புலன்களின் புற நாட்டத்தை தடுக்க வேண்டும். எப்படி? அவற்றிற்கு உண்மையை உணர்த்த வேண்டும். உலகின் அனுபவங்களில் உள்ளீடு எதுவும் இல்லை என்பதை அவை புரியுமாறு செய்ய வேண்டும். அதற்கான பயிற்சியை இந்த மந்திரங்கள் தெரிவிக்கின்றன.
வாழ்வில் எவ்வளவோ நிகழ்கின்றன. உடம்பிற்கு எத்தனையோ அனுபவங்கள் வருகின்றன; எத்தனையோ விஷயங்கள் மனத்தைக் கடந்து செல்கின்றன. அவற்றுடன் இணைந்து நாமும் துயரப்படுகிறோம், சுகத்தை அனுபவிக்கிறோம், வெறுக்கிறோம், விரும்புகிறோம், அழுகிறோம், சிரிக்கிறோம். ஆனால் இவை எதிலும் பங்கெடுக்காமல், நம்முள் ஒன்று இருப்பதாக ஏற்கனவே கண்டோம்.( 1.3.11. செயல்களின் பலனை அனுபவிக்கின்ற இருவர் இந்த உடம்பில் உள்ளனர். அவர்கள் நிழலும் வெயிலும் போல் ஒருவருக்கொருவர் மாறுபட்டவர்கள்; இந்த உடம்புலுள்ள நுண்ணியதான இதயக்குகையில் புகுந்தவர்கள். மகான்களும் ஐந்து அக்கினியை உடையவர்களும் மும்முறை நசிகேத யாகம் செய்தவர்களும் இவ்வாறு கூறுகின்றனர்.)அதுவே ஆன்மா அதனுடன் நம்மை ஒன்றுபடுத்திக் கொள்ள வேண்டும்.
3. காட்சி, சுவை, மணம், ஒலி, தொடு உணர்ச்சி, உடலின்பம் முதலியவற்றை எதனால் ஒருவன் உணர்கிறானோ, இந்த அனுபவங்களில் என்ன எஞ்சியிருக்கிறது என்பதையும் எதனால் தெரிந்து கொள்கிறானோ அதுவே நீ கேட்ட பொருள்(ஆன்மா).
அழகிய பூவை ரசிக்கிறோம். நம்முள்ளே உணர்வு பொருளாகிய ஆன்மா இருப்பதால்தான் அதனை நம்மால் ரசிக்க முடிகிறது என்பதை மறந்து விடுகிறோம். உயிரற்ற உடலின் முன்னால் அழகோ நறுமணமோ எந்த விளைவையும் ஏற்படுத்துவதில்லை. நம்முள் இருக்கின்ற இருவருள் ஒருவர் அனுபவங்களில் ஈடுபட்டு அனுபவிக்கிறார்; மற்றொருவர் சாட்சியாக நின்று அவற்றை கவனிக்கிறார். அனுபவங்களைப் பெறுபவருடன் நம்மை ஒன்றுபடுத்திக் கொள்ளும்போது மேலும் மேலும் செயல்களில் ஈடுபட்டு தளைகளை (பிணைப்பை)அதிகப்படுத்திக் கொள்கிறோம். மாறாக சாட்சியாக நிற்கின்ற ஆன்மாவுடன் நம்மை ஒன்றுபடுத்திக் கொண்டு, விலகி நின்று, அனுபவங்களை பார்க்கும்போது இந்த அனுபவங்களின் உள்ளீடற்ற (தேவையற்ற)
தன்மை நமக்கு மேலும் மேலும் தெரிய வரும்.
புலன் அனுபவங்கள் தேவையற்றவை என்ற கருத்து நம்முள் பதியும்போது புலன்கள் புற உலகு நாடுவதை இயல்பாகவே விட்டு விடுகின்றன என்பது தானாகவே நிகழ்கிறது. எனவே சாட்சியாக இருந்து பழகுவது என்பது புலன்களை வசப்படுத்துவதற்கான ஒரு சிறந்த பயிற்சியாகிறது.
