுவதை எப்படி தவிர்ப்பது? ஒரு சாட்சியாக நின்று எண்ணங்கள் எழுந்து அடங்குவதை கவனிக்க வேண்டும். எழுகின்ற எண்ணங்களுடன்  சேர்ந்து மிதக்காமல் தனித்து நின்று அவற்றை காண்பதற்கு பழகவேண்டும்.

 பேச்சு என்பது ஓர் உதாரணமாகக் கூறப்பட்டது. இவ்வாறே அனைத்து புலன்களையும் வசப்படுத்த வேண்டும். அதாவது புலன்களின் போக்கில் போகாமல் சாட்சியாக நின்று பழகவேண்டும்.

இதுவே 'பேச்சை மனதில் ஒடுக்குவது' என்ற முதற்படி. இந்த பயிற்சி மனதிற்குப் பெரிய ஆற்றலையும் அமைதியையும் தருவதை நாம் உணர முடியும்.


தொடரும் படிகள் நாம் முன்னேற முன்னேற தாமாகவே நிகழ்வதை நாம் காணலாம். மனம் என்ற ஒன்றை நான் அறிந்திருப்பதால் முதற்படி எளிதாக விளங்குகிறது. ஆனால் விழிப்புற்ற புத்தியோ, ஆன்மாவோ, இறைவனோ நாம் அறியாதவை. எனவே சாதனை முறையின் இரண்டாவது படியான விழிப்புற்ற புத்தி அல்லது புத்தி விழிப்புறுவதை உணரும்போதுதான்  மனத்தை விழிப்புற்ற புத்தியில் ஒடுக்குவது என்றால் என்ன என்பதை புரிந்துகொள்ளமுடியும். தொடரும் படிகள் அனைத்தும் இவ்வாறே.  எனவே பேச்சை கட்டுப்படுத்தி பயிற்சியை தொடங்க வேண்டியதே முக்கியம். பேச்சை குறைத்து அமைதியை கடைபிடிப்பதன் மூலம் அமைதியின் உறைவிடமான இறைவனை அடைகிறோம்.

குரு தேவை


14. எழுங்கள் விழியுங்கள், தகுந்த குருவை அடைந்து அனுபூதி பெறுங்கள். கூரான கத்தியின் முனை மீது நடப்பது போன்று, இறை நெறி கடினமானது என்று சான்றோர்கள் கூறுகின்றனர்.

தகுந்த குருவை ஒருவரை அடைய வேண்டும். ஆனால் அதற்கு முன் நாம் செய்ய வேண்டிய இரண்டு விஷயங்களை இந்த மந்திரம் தெரிவிக்கிறது. முதலில் எழுந்திருக்க வேண்டும், பிறகு விழிக்க வேண்டும். எழுந்து, விழித்து, தகுந்த குருவை அடையும்போது அவர் அனுபூதி நிலைக்கான வழியை காட்டுவார். இந்த மூன்று படிகளையும் மந்திரம் விளக்குகிறது.

உண்மையற்ற நிலையிலிருந்து என்னை
உண்மை நிலைக்கு அழைத்துச் செல்வாயாக!
அறியாமை இருளிலிருந்து என்னை
அறிவுப் பேரொளிக்கு அழைத்துச் செல்வாயாக!
மரணத்திலிருந்து என்னை
மரணமிலாப் பெரு நிலைக்கு அழைத்துச் செல்வாயாக!

என்று பிராத்திக்கிறது அந்த வேத மந்திரம். எழுந்திருத்தல் என்றால் உண்மையற்றதிலிருந்து உண்மையைப் பிரித்தறிதல். விழித்தல் என்றால் அறியாமையிலிருந்து விடுபடல். மூன்றாவதாக மரணமிலாப் பெருநிலையாகிய அனுபூதியை அடைதல்.

உண்மையற்ற உலகில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்; இதில் உண்மையான இன்பத்தையோ அமைதியையோ அடைய முடியாது என்பதை உணர்வது முதற்படி.  இது வெறும் புத்தக அறிவாக இல்லாமல் மனத்தின் அடியாழங்களில் பதிய வேண்டும். அப்போதுதான் நமது செயல்கள் அதற்கேற்ப அமையும்.

உண்மையற்றதிலிருந்து  உண்மையை பிரித்தறியும் போது நமக்குத் தெரிவது என்ன?  நாம் அறியாமையில் மூழ்கி இருக்கிறோம் என்ற உண்மை. எது அறியாமை? புற வளர்ச்சியை உண்மையான வளர்ச்சி என்று நம்பி அக வளர்ச்சியில் நாட்டம் செலுத்தாமல் இருப்பதுதான் அது. இந்த உண்மையைப் புரிந்துகொண்டு அக வளர்ச்சியில் நாட்டம் செலுத்துவதுதான் விழித்தல் என்கிற இரண்டாம் படி.

 அக வளர்ச்சியில் நாட்டம் செலுத்தும்போதுதான் குருவின் தேவை உண்மையாக நாம் உணர்வோம். உண்மையான தேவையுடன்  தகுந்த குருவை அடைந்து அவரால் வழிகாட்டப்படும் போது இறைய அனுபூதி வாய்க்கிறது.

இறையனுபூதியின் மகிமை


15. ஒலி, தொடு உணர்ச்சி, காட்சி, சுவை, மணம் என்று புலன்களால் உணரக்கூடிய அனைத்தையும் கடந்த அழிவற்ற, என்றென்றும் உள்ள, ஆரம்பம் இல்லாத, முடிவற்ற, புத்தியைவிட மேலான, நிலையான இறைவனை அனுபூதியில் உணர்பவன் மரணத்தின் பிடியிலிருந்து விடுபடுகிறான்.

17. மேலான பொருளாழும் மிக்க இந்த உபநிஷதத்தை சான்றோர்களின் சபையிலோ சிராத்த காலத்திலோ தூயவனான ஒருவன் படித்தால் அது எல்லையற்ற பலனை தருகிறது.

பொதுவாக உபநிஷதங்கள் போன்றவற்றை படிப்பது ஒரு புண்ணிய செயலாக கருதப்படுகிறது. ஆனால் அதன் முழுப் பலனையும் பெற வேண்டுமானால் புத்தி விழிக்கப்பெற்ற தூயவனாக இருத்தல் அவசியம். என்பதை இந்த 16 மற்றும் 17 மந்திரங்கள் கூறுகின்றன. அவர்களால்தான் உபநிஷதங்களின் உட்பொருளை உணர்ந்து கொள்ள முடியும். அதற்கேற்ப செயல்பட முடியும் என்பதே இதன் கருத்து. பாடுபடுபவர்களுக்கு பலன், வெறுமனே கிளிப்பிள்ளை போல் படிப்பவர்கள் உயர்ந்த பலனை எதிர்பார்க்க கூடாது.

No comments:

Post a Comment