நாம் ஆன்மா என்ற உணர்வு இந்தப் பயிற்சியின் மூலம் வலுப்பெறுகிறது. எனவே சுகதுக்க அனுபவங்கள் நம்மை அணுகும் போது அவற்றுடன் நம்மை இணைத்துக் கொள்ளாமல் விலகி நின்று பார்க்க நம்மை பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.
4. கனவு, விழிப்பு ஆகிய இரண்டு நிலைகளையும் எதனால் ஒருவன் உணர்கிறானோ அதுவே ஆன்மா. அது மகிமை வாய்ந்தது எங்கும் நிறைந்தது. அதனை அனுபூதியில்(அனுபவஞானத்தில்)உணர்கின்ற விவேகி கவலையிலிருந்து விடுபடுகிறான்.
நாம் சாட்சிப் பொருள் என்பதை இங்கே மற்றொரு கோணத்தில் இருந்து விளக்க முற்படுகிறார் எமதர்மன்.
கனவு, விழிப்பு, ஆழ்ந்த தூக்கம் இந்த மூன்று நிலைகளின் வழியாக நாம் தொடர்ந்து சஞ்சரித்துக் (வாழ்ந்து) கொண்டு இருக்கிறோம். ஒரு மாலையில் உள்ள நூல் பல முத்துக்களைக் கோர்த்து அவற்றுக்கிடையே ஒரு தொடர்பை உண்டாக்குவது போல் நமது இந்த மூன்று நிலைகளையும் (கனவு, விழிப்பு, ஆழ்ந்த தூக்கம்)தொடர்பு படுத்திக் கொண்டு நிற்கின்ற பொருளே ஆன்மா.
கனவு உலகம் வேறு, விழிப்பில் நாம் வாழ்கின்ற உலகம் வேறு, ஆழ்ந்த தூக்கத்தை அனுபவிக்கின்ற உலகம் வேறு. ஆனால் இந்த மூன்றிலும் நான் என்ற உணர்வு இருக்கிறது. அதனால்தான் நான் கனவு கண்டேன், நான் விழித்திருக்கிறேன், நான் ஆழ்ந்து தூங்கினேன் என்று சொல்கிறோம். கனவில் நனவுலகம் மறைகிறது, விழிப்பு நிலையில் கனவு உலகம் மறைகிறது, ஆழ்ந்த தூக்கத்தில் இரண்டு (கனவு உலகம், நனவுலகம்) உலகங்களுமே மறைகின்றன. மறைகின்ற எதுவும் உண்மையாக இருக்க முடியாது. எனவே இந்த மூன்று நிலைகளும் உண்மை அல்ல. இந்த நிலைகள் எதனுடன் சம்பந்தப்படாமல், மூன்று நிலைகளும் தன்னைக் கடந்து செல்வதை ஒரு சாட்சியாக நின்று காண்கிறது ஆன்மா.
காலத்தின் தலைவன் நீ
நமது உணர்வை பிரபஞ்சம் முழுவதுமாக விரிப்பதற்கான ஒரு முயற்சி இந்த மந்திரத்தில் இருந்து காண்கிறோம். உடம்பினுள் இதயக் குகையில் உள்ள ஆன்மா தான் என்ற கருத்தும் 'பிரபஞ்சம் முழுவதும் நிறைந்து உள்ள பொருளே நான்' என்ற கருத்தும் ஒவ்வொரு மந்திரத்திலும் வருகிறது. உணர்வை விரிப்பதற்கான சாதனை இது.
5. கர்ம பலன்களை அனுபவிக்கின்ற உயிருக்கு ஆதாரமான இந்த ஆன்மாவை அருகில் இருப்பதாகவும், அதே வேளையில் இறந்த காலம் எதிர் காலத்திற்கு தலைவனாகவும் அறிபவன் யாரையும் வெறுப்பதில்லை. அதுவே நீ கேட்ட பொருள்(ஆன்மா).
நம்முள் உள்ள இருவரில் ஒருவர் அனுபவங்களைப் பெறுகிறார். மற்றொருவர் அந்த அனுபவங்களைப் பெறுவதற்கு ஆதாரமாக இருக்கிறார். அதுவே ஆன்மா. அதுவே நாம்.
நம்முள் உள்ள ஆன்மாவே நாம் என்று கூறிவிட்டு அடுத்த வரியிலேயே, காலத்தின் தலைவன் நாம் அன்று நமது உணர்வை விரிக்கிறது உபநிஷதம்.
காலத்தின் தலைவன் ஆவது என்றால் என்ன
பொதுவாக நாம் கடந்த காலத்தை அசை போட்டுக் கொண்டு இருப்போம். அல்லது எதிர்கால கற்பனைகளில் மிதந்து கொண்டு இருப்போம். அதாவது நமது வாழ்க்கை இறந்த மற்றும் எதிர்காலங்களில் உழன்று கொண்டிருக்கிறது. நாம் நிகழ்காலத்தில் வாழ்வதே இல்லை. காலத்தின் தலைவனாக இருப்பது என்றால் இறந்த மற்ற எதிர்காலங்களின் ஆதிக்கத்திலிருந்து விடுபடுவது. நிகழ்காலத்தில் வாழ்வது. நிகழ்காலத்தில் வாழ்வது என்றால் நிரந்தர தியான நிலையில் திளைப்பது. அல்லது எல்லா செயல்களையும் அன்புடன் பரமாத்மாவுக்கு அர்பணிப்பது. எதை நாம் உண்கிறோமா,எதைநாம் கொடுக்கிறோமோ,எதை நாம் செய்கிறோமோ அதை பரமாத்மாவுக்கு அர்பணிப்பது. அன்பு செய்வது, பக்திசெய்வது என்றால் . எல்லா செயல்களையும் பரமாத்தாவின் கட்டளை என்று ஏற்று, விருப்பத்துடன் செய்து. நிகழ்காலத்தில் வாழ்தல்.
எனவே காலத்தை வெல்வது என்றால் கடந்த மற்றும் எதிர்காலங்களின் பிடியிலிருந்து விடுபட்டு நிகழ்காலத்தில் வாழ்வது. இதை எப்படி செய்வது? கடந்த மற்றும் எதிர்காலங்கள் நம்மீது எவ்வாறு ஆதிக்கம் செலுத்துகின்றன? எண்ணங்களின் மூலம். எனவே மனத்தில் எண்ணங்களே எழாமல் தடுப்பது நிகழ் காலத்தில் வாழ்வதற்கான வழிகளில் ஒன்றாகும்.
ஓர் எண்ணம் எழுந்து மறைந்த பிறகு அடுத்த எண்ணம் எழுகிறது. இரண்டு எண்ண அலைகளுக்கு இடையே உள்ள காலத்தை அதிகப்படுத்தும் போது இது நிகழ்கிறது.
முதலில் தோன்றியவர் நீர்
யார் தண்ணீர் முதலான பஞ்ச பூதங்களுக்கும் முன்னால் தவத்தினால் தோன்றியவரோ, யார் உயிர்களின் இதயக் குகையில் உறைபவரோ அவரே அனைத்தையும் காண்கிறார். அதுவே நீ கேட்ட பொருள் .
பிரபஞ்சத்திற்கு ஆதாரமான பேருணர்வு பொருள் தான் நம்முள் ஆன்மாவாக உறைகிறது என்ற உண்மை இங்கே மற்றொரு கோணத்தில் கூறப்படுகிறது. பூமி, தண்ணீர், அக்கினி, காற்று, ஆகாசம் ஆகிய ஐந்து பஞ்சபூதங்கள் அதாவது ஐந்து அடிப்படை பொருட்கள். இந்த ஐந்தின் சேர்க்கையாலேயே உலகமும் உயிர்களும் தோன்றியுள்ளன. அவற்றிற்கு முன்பே தோன்றியவர் இறைவன். அந்த இறைவன்தான் நம்மில் ஆன்மாவாக நமது இதயக்குகையில் விளங்குகிறார்.
இறைவன் தவத்தினால் தோன்றியவர் என்று கூறுவதன் மூலம், அவரது அம்சமான ஆன்மாவை அடைய வேண்டுமானால் தவம் வேண்டும் என்பது குறிப்பால் உணர்த்தப்படுகிறது. தவத்தினால் மரணத்தையே வெல்லலாம் என்கிறார் திருவள்ளுவர். தவம்பற்றி பகவத்கீதை விரிவாக ஆராய்கிறது. உணவு, உடை, சுகபோகப் பொருட்கள் என்று புறமுகமாக செலவிடப்படுகின்ற ஆற்றலை சுருக்கி அந்த ஆற்றலை உயர்ந்த லட்சியங்களுக்காக பயன்படுத்துவது தவம்.
7. பிராண வடிவானவளும், எல்லா தெய்வங்களின் வடிவானவளும், பஞ்சபூதங்களுடன் தோன்றியவளுமாகிய எந்த தேவி உயிர்களின் இதயக் குகையில் புகுந்து உறைகிறாளோ அந்த தேவியின் வடிவாக இருப்பதே நீ கேட்ட பொருள்.
மின்சாரத்தின் ஆற்றலால் விளக்குகள் எரிவதைக் காண்கிறோம்; விசிறிகள் சுழல்வதை காண்கிறோம், இன்னும் எத்தனையோ இயக்கங்களை காண்கிறோம். ஆனால் மின்சாரத்தை காண்பதில்லை. அதுபோல் இந்த பிரபஞ்சத்தில் எத்தனையோ இயக்கங்களை காண்கிறோம். பஞ்சபூதங்களின் சேர்க்கையால் உயிரினங்கள் தோன்றுகின்றன, மறைகின்றன, தீ எரிகிறது, தண்ணீர் ஓடுகிறது, சூரியன் உதிக்கிறது - இவ்வாறு எத்தனையோ செயல்களை காண்கிறோம். இதற்கு காரணமான சக்தியை நாம் காண்பதில்லை. அதுவே பிராண சக்தி. இதனை விளக்குகிறார் சுவாமி விவேகானந்தர்:
பிரபஞ்சம் இரண்டு பொருட்களால் ஆக்கப்பட்டுள்ளது அவற்றுள் ஒன்று ஆகாயம். எங்கும் வியாபித்து அனைத்தையும் ஊடுருவியுள்ளது. உருவமுள்ள அனைத்தும் சேர்க்கையால் விளைந்த, அனைத்தும் ஆகாயத்திலிருந்து வெழிபட்டுள்ளன. ஆகாயமே காற்றாகவும் திரவப் பொருட்களாகவும், திடப் பொருட்களாகவும் ஆகியுள்ளது. சூரியனாக, சந்திரனாக, பூமியாக ,நட்சத்திரங்களாக, வால் நட்சத்திரங்களாக ஆகியுள்ளதும் ஆகாயமே. மனித உடல், தாவரங்கள் அனைத்தும், நாம் காண்கின்ற, நாம் உணர்கின்ற அனைத்தும், இருப்பவை அனைத்துமாக, இருப்பதும் ஆகாயமே....
எந்த சக்தியால் இந்த ஆகாயம் பிரபஞ்சமாகிறது? பிராண சக்தியால்தான்..... இந்த பிராணனிலிருந்தே நாம் ஆற்றல் என்று அழைக்கின்ற, நாம் சக்தி என்று அழைக்கின்ற அனைத்தும் வெளிப்படுகின்றன. புவியீர்ப்பாக, காந்த சக்தியாக வெளிப்படுவதும் பிராணனே. உடல் இயக்கங்களாக, நாடி ஓட்டங்களாக, எண்ணச் சக்தியாக வெளிப்படுவதும் பிராணனே. எண்ணம் முதல் மிகச் சாதாரண சக்தி வரை எல்லாம் பிராணனின் வெழிபாடுகளே. இதையே 'எங்கெங்கு காணினும் சக்தியடா' என்று பாடினார் பாரதியார். எங்கும் நிறைந்துள்ள இறைவன் நம்முள் ஆன்மாவாக விளங்குவது போல் பிரபஞ்சத்தை இயக்குகின்ற இந்த பிராண சக்தியே நம்முள் நமது உடம்பையும் மனத்தையும் இயக்குகின்ற பிராணனாக செயல்படுகிறது. பிரபஞ் நிலையில் அந்தப் பிராணன் எல்லா தெய்வங்களின் வடிவாக, அதாவது அனைத்து ஆற்றல்களின் உறைவிடமாக பஞ்ச பூதங்களுடன் தோன்றியதாக கூறப்படுகிறது.
ஆன்ம அக்கினி நீ
8. கருவுற்ற பெண்கள் கருவை எச்சரிக்கையாகக் காப்பதுபோல் அரணிக்கட்டைகளில் அக்கினி பாதுகாக்கப்படுகிறது. விழிப்புணர்ச்சி பெற்ற யோகிகள் ஆன்ம அக்கினியை அதுபோல் கவனமாக நாள்தோறும் வழிபடுகின்றனர். அந்த ஆன்மா அக்னியே நீ கேட்ட பொருள்.
யாக குண்டங்களில் வளர்க்கப்படுகின்ற அக்கினி ஏற்கனவே எரிகின்ற தீயால் ஏற்படுவதில்லை. அவ்வளவு புனிதமாக கருதப்படுகிறது. யாகத்துக்கு தீ மூட்ட அறணிக்கட்டைகள் பயன்படுத்துகின்றனர். மேல் ஒன்றும் கீழ் ஒன்றுமாக உள்ள இரண்டு கட்டைகள் அவை. அவற்றை உரசுவதால் ஏற்படுகின்ற தீப்பொறியால் யாக அக்கினியை வளர்க்கின்றனர். அரணிக் கட்டைகளில் மறைந்துள்ள அந்த அக்கினி கருவிற்க்கு ஒப்பிடப்படுகிறது. கருப்பைக்குள் கரு எவ்வாறு பாதுகாக்கப்படுகிறது என்பது பிரமிப்பு ஊட்டுகின்ற ஒரு விஷயமாகும். இயற்கையின் மகிமைகளில் ஒன்றாக கருதப்பட வேண்டியது. எவ்வாறு கருவெளியில் தெரிவது இல்லையோ அது போல் அரணிக்கட்டைகளில் மறைந்துள்ள அக்கினியும் வெளியில் தெரிவதில்லை.
நமது ஆன்மா அந்த அக்கினிபோல் வெளியில் தெரியாமல் கருப்பைக்குள் கரு பாதுகாக்கப்படுவது போல் இதய குகைக்குள் விளங்குகிறது. அரணிக்கட்டைகளை உரசும்போது எவ்வாறு அக்கினி வெழிப்படுகிறதோ, அதுபோல தியானத்தின் மூலம் யோகிகள் அந்த ஆன்மாவை காண்கின்றனர்.
ஆணையிடுபவன் நீ
9.யாரிலிருந்து சூரியன் உதிக்கிறானோ, எங்கே மறைகிறானோ அந்த இறைவனை எல்லா தெய்வங்களும் போற்றுகின்றனர். அவரை மீறி யாரும் நடப்பதில்லை. நீ கேட்ட பொருள் அந்த இறைவனே.
பிராண சக்தி நம்மை இயக்குகிறது, பிரபஞ்சத்தை இயக்குகிறது, தெய்வமாக போற்றப்படுகிறது என்று 7-ஆம் மந்திரத்தில் கண்டோம். பல்வேறு விதமாக செயல்படுகின்ற பிராண சக்தி பல்வேறு தெய்வங்களாக கொண்டாடப்படுகிறது. அந்த தெய்வங்கள் அனைத்தும் அதாவது பிராண சக்தி முழுவதும் முழுமுதற் பொருளாகிய இறைவனுக்கு அடங்கியதே. அவருடைய ஆணையால் தான் இந்த பிரபஞ்சம் இயங்குகிறது. அந்த இறைவனே நம் உள் ஆன்மாவாக விளங்குகிறார். அந்த ஆன்மாவே நீ என்று நசிகேதனுக்கு எமதர்மன் அறிவுறுத்துகிறான்.
இங்கே இருப்பதே அங்கே உள்ளது
10. இங்கே எது இருக்கிறதோ, அதுவே அங்கே இருக்கிறது. அங்கே எது இருக்கிறதோ அதுவே இங்கும் இருக்கிறது. இந்த உலகில் வேறுபாடு இருப்பது போல் யார் காண்கிறானோ அவன் மரணத்திலிருந்து மரணத்தை அடைகிறான்.
இறைவனை எங்கும் தேடி கிடைக்காமல், கடைசியில் தன்னுள்ளே கண்டதாகக் கூறுகிறார் அப்பர்பெருமான். எங்கும் நிறைந்துள்ள இறைவன் நம்முள்ளே ஆன்மாவாக விளங்குகிறார். எனவே இறைவனை தேட வேண்டுமானால் முதலில் நம் உள் தேட வேண்டும். இறைவனை அடைவதற்கான பாதை நம் உள்தான் இருக்கிறது.
மந்திரத்தின் இரண்டாம் வரி நல்ல கருத்து ஒன்றாகும். இறைவன் என்னும் பேரொளியின் சுடர் ஒன்று நம்மில் இருக்கிறது, நம் ஒவ்வொருவர் உள்ளும் இருக்கிறது; மனிதர்கள் என்றல்ல, மிருகங்கள், தாவரங்கள் என்று உயிரினங்கள் அனைத்திலும் இருக்கிறது. சமுதாயத்தை நாம் அணுகுவதற்கான ஒரு முக்கிய அடிப்படைக் கருத்தை இங்கே காண்கிறோம். நம் ஒவ்வொருவர் உள்ளும் இருப்பது ஒரே இறைவனின் அம்சம் என்றால் நம்மில் வேறுபாடு இல்லை என்றாகுகிறது. எனவே வெறுப்பு, கோபம் போன்ற எதிர்மறை பண்புகளுக்கு இடம் இல்லாமல் போய்விடுகிறது.
எல்லாரிலும் எல்லா இடங்களிலும் இறைவன் இருக்கிறார் என்ற கருத்து நல்லொழுக்கத்திற்கு ஒரு சிறந்த அடிப்படைஆகிறது. நான் ஏன் நல்லவனாக இருக்கவேண்டும்? நான் ஏன் அடுத்தவனை துன்புறுத்தக்கூடாது? போன்ற கேழ்விகளுக்கு 'இறைவன் நம்மை தண்டிப்பார்' என்பதல்ல பதில்; 'நான் இறைவனின் அம்சம், நல்லவராக இருப்பது என் இயல்பு' என்பதே பதில். நான் எதற்காக என்னை சுற்றி இருப்பவர்களிடம் அன்பு பாராட்ட வேண்டும், நான் எதற்காக என்னிடம் அன்பு பாராட்ட வேண்டும்? ஏன் மற்றவர்களுக்கு நன்மை செய்ய வேண்டும்? என்னை கட்டாயப்படுத்துவது எது? அதுதான் இரக்கம்; எங்கும் ஒரே பொருள் உள்ளது என்ற உணர்வசி என்று விளக்குகிறார் சுவாமி விவேகானந்தர்.
இவ்வாறு எல்லோரிலும் இறை அம்சத்தை கண்டு அனைவரையும், அனைத்தையும் நேசிக்காதவர்கள் மீண்டும் மீண்டும் பிறவிக்கு உள்ளாகிறார்கள். எங்கும் ஒரே பேருணர்வு நிலவுவதை காண்கிறவர்கள் பிறவிச் சுழலிலிருந்து விடுபடுகிறார்கள்.
உண்மையை அறிய மனமே கருவி
11. இந்த உண்மை மனத்தினால் உணரப்படுகிறது. இந்த உலகில் வேறுபாடு ஏதும் இல்லை. இங்கே வேறுபாடு இருப்பது போல் யார் காண்கிறார்களோ அவர்கள் மரணத்திலிருந்து மரணத்திற்கு செல்கிறார்கள்.
எங்கும் இறைவன் இருக்கிறார், நம் ஒவ்வொருவர் உள்ளும் இறைவனின் அம்சமே நிலவுகிறது என்ற உண்மை அறிவதற்கு நம்மிடம் உள்ள ஒரே கருவி மனம். இந்த மனம் தூயதாகும்போது, ஒன்றாகும் போது அது இந்த உண்மையை அறிவதற்கான தகுதி பெறுகிறது.
தூய மனம் என்றால் என்ன?
எண்ணங்களே எழாத, ஒருங்கிணைந்த மனமே தூய மனம், அந்த மனமே உண்மையை காட்டவல்லது. சற்று விளக்கமாக காண்போம்.
தண்ணீர் தூய்மையாக இருக்கும் போது அதில் நாம் முகம் பார்க்க முடியும். அதில் எதை கலந்தாலும் அதன் தூய்மை கெடுகிறது. கலப்பது பாலாக இருந்தாலும், விஷமாக இருந்தாலும் விளைவு ஒன்றுதான் - நமது முகம் அதில் பிரதிபலிக்காது. அதுபோல் மனமும் ஆன்மாவை பிரதிபலிக்க வேண்டுமானால் அதில் எண்ணங்களே இருக்கக்கூடாது. முதலில் நல்ல எண்ணங்களை மனத்தில் நிரப்பி தீய எண்ணங்களை விரட்ட வேண்டும். பிறகு நல்ல எண்ணங்களை விட்டுவிடவேண்டும். காலில் முள் ஒன்று தைத்தால் மற்றொரு முள்ளை கொண்டு வர வேண்டும். காலில் இருந்து முள்ளை எடுத்த பிறகு இரண்டு முள்களையும் எறிந்துவிடுகிறோம். அதுபோல் அஞ்ஞானம் முள்ளை எடுப்பதற்கு ஞான முள்ளை தேட வேண்டியிருக்கிறது. அஞ்ஞானம் அழிந்ததும், ஞானம் அஞ்ஞானம் இரண்டையும் எறிந்து விட வேண்டும். என்று இதனை விளக்குகிறார் ஸ்ரீராமகிருஷ்ணர்.
அதுபோலவே மனத்தை உன்னிப்பாக கவனிக்கின்ற யாருக்கும் ஒரு உண்மை புரியவரும். மனம் பல்வேறு பகுதிகளாக பிரிந்து கிடப்பது. ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொன்றை நிறைவேற்ற துடித்துக் கொண்டு இருப்பதை நாம் உணரமுடியும். ஒரு தேரில் பூட்டப்பட்ட குதிரைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு திசையில் செல்ல முற்படும் ஆனால் அதில் பயணம் செய்பவனின் கதி என்னவாகும்? மனம் பிளவுபட்டு கிடக்கின்ற ஒருவரின் கதையும் அது தான். அவரால் எதையும் ஒழுங்காக செய்ய முடியாது. புற விஷயங்களை செய்ய முடியாத அவரால் அகவாழ்க்கை என்பதை நினைத்துப் பார்க்க முடியாது. ஒருங்கிணைந்த மனம்தான் தூய மனம்.
தூய மனம் என்று கூறும் போது இந்த இரண்டு கருத்துக்களை மனதில் கொள்ளவேண்டும்.
அங்குஷ்ட மாத்திர வித்யை 12 - 13
இங்கே அங்குஷ்ட மாத்திர வித்யை கூறப்படுகிறது. அங்குஷ்ட என்றால் பெருவிரல். இறைவன் பெருவிரல் அளவினராக இதயக் குகையில் உறைகிறார்.
12. எங்கும் நிறைந்தவரும், இறந்த மற்றும் எதிர் காலங்களுக்கு தலைவரும் ஆன இறைவன் உடம்பின் நடுவில் இதயக் குகையில் பெருவிரல் அளவில் இருக்கிறார். அவரை அறிந்தவன் யாரையும் வெறுப்பதில்லை. நீ கேட்ட பொருள் அவரே.
13. எங்கும் நிறைந்தவரும், பிறந்த மற்றும் எதிர் காலங்களுக்கு தலைவருமான இறைவன் புகையற்ற ஒளிபோல் பெருவிரல் அளவினராக உள்ளார். இப்போது இருப்பவர் அவரே. என்றென்றும் நிலைத்திருப்பவரும் அவரே. நீ கேட்ட பொருளும் அவரே.
இறைவன் நம் இதயத்தில் ஆன்மாவாக விளங்குகின்ற நிலையில் அவருக்கு இங்கே ஒரு பரிமாணம் கூறப்படுகிறது. ஆன்மா பெருவிரல் அளவில் இருப்பதாக இந்த மந்திரங்கள் கூறுகின்றன.
அளவில் பெரியதாக இருக்கின்ற மரத்தை புகைப்படம் எடுத்தால் அது அந்த புகைப்பட சுருளின் அளவினதாக இருக்கும். அதுபோல், இதயத்தில் இஷ்ட தெய்வத்தை தியானிக்கும்போது ஆரம்ப காலங்களில், சிறி உருவத்தையே தியானிக் முடியும். இவ்வாறு தியானிக்க வசதியாக இருப்பதை குறிப்பிடுவதற்காக பெருவிரல் அளவு என்று கூறப்பட்டுள்ளது.
அளவில் சிறியதாக இருப்பதால் அது ஆன்மா அல்ல, இறைவனின் அம்சம் அல்ல என்று நினைத்து விடக்கூடாது. என்பதற்காகவே பதின்மூன்றாம் மந்திரம் அதனை ஒளி என்று குறிப்பிடுகிறது. சிறிய பொருளின் ஒளி சிறியதாக இருக்கும். பெரிய பொருளின ஒளி பெரியதாக இருக்கும் என்று எந்த நியதியும் கிடையாது. சிறிய நவீனம் மின்விளக்குகள் பெரிய அரங்கங்களை ஒளிர செய்வதை காண்கிறோம். அதுபோல் பெருவிரல் அளவுடைய இந்த ஆன்மாவும் உணர்வுப் பேரொளியால் உடம்பையும் மனத்தையும் ஒளிரச் செய்கிறது.
'புகையற்ற ஒளி' என்பது கருத்தில் கொள்ள வேண்டிய ஒன்றாகும். ஒரு பொருள் எரிவதால் ஒளி உண்டாகிறது. அந்த பொருளின் தன்மையை பொறுத்து புகை அதிகமாக இருக்கலாம், குறைவாக இருக்கலாம்; சிலவேளைகளில் கண்ணுக்கு தெரியாத அளவிற்குக்கூட இருக்கலாம். ஆனால் புகை இருந்தே தீரும். புகையற்ற ஒளி என்றால் அது எதையும் சாராத ஒளி என்பது பொருள்.
இறைவனின் அம்சமான இத்தகைய ஒளிப் பொருள் நம்மில் உள்ளது. அதை உணர்ந்தவன் மரணத்தை வெல்கிறான் என்று நசிகேதனுக்கு உணர்த்துகிறான் எமதர்மன்.
உண்மையை அறியாதவனும் அறிந்தவனும் 14 - 15
14. மலைகளின் உயர்ந்த பகுதியில் பெய்த மழை நீர் எவ்வாறு தாழ்ந்த பகுதிகளுக்கு ஓடிவிடுகிறதோ, அவ்வாறே உயிரினங்களை வெவ்வேறாக காண்பவன், மீண்டும் மீண்டும் அவையாக பிறக்கிறான்.
இறைவன் ஆன்மாவாக நம்மில் உறைகிறார் என்று கண்டோம். எல்லோரிலும் இறையம்சம் உள்ளது என்றால் வேறுபாட்டுக்கு இடமேது?. வேறுபாடு காண்பவன் உண்மையை அறியவில்லை. உண்மையை உணராததால் மீண்டும் மீண்டும் பிறப்புக்கு உள்ளாகிறான். இந்த கருத்தை 10 - ஆம் மந்திர விளக்கவுரையில் விரிவாக கண்டோம்.
15. நசிகேதா! தெளிந்த நீரில் விடப்பட்ட தெளிந்த நீர் எவ்வாறு அதுவாகவே ஆகிறதோ அவ்வாறு உண்மையை உணர்கின்ற மகான் ஆன்ம வடிவாக ஆகிறார்.
குளவியை எப்பொழுதும் நினைத்துக் கொண்டு இருக்கின்ற புழு கடைசியில் குளவியாகவே மாறிவிடுகிறது என்பதை நீ கேட்டது இல்லையா? என்று விளக்குகிற ஸ்ரீராமகிருஷ்ணர். 'நான் ஆன்மா' என்பதை பல கோணங்களில் ஆழ்ந்து சிந்திக்கும்போது நான் 'நான் ஆன்மா' என்ற ஆன்ம அனுபூதி வாய்க்கிறது